திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.


திரைப்படத் துறையில் புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார்.


தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி ஆகியோரின் புதிய முயற்சிக்கு திரையுலகினர் மற்றும் ஊடக நண்பர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்,


இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது:


“குறிஞ்சி சாரை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். அவர் திரைப்படத் தயாரிப்புத் துறைக்கு சற்று தாமதமாக வந்திருந்தாலும், சரியான நேரத்தில் வந்திருக்கிறார். அவருடைய புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் பணியாற்றும் இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும், நடிகர் ஜெய் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.


ஒரு திரைப்படத்தைத் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் முடிப்பதுதான் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையிலான நல்ல உறவுக்கு மிகவும் முக்கியம். அதற்கு முன் தயாரிப்புப் பணிகளைச் சரியாகத் திட்டமிட வேண்டும். படத்தின் பட்ஜெட்டை முன்கூட்டியே முடிவு செய்து, அதற்கேற்ப பணிகளை மேற்கொண்டால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.


தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்திற்காகவும் ஒரு சிறப்பான பஞ்ச் லைன் கொடுத்திருக்கிறேன். எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தில் நாங்களும் படம் பண்ணத் தயாராக இருக்கிறோம். இந்த நிறுவனம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து, பல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. குறிஞ்சி சார் இதை நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன். அவருக்கு என்னுடைய அன்பும் ஆதரவும் எப்போதும் இருக்கும்” என்றார்.


நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி. பேசியதாவது:


“இந்த விழா எனக்கு மிகவும் நெருக்கமானது. தியாகா குறிஞ்சிசெல்வன் எனக்கு ஒரு நண்பர் மட்டுமல்ல, சகோதரர் போன்றவர். என்னுடைய குடும்பத்தில் நடக்கும் நல்லது, கெட்டது என எல்லா விஷயங்களிலும் முதலில் வந்து நிற்பவர். அவருடைய புதிய தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு நாங்கள் அனைவரும் எப்போதும் பக்கபலமாக இருப்போம். குறிப்பாக, தனது அக்கா மகனுக்காக அவர் இந்தப் படத்தைத் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியது. அவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அந்த இளைஞர் காப்பாற்ற வேண்டும். நம்மை நம்பி ஒருவர் பணத்தை முதலீடு செய்யும்போது, அதைச் சரியான முறையில் பயன்படுத்தி, அவருடைய நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பு. வாழ்க்கையில் பெரிய அளவில் வளர வேண்டும் என்று அந்தத் தம்பியை வாழ்த்துகிறேன்.”


“ஒரு தயாரிப்பாளராக இருப்பவர் ஆரம்பத்திலேயே இயக்குநருடன் படத்தின் பட்ஜெட் குறித்து வெளிப்படையாகவும் தெளிவாகவும் பேசிவிட வேண்டும். அதற்குப் பிறகு நண்பர்களாகப் பழகலாம். இயக்குநருடன் எவ்வளவு நெருக்கம் இருந்தாலும், படத்தின் திட்டமிடலில் உறுதியாக இருக்க வேண்டும். படப்பிடிப்பைத் தாமதமாகத் தொடங்கினாலும் பரவாயில்லை; ஆனால், முறையான திட்டமிடலுடன் தொடங்கி, திட்டமிட்டபடி படத்தை முடிப்பது மிகவும் முக்கியம். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையிலான நட்பு நல்லதாக இருக்க வேண்டும்; அதே நேரத்தில் சரியான திட்டமிடலும் அவசியம்” என்றார்.


டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசியதாவது:


“நான் என்னுடைய தந்தையின் பெயரில் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தைத் தொடங்கிச் செயல்பட்டு வருகிறேன். அதேபோல், தியாகா குறிஞ்சிசெல்வன் தனது தந்தையின் பெயரில் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோரை மறக்காமல் அவர்களுக்கு மரியாதை செலுத்துபவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் உயர்வார்கள். அந்த வகையில், தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக வளரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தியாகா குறிஞ்சிசெல்வன் தயாரிப்பாளராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரிப்பாளராகியிருக்க வேண்டியவர். அப்போதே அவரைத் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடுமாறு அழைத்தோம். இப்போது அவர் இந்த முயற்சியைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.


திரைப்படத் தயாரிப்பு என்பது மிகவும் கடினமான பணி. நீங்கள் மிகவும் நல்லவர் என்பதால், மற்றவர்கள் உங்களை ஏமாற்றிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். தயாரிப்பில் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து, திட்டமிட்டுச் செயல்படுங்கள். உங்கள் அக்கா மகனுக்காக இந்தப் படத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். அவருடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுந்தர் சி. ஏற்கெனவே பல நல்ல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அவற்றைப் பின்பற்றி, படத்தைச் சிறப்பாக உருவாக்கி வெற்றிப் படமாக்க வேண்டும்.


நடிகர் ஜெய் அனைவருக்கும் பிடித்தமானவர். இந்தப் படத்தின் வெற்றிக்காக என்னுடைய வாழ்த்துகள். படக்குழுவுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறோம். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய வேண்டும். இந்தப் படம் வெற்றிப் படமாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.


நடிகர் இளவரசு பேசியதாவது:


“இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும், இந்தப் படத்தில் பணியாற்றும் குழுவினர் என்ற முறையில் தயாரிப்பாளர் சார்பாக வரவேற்கிறேன். தம்பி பிரசன்னாவுக்குச் சரியான நேரத்தில் சரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தில் பல புதிய திறமையாளர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது.


ஒரு திறமையான கலைஞனை உருவாக்குவதிலும், பலருக்கு வாய்ப்பளிப்பதிலும் தயாரிப்பாளரின் பங்கு முக்கியமானது. சுந்தர் சி. சாரும், ஐசரி சார் அவர்களும் கூறிய ஆலோசனைகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக வளர்வதில் நம் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நன்றி, வணக்கம்” என்றார்.


தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது:


“‘தியாகராஜா டாக்கீஸ்’ என்ற பெயரைப் பார்த்ததும், தியாகா குறிஞ்சிசெல்வன் தனது தந்தையின் பெயரை நினைவுகூறும் வகையில் இந்த நிறுவனத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஐசரி கணேஷ் அவர்கள் பேசியபோதுதான் அந்த விவரம் தெரிந்தது. முதலில், அவர் மிகப்பெரிய சிவபக்தர் என்பதால், திருவாரூர் தியாகராஜரை நினைவுகூர்ந்து இந்தப் பெயரை வைத்திருக்கிறார் என்று நினைத்தேன்.


1931-ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படங்கள் பேசத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து, தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் தியாகராஜ பாகவதர். அந்தப் பெயருக்கும் இந்த நிறுவனத்தின் பெயருக்கும் ஒரு தொடர்பு இருப்பதைப் பார்க்கும்போது, தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான ஓர் ஆசீர்வாதமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.


தியாகா குறிஞ்சிசெல்வனைப் பற்றி இங்கு பேசிய அனைவருமே அவருடைய நட்பைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். நட்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஓர் அற்புதமான மனிதர் அவர். பல்வேறு துறைகளிலும் வெற்றி பெற்றுள்ள அவர், திரைப்படத் தயாரிப்பிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரித்து, திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.


தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசியதாவது:


“தியாகா குறிஞ்சிசெல்வன் சாருக்காகத்தான் இந்தக் கூட்டமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவருடைய தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பு நிறுவனமாக வளர வேண்டும். தம்பி பிரசன்னா ஒரு நல்ல படத்தைக் கொடுத்துவிட்டால், அதைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்க தமிழ் சினிமா துறையே அவருக்குப் பக்கபலமாக நிற்கும். இந்தப் படத்திற்குக் கிடைக்கும் விளம்பரமும் ஆதரவும் மிகப்பெரிய அளவில் இருக்கும். தியாகா குறிஞ்சிசெல்வன் அழைத்தால் வரமாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவருக்குத் திரையுலகில் நட்பும் ஆதரவும் இருக்கிறது.


அதே நேரத்தில், படத்தின் தயாரிப்புச் செலவில் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய பட்ஜெட்டிலும் படம் எடுக்க முடியும் என்றாலும், கதைக்குத் தேவையான அளவுக்கு மட்டுமே செலவு செய்து படத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, புதிய தயாரிப்பு நிறுவனம் என்பதால், பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்து வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். குறைந்த செலவில் தரமான படங்களைக் கொடுத்து வெற்றி பெறுவதன் மூலம் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.


இன்றைய காலகட்டத்தில் பல இயக்குநர்கள் சிறிய பட்ஜெட்டில் படங்களை உருவாக்கி வெற்றி பெற்று வருகின்றனர். அதேபோல், தியாகராஜா டாக்கீஸ் நிறுவனமும் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, திட்டமிட்ட செலவில் தரமான படத்தை உருவாக்க வேண்டும். அந்தப் படம் வெற்றி பெற்றால், ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்குப் பின்னால் நிற்கும். தியாகா குறிஞ்சிசெல்வன் சாருக்கும் படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசியதாவது:


“என்னுடைய நீண்ட நாள் நண்பரும், அன்புச் சகோதரருமான தியாகா குறிஞ்சிசெல்வன் திடீரென்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி, புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதாகக் கூறியபோது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் இறங்காத துறையே இல்லை. அவரிடம் அன்பு, பாசம், நேசம் என அனைத்தும் நிறைந்திருக்கின்றன. அவருடன் ஒருநாள் பழகினால்கூட, நூறு ஆண்டுகளாகப் பழகிய உணர்வு ஏற்படும். இத்தனை திரையுலகப் பிரபலங்களும் அவரைப் பாராட்டுவதைப் பார்க்கும்போது, அவருடன் பழகிய நண்பர் என்ற முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.


எந்தத் துறையில் ஒருவர் ஈடுபட்டாலும், அவருடைய நல்ல மனமும் நேர்மையான அணுகுமுறையும் அவருக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நான் நம்புகிறேன். தியாகா குறிஞ்சிசெல்வன் திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் உள்ள பலரிடமும் அன்புடனும் நட்புடனும் பழகுபவர். தனது தந்தையின் பெயரை நினைவுகூரும் வகையில், ‘தியாகராஜா டாக்கீஸ்’ என்று தயாரிப்பு நிறுவனத்திற்குப் பெயர் வைத்திருப்பது, அவர் தனது தந்தையின் மீது கொண்டிருக்கும் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறது.


‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த நிறுவனம் நல்ல நிலையை அடைந்து, பல வெற்றிப் படங்களைத் தயாரிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் உங்களுக்குப் பின்னால் உறுதுணையாக இருப்போம்” என்றார்.


பாடகி மாலதி பேசியதாவது:


“இன்று இங்கு பலரும் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். அதில் முக்கியமானது, நம்முடைய அன்புத் தம்பி தியாகா குறிஞ்சிசெல்வனைப் பற்றியது. உண்மையிலேயே இது ஒரு குடும்ப விழா போன்ற நிகழ்வு. இன்று அவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். ஆனால், ஆர்த்தி கூறியதைப் போல, அவர் பலருடைய இதயங்களிலும் அன்பு மலராக இடம்பிடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தினரும் அனைவரிடமும் அன்புடன் பழகக்கூடியவர்கள்.


இன்று தொடங்கப்பட்டுள்ள ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரிக்கும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. தியாகா குறிஞ்சிசெல்வன் எப்போதும் அன்புடன் பழகுபவர். ‘எந்த உதவி என்றாலும் என்னிடம் கேளுங்கள்’ என்று மனதாரச் சொல்லக்கூடியவர். உதவி கேட்கும்போது விலகிச் செல்பவர்கள் மத்தியில், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்டவர் அவர். அவருடைய புதிய முயற்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று அனைவரின் சார்பாகவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்


பாடகர் கிரிஷ் பேசியதாவது:


“இங்கு பலரும் தியாகா குறிஞ்சிசெல்வன் அவர்களைப் பாராட்டிப் பேசி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அவரைப் பற்றி இதற்கு மேலும் சொல்ல வேண்டியதில்லை. அவர் தொட்டதெல்லாம் வெற்றியாக அமைய வேண்டும். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் என அனைத்தும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்கிறேன். நன்றி” என்றார்.


இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:


“நேற்றுதான் இந்த ஊருக்கு மீண்டும் வந்தேன். வந்தவுடன் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி, தியாகா குறிஞ்சிசெல்வன் தயாரிப்பாளராகி இருக்கிறார் என்பதுதான். சுமார் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் அவரைச் சந்தித்தேன். அப்போது எனக்கு காலில் விபத்து ஏற்பட்டு காயமடைந்திருந்தது. அந்தச் சூழலில் எனக்கு உதவியாக இருந்து, என் காலில் இருந்த வலியைப் போக்கி, என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத உதவியைச் செய்தவர் அவர். இன்று வரை எனக்குப் பணம் தேவைப்பட்டால், என் பாக்கெட்டிலும் வங்கிக் கணக்கிலும் பார்ப்பதற்கு முன்பாக அவரிடம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் அன்பும் நெருக்கமும் இருக்கிறது. மிகவும் எளிமையான வாழ்க்கையிலிருந்து வந்த அவர், இன்றுவரை தனது இயல்பை மாற்றிக்கொள்ளவில்லை. யாராவது உதவி கேட்டால், தன்னால் இயன்றதைச் செய்யத் தயங்காதவர். ஜப்பானுக்குச் சென்றால் என்னைச் சந்தித்து, காலை எட்டு மணிக்குத் தொடங்கி இரவு எட்டு மணி வரை என்னுடன் நேரம் செலவிடுவார். எத்தனை பேர் வந்தாலும் சலிப்பில்லாமல் அனைவரையும் கவனித்துக்கொள்வார். அப்படிப்பட்ட மனிதர் இப்போது திரைப்படத் தயாரிப்பில் இறங்கியிருப்பது மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் கவலையையும் தருகிறது. ஏனென்றால், சினிமா என்பது பல சவால்கள் நிறைந்த காடு. ஆனால், சினிமா ஒரு மகத்தான கலை. அந்தக் கலையில் அவர் வெற்றி பெற வேண்டும்.


இளையராஜா மீது எனக்கு எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அதே அளவுக்கு அவருக்கும் இருக்கிறது. அவருடைய பாடல்களை மிகவும் நேசிப்பவர். சில நேரங்களில் அவர் பாடுவதைக் கேட்டு நாங்கள் சிரித்தாலும், அந்த அன்புதான் எங்களுக்குள் இருக்கிறது. அவருடைய இந்த இயல்பை அடிப்படையாகக் கொண்டு, நான் எழுதிக்கொண்டிருக்கும் கதையில் ஒரு கதாபாத்திரத்தையே உருவாக்கியிருக்கிறேன்.


சினிமாவுக்கு அப்பாற்பட்டு, மனிதர்களுக்கு உதவுவதில் அவருக்கு இருக்கும் மனப்பான்மை மிகவும் உயர்ந்தது. பலருக்கும் பிடித்தமான மனிதராகவும், நண்பர்களுக்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறார். பணத்தால் வாங்க முடியாத அன்பையும் நட்பையும் அவர் சம்பாதித்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் மீதும் அவருக்கு அளவற்ற பாசம் இருக்கிறது. தனது அக்கா மகனுக்காக அவர் தயாரிப்பில் இறங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப் படத்தின் மூலம் அந்த இளைஞர் தனது திறமையை நிரூபிக்க வேண்டும்.


இந்தப் படம் மிகப்பெரிய பிரம்மாண்டமான முயற்சியாக இல்லாமல், எளிமையான நகைச்சுவையுடன் கூடிய படமாக உருவாகிறது. தனது மாமா தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் அந்த இளைஞர் செயல்படுகிறார். நானும் இந்தப் படத்தில் பணியாற்ற இருக்கிறேன். என்னுடைய உதவியாளர் ஈஸ்வரி இப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார். கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு பெண்ணும் இப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்ய நானும் தயாராக இருக்கிறேன்.


 திரைப்படம் என்பது இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்குவது மட்டுமல்ல; அது நமது வாழ்க்கையோடு கலந்த ஒரு கலை. சிவாஜி, சாவித்திரி, ரஜினி, ஸ்ரீதேவி போன்ற கலைஞர்கள் நமது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. அப்படிப்பட்ட கலையின் மீது அன்பு கொண்ட தியாகா குறிஞ்சிசெல்வன் இந்தப் புதிய முயற்சியில் வெற்றி பெற வேண்டும். அவருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் மோகன் பேசியதாவது.., 


“இந்த விழா எங்களுக்கெல்லாம் ஒரு குடும்ப விழா மாதிரி. தயாரிப்பாளர் குறிஞ்சிசெல்வன், விஜயலட்சுமி உள்ளிட்ட அனைவருடனும் நாங்கள் குடும்பமாகத்தான் பழகி வருகிறோம். இந்தப் புதிய தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.


90-களில் சூப்பர் குட் சௌத்ரி என்று அழைக்கப்பட்ட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து நூறு படங்கள் வரை வெற்றிகரமாகப் பயணித்தார். அவரைப் போலவே இவர்களும் வளர வேண்டும். தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுக்க வேண்டும். கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தயாரித்து வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்; அதற்காகப் பிரார்த்தனையும் செய்கிறேன்.


இந்தக் கதை மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறினார்கள். பிரசன்னா, ஜெய் இருவருக்கும் எனது வாழ்த்துகள். இது ஒரு அற்புதமான குழு. அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இறைவன் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்”. 


நடிகர் சூரி பேசியதாவது:


“குறிஞ்சிசெல்வன் அண்ணனுடனான எனது நெருக்கமான உறவைப் பற்றிச் சொல்ல வேண்டும். இங்கு வந்திருக்கும் அனைவருமே இந்தக் குடும்பத்தின் மீது கொண்ட அன்பினால்தான் வந்திருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா துறையினர் எனப் பலருடனும் அண்ணனுக்கு நல்ல நட்பு இருக்கிறது. யார் அழைத்தாலும் உடனே சென்று நிற்கக்கூடியவர். அனைவரிடமும் அன்பாகப் பழகுவார். அந்த அன்புதான் இன்று இத்தனை பேரை இங்கு ஒன்றிணைத்திருக்கிறது.


புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்போவதாக அண்ணன் என்னிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தர் சண்முகம் உள்ளிட்டோரின் ஆதரவும் வழிகாட்டுதலும் இந்த முயற்சிக்குப் பக்கபலமாக இருக்கும். இந்த நிறுவனம் முதல் படத்திலிருந்து நூறாவது படம் வரை தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரித்து, தமிழ் சினிமாவில் வலுவான இடத்தைப் பிடிக்க வேண்டும்.


பிரசன்னாவை இருபது ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவர் தோற்றத்தில் பெரிதாக மாற்றமில்லை. ஹீரோவாக மட்டும் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். தன்னுடைய பிள்ளைகள் வளர வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதைப் போல, மற்றவர்களும் வளர வேண்டும் என்ற அக்கறையுடன் குறிஞ்சிசெல்வன் அண்ணன் இந்த முயற்சியை முன்னெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று, தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்க வேண்டும். இறைவனும் இயற்கையும் எப்போதும் துணையாக இருக்கட்டும். எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.



இயக்குநர் பிரசன்னா  பேசியதாவது.., 


நினைத்த மாதிரி இந்தப் ப்ராஜெக்ட்டைக் கொண்டுவர வேண்டும். அதற்காக நிச்சயமாக என்னுடைய 100 சதவீத உழைப்பையும் கொடுப்பேன். திட்டமிட்டபடி இந்தப் பணியைச் செய்து முடிப்பேன். படம் முடிந்த பிறகு இதைப் பற்றி விரிவாகப் பேசுகிறேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்



நடிகர் ஜெய் பேசியதாவது.., 


“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் குறிஞ்சிசெல்வனுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிஞ்சிசெல்வன் என்றாலே எனக்கு ஜப்பான் என்றுதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரை ஜப்பான் குறிஞ்சி என்று அழைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் நல்ல மனம் கொண்டவர். அவருடைய தயாரிப்பில் முதல் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.


இந்தப் படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக வேண்டும் என்பதற்காக இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்து வருகிறோம். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகக் கூடுதல் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் அனைவரும் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பதால், இந்தப் படம் எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பாக உருவாக வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். தயாரிப்பாளர் இந்த முயற்சியில் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் இன்னும் பல இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும். இந்தப் படம் நல்ல முறையில் வெளியாக அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” நன்றி


தயாரிப்பாளர் A M பிரபாகரன் பேசியதாவது:


“என்னுடைய தாய்மாமா தியாகா குறிஞ்சிசெல்வன், தனது தந்தை தியாகராஜன் அவர்களின் பெயரில் தியாகராஜா டாக்கீஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய தாத்தா வள்ளலாரின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வள்ளலார் பிறந்த நாளான இன்று, அவருடைய பெயருடன் தொடர்புடைய இந்த நல்ல முயற்சி தொடங்கப்பட்டிருப்பது தற்செயலாக அமைந்திருந்தாலும், இது அருளும் கருணையும் நிறைந்த தருணமாகவே எனக்குத் தோன்றுகிறது. ‘அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை’ என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட அருளும் கருணையும் நிறைந்த நாளில், என்னுடைய தாய்மாமாவின் புதிய முயற்சிக்காக அவருடைய நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் இங்கு வந்து வாழ்த்துவதும் ஆசீர்வதிப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

நான் என்னுடைய தாத்தா தியாகராஜன், பாட்டி விமலா ஆகியோரிடம்தான் வளர்ந்தேன். என்னுடைய தாய் மாமா எப்போதும் குடும்பத்தினர் அனைவரையும் இணைக்கும் பாலமாக இருந்திருக்கிறார். உறவினர்கள் அனைவரையும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஒன்றிணைத்து வைத்திருப்பவர் அவர். அவருடைய அன்பையும் ஆதரவையும் அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான். இன்று அவர் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியிருப்பதும், இந்தப் புதிய முயற்சியில் என்னுடைய அக்கா டாக்டர் விஜயலட்சுமியும் அவருடன் இணைந்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.


இந்தப் படம் சிறப்பாக உருவாகி வெற்றி பெற வேண்டும். இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தங்களுடைய திறமையை நிரூபித்து, பல வெற்றிப் படங்களை உருவாக்க வேண்டும். இந்த முயற்சிக்கு உறவினர்கள் மட்டுமல்லாமல் நண்பர்கள், திரையுலகினர் என அனைவரின் ஆதரவும் ஆசீர்வாதமும் தேவை.


பொதுவாகத் திரைத்துறையில் ஒருவர் வெற்றி பெற்றால், அவருடைய தனிப்பட்ட உழைப்பைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் குடும்பத்தினர், நண்பர்கள் எனப் பலருடைய ஆதரவும் இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்துதான் ஒருவருடைய வளர்ச்சிக்கு வெளிச்சம் கொடுக்க முடியும். என்னுடைய தாய் மாமா பல இயக்குநர்களையும் கலைஞர்களையும் உருவாக்குவதற்கு ஆதரவாக இருந்திருக்கிறார். அவர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், என் குருநாதரிடம் ஆலோசனை கேட்பதைப் போல அவரிடமும் சென்று பேசுவேன். அப்போது, ‘நீ உனக்கு உண்மையாக இருந்தால், இயற்கை உன்னை எப்போதும் பாதுகாக்கும்’ என்று அவர் கூறுவார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றன.


தமிழ்ச் சமூகத்தில் தாய்மாமா என்பவருக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. தந்தைக்கு அடுத்தபடியாக, ஒரு குழந்தையின் கண்ணீரைத் துடைத்து, அந்தக் குழந்தையைத் தன்னுடைய பிள்ளையாக நினைத்து அன்பு செலுத்துபவர் தாய்மாமா. அப்படிப்பட்ட அன்பான தாய் மாமா எனக்குக் கிடைத்திருப்பது என் வாழ்வின் மகிழ்ச்சியான விஷயம். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்தப் படம் வெற்றி பெற்று, தொடர்ந்து பல நல்ல படங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். என்னுடைய தாய் மாமா தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் விஜயலட்சுமி இருவருக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.


தயாரிப்பாளர் தியாகா குறிஞ்சிசெல்வன் பேசியதாவது:


“இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். என்னுடைய பெற்றோருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்த அவர்களுக்கு நன்றி சொல்வதைவிட, அவர்களை எப்போதும் மனதில் வைத்துப் போற்றுவதுதான் முக்கியம். இன்று நான் இந்த மேடையில் நிற்கிறேன் என்றால், அதற்கு முக்கியக் காரணம் என்னுடைய குருநாதர் சுரேஷ் சுப்ரமணியன் அவர்கள்தான். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் எனக்கு வழிகாட்டி, இந்த நிலைக்கு வருவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் அவர். அவர் ஏற்றிவைத்த அந்த விளக்கு அணைந்துவிடாமல் தொடர்ந்து ஒளிரச் செய்வதில் என்னுடைய மனைவி டாக்டர் விஜயலட்சுமிக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. எனக்கு வழிகாட்டிய மாமாவுக்கும், என்னுடன் பயணித்து இந்த அளவுக்கு வளர்ச்சியடைய உறுதுணையாக இருந்த விஜயலட்சுமிக்கும், என்னுடைய பெற்றோர் ராஜமாலிகம், ஜானகி அம்மா ஆகியோருக்கும் இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இன்று இங்கு வந்திருக்கும் பலரும் என்னை வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பில் இருக்கும் சவால்கள் குறித்தும் எச்சரித்திருக்கிறார்கள். அவர்கள் கூறிய ஆலோசனைகளை நான் நிச்சயமாக மனதில் வைத்துக்கொள்வேன். தவறுகள் ஏற்பட்டாலும், எதிர்பார்த்தபடி படம் அமையாவிட்டாலும், எங்களைக் கைவிடாமல் வழிகாட்டுவதற்கும் எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு முன்னே அழைத்துச் செல்வதற்கும் இவ்வளவு பெரிய நண்பர்கள் பட்டாளம் பின்னால் இருக்கிறது என்ற நம்பிக்கைதான் இந்த முயற்சியில் இறங்குவதற்கான மிகப்பெரிய பலம். எனவே, நிச்சயமாக இந்தப் பயணத்தில் வெற்றியை நோக்கித்தான் முன்னேறுவோம்.


இந்தப் படம் வெற்றி பெறும் நாளில், இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த யுவராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து எங்களுடன் இருக்க வேண்டும். உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடனும் ஆதரவுடனும் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் பல வெற்றிப் படங்களைத் தயாரிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நன்றி, வணக்கம்.”

 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’.


இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18)  , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர்.


ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும், வசூல் ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘பத்தா’ படக்குழுவினர் ‘சக்சஸ் மீட்’ வெற்றிச் சந்திப்பை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்


நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசும்போது,


"முதலில் இந்த வாய்ப்பு கொடுத்த அட்லீ அண்ணாவுக்கு நன்றி. நான் ஒவ்வொரு படத்திலிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ராஜுமுருகன் வரிசையில் பாலாஜி தரணிதரன் அவர்களிடமும் கற்றுக்கொண்டேன். அது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் எதற்கும் ஆசைப்படக்கூடாது, எளிமையாக வாழ வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக்கொண்டேன். மாலை 6 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும், சீக்கிரம் தூங்கப் போய்விட வேண்டும், செல்போன் தொடர்புகளை விட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்றெல்லாம் அவரிடம் கற்றுக்கொண்டேன்.


விஜய் சேதுபதி சார் அருமையாக நடித்திருந்தார். சிறுவன் சாய் நடிப்பில் ஆச்சரியப்படுத்தினான். லிஜோமோல் சிறப்பாக நடிக்கக்கூடியவர். ‘மகளே’ பாடலின் படப்பிடிப்பின்போதே எனக்குக் கண்கள் கலங்கின" என்றார்.


படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் பேசும்போது,


"இந்தப் படத்தில் அனைவருமே பிரமாதமாக நடித்திருந்தார்கள். சாய் பிரமாதமாகப் பாடல்களை மட்டுமல்ல, பின்னணி இசையையும் பிரமாதமாக அமைத்திருக்கிறார். எதிர்பாராத பல விஷயங்களைக் கொண்டதாக இந்தப் படம் இருந்தது. இந்தப் படத்தில் எதிர்மறைத் தன்மையே வராமல், விமர்சனங்கள் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எதிர்மறையையே பரப்பி வரும் இந்தக் காலத்தில் இப்படி அமைவது அரிது. மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் அட்லீ இதை முன்னெடுத்திருக்கிறார். இதேபோல் அவர் நிறையப் படங்கள் செய்ய வேண்டும். இதுபோல நல்ல நல்ல படங்கள் வரவேண்டும்; விஜய் சேதுபதி சார் பாத்திரத்தில் சின்னச் சின்ன நுட்பங்களைக் காட்டி அவர் நடித்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக, அந்தப் பாத்ரூம் காட்சியில் அந்தப் பாத்திரமாகவே மாறியிருந்தார். அந்தச் சிறுவன் சாய் கடைசியில் வாக்குமூலம் போல் அழுது பேசி நடித்திருக்கும் காட்சியில் பிரமாதமாக நடித்திருப்பான். பின்னணி இசை இல்லாமலேயே மனதைக் கலங்க வைக்கும். லிஜோமோலும் மிகவும் நுட்பமாக நடித்திருப்பார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருப்பார்கள்" என்றார்.


படத்தின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா பேசும்போது,


"இந்தப் படத்திற்கு ரெட்ரோ போல ரூட் கொடுக்க விரும்பினேன். இந்தப் படத்தின் புவியியல் காட்சி எனக்குப் பிடித்தது. அது எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. அதுவே அந்தத் தோற்றத்தைக் கொடுத்தது. விஜய் சேதுபதி அவர்களின் முதல் தோற்றமே பிரமாதமாக அமைந்தது. இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.


பாடலாசிரியர் கேகே நகர் கானா ஜீவா பேசும்போது,


"இந்தப் படத்தில் எனக்கு பாடல் வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி. எனக்கு இதற்கு மேல் பேச வரவில்லை. இந்தப் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக உள்ளன" என்றார்.


படத்தின் இணை வசனகர்த்தா எழுத்தாளர் கரன் கார்க்கி பேசும்போது,

"இந்த மேடை எனக்கு 16 ஆண்டு காலக் கனவு. அந்த அளவுக்கு எனக்கு சினிமா மீது ஒரு கனவு உண்டு. இதுவரை எட்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு எழுதியிருக்கிறேன். 16 விருதுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காதது இப்போது கிடைத்துள்ளது. இப்போது அனைவரும் ட்ரீட் கேட்கிறார்கள். முதலில் இந்தப் படத்தை இயக்குநர் அளித்தபோது தயக்கமாக இருந்தது. ஏனென்றால், பொதுவாக எனக்கு தமிழ் சினிமா மீது ஒரு விஷயத்தில் வெறுப்பு உண்டு. சென்னை வட்டார மொழியைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்று. சென்னை வட்டார மொழிகளில் பல அடுக்குகள் உண்டு. சிந்தாதிரிப்பேட்டையில் பேசுவதை வியாசர்பாடியில் பேச மாட்டார்கள். ராயபுரம் மொழி வேறு மாதிரியாக இருக்கும்.

இந்தச் சென்னை வட்டார மொழியின் வேரைக் கண்டுபிடித்துச் சில சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்திய சொற்களின் பொருளை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.


இதன் திரைக்கதையே ஒரு பயிற்சி நிலையத்திற்கு பாடமாக வைக்கும் அளவிற்கு இருக்கிறது" என்றார்.


நடிகர் ஹரிகிருஷ்ணன் பேசும்போது,


" இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் மிக்க நன்றி .ஒரு நல்ல படத்தில் நான் இருப்பதற்காக, நான் பங்கேற்க வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி. விஜய் சேதுபதி அண்ணா அவர்களுடன் நான் நடித்ததற்காகவும் எனக்கு உரிய இடத்தை கொடுத்ததற்காகவும் நன்றி. இந்தப் படத்திற்கு நல்ல நேர்நிலை உணர்வுகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. அதற்கு காரணம் அட்லீ என்கிற நல்ல ஆத்மா தான் காரணம்" என்றார்.


நடிகர் பாலமுருகன் பேசும்போது ,


"எனக்கு இது தான் முதல் படம். நான் இதற்கு முன்பு மீடியாக்களில் இருந்து கொண்டு சினிமா நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் இந்த மேடையில் இருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி.விஜய் சேதுபதி அண்ணாவிடம் நிறைய கற்றுக் கொண்டேன்" என்றார்.


நடிகர் அர்ஜுன் சிதம்பரம் பேசும்போது,


"வந்தாரை வரவேற்கும் தமிழக மக்களுக்கு நன்றி. ‘பத்தா’ எங்கள் அனைவருக்கும் முக்கியமான படம். கதை சொல்லும்போது நம்பிக்கையாக இருந்தது, நடிக்கும்போது வியப்பாக மாறியது. படப்பிடிப்பில் இயக்குநர் சொன்னதை நான் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருந்தேன். நல்ல கதையை நம்பினால் அது அனைத்தையும் தேடிக் கொண்டு வரும் என்பதற்கு இந்தப் படமே ஒரு உதாரணமாக இருக்கிறது. நல்ல சினிமா வராதா என்ற ஏக்கத்தைக் கொஞ்சம் போக்குகிற படமாக இது வந்திருக்கிறது. அதில் நானும் பங்கு பெற்றிருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.


நடிகர் விஷ்ணு பேசும்போது,


"நான் மலையாளத்திலிருந்து இங்கே வந்திருக்கிறேன். என்ன பேசுவது என்றே தெரியவில்லை. என்னைக் கேட்டால், மூன்று விஷயங்களைக் கூறுவேன். முதலில் நாம் கலையைத் தேர்ந்தெடுப்பதை விட, கலை நம்மை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து கடினமாக உழைக்க வேண்டும்; மௌனமாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, நாம் பேசக்கூடாது; நமது படம்தான் பேச வேண்டும். இந்த மூன்றும் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள். இந்தப் படத்தில் என் நடிப்பு பிடித்திருந்தால், வாய்ப்பு கொடுங்கள்" என்றார்.


தயாரிப்பாளர்  முராத் கெதானி பேசும்போது,


"என்னை இந்தத் தயாரிப்பில் இணைத்ததற்கு அட்லீ அவர்களுக்கு நன்றி. இந்த நல்ல படப்பிடிப்புக் குழுவில் நானும் பங்கேற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இயக்குநர், விஜய் சேதுபதி, முத்துராஜ் மற்றும் அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு மிக முக்கியமான படம். இந்தப் படத்தைப் பற்றி மட்டுமே எல்லாமே நல்ல விமர்சனங்களாக வந்தன. இது மாதிரி வரவேற்பு எந்தப் படத்திற்கும் கிடைத்திருக்காது" என்றார்.


கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ் பேசும்போது,


"இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரொம்ப பதற்றமாக இருந்தேன். இப்போது அந்தப் பதற்றம் குறைந்திருக்கிறது. இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மிகவும் நன்றி. கன்னிமா பாத்திரத்தில் என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மிகவும் நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் தயாரிப்பாளர் அட்லீ அவர்களுக்கு நன்றி. மற்ற தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினரும் தங்களது சிறந்ததைக் கொடுத்திருக்கிறார்கள். அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. படப்பிடிப்பிலிருந்து டப்பிங் வரை இயக்குநர் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து என்னிடமிருந்து வேலை வாங்கினார். அவரது பொறுமைக்கு நன்றி. விஜய் சேதுபதி சார் அவர்களைப் பார்த்தாலே எனக்குப் பயம். ஆனால் அவர் அருகில் இருப்பது ஒரு மேஜிக் போல் உணர வைக்கும். அந்த மேஜிக்கில் நானும் அருகில் இருந்தது, அதைப் பார்த்தது பெருமையாக இருக்கிறது. அவர் சக கலைஞர்களுக்கு கொடுக்கும் இடமும் சுதந்திரமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. சிறுவன் சாய் நல்ல திறமைசாலி. சஹஸ்ராவும் நன்றாக நடித்திருந்தார். ‘செல்ல மகளே’ பாடல் சாய் அப்யங்கர் இசையில் பிரமாதமாக இருந்தது. இந்தப் படம் அனைவரையும் போய்ச் சேர வேண்டும். மேலும் மேலும் பார்க்க வேண்டும். பார்த்தவர்கள் பார்க்காதவர்களிடம் கூற வேண்டும். இந்தப் படத்தை மேலும் மேலும் வெற்றிபெற உதவுங்கள்" என்றார்.


சிறுமி சஹஸ்ரா பேசும்போது,


"தேன்மொழி பாத்திரத்தில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அட்லீ சார் உட்பட அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. எனக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. விஜய் சேதுபதி அவர்களுக்கு நன்றி. நல்லதொரு உணர்வைத் தருகிற நல்லதொரு படம் இது" என்றார்.


சபரி பாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பிரித்திவி ராஜ் பேசும்போது,


"இது எனக்கு முதல் படம், முதல் பயணம். பயமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருக்கிறது. படப்பிடிப்பின் போதும் அப்படித்தான் இருந்தது. ஒரு பக்கம் பயமாகவும், இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அனைவரும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செட்டில் அங்குமிங்கும் நான் திரிந்து கொண்டிருந்தாலும், அந்த 60 நாட்களும் என்னைப் பத்திரமாக அனைவரும் கவனத்துடன் பார்த்துக் கொண்டார்கள். இயக்குநர் அழகாக நடிக்க வைத்தார். சேது சார் உடன் நடிக்கும் போது பயமாக இருந்தது. படப்பிடிப்பில் நடிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சியை முகத்தில் கொண்டு வராமல் பயந்து கொண்டே இருந்தேன். அவர் நண்பரைப் போல பழகினார். ஜாலியாக இருந்தார். சில நேரம் திட்டியிருக்கிறார். ஆனால் நன்றாகப் படிக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டே இருந்தார்" என்றார்.


இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் பேசும்போது,


"இந்தப் படத்தை நான்தான் இசையமைக்க வேண்டும் என்றபோது எனக்குப் பல விதமான உணர்வுகள் வந்தன. இந்தப் படத்தில் நடித்தவர்கள் இரண்டு மூன்று பேர் தேசிய விருது பெறுவார்கள் என்று நம்புகிறேன். வண்டி ஓட்டுபவர்கள் கூட அத்தனை அருமையாக நடித்திருந்தார்கள். யார் சிறப்பாக நடித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடித்திருந்தார்கள். முதலில் என்னை இயக்குநர் நம்பவில்லை. வேறு ஒருவரை வைத்து செய்வதாக இருந்தது. நான் ஒவ்வொரு பாடல் மூலமும் அவரிடம் நம்பிக்கை வரவைத்தேன். பிறகுதான் அவர் பின்னணி இசை அமைக்கவே சம்மதித்தார். சேது அண்ணா பிரமாதமாக நடித்திருந்தார். லிஜோ அக்காவும் சிறப்பாக நடித்திருந்தார். முதலில் கதை சொன்னபோதே அட்லீ அண்ணா என்னை நம்பினார். நானே என்னை நம்பவில்லை. ஆனால் அவர் நம்பினார். எனது இரண்டாவது படத்திற்கும் நீதான் இசையமைக்கிறாய் என்றார். அது நன்றாக வரும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.


இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசும்போது,


"இந்த வாய்ப்பு கொடுத்த மூன்று தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. என்னிடம் குறைவாக இருப்பது, அட்லீயிடம் அதிகமாக இருப்பது, அந்த நேர்நிலை எண்ணம்தான். முதலில் சேதுவிடம் கதை சொன்னேன். அவர் நண்பர் என்பதால் ஓகே செய்துவிட மாட்டார். அவருக்குப் பிடித்துப் போனதால் அட்லீயிடம் அழைத்துக் கொண்டு சென்றார். விஜய் சேதுபதியுடன் நான் இணைந்த படங்களில் உள்ள அனுபவத்தில் சொல்கிறேன். அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதை நிரூபித்தவர்.


லிஜோ மோல் மூன்று நாட்களுக்குள் படப்பிடிப்பு என்கிறபோதுதான் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் பெரிய நம்பிக்கை வந்தது. எது நடக்குமோ, அது நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது. அவர் தனது நேர்மையான பங்களிப்பை வழங்கினார். அவர் ஒரு சிறந்த நடிகை. சிறுவன் சாய் குழந்தை குணம் கொண்டவன். அவனை நடிக்க வைக்காமல் இருந்தாலே போதும். அந்தக் குழந்தைத்தன்மை சரியாக வந்தாலே சிறப்பாக அமைந்துவிடும் என்று நினைத்தேன். அப்படித்தான் வந்திருக்கிறது. சித்தாவில் வந்து பாராட்டைப் பெற்ற சிறுமி சஹஸ்ராவும் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தை நம்பினார்கள். அது படத்தில் பொறுப்பாக மாறி வெளிப்பட்டது. அதன் விளைவு சரியாக அமைந்திருக்கிறது. முத்துராஜ் என்ற அனுபவசாலி, அந்த 80s களின் உலகத்தைக் கொண்டு வருவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இப்படியே திறமையான ஒளிப்பதிவாளர், அற்புதமான எடிட்டர் என அனைவருக்கும் பங்கு உண்டு.


சாய் அப்யங்கர் முதலில் இசையமைக்க எனக்கு ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால் அந்தப் பயத்தை நீக்கி, நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு பின்னணி இசை அமைக்க வைத்தேன். அவர் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு சென்றார். அதுமட்டுமல்ல, காஸ்டியூமர் ஸ்ருதி மஞ்சரி வயதில் இளையவராக இருந்தாலும், 80s களின் உடைகளை எல்லாம் சரியாகக் கொண்டு வந்தார். டிசைனர் கோபி பிரமாதமான திறமைசாலி.

இப்படி இந்தப் படத்திற்குப் பின்னால் உழைத்தவர்கள் நிறைய பேர். அனைவருக்கும் நன்றி" என்றார்.


பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,


"இது ஒரு நீண்ட பயணம். இந்தப் படம் வணிகப் படங்களுக்குள் கலையை கொண்டு வந்த படம். இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வணிகத்தை மீறி கலை செய்யக்கூடிய இயக்குநராக பாலாஜி தரணிதரன் இருக்கிறார்.


இந்தப் படம் என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருப்பதால் என் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கிறது. படத்தில் வரும் பத்தாவுக்கு அவன் பாடியபோது ஒரு சின்ன பாராட்டு கிடைத்திருந்தால், அவன் கத்தியைத் தூக்கியிருக்க மாட்டான்.


என் வாழ்க்கையும் அப்படித்தான் திசை மாறியது. போதை அடிமையாக இருந்து மாறியிருக்கிறேன். நல்ல படங்கள் எல்லாம் நல்ல புத்தகங்கள் போன்றவை. இந்தப் படம் அப்படிப்பட்ட படம்" என்றார்.


திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது,


"விஜய் சேதுபதி சாரின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ முதல் அவரது எல்லா முக்கியமான படங்களிலும் நாங்கள் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்திலும் இணைய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி" என்றார்.


நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,


"எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது. பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. ஒரு படத்தை எடுத்து வந்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும்.


நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும். மகிழ்ச்சியாக வருவோம். கொண்டாட்டத்துடன் வருவோம். நீங்கள் நின்று, பாராட்டி, கை கொடுத்து, கட்டிப் பிடித்து, நடத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை தங்கள் படம் போல ஆரத்தழுவிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.


உங்களுக்குப் பிடித்து விட்டால் போதும், தூக்கிக் கொண்டு செல்வீர்கள். அது பற்றி யார் என்ன மாதிரியாகப் பேசினாலும், அதற்கு விளக்கம் கொடுப்பீர்கள். அனைத்து சமூக ஊடகங்களிலும் கொண்டு செல்வீர்கள். அப்படி அதை நீங்கள் உங்கள் படத்தைப் போலவே கொண்டாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது, நம் வாழ்க்கை வரம்தான் என்பதை நினைவுபடுத்துகிறது.


இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை. இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள் தானே? ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் உற்றுப் பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார். அதனால் நடிக்க முடியவில்லை.


சீதக்காதி, முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் சார், அமிதாப் சார், மோகன்லால் சார் போன்றவர்கள் நடிக்க வேண்டிய கதை என்றார். ஆனாலும் நான் நடித்தேன். தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட, அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும்.


இங்கு நிறைய நபர்களை அடிப்பது, இந்தக் கூட்டமாக இருப்பது, இதெல்லாம் பெரிய படங்களில் இருப்பவை. ஆனால் மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம் தான் பத்தா. இது உணர்வுகளைச் சொல்கிற படம். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சின்ன பையன் சாய் உடன் நான் சரியாக பேசவில்லை, பழகவில்லை. ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்க வேண்டும். ஒரு சகஜம் ஏற்பட்டு விட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன். அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப் படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது. அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வேன். லிஜோமோலின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. நன்றி. என் சகோதரர்கள் ஹரி, ஜோதி, விஷ்ணு, பாலா, உங்களுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். சாய் அப்யங்கர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தைப் புரிந்துகொண்டு வேலை செய்தார். இப்படி அனைவரும் இந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு பணியாற்றினார்கள். அனைவருக்கும் நன்றி" என்றார்.


நிறைவாகத் தயாரிப்பாளர் அட்லீ பேசும்போது,


"எப்படி இருந்தாலும், எப்படிப் பேசினாலும் குற்றம் சொல்கிறார்கள். நான் திமிர் பிடித்தவன் என்கிறார்கள். நியாயமாக இருக்க வேண்டும்; கூட இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த நேர்மை, நம்பிக்கை திமிர் என்றால் இருக்கட்டும்.


பால் கெட்டுப் போனால், தயிராகும்போது அது மதிப்பு மிக்கதாக மாறுகிறது. தயிர் கெட்டுப் போனால், நெய்யாகும்போது அது மேலும் மதிப்பு மிக்கதாக மாறுகிறது. இப்படித்தான் வாழ்க்கையிலும் சில கெட்ட அனுபவங்களால் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்வோம். கடவுள் வழி தவறவிட்டார் என்றால், அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பத்தாவின் அனுபவம்தான் இந்தப் படம்.


நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். அப்படி அதற்கு திமிர் என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.


நான் சின்ன வயதில் விஜய் சாரை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். ஷாருக்கானை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். அப்படித்தான் எனது ஒவ்வொரு கட்டமும் இருந்தது. இன்று பாலிவுட் வரை சென்று படம் இயக்கியிருக்கிறேன்.


நான் கறுப்பாக இருக்கிறேன், மதுரை பக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் சிலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால் இதைப் பற்றி நான் கண்டுகொள்ளாமல் என் பாதையில் போய்க் கொண்டே இருப்பேன்.


இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நான் சொன்ன ஒரு சொல்லிற்காக வந்து இணைந்து கொண்ட தயாரிப்பாளர் முராத் கெதானிக்கு நன்றி.


சிலரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய் சேதுபதி அண்ணன். அவர் நல்ல மனிதர், நல்ல நடிகர் என்பதைவிட, முதலில் நல்ல மனிதர். அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி ரஜினி சார், ஷாரூக்கான் எல்லாம் பேசுகிறார்கள்.


இன்று விஜய் சேதுபதி அண்ணாவை இந்தியா முழுக்க தெரியும். அவரை நான் மேலும் மேலே கொண்டு செல்வேன். கமல் சார், விஜய் சேதுபதி அண்ணா இருவரையும் வைத்து வாய்ப்பு இருந்தால் ‘மருதநாயகம்’ படத்தினை மீண்டும் தொடங்கி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.


சாய் அப்யங்கர் கடவுளின் குழந்தை. அவரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசலாம். ஆனால் நாங்கள் லண்டன் சென்றபோது, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய சுமார் 200 இசைக் கலைஞர்களையே இவரது இசைக் குறிப்புகளுக்கு வாசிக்கவைத்து, ஆச்சரியப்படுத்திக் கைதட்டல் வாங்கி வந்தவர். நான் இங்கு சொல்கிறேன், அவர் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக வளர்வார். இப்படம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், மேலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நான் மக்களைத் தேடிச் செல்கிறேன். அது குறைவானதல்ல. மக்களை நோக்கிச் செல்வது உயர்வான விஷயம்" என்றார்.

 

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளையும், புதுமையான கதை சொல்லும் முறைகளையும் ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா புதிய தயாரிப்பு நிறுவனமான ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் வழக்கமான திரைப்பட உருவாக்க முறைகளைத் தாண்டி, புதிய தொழில்நுட்பங்களுடன் தனித்துவமான படைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


33 ஆண்டுகால அனுபவம் கொண்ட கலை இயக்குநரான டி. முத்துராஜ், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகத் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயக்கி, தயாரிக்கும் ஹைப்பர் ரியலிஸ்டிக் டிஜிட்டல் ஹைப்ரிட் ஃபீச்சர் ஃபிலிம் (HYPER - REALISTIC DIGITAL -HYBRID FEATURE FILM), மெய்நிகர் தொழில்நுட்பத்தையும் புதுமையான காட்சியமைப்பு முறைகளையும் இணைத்து உருவாகி வருகிறது. இந்நிலையில், டி. முத்துராஜின் இந்தப் புதிய முயற்சி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, அவருடன் கடந்த ஏழு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருவதாகவும், அவரது இந்தப் புதிய முயற்சி தனக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


‘மந்திரா ஸ்டுடியோஸ்’ என்பது வெறும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல. புதிய சிந்தனைகளுக்கும், புதுமையான கதை சொல்லும் முயற்சிகளுக்கும், எல்லைகளைக் கடந்து கற்பனை செய்யும் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பளிக்கும் தளமாக இது அமையும். வழக்கமான திரைப்படம் உருவாக்கும்   முறைகளைத் தாண்டி, தனித்துவமான சிந்தனைகளை ஊக்குவிப்பதும், புதிய காட்சியுலகை உருவாக்குவதும் இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என ஆர்.டி. ராஜா குறிப்பிட்டுள்ளார்.


விளம்பரத் துறை, ஆக்கப்பூர்வமான கலைப் பணிகள், தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் டி. முத்துராஜுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஆர்.டி. ராஜா, அவருடைய புதிய முயற்சிக்கு தனது மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.


நம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களையும், ஏற்கனவே உள்ள வரம்புகளை மீறிச் சிந்திக்கும் முயற்சிகளையும் முன்னெடுப்பதன் மூலமே புதிய படைப்புகளை உருவாக்க முடியும். சவால்களை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வாய்ப்பளித்து, அவர்களின் சிந்தனைகளைத் திரையில் கொண்டுவருவதற்கான தளமாக ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ அமையும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


ஒரு சிந்தனை சவாலானதாக இருந்தாலும், அதைச் சாத்தியமற்றது என்று தொடக்கத்திலேயே நிராகரிக்காமல், முயற்சியுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இந்தப் புதிய முயற்சியின் அடிப்படை நோக்கமாகும். புதிய கதைகள், புதுமையான சிந்தனைகள் மற்றும் இதுவரை சாத்தியமில்லை எனக் கருதப்பட்ட முயற்சிகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்பதன் மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்க முடியும் என ஆர்.டி. ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


டி. முத்துராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது படம் குறித்த கூடுதல் விவரங்களும் முக்கிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்


புதிய தொழில்நுட்பம், புதுமையான கதை சொல்லல், எல்லைகளைக் கடக்கும் கற்பனை எனத் தனித்துவமான முயற்சிகளுடன் உருவாகும் ‘மந்திரா ஸ்டுடியோஸ்’, தமிழ் சினிமாவில் புதிய படைப்புகளுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம் அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆல்பி ஆண்டனி சார்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார்.


தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடலோரப் பகுதியான ராமேஸ்வரத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கும் ஒரு மீனவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நீதி, கண்ணியம் மற்றும் மன உறுதி ஆகியவற்றையும் படம் பேசியது. 


சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ‘என்ன விலை’ திரைப்படத்தின் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக இந்த விருது அமைந்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் கலாமயா சினிவெர்ஸின் முயற்சியில் இது முக்கியமான சாதனை. 


விருது குறித்து ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி பகிர்ந்து கொண்டதாவது, "அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெறுவது எனக்கு பெருமையான தருணம். ‘என்ன விலை’ திரைப்படம் அதன் கதைக் களத்துடனும் கதாபாத்திரங்களுடனும் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. அந்த உலகத்தை காட்சிகளாக மாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்குப் பெரும் பாக்கியம். இந்தப் பெருமையை இயக்குநர் சஜீவ் பாழூர், தயாரிப்பாளர்கள் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார். 


படத்தின் தயாரிப்பாளர்களான ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் பகிர்ந்து கொண்டதாவது, “ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவுக்குக் கிடைத்துள்ள இந்தச் சர்வதேச அங்கீகாரம், ‘என்ன விலை’ படக்குழுவினர் அனைவருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது. படத்தின் காட்சி மொழிக்கும், படக்குழுவினரின் உழைப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறோம்” என்றனர்.

 

நாம் இதுவரை அதிகம் அறிந்திடாத உண்மையை திரையில் கொண்டு வரும் திரைப்படங்கள் உலகைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துகின்றன. இயக்குநரும் எழுத்தாளருமான சங்கர நாராயணன் இயக்கியுள்ள ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ திரைப்படமும் அத்தகைய படைப்புகளில் ஒன்று. தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியில் அமைந்துள்ள சிட்லிங்கி பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்த ஆவணப்படம். அப்பகுதியில் நிகழ்ந்த அசாதாரணமான மருத்துவ மற்றும் சமூக மாற்றத்தைப் பதிவு செய்கிறது. 2026ஆம் ஆண்டுக்கான 18வது சர்வதேச கேரள ஆவணப்படம் மற்றும் குறும்படத் திருவிழாவில் (IDSFFK) இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டின் தொலைதூர வனப்பகுதியான சிட்லிங்கியைப் பின்னணியாகக் கொண்ட இப்படம், 1990களில் அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் எதிர்கொண்ட மருத்துவ நெருக்கடிகளையும், அதைத் தொடர்ந்து இரண்டு மருத்துவர்கள் அந்தப் பகுதிக்கு வந்து 1993ஆம் ஆண்டு ‘Tribal Health Initiative’ (THI) என்ற அமைப்பைத் தொடங்கியதன் மூலம் ஏற்பட்ட மாற்றங்களையும் பதிவு செய்கிறது. மிகச் சிறிய அளவில் தொடங்கிய அந்த மருத்துவ முயற்சி, படிப்படியாக 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் சமூகப் பங்களிப்புடன் கூடிய அமைப்பாக வளர்ந்தது. இதன் மூலம் பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது.


பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் பொதுவெளி கவனத்துக்கு வராமல் போகும் பல்வேறு யதார்த்தங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது என்கிறார் இயக்குநர் சங்கர நாராயணன். ‘தி வேலி ஆஃப் ஹெல்த்’ ஆவணப்படம் மூலம் மருத்துவம், கண்ணியம், சமூகப் பங்கேற்பு மற்றும் நிலையான மாற்றம் ஆகியவற்றை பேசியுள்ளார். 


திரைப்படம் குறித்து இயக்குநர் சங்கர நாராயணன் பகிர்ந்து கொண்டதாவது, “பழங்குடியின சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. போதிய மருத்துவ வசதிகள் இல்லாமல் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், மருத்துவ உதவியைப் பெறுவதில் அவர்கள் சந்திக்கும் தடைகளையும் உலகம் அறிய வேண்டும் என்று நினைத்தேன். மருத்துவம் நாளுக்கு நாள் வணிகமயமாகி வரும் இந்தக் காலகட்டத்தில், தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காண முன்வந்த ஒரு பள்ளத்தாக்கின் கதை, மிகவும் அவசியமான மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது. இது அனைவருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையைப் பேசுகிறது. அதே நேரத்தில், எது தவறாக உள்ளது என்பதை மட்டும் சுட்டிக்காட்டாமல், அதற்கான தீர்வையும் இந்தப் படம் முன்வைக்கிறது. இந்தக் கதையைத் தேர்வு செய்ய என்னைத் தூண்டிய முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று.


இந்தப் பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பாராட்டுகள் எனக்கு பொறுப்புணர்வை அதிகரித்துள்ளது. மேலும், இதுபோன்ற கதைகளை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எனது எண்ணத்தையும் வலுப்படுத்தியுள்ளது” என்றார்.


’தி வேலி ஆஃப் ஹெல்த்’ என்பது மருத்துவ முயற்சியைப் பற்றிய திரைப்படம் மட்டுமல்ல. ஒரு சமூகத்திற்கு தனது சொந்த வாழ்க்கைச் சூழலை மாற்றுவதில் பங்கேற்கும் வாய்ப்பும் நம்பிக்கையும் வழங்கப்படும்போது, எத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகின்றன என்பதைக் கூறும் கதையாகவும் இது அமைந்துள்ளது. சிட்லிங்கியின் பயணம் ஒரு எளிமையான, அதே நேரத்தில் வலிமையான செய்தியை முன்வைக்கிறது: சில நேரங்களில், மிகப் பெரிய மாற்றங்கள் அமைதியாகவே தொடங்குகின்றன; ஒருவர் மீது ஒருவர் அக்கறை செலுத்தத் தொடங்கும் மக்களிடமிருந்தே அந்த மாற்றங்கள் பிறக்கின்றன.

 

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. மனதுக்கு நெருக்கமான கதைகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான படங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வரிசையில் ‘ஹைக்கூ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. 


இளமைத் துள்ளல் நிறைந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், உணர்வுப்பூர்வமான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் உருவாகி உள்ளது. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


கல்லூரி கலாட்டா, கலர்ஃபுல் விஷூவல்ஸ் மற்றும் காதல் என 145 விநாடிகள் நீளும் டிரெய்லர் கதையின் மையத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஒரே ஒரு மாணவனாக மனோ வரும்போது நடைபெறும் எதிர்பாராத மற்றும் நகைச்சுவையான சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். கதாபாத்திரங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி, நகைச்சுவை காட்சிகள் மற்றும் கதையின் உணர்வுப்பூர்வமான  தருணங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. 


‘கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீதேவி, இயல்பான நடிப்பாலும் திரை இருப்பாலும் இந்தப் படத்திலும் பார்வையாளர்களைக் கவர்கிறார். அதேபோல் ஃபெமினா ஜார்ஜ், தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் கதைக்கு கூடுதல் அழகு சேர்க்கிறார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் என முன்னணி கதாபாத்திரங்களின் எனர்ஜி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 


‘ஹைக்கூ’ குறித்து நடிகர் ஏகன் பகிர்ந்து கொண்டதாவது, “இது ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம். ஆனால், இதற்குள் ஒரு ஆழமான கருத்தும் இருக்கிறது. ‘டோரதி’ படம் பார்த்த பிறகு மற்றவர்களின் தேர்வுகளையும் தனிப்பட்ட உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் பார்வையாளர்கள் பலரது மத்தியில் உருவானது. அதேபோல், ‘ஹைக்கூ’ திரைப்படமும் பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வை எப்படி மாற வேண்டும் என்பதையும், பெண்களை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்கிறது. ஆனால், இந்தப் படம் எந்தக் கருத்தையும் போதிக்கும் வகையில் இருக்காது. கதைக்குள் கருத்தை இயல்பாக இணைத்து, ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறோம். திரையரங்கைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் இந்தப் படம் நிச்சயம்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார். 


ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொள்ள, சக்தி பிரணீஷ்.பி படத்தொகுப்புப் பணிகளை கவனித்துள்ளார். கலை இயக்கத்தை பிரேம் கருந்தமலை மேற்கொண்டுள்ளார். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 


தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், "இந்த படம் சிறந்த அனுபவமாக மாற்றி கொடுத்த ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி".


ஷபிதா, "கடந்த 16 வருடங்களாக திருநங்கை மற்றும் திருநர் சமூகத்திற்காக வேலை பார்த்து வருகிறோம். நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், நிறைய படங்கள் வந்திருந்தாலும் 'டோரதி' எப்போதுமே ஸ்பெஷல். படம் பார்த்து முடித்ததும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டேன். எங்கள் சமூகத்தின் குரலாக இந்தப் படம் உள்ளது. நிஜ வாழ்க்கையிலும் என்னை ஏற்றுக் கொண்டது என் அண்ணிதான். அதனால், 'டோரதி' என்னை நெகிழ வைத்தது. திருநங்கைகள் திருமணமே செய்து கொள்ளலாம் என சட்டமே வந்துவிட்டது. அப்படி இருக்கும்போது இந்த படத்தின் கிளைமேக்ஸில் என்ன பிரச்சினை? திருநர் சமூகம் இன்னும் பல உயரத்திற்கு செல்வார்கள். அதற்கு இந்த படமே சாட்சி".


மாளவிகா, "கார்த்தி-ஹீரோ, சுப்பு- ஹீரோயின், ராஜ்- இளையராஜா சார் என கார்த்திக் சுப்புராஜாக இணைந்து 'டோரதி' படம் உருவாகியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். ரிஷிகாந்த், சனந்த் என இரண்டு அற்புதமான நடிகர்களை கார்த்திக் சுப்புராஜ் வெளிக்கொண்டு வந்துள்ளார். எங்களை மதிக்கவில்லை என்றாலும் எங்களை அவமானப்படுத்தாதீர்கள். இந்த வருடம் நமக்கு கிடைத்த பரிசு 'டோரதி'. நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும். ஊரோரம் புளியமரம் என யுவன் சங்கர் ராஜா கொடுத்த கசப்பான பாடல் அனுபவத்தை அவரது அப்பா இளையராஜா மீனாட்சி, காமாட்சி எனப் பாடல் கொடுத்து நீக்கிவிட்டார். அனைவருக்கும் நன்றி". 


சுபா, "இந்த சமூகத்திற்கான புரட்சிதான் இந்தப் படம். 'பாம்பே', 'காஞ்சனா', 'அருவி' போன்ற படங்களில் திருநர் சமூகத்தை சிறப்பாக காட்டியிருப்பார்கள். ஆனால், ஜென்ஸீ காலத்தில் 'டோரதி' பேசியிருக்கும் விஷயம் மிக முக்கியமானது. 2050 வரை சிந்திக்க வைக்கும் படமாக இது வெளியாகியுள்ளது. வியாபார நோக்கத்தில் இல்லாமல் சமூக நோக்கத்தில் இந்தப் படத்தை இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். சனந்த், ரிஷிகாந்த் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. நாம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம்" என்றார். 


இயக்குநர் வசந்தபாலன், "ஆணாதிக்கம், மாஸ் என நினைத்து நிறைய தவறான விஷயங்களை சினிமாவில் திணித்து கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் சம்பட்டியில் அடித்தாற்போலதான் 'டோரதி' வந்திருக்கிறது. ரோமியோ-ஜூலியட் போல 'டோரதி'யும் அற்புதமான காதல் படம். இந்தப் படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்க வேண்டும். ஒளிப்பதிவு படத்தின் பலம். ராஜா சார் தன் இசையால் இந்தப் படத்தை ஆசீர்வதித்திருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்". 


இயக்குநர் சசி, " நான் ஒரு தமிழ் சினிமா இயக்குநர் என்பதில் பெருமை. அதற்கு காரணம் 'டோரதி'. மூன்றாம் பாலினத்தவருக்காக ஒரு படம் செய்ய வேண்டும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முன்வந்திருப்பது பெரிய விஷயம். இன்னும் பெரிதாக அவர் ஜெயிக்க வேண்டும்". 


இயக்குநர் லிங்குசாமி, "பேரன்பும் தைரியமும் கொண்ட ஒருவரால் தான் இந்த 'டோரதி' மாதிரியான படம் எடுக்க முடியும். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு அது இருக்கிறது. இரண்டு முறை இந்த படம் பார்த்தேன். பேரன்போடு இந்தப் படம் எடுத்த கார்த்தியை வாழ்நாள் முழுக்க கொண்டாடலாம். ராஜா சாரின் இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம். ரஜினி- கமல் போல ரிஷி- சனந்த். வாழ்த்துக்கள்". 


இயக்குநர் மிஷ்கின், "'டோரதி' திரைப்படம் மூலம் திருநர் சமூகத்தை மிக உயர்ந்த இடத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் எடுத்து சென்றுள்ளார். சீர்கெட்ட சமூகத்தை 'டோரதி' மூலம் தூக்கி நிறுத்தியுள்ளார். வசூலை தாண்டி சிறந்த படமாக இது காலத்திற்கும் நிற்கும். இளையராஜாவை அடுத்து நான் கார்த்தி காலில்தான் விழ வேண்டும். இந்த படத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும். நம் எல்லோரையும் விட வாழ்க்கையை நன்கு புரிந்தவர்கள் திருநங்கைகள். சகிப்புத்தன்மையை இந்தப் படம் நமக்கு சொல்லி தருகிறது. காதுகள் இருப்பது இளையராஜா இசை கேட்க, கண்கள் இருப்பது டோரதி போன்ற படங்கள் பார்க்க. கடைசி விவசாயி, கொட்டுக்காளி படங்களை விட 100 மடங்கு சிறப்பான படம் டோரதி. மாஸ் ஹீரோ டெம்ப்ளேட்டை உடைத்து ரிஷி, சனந்த் பெரிய ஹீரோவாகி இருக்கிறார்கள். பெரிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. கீர்த்தி இந்தப் படத்தின் உயிர். நன்றி". 


சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, சக்திவேலன், "டோரதி படத்தின் வெற்றி விழாவை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இந்த படத்தின் மீது பல கருத்து வன்முறைகள் படம் பார்க்காமலேயே ஆரம்பத்தில் கட்டவிழ்க்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் இந்த வார இறுதியில் முதலிடம் பிடிக்கும். பல மாதங்கி, மரகதமணி, மீனாட்சி கொடுத்த ஆசீர்வாதம்தான் இது. ரிஷி, சனந்த் என இரு திறமையாளர்களை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி". 


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், " சினிமா வலுவான ஆயுதம். மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்டது. திருநர் சமூகத்தை இதுநாள் வரை பார்த்த பார்வையை இந்த படம் நிச்சயம் மாற்றும் என பலர் என்னிடம் சொன்னார்கள். அது தான் இந்த படத்தின் வெற்றி என கருதுகிறேன். என்னுடைய தனிப்பட்ட வெற்றியாகவும் பார்க்கிறேன். எங்களுக்கு கிடைத்த ஆசிர்வாதம் ராஜா சார் இசை. படத்தின் இன்னொரு ஹீரோ திரு சார். அனைவருக்கும் நன்றி" என்றார்.

 

தசரத மன்னராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டரை ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராமர் கதாபாத்திரத்துடன் அடையாளம் காணப்படும் அருண் கோவிலுக்கு இது முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ராமரின் தந்தையும் அயோத்தி மன்னருமான தசரதராக அருண் கோவில் காட்சியளிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது.


முன்பு, இந்திய ரசிகர்களால் ராமராகப் போற்றப்பட்ட அருண் கோவில், தற்போது அயோத்தியின் மன்னரும் ராமரின் தந்தையுமான தசரதராக ‘ராமாயணா’ திரைப்படத்தில் நடிக்கிறார். ராமாயணத்துடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ள ஒரு நடிகர், தற்போது அதே காவியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு கதாபாத்திரத்தில் நடிப்பது படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளது. 


படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் புதிய போஸ்டரை வெளியிட்டு, “ஒரு தலைமுறைக்கே ராமராக இருந்தவர், தற்போது அயோத்தி மன்னர் தசரதராக அருண் கோவில் ராமாயண உலகிற்கு மீண்டும் திரும்புகிறார்” என பதிவிட்டுள்ளது.


இந்த போஸ்டரில் தசரத மன்னரின் கம்பீரமான தோற்றத்தில் அருண் கோவில் காட்சியளிக்கிறார். அவரது தோற்றத்திலும் ஆடை அலங்காரத்திலும் அயோத்தி மன்னருக்குரிய கம்பீரமும் அதிகாரமும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக ராமராக அவரைப் பார்த்து வளர்ந்த ரசிகர்களுக்கு, தற்போது அவர் ராமரின் தந்தையான தசரதராக நடித்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 


நிதேஷ் திவாரி இயக்கும் ‘ராமாயணா’ திரைப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், ராக்கிங் ஸ்டார் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற DNEG மற்றும் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த பிரம்மாண்ட காவியத்தின் முதல் பாகம் நவம்பர் 5, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்தியாவைத் தவிர உலகளாவிய விநியோகத்தை சோனி பிக்சர்ஸ் மேற்கொள்கிறது. இந்தி பேசும் சந்தைக்கான விநியோகத்தை தர்மா புரொடக்‌ஷன்ஸ் மேற்கொள்ளவுள்ளது.

Pageviews