சென்னை, நவம்பர் 21, 2025
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட "அமரன்" திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த மதிப்புமிக்க தேர்வு, "அமரன்" பட குழுவினருக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில் இந்தியாவின் சிறந்த சினிமா சாதனைகளை காட்சிப்படுத்தும், மிகவும் கொண்டாடப்படும் தளங்களில் ஒன்றான இந்தியன் பனோரமா பிரிவின் காட்சியைத் தொடங்கி வைக்கிறது.

இதுமட்டுமின்றி, "அமரன்" திரைப்படம் சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிரிவில் இடம்பெறும் சில இந்திய திரைப்படங்களில் ஒன்றாக "அமரன்" இருப்பது, அதன் கலை சிறப்பு மற்றும் சர்வதேச ஈர்ப்பை பிரதிபலிக்கிறது.

IFFI 2025-இல் "அமரன்" திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். படக்குழு, நவம்பர் 21, 2025 அன்று நடைபெறும் விழாவின் திரையிடல் நிகழ்வில் பங்கேற்க கோவாவுக்கு பயணிக்கின்றனர்.

மேஜர் முகுந்த் வரதராஜன் (அசோக சக்ரா), அவர்களின் அசாதாரண உண்மைக்கதையால் ஈர்க்கப்பட்ட
"அமரன்" நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை தேசபக்தி, தியாகம் மற்றும் அசைக்க முடியாத தைரியத்தை காட்சிப்படுத்தியத்தின் மூலம் நெகிழச் செய்துள்ளது. இந்தத் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசத்திற்கான உயர்ந்த சேவையை போற்றுகிறது மற்றும் அவரது பாரம்பரியத்தை ஆழமான மற்றும் மிகச் சிறந்த சினிமா கதையாக்கத்தின் மூலம் முன்னிலைப்படுத்துகிறது.

IFFI 2025-இன் தொடக்கத் திரைப்படமாக "அமரன்" தேர்வு செய்யப்பட்டது, அதன் படைப்பு திறன், தொழில்நுட்ப சிறப்பு மற்றும் உணர்ச்சி ஒத்திசைவுக்கு சாட்சியாக நிற்கிறது. இது திரைப்படத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்திய ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் இந்திய கதைசொல்லலின் நீடித்த கொண்டாட்டம் ஆகும். 

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா அங்கீகாரத்துடன், "அமரன்" தனது ஊக்கமளிக்கும் பயணத்தை ஒரு தலை சிறந்த சினிமா படைப்பாகவும், தேசிய வீரருக்கு அஞ்சலியாகவும் தொடர்கிறது.

 

முனீஸ்காந்தும் விஜயலட்சுமியும் கணவன் மனைவி.அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.முனிஸ்காந்த்துக்கு கிராமத்தில் இரண்டு ஏக்கர் இடம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமியோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும்.விஜயலட்சுமி தனது எண்ணத்தை அதட்டலுடன் வெளிப்படுத்தினாலும் முனிஸ்காந்த் மனதுக்குள் புழுங்கிக் கொண்டு அமைதியாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார். இப்படிச் சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்து வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அது என்ன? என்பது தான் படத்தின் மீதிக்கதை.


நாயகனாக முனீஷ் காந்த் சரியாகப் பொருந்தி உள்ளார். முனிஷ்காந்த், இந்தப் படத்தில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது பாத்திரத்தின் வலியை, குறிப்பாக நிதி நெருக்கடியால் அவர் படும் துன்பங்களை, மிக யதார்த்தமாகக் கடத்தியுள்ளார். விஜயலட்சுமி, நடுத்தரக் குடும்ப பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக நடித்திக்ருகிறார். துப்பறிவாளராக நடித்திருக்கும் ராதாரவி, முனீஸ்காந்த்தின் தந்தையாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி, ஆட்டோ ஓட்டுநராக வரும் குரோஷி, காளி வெங்கட், கோடங்கி வடிவேலு உள்ளிட்ட அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.


பிரணவ் முனிராஜின் பின்னணி இசையில் கதைக்களத்தின் தன்மையையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழவேண்டும், முடிந்தளவு பிறர்க்கு உதவவேண்டும் என்கிற உயரிய கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் முத்துராமலிங்கம்.


மிடில் கிளாஸ் - நடுத்தர மக்களின் வாழ்வியல்.

 

தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படமான ’புரொடக்‌ஷன் நம்பர். 4’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல வருடங்களாக புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவித்து படங்கள் தயாரித்து வரும் இந்நிறுவனம் தமிழ் சினிமா துறையில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளது. 


அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய படங்களான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘3 BHK’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’புரொடக்‌ஷன் நம்பர்.3’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாரத் மற்றும் அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளது சாந்தி டாக்கீஸ் நிறுவனம்.  


படம் குறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா பகிர்ந்து கொண்டதாவது, “புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், ஃபைனலி பாரத் டீன் ஏஜ் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் வெகு பரிச்சியமான நபர். இந்தப் படத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. அதுபோலவே, ‘குடும்பஸ்தன்’ படம் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஷான்வி மேக்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ‘புரொடக்‌ஷன் நம்பர். 4’ படம் மூலம் ஹரிஹரசுதனை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். பால சரவணன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு குறித்தான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்” என்றார். 


சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களைப் போலவே, ‘புரொடக்‌ஷன் நம்பர்.4’ திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து பல நம்பிக்கைக்குரிய படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தரமான நல்ல சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் படங்களைத் தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

 

‘ஜூடோபியா’ திரைப்படம் தமிழில் உருவாகும்போது உணர்வுப்பூர்வமான, ஸ்டைலிஷான அதிரடி சாகசங்களுடன் அதேசமயம் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும். ’ஜூடோபியா’ திரைப்படத்தின் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திலும் எந்தெந்த தமிழ் சினிமா நடிகர்கள் பொருந்திப் போவார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். 


ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா:

ஜூடி ஹாப்ஸ் கதாபாத்திரத்திற்கு தேவையான நிலையான உறுதிப்பாடு மற்றும் கருணை ஆகியவற்றை மிகச்சரியாக தன் நடிப்பில் பிரதிபலிப்பதில் திறமையானவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா கதைப்படி ஜூடி தொடர்ந்து குறைத்து மதிப்பிடப்பட்டாலும், ஒரு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு காணும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த ஒரு எளிய பெண். புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் வலிமையான உணர்வுகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் நயன்தாரா. ஜூடியாக அவரது வெர்ஷன் மிகவும் தீவிரமானதாகவும், நம்பிக்கையுடன் தனது கனவு நோக்கி பயணிக்கும் யதார்த்தமான பெண்ணை தனது நடிப்பில் சிறப்பாக கொண்டு வருவார். நீதி மற்றும் சமூக மாற்றத்தினை எதிர்நோக்கும் சக்திவாய்ந்த மற்றும் ஊக்கமளிக்கும் பயணமாக ஜூடி கதாபாத்திரத்தை நயன்தாரா மாற்றுவார்.


நிக் வைல்ட் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்:

இயல்பான நகைச்சுவை, வசீகரம், ஆண்களுக்கே உரித்தான குறும்பு என நிக் வைல்ட் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மிகச்சரியாக பொருந்திப் போவார். மென்மையான பேச்சு, புத்திசாலித்தனம், தனது காயங்களை மனதிற்குள் மறைத்தல் போன்றவை நிக் கதாபாத்திரத்தின் தன்மை. இவற்றோடு நகைச்சுவை, உள்ளூர் பேச்சுவழக்கு மற்றும் உணர்ச்சிகரமான பல தருணங்களை தனது நடிப்பில் சிவகார்த்திகேயன் நிச்சயம் கொண்டு வருவார். விளையாட்டுத்தனமாகவும் பல உணர்வுகளையும் கொண்ட ஜூடி மற்றும் நிக் கூட்டணிக்கு நயன்தாரா மற்றும் சிவகார்த்திகேயன் சரியாகப் பொருந்திப் போவார்கள். 



கேரி டி'ஸ்னேக் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா:

ஜூடி மற்றும் நிக் ஆகியோரால் துரத்தப்படும் கேரி ஒரு விரியன் பாம்பு என்பதால் இந்த கதாபாத்திரத்தில்  நடிகர் எஸ்.ஜே. சூர்யா மிகச்சரியாகப் பொருந்திப் போவார். உணர்வுகளை வெளிப்படுத்தும் எஸ்.ஜே. சூர்யாவின் குரல், வசீகரம் ஆகியவை கேரியின் ஆளுமைக்கு சரியாக பொருந்துகின்றன. தமிழ் வெர்ஷனில் கேரி வேகமாகப் பேசும் மற்றும் கணிக்க முடியாததாகவும் இருக்கும். அவர் தனது குடும்பத்தைக் காப்பாற்றும் விரக்தியில் மட்டுமே குற்றங்களைச் செய்கிறார் என்பதை வெளிப்படுத்தும் வரை அவர் நோக்கங்கள் தெளிவற்றதாகவும் இருக்கும். எஸ்.ஜே. சூர்யா நகைச்சுவையான, உணர்ச்சிவசப்பட்ட, சற்று குழப்பமான மற்றும் அனுதாபமுள்ள ஒரு கதாபாத்திரத்தை திரையில் சித்தரிக்க முடியும். இது தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்புபடியாகவும் இருக்கும். ஜூடி மற்றும் நிக்குடனான துரத்தலுடன் கேரியின் பயணம் தமிழ் சினிமா பாணியில் ஆடம்பரமாகவும், சஸ்பென்ஸாகவும், ஸ்டைலாக இருக்கும்.


கெஸல் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா:

கெஸல்லின் கவர்ச்சி, நளினம் மற்றும் இசை ஒளிக்கு நடிகை ஆண்ட்ரியா சரியாக பொருந்துகிறார். அவரது நம்பிக்கை, நவீன பிம்பம் மற்றும் பாடும் திறமை ஆகியவை கெஸல் கதாபாத்திரத்தின் கலை நுணுக்கத்தைப் பெறுவதோடு, ’ஜூடோபியா’ படத்தின் பாப்-ஸ்டார் அழகைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆண்ட்ரியாவின் கெஸல் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், மோதல்கள் நிறைந்த ’ஜூடோபியா’வில் ஒற்றுமையை ஊக்குவிக்க தனது குரலைப் பயன்படுத்தும் நபராகவும் இருப்பார். அவரது உலகளாவிய பாடல்களில் தமிழ் இசையையும் இணைக்க முடியும். 


சீஃப் போகோ கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ்:

சீஃப் போகோ கதாபாத்திரத்திற்கு கட்டளையிடும் குரல், அதிகாரபூர்வமான நடத்தை, உறுதியான ஆனால் இறுதியில் நியாயமான தலைவராக நடிக்கும் திறன் தேவை. இந்த அனைத்து குணங்களையும் நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பாக திரையில் பிரதிபலிப்பார். போகோவின் அவரது வெர்ஷன் கண்டிப்பான, புத்திசாலித்தனமான காவல்துறை அதிகாரியாக இருக்கும். ஆரம்பத்தில் சிறியவளான ஜூடியை நிராகரித்தவர் பின்னர் படிப்படியாக அவளுடைய திறனை அங்கீகரிக்கிறார். தீவிரமான, பல உணர்வுகளுடன் மிகவும் வலுவான போகாவை திரையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதிபலிப்பார். கதை அடுத்தடுத்து நகரும்போது, அவர் காவல்துறையின் சக்திவாய்ந்த அடித்தளமாக மாறுகிறார். இட்ரிஸ் எல்பாவின் அசல் தன்மையை கொண்டு வருவதுடன் தமிழ் சினிமாவுக்கும் ஏற்றபடி இந்தக் கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் திறமையுடன் கையாள்வார்.

 

உங்கள் மனம் வெற்றிடங்களை நிரப்பத் தொடங்கி தவறாகப் புரிந்து கொள்ளும்போது என்ன நடக்கும்? நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி இதற்கு பதில் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்'. இதுவரை நாம் அதிகம் கேள்விப்பட்ட ஆனால் பார்த்திராத களத்துடன் கதை இருக்கும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் இந்தக் கதையில் கோமதி சங்கர் நடித்துள்ளார். திடுக் திருப்பங்கள், தீங்கிழைக்கும் நோக்கங்கள், கொலை மற்றும் தீர்க்கப்படாத பல அதிர்ச்சியை 'ஸ்டீபன்' தர இருக்கிறது. 


தமிழில் தனித்துவமான கதைகளைத் தர வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் 'ஸ்டீபன்' இருக்கும். கதைக்கேற்ற அதன் துரத்தும் இசையும் உணர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போடும். வளர்ந்து வரும் படைப்பாளிகளும் தங்கள் பெயரை நிலை நிறுத்தி பெயர் பெற்றவர்களும் ஒரே தளத்தில் பார்வையாளர்களுக்கு தரமான கதைகளை கொடுப்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு நெட்ஃபிலிக்ஸ் தளமாகும். 


நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் மாறுபட்ட கதைக்களங்களை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் தேர்ந்தெடுத்த சிறந்த கதைகளில் 'ஸ்டீபன்' படமும் ஒன்று. பல திருப்பங்கள் நிறைந்த உளவியல் த்ரில்லர்தான் 'ஸ்டீபன்'. கதை தொடங்கியதில் இருந்து கடைசி ஃபிரேம் வரை பார்வையாளர்களை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி மற்றும் கோமதி சங்கர் திறமைகளை எடுத்து சொல்லும் கதையாகவும் இது இருக்கும்.  தரமான கதைகளை பார்வையாளர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நெட்ஃபிலிக்ஸின் நிலைப்பாட்டிற்கு இந்தக் கதை இன்னும் வலு சேர்க்கும்" என்றார். 


அறிமுக இயக்குநர் மிதுன் பகிர்ந்து கொண்டதாவது, “அமைதியான கால்குலேட்டட் சீரியல் கில்லர் பற்றிய கதைதான் 'ஸ்டீபன்'. அமைதியற்ற பல தனிப்பட்ட ரகசியங்களை தன்னுள் சுமந்து செல்கிறார். கோமதி சங்கர் தீவிரமாக, உண்மைக்கு நெருக்கமாக டைட்டில் ரோலில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநராக நிறைய விஷயங்கள் இதில் கற்றுக்கொண்டேன். இந்த கதையை மிகுந்த கவனத்துடனும் நேர்மையுடனும் முயற்சித்திருக்கிறோம். இந்த கதை சொல்ல வாய்ப்பு கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. எங்கள் கதையை 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் நெட்ஃபிலிக்ஸில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். அவர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்" என்றார்.  


தான் பார்க்கும் உணர்வுப்பூர்வமான மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த உலகிற்குள் 'ஸ்டீபன்' பார்வையாளர்களையும் அழைக்கிறார். டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸில் 'ஸ்டீபன்' ப்ரீமியர் ஆகிறது. 


நடிகர்கள்: கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட்


தொழில்நுட்பக்குழு விவரம்:


இயக்குநர்: மிதுன்,

தயாரிப்பாளர்கள்: ஜெயகுமார் & மோகன்,

எழுத்தாளர்கள்: மிதுன், கோமதி சங்கர்,

தயாரிப்பு நிறுவனம்: ஜேஎம் புரொடக்சன் ஹவுஸ்


நெட்ஃபிலிக்ஸ் பற்றி:


நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

 

இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமான வொண்டர்லா ஹாலிடேஸ், அதன் ஐந்தாவது பெரிய திட்டமான வொண்டர்லா சென்னை அறிமுகத்தை இன்று அறிவித்தது. இது இந்திய குடும்பங்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழா. சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் 64.30 ஏக்கர் பரப்பளவில் (தற்போது 37 ஏக்கர் பரப்பளவு) இது உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ரூ. 611 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட வொண்டர்லா சென்னை, எதிர்கால புதுமை மற்றும் பண்டைய தமிழ் கட்டிடக்கலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மற்ற முக்கிய பிரமுகர்கள் டிசம்பர் 1, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக வொண்டர்லா சென்னையை திறந்து வைக்கிறார்கள். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வொண்டர்லா சென்னை டிசம்பர் 2, 2025 அன்று முதல் வருகிறது.


அருண் கே. சிட்டிலப்பிள்ளி (நிர்வாகத் தலைவர் & நிர்வாக இயக்குநர்), தீரன் சவுத்ரி (சிஓஓ), அஜிகிருஷ்ணன் ஏ ஜி (துணைப் பொறியியல்) மற்றும் வைஷாக் ரவீந்திரன் (பார்க் தலைவர் - சென்னை) ஆகியோர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 


வொண்டர்லா சென்னையில் தினமும் 6,500 பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் 43 உலகத் தரம் வாய்ந்த ரைட்ஸ் (rides) வடிவமைக்கப்பட்டுள்ளது. வொண்டர்லா சென்னைக்கான டிக்கெட்டுகள் அடிப்படை விலை ரூ. 1,489-ல் இருந்து தொடங்குகிறது. ஆன்லைன் முன்பதிவுகளுக்கு 10% தள்ளுபடியும், கல்லூரி அடையாள அட்டையுடன் வரும் கல்லூரி மாணவர்களுக்கு 20% தள்ளுபடியும் தரப்படுகிறது. 


அறிமுக விழாவில் வொண்டர்லா ஹாலிடேஸின் நிர்வாகத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அருண் கே சிட்டிலப்பிள்ளி பகிர்ந்து கொண்டதாவது, “வொண்டர்லா சென்னை எங்களின் பத்து வருட கனவாகும். தமிழக அரசின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஊக்கத்தால் தற்போது இது சாத்தியமாகியுள்ளது. தமிழக மக்களின் கலாச்சாரம், படைப்பாற்றல் போன்றவற்றை இந்தப் பூங்காவில் பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். நாங்கள் நம்பிக்கை வைத்தது போலவே, இந்தியாவின் மிகவும் மேம்பட்ட மற்றும் ஆழமான பொழுதுபோக்கு பூங்காவாக இது உருவாகியுள்ளது மகிழ்ச்சி. கோயில் பாணியிலான வடிவமைப்பு முதல் உள்ளூர் கலை வரை பூங்காவின் ஒவ்வொரு பக்கமும் ஒரு கதை சொல்லும். இந்த அறிமுகம் தென்னிந்தியா முழுவதும் எங்கள் இருப்பைக் குறிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பிற்கான தமிழ்நாட்டின் முற்போக்கான தொலைநோக்குப் பார்வைக்கு எங்களின் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பிரதிபலிக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து வரும் குடும்பங்கள் மற்றும் சாகச விரும்பிகளை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார். 


வொண்டர்லா ஹாலிடேஸின் தலைமை இயக்க அதிகாரி தீரன் சவுத்ரி கூறுகையில், "வொண்டர்லாவின் பாதுகாப்பு, புதுமை மற்றும் செயல்பாட்டு சிறப்பைத் தொடரும் வகையில் வொண்டர்லா சென்னையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ரைட் ஆப்ரேஷன், விருந்தினர் சேவைகள் முதல் சுகாதாரம் மற்றும் மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பு வரை பூங்காவின் ஒவ்வொரு அம்சமும், தடையற்ற அனுபவத்தை வழங்க துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளது. வொண்டர்லா சென்னை கொண்டாட்டத்திற்கான இடமாகவும், பண்டிகை காலங்களில் குடும்பங்கள் மற்றும் சமூகம் ஒன்றிணையும் இடமாகவும் மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உலகத்தரமான கொண்டாட்ட அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்றார். 


சென்னைக்காக உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த சவாரிகள் (Rides):


இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய பொல்லிகர் & மாபில்லார்ட் (B&M) தலைகீழ் கோஸ்டர் தஞ்சோரா: சுவிஸ் பொறியியலில் உருவாக்கப்பட்ட பூஜ்ஜிய ஈர்ப்பு விசை கொண்ட பல தலைகீழ் மாற்றங்களுடன் கூடிய தஞ்சோரா, விமானத்தில் பறப்பது போன்ற உணர்வை தருகிறது. 


ஸ்பின் மில்: செங்குத்து சுழல்கள், பல-அச்சு இயக்கம் மற்றும் 4.5ஜி விசையுடன், 50 மீட்டர் உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான சுழலும் த்ரில் சவாரி.


ஸ்கை ரயில்: வைக்கிங் பாணியால் ஈர்க்கப்பட்ட தங்க கோண்டோலாக்களிலிருந்து பரந்த காட்சிகளை வழங்கிறது இந்த ஸ்கை ரயில். பூங்காவிலிருந்து கிட்டத்தட்ட 12 மீட்டர் உயரத்தில் உயரும் 540 மீட்டர் உயர மோனோரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கலாச்சாரத்துடன் கூடிய வடிவமைப்பு:


இல்லலூர் கிராமத்தில் அமைந்துள்ள வொண்டர்லா சென்னையின் வடிவமைப்பு பார்வையாளர்களை நம் பாரம்பரியத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி நிச்சயம் டைம் டிராவலில் அழைத்து செல்லும். 


➢ இயற்கை காற்றோட்டம் மற்றும் பரந்த நிலப்பரப்பு ஆகியவற்றுடன் காலநிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

➢ தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கல் மற்றும் கிரானைட் போன்ற உள்ளூர் மூலப்பொருட்கள் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


ரைட்ஸ் மட்டுமல்லாது உணவு, நிகழ்வுகள் மற்றும் சில்லறை விற்பனை சலுகைகளும் இங்கு உண்டு!


வொண்டர்லா சென்னை தமிழ்நாட்டின் வளமான உணவு வகைகளை கொண்டாடும் வகையில் எட்டு கருப்பொருட்களுடன், 1384 இருக்கைகளுடன் கூடிய உணவு அரங்குகளை உருவாக்கியுள்ளது. சர்வதேச தரத்திலான உணவுகளுடன் திண்டுக்கல் பிரியாணி, செட்டிநாடு கோழி மற்றும் சென்னை பாணி கடல் உணவு போன்றவையும் இங்கு கிடைக்கும். 


விருந்தினர்களுக்கான பஃபேக்கள், எ லா கார்டே டைனிங், நேரடி சமையல் கவுண்டர்கள் மற்றும் கியோஸ்க்குகளின் கலவையை அனுபவிக்கலாம். வொண்டர்லாவின் ’Make-Ready-Discard’ கொள்கையின்படி சுகாதாரம் மற்றும் உணவின் தரம் உறுதி செய்யப்பட்டு ஒவ்வொரு உணவும் ஒரே நாளில் புதிதாக தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவதை உறுதி செய்கிறது.


இங்கு அமைக்கப்பட்டுள்ள சில்லறை விற்பனை அங்காடியில் நினைவுப் பொருட்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமாவால் ஈர்க்கப்பட்ட பொருட்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்களுடன் இணைந்து தஞ்சாவூர் மற்றும் மரப்பாச்சி பொம்மைகளை உருவாக்கி, பிராந்திய கைவினை மரபுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கூடுதல் விருந்தினர் வசதிகளில் தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கான விசாலமான உடை மாற்றும் அறைகள், லாக்கர் அறைகள், எல்லா நேரங்களிலும் பணியாளர்களைக் கொண்ட முதலுதவி மற்றும் துணை மருத்துவ நிலையங்கள், 1500 இருக்கைகள் கொண்ட பல்நோக்கு மண்டபம், 8500 சதுர அடி பரப்பளவு கொண்ட திறந்தவெளி நிகழ்வு இடம் போன்றவை பெருநிறுவனக் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு ஏற்றது. மேலும், இங்கு குழந்தைகளுக்கான பிரத்யேக இடங்கள் மற்றும் ஒவ்வொரு விருந்தினருக்கும் பாதுகாப்பு வசதியையையும் உறுதி செய்கிறது.


பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம்:


உள்ளூர் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுலாவை ஆதரிக்கும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை சென்னை வொண்டர்லா உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த திட்டம் தமிழ்நாடு அரசின் தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு பணியகத்தால் எளிதாக்கப்பட்டது. இது சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்கட்டமைப்புக்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


➢ 3.75 கோடி லிட்டர் மழைநீர் சேகரிப்பு தொட்டி

➢ 1,000 kW சூரிய சக்தி நிறுவல் (இரண்டாம் கட்டம்)

➢ 32,000 சதுர மீட்டர் பசுமைப் போர்வை மற்றும் 1,000+ பாரம்பரிய மரங்கள்

➢ EN 13814, IS 3328 மற்றும் IS 10500 தரநிலைகளுக்கு இணங்கும் நீர் மற்றும் ரைட் சிஸ்டம்ஸ்


தமிழ்நாட்டில் நுழைவதன் மூலம் வொண்டர்லா, பொழுதுபோக்கு துறையில் அதன் தலைமையை வலுப்படுத்துகிறது. தென்னிந்தியா முழுவதும் அதன் இருப்பை நிலைநிறுத்துவதுடன் நாட்டின் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையில் வலுவான இடம் பிடிக்கிறது. 



வொண்டர்லாவில் நுழைவுச்சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://bookings.wonderla.com/ என்ற இணையதளத்தை அணுகவும். இல்லையெனில், வாடிக்கையாளர்கள் பூங்கா கவுண்டர்களில் இருந்தும் நேரடியாக டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லது சென்னை பார்க்கை 044-35024222, 044-35024300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் பற்றி:


வொண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான கேளிக்கை பூங்கா நிறுவனமாகும். அதன் கேளிக்கை பூங்காக்கள் மற்றும் பிரீமியம் ரிசார்ட்டுகளில் உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குகிறது. இந்த நிறுவனம் கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புவனேஸ்வரில் நான்கு உயர்மட்ட கேளிக்கை பூங்காக்களை இயங்கி வருகிறது. அவற்றுடன் பாராட்டப்பட்ட வொண்டர்லா ரிசார்ட் மற்றும் பெங்களூருவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தி ஐல் பை வொண்டர்லா, பிரீமியம் நீர்நிலை ஓய்வு விடுதி ஆகியவையும் உள்ளன. முன்னணி சர்வதேச சப்ளையர்களிடமிருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சவாரிகள் உட்பட பல சாகசங்களுக்கு பெயர் பெற்ற வொண்டர்லா, குடும்ப பொழுதுபோக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

 

2022-இல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu நிறைவிருக்கலாம். இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கும் பொது , வெறி கொண்டு அலையும் சில

வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்!

தப்பித்து விடுகிறார்! 


இனி , இரண்டாம் பாகம் பற்றி ...


கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக , அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேறிடத்தில் நிலை நிறுத்தி தன் தனிமையான நிலைப்பாட்டை தொடர முற்படும் பொழுது , அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி! 

அந்த போர் வீரரோ, என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர்! 

அவர்கள் அனைவரையும் அவரால் சமாளித்து வெல்ல முடிந்ததா என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்!


2002 இல் வெளிவந்த Sisu திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது!

இப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் மிக பெரிய அளவில் பேசப்பட்டன!

திரைப்பட துறையை சார்ந்த Stunt Masters பலரும் இப்படத்தை பெரியளவில் கொண்டாடினர்!

இந்த இரண்டாம் பாகத்தில், சண்டை காட்சிகள் , முதல் பாகத்தை விட அசத்தலாக உள்ளது என்றால் மிகையில்லை !


Jelmari Helander படத்தை, எழுதி இயக்கியுள்ளார் .

2022 இல் வெளிவந்த படத்தையும் எழுதி இயக்கியவரும் இவரே!

Jorma Tommila (கதாநாயகன்), Stephen Lang, Richard Brake ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.

Mika Orasmaa – ஒளிப்பதிவாளர்

 

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அந்த வகையில் சினிமா மூலம் சமூக அக்கறை கருத்துக்களை எடுத்துச் சொன்ன ஜனங்களின் கலைஞன் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு இளம் விதவைகள் உருவாவதை தடுப்பதை நோக்கமாக கொண்ட நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.


சென்னை விருகம்பாக்கம் ஏவி எம் பார்க் வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் பங்கேற்ற போதைக்கு எதிரான வாசகங்களை உரக்கச் சொன்னபடி விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நலிந்த காமெடி நடிகர்களுக்கும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசிய பி டி செல்வகுமார், ''ஒரு நலத்திட்ட நிகழ்ச்சி நடத்துறோம்னா நாலு பேருக்கு நோட் புக், பென்சில் கொடுக்கிறதோட நிறுத்திக்கலாம்னு யோசிக்கிற ஆள் இல்லை. செய்றதை கொஞ்சம் விரிவா, சமூக அக்கறையோட செய்யணும்னுதான் முடிவெடுப்பேன். அப்படித்தான் கன்னியாகுமரியில பல அரசுப் பள்ளிகளுக்கு கலையரங்கம் கட்டிக் கொடுத்தோம்; வகுப்பறை கட்டிக் கொடுத்தோம். எங்களோட சமூகப் பணிகள் பற்றி நாங்க சொல்லணும்னு இல்லை. கல்வெட்டுக்கள் சொல்லும். அந்த வகையில சினிமா மூலமா மூட நம்பிக்கை கருத்துக்களை எடுத்துச் சொன்ன அண்ணன் விவேக் அவர்களோட பிறந்தநாள்ல இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சோம்


ஒரு பெண் பத்திரிகையாளர், ராஜேஸ்வரின்னு பேரு. அவங்க நான் கட்டிக் கொடுத்த கலையரங்குகள், வகுப்பறைகள், விளையாட்டுத் திடல்கள் பற்றியெல்லாம் எடுத்துக்காட்டி, அது மாதிரி வேறு யாராச்சும் செய்திருக்காங்களான்னு கூகுள்ல பார்த்தா இந்திய அளவிலேயே யாரும் இல்லைன்னு சொல்லி பெருமைப்படுத்தியிருக்காங்க. அந்தளவுக்கு எங்களோட சேவைகள் பரந்து விரிஞ்சிருக்கு.


எனக்கு பத்து வீடு இருக்குன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அப்படியே இருந்தாத்தான் என்ன? சின்ன வீடு வெச்சிருந்தாதான் தப்பு. எனக்கு 10 வீடு இருக்குனு நிரூபிச்சிட்டா 8 வீடடை அவர் பேர்ல எழுதி வைக்கிறேன். பேசணும்னா யாரு வேணாலும் என்ன வேணாலும் பேசலாம். ஆனா, உழைச்சாத்தான் எதையும் அடைய முடியும்.


நான் எஸ் ஏ சந்திரசேகர் சார்கிட்டேயும் விஜய் சார்கிட்டேயும் பல வருடம் வேலை பார்த்திருக்கேன்னு பலருக்கும் தெரியும். 200 படங்களுக்கு பி ஆர் ஓ'வா வேலை பார்த்திருக்கேன். 122 படங்களை ரிலீஸ் டிஸ்ட்ரிபியூட்டரா இருந்து ரீலீஸ் பண்ணிருக்கேன். நான் தயாரிச்சு விஜய் நடிச்ச 'புலி' படத்தை ரிலீஸ் செய்ய விடாம தடுக்கிறதுக்காக ரெய்டு வர வெச்சாங்க. என்னை ஹவுஸ் அரஸ்ட் பண்ணாங்க. என்கிட்டே அன்னிக்கு வெறும் 2000 ரூபாய்தான் இருந்துச்சு. அப்படியான நெருக்கடிகளையும் சந்திச்சிருக்கேன்.


பல நாள் துக்கமில்லாம உழைச்சிருக்கேன். இப்போகூட எனக்கு ஆபரேசன் நடந்துச்சு. மூணு மாசம் ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னதையும் தாண்டித்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தறேன். நான் திடுதிப்னு வளரல. எல்லாத்துக்கும் பின்னாடி கடுமையான உழைப்பு இருக்கு. 


என்னை விஜய் சார்க்கிட்டேயிருந்து பிரிக்கிறதுக்காக ஒரு நபர் எல்லா விஷயத்தையும் பண்ணார். அந்த சகுனி, துரோகி இப்போவும் விஜய்கிட்டே இருக்கார். விஜய் நான் வளர்த்த மரம்; நான் தண்ணி ஊத்தி வளர்த்திருக்கேன். அவரு இன்னும் நல்லா வளரணும். அதுக்கு சகுனிகளை, துரோகிகளை விலக்கிவெச்சுட்டு கூட நல்லவர்களை கூட வெச்சிக்கணும். அப்போதான் விஜய் இன்னும் நல்லா வளர முடியும்'' என்றார்.


நிகழ்வில் பத்திரிகையாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருவது பற்றி கேட்டதற்கு, ''அவர் அப்படி பேசி வருவது உண்மைதான். அவரது பேச்சால் தொண்டர்கள் பலியாகிவிடக் கூடாது. விஜய் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்'' என்றார். பத்திரிகையாளர்களால் அரசியல் சார்ந்த பல கேள்விகள் கேட்கப்பட, பி டி செல்வகுமார் காரசாரமாக பதிலளித்தார்.


நடிகர் விவேக்கின் சமூக சேவைகளில் மரக்கன்று நடுவது முதன்மையானதாக இருந்தது. அதை நினைவுகூறும் விதமாக இன்று நடந்த நிகழ்வில் பலருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.


மூத்த திரைப்பட பத்திரிகையாளர் மீரான் பி டி செல்வகுமாரின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் அவர் செய்துவரும் மக்கள் நலப்பணிகள் பற்றியும் நடக்கவிருக்கும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கத்தையும் எடுத்துச் சொல்லி நிகழ்வை துவங்கி வைத்தார்.


கலப்பை மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வி கே வெங்கடேஷ் தனது துவக்க உரையில், கலப்பை மக்கள் இயக்கம் கஜா புயலின்போது, கொரோனோ பாதிப்பின்போது ஏழை எளிய மக்களுக்கு செய்த உதவிகள், கன்னியாகுமரியில் அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகளும் கலையரங்குகள் கட்டிக் கொடுத்த பணிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து, இனி சென்னையிலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது தொடரும் என்றார். 'உங்கள் குடும்பத்திலோ, உங்களுக்கு தெரிந்தவர்களின் குடும்பத்தில் யாரேனும் போதைக்கு அடிமையானவர்கள் இருந்தால் அவர்களைப் பற்றி தெரியப்படுத்தினால் மறு வாழ்வு மையங்கள் மூலம் சிகிச்சையளித்து மீட்டெடுக்கும் நற்பணியை முன்னெடுத்துச் செய்வோம்' என்றும் குறிப்பிட்டார்.


நிகழ்வில் காமெடி நடிகர்கள் பாவா லெஷ்மணன், அம்பானி சங்கர், சின்ராசு, ஜெய்கணேஷ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளைப் பெற்றனர்.


கலப்பை மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜ்குமார், விருகம்பாக்கம் பகுதி நிர்வாகி திவாகர் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் திரைப்படம் "மாண்புமிகு பறை "
பறை இசையின் பெருமை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம்,வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை விழா அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. 
இந்நிகழ்வினில்.., 

இயக்குநர் விஜய் சுகுமார் பேசியதாவது.., 
எங்களை வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. மாண்புமிகு பறை எங்கள் தயாரிப்பாளர் சுபா & சுரேஷ் ராம் தான் எழுதியுள்ளார்கள். பறையிசை ஒரு பொதுவான இசை அதை எப்படி திரையில் கொண்டுவந்துள்ளோம் என டிரெய்லரில் பார்த்தீர்கள். இரண்டு பாகங்களாக இப்படத்தைத் திட்டமிட்டுள்ளோம், முதல் பாகத்தில் பறை இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும், இரண்டாம் பாகத்தில் பறை இசை எத்தனை வகைப்படும் என்பதையும் சொல்லத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் பறை இசையை உலகம் முழுக்க கொண்டு செல்லும் நோக்கத்தில் தான் இப்படத்தை எங்கள் தயாரிப்பாளர்கள் தயாரித்தனர். இப்போது உலகம் முழுக்க பல விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டு விருது வாங்கியுள்ளது. எங்கள் நோக்கம் நிறைவேறியுள்ளது. தேவா சார் அற்புதமான இசையைத் தந்துள்ளார். சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி. 

இணை தயாரிப்பாளர் நக்கீரன் பேசியதாவது.., 
இவ்விழாவைச் சிறப்பிக்க வருகை தந்துள்ள அனைவருக்கும் நன்றி. இது திரையிசை வெளியீட்டு நிகழ்வல்ல, நம் பாரம்பரிய இசையின் கொண்டாட்டம். இந்த பறை இசை இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இந்த இசை வளர்ந்து வருகிறது. கலையைத் தாண்டி இந்த இசை ஒரு அடையாளச் சின்னம். ஆதி பறை என்பதை நாங்கள் நம்புகிறோம் இதை அனைவரும் கொண்டாடுவோம். இப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. 

கலை இயக்குநர் விஜய் ஐயப்பன் பேசியதாவது..,
இயக்குநர் கேட்டதை, கதைக்குத் தேவையான கலை இயக்கம் மூலம் தந்துள்ளேன் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி. 

எடிட்டர் பிரேம் குமார் பேசியதாவது.., 
எல்லோரும் இப்படத்தில் கடினமாக உழைத்துள்ளோம். வெளிநாட்டிலிருந்து தயாரிப்புக்குப் பணம் வரும், ஆனாலும் இயக்குநர் அவ்வளவு உண்மையாக இருப்பார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி. 

ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார் பேசியதாவது.., 
உள்ளூரின் பெருமையைப் பேசுவது தான் மிகச்சிறந்த உலக சினிமா. நாங்கள் நம் ஊரின் பெருமையை, உண்மையை இப்படைப்பில் கொண்டுவந்துள்ளோம், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 

நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் பேசியதாவது.., 
வாழ்த்த வந்துள்ள அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. தயாரிப்பாளருக்கு இப்படம் பெரிய வெற்றியைத் தரட்டும். இசையமைப்பாளர் தேவா இசைக்கு வேலைபார்த்தது பெருமை. அவர் இசையமைத்த சலோமியா பாடல் தான் என் அடையாளமாக இருக்கிறது. நாயகன் மிகக்கடினமாக உழைத்துள்ளார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் அற்புதமாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி. 

இயக்குநர் வெங்கடேஷ் பேசியதாவது.., 
இன்று இசையமைப்பாளர் தேவா சாரின் நாள், மாண்புமிகு பறை படத்திற்கு இசைக்கு அவரைத்தேர்ந்தெடுத்தது மிக மிக பொருத்தம். என் படங்களுக்குத் தேவா சாரும், ஶ்ரீகாந்த் தேவாவும் அதிகமாக இசையமைத்துள்ளார்கள், அவர்கள் இசையில் பறையை எப்போதும் பயன்படுத்துவார்கள், அவர்கள் இப்படத்திற்கு இசையமைப்பது பொருத்தமாக அமைந்துள்ளது. பறை பற்றிய கதையைப் படம் சொல்வது மகிழ்ச்சி. தொல் திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கோரிக்கை, உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் சினிமாவிலும் கொஞ்சம் நடியுங்கள், லியோனி சார் மகனுக்கு என் வாழ்த்துக்கள். இப்படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 

ஆழி பறையிசை கலைஞர் எழில் பேசியதாவது…, 
இயக்குநர் இப்படத்தில் எங்களை அழைத்துப் பறை இசையில் பயன்படுத்தினார். பறை இசை இசைப்பதால் எங்களைப் பல இடங்களில் தொட்டுக்கூடப் பேச மாட்டார்கள். இன்று பலர் நன்றாகப் படித்தும் இந்த மனநிலை மாறவில்லை. இந்த நிலை மாற வேண்டும் எனக் குழந்தைகளிடம் பறை இசையைக் கொண்டு சென்று பரப்பி வருகிறோம். எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. 

பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் பேசியதாவது..,  
பறை இசை தான் எனக்குத் தெரியும், பேசத் தெரியாது. மனிதன் பேசுவதற்கு முன் ஆரம்பித்த இசை பறை இசை. மனிதனின் அனைத்து விஷேசங்களிலும் இசைக்கப்படுவது பறை தான். மனிதனின் சந்தோசத்துக்கு இசைக்கும் இசை தான் பறை. பறை இசையை பெருமைப்படுத்தியதற்கு நன்றி. 

கலைமாமணி முனுசாமி பேசியதாவது.., 
நான் பறை இசைக் கலைஞன், என் தாத்தா, அப்பா எல்லோரும் பறை இசைக் கலைஞர்கள் தான். பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம். மேடை கச்சேரிகளில் பறை இசையைக் கொண்டு சென்று சேர்த்தேன், பறை இசை பெருமைப்படுத்துவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. 

நடிகர் ஆரியன் பேசியதாவது.., 
இந்த மேடை எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இப்படம் கிடைக்கக் காரணம் தயாரிப்பாளர்கள் தான், அவர்களுக்கு நன்றி. என்னை நம்பி எனக்கு இந்த கேரக்டர் தந்ததற்கு இயக்குநருக்கு நன்றி. டிசம்பர் 12 படம் திரைக்கு வருகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள். ஜானி மாஸ்டருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. 

இயக்குநர் கணேஷ் பாபு பேசியதாவது.., 
இயக்குநர் வெங்கடேஷ் திருமாவளவன் ஐயா நடிக்க வேண்டும் என்றார், அது ஏற்கனவே நடந்து வருகிறது அதை ஐயா அறிவிப்பார். எந்த ஒலி பெருக்கியும் இல்லாமல் மனித மனதை ஊடுருவும் இசை பறை இசை. பறைக்கும் எனக்கும் நிறையத் தொடர்பு உள்ளது. வேட்டையாட கண்டுபிடிக்கப்பட்ட பறை, இன்று அடிமை விலங்குகளை உடைக்க பயன்படுகிறது. சாவுக்கு அடிக்கும் இசை அல்ல, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு சாவு பயத்தைக் காட்டும் இசை. இன்று சமூகத்திற்கு இந்த இசையின் பெருமை புரிந்துள்ளது. விஜய் சுகுமார் மாண்புமிகு பறை படத்தை உருவாக்கியதற்கு வாழ்த்துக்கள். இந்தப்படத்தின் பெயருக்கே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் நன்றி 

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது.., 
இயக்குநருக்காகத் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இயக்குநர் மிகக் கடினமான உழைப்பாளி. படத்தை அருமையாக எடுத்துள்ளார், அப்பாவின் விழாவிற்கு நான் வந்ததது மகிழ்ச்சியாக உள்ளது. பறை இசை இப்போது டிஜிட்டலிலும் வந்துவிட்டது. இந்த இசையை உலகம் முழுக்க வாசிக்கிறார்கள். பறை இசை நம் பெருமை. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி. 

இசையமைப்பாளர் சபேஷ் முரளி பேசியதாவது.., 
பறை இசைக்கு ரிதம் மிக முக்கியம், இந்த படத்திற்கு அண்ணனால் மட்டும் தான் இசை அமைக்க முடியும். அண்ணன் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி. இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றி. 

நடிகை காயத்திரி பேசியதாவது.., 
பறை எல்லா இசைக்கருவிகளின் தாய் தான் பறை. எல்லா செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்க, திருவிழாவிற்கு, விஷேசத்திற்கு என எல்லாவற்றிற்கும் பறை தான் அடிப்படை. அந்த பறை இசை பெருமை பேசும் படத்தில் நானும் அங்கமாக இருப்பது எனக்குப் பெருமை. மீடியா நண்பர்கள் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

திரு அன்புச்செல்வன் பேசியதாவது.., 
தயாரிப்பாளர் சுபா மேடம் இப்படத்தை ஃபிரான்ஸிலிருந்து எடுத்துள்ளார்கள். மிகப்பெரிய செலவு செய்து இப்படத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநரை முழுமையாக நம்பினார் அதை இயக்குநர் காப்பாற்றி அருமையாகப் படத்தை எடுத்துள்ளார். இப்படம் அதற்காகப் பெரிய வெற்றி பெற வேண்டும். 

லியோ சிவக்குமார் பேசியதாவது.., 
நான் திண்டுக்கல்லில் பிறந்து முதன் முதலில் கேட்ட இசை பறை இசை. இன்று நான் பறை இசை கலைஞனாக நடித்திருப்பது பெருமை. இந்த கதையை இயக்குநர் சொன்ன போதே இதன் பெருமை புரிந்தது, இதில் நடிக்கக் கண்டிப்பாகப் பறை கற்றுக்கொள்ள வேண்டுமென, சக்தி கலைக்குழுவில் பறை கற்றுக்கொண்டு இப்படத்தில் நடித்தேன். இணை தயாரிப்பாளர் முரளி இல்லாமல் இப்படம் இல்லை. இப்படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. முனுசாமி அண்ணன் இசை கேட்டு நாடி நரம்பெல்லாம் துடித்தது விருதுக்குத் தகுதியானவர் அவர். இயக்குநருக்கு என் நன்றி. இசையமைப்பாளர் தேவா இசை கேட்டுத் தான் வளர்ந்துள்ளேன். அவர் இசையில் நடித்தது எனக்குப் பெருமை. இந்த விழாவிற்கு வருகை தந்து வாழ்த்திய ஆளுமைகளுக்கு நன்றி. டிசம்பர் 12 படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது..,
அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறக்கிறது என்பார்கள் இங்கு இரண்டு பேர் இருக்கிறார்கள். ஶ்ரீகாந்த்தேவா தேசிய விருது வாங்கி தேவாவைக் கௌரவப்படுத்தியுள்ளார். அதே போல நாயகன் லியோ அவர் அப்பா லியோனி போல அருமையாகப் பேசினார். பறை இசை நான் சின்ன வயதில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் தினமும் கேட்டுள்ளேன். அது சாவுக்காக அடிக்கும் பறை இல்லை, சாமிக்காக அடிக்கும் பறை. சாமியிடம் செல்வதால் அதை அடித்து வழியனுப்புகிறார்கள். ஆதி தமிழனின் முதல் இசை பறை. ஃபாரினில் போய் நம் பாரம்பரியத்தைப் போற்றும் கதை எழுதி, அதைப் படமாக எடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். லியோனி அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆளுமை, அவர் பேச்சை நான் விரும்பிக் கேட்பேன். ஆணவக்கொலை என்பது எனக்கு விபரம் தெரிந்த வயதிலிருந்தே நடந்து வருகிறது. இன்னும் மாறவில்லை. அதனால் தான் ஆதரவு தரும் வகையில் திருமாவளவன் இந்த விழாவிற்கு வந்துள்ளார். எல்லோரும் மிகவும் கஷ்பட்டு இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் முரளி பேசியதாவது.., 
சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் என் அக்கா, அண்ணா, அவர்களால் இங்கு வரமுடியவில்லை, எங்கள் படத்தை வாழ்த்த வந்தவர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் தேவா அவர்களுடன் பணிபுரிந்தது பெருமை. எங்களுக்கு என்ன தேவை என பார்த்துப் பார்த்து செய்து தந்தார். லியோ அருமையாக நடித்துள்ளார். விஜய் சுகுமாரிடம் பொறுமையும் அமைதியும் நிறைய உள்ளது. இணை தயாரிப்பாளர் நக்கீரன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எங்களுடைய மூன்று வருட கனவு, டிச்மபர் 12 படம் வருகிறது. எல்லோரும் திரையரங்கில் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.

இசையமைப்பாளர் தேவா பேசியதாவது.., 
இந்த விழா ஆரம்பத்திலேயே களைகட்டி விட்டது. எழில் குழுவினர் கலக்கிவிட்டனர். முனுசாமி ஐயா அசத்திவிட்டார். விஜய் சுகுமாருக்கு இது முதல் படம் போலவே இல்லை, அட்டகாசமாக எடுத்துள்ளார். எல்லா கலைஞர்களும் அத்தனை அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். முரளி எனக்கு என்ன வேண்டுமோ அனைத்தையும் செய்து தந்தார். சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துக்கள். லியோ முதல் படத்தில் அழகாக நடித்துள்ளார். லியோனி மகன் என்பது மகிழ்ச்சி. நாயகிக்கும் எனது வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியா அரசு என்னைக் கௌரவப்படுத்தியது. நான் அங்கு சென்று 25 பேருக்குப் பறை இசை சொல்லித்தந்தேன் அதற்காகத்தான் அந்த மரியாதை செய்தார்கள். இப்படி ஒரு படத்திற்கு இசையமைத்தது எனக்குப் பெருமை. பறை இசைக்கு ஆந்தம் செய்துள்ளேன் அந்த ஆந்தமாக எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டும். நன்றி.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியில் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசியதாவது..., 
மாண்புமிகு பறை இந்த தலைப்பே ரொம்ப அருமையான தலைப்பு. பறை இசைக்கு ஒரு மிகப்பெரிய அந்தஸ்தைக் கொடுத்த படத்தினுடைய தயாரிப்பாளர் சுபா அப்புறம் அவங்க சுரேஷ் ராம் இருவருக்கும் வாழ்த்துக்கள் இயக்குநர் இங்கும் பரபரப்பாகவே இருக்கிறார். படத்தை மிக அற்புதமாகவே உருவாக்கியுள்ளார். பாட்டுக்கு ஆடி இந்த விழாவைத் துவங்கி வைத்த எழில் குழுவுக்கு வாழ்த்துக்கள், ஒரு கலைஞர் கூட்டத்தில் இருக்க அவ்வளவு பேரையும் தன் பக்கம் கவர்ந்து தனக்காகக் கைதட்ட வச்ச ஒரு அற்புதமான ஒரு வாத்தியார் முனுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீகாந்த் தேவா ஒரு அருமையான இசையமைப்பாளர், தேசிய விருது வாங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி மிக அழகாகத் தமிழில் பேசி, பறை கலையின் அருமையைப் புரியவைத்தார். இசையமைப்பாளர் தேவா அவர் தான் இப்படத்தின் பெரும் பலம். கர்நாடக சங்கீதத்திலும் மிகப்பெரிய வல்லமை உள்ளவர், இன்று அவர் கர்நாடக சங்கீதத்துக்கு இணையாக படத்திற்கு இசையமைத்துள்ளார், இப்படம் மிகப்பெரிய சங்கராபரணம் மாதிரி வெற்றி அடைய வேண்டும் வாழ்த்துக்கள். இந்த படத்துக்கு அவர்தான் உண்மையிலேயே ஹீரோ, அதனால் அவருடைய பாட்டை பற்றி ஒரு தனி பட்டிமன்றம் போடலாம் என்று ஆசைப்படுகிறேன். படத்தில் டைட்டிலில் தன் பெயரைப் போடுவதையே தனி ஸ்டைலாக்கி நம்மை ரசிக்க வைத்தவர் திரு பாக்யராஜ், ஒரு மாபெரும் திரைக்கதை மன்னன் இந்த படத்துக்கு வாழ்த்து சொல்லியது பெரிய சந்தோஷம். சமூக நீதிக்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நான் மிகவும் நேசிக்கக் கூடிய என் அருமை சகோதரர் எழுச்சி தமிழர் தொல் திருமா அவர்கள், இந்த இசை வெளியீட்டுக்கு வருகை தந்தது, எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. இந்த மாண்புமிகு பறை என்ற படம் டிசம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிற்து. சூப்பர் ஸ்டாரோட ரசிகன் எங்க ஐயா தேனிசை தென்றல் தேவா என்று சொன்னார்கள். நான் அதை மாற்றிச் சொல்கிறேன். சூப்பர் ஸ்டாரோட ரசிகன் ஐயா இல்லை. தேவாவோட ரசிகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிங்கப்பூர் அதிபர், தேவாதி தேவா அப்படிங்கிற நிகழ்ச்சிக்கு வருகை தந்து, தஞ்சாவூர் மண்ணை எடுத்து என்கிற பாட்டை, நான் சாகும்போது இந்த பாட்டை போட்டுட்டுதான் நான் என்னுடைய உடலை அடக்கம் செய்யனும்னு சொன்னார் என்றால், தேவா அவர்கள் இந்த உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்களைச் சம்பாதித்து உள்ளார். இந்த படத்தில் என் மகனை விட, அவர்தான் இந்த படத்தினுடைய கதாநாயகன். இப்படம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது.., 
மாண்புமிகு பறை இசை வெளியீட்டு விழா என்பதை விட மாண்புமிகு பறை தமிழர் பண்பாட்டுக் கூடல் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு இனத்தின் பண்பாடு குறித்து
மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் ஆற்றிய உரை நம்மை ஆழச் சிந்திக்க வைத்தது, சிலிர் பூட்டியது, இனி பேசுவதற்கு எதுவும் இல்லை நன்றி சொல்லி முடிக்கலாம் என்கிற அளவுக்கு, அண்ணன் லியோனி அவர்களின் பேச்சும், நம்முடைய தேனிசை தென்றல் அவர்களின் இசையுடன் கூடிய ஒரு இசையுரையும் இளம் இயக்குநர்களுக்கு நல்ல வழிகாட்டுதலைத் தந்து ஆணவக் கொலைக்கு எதிராக இப்படியும் சிந்திக்கலாம் திரைக்கதை அமைக்கலாம் என்று இங்கேயே ஒரு திரைக்கதை அமைக்கிற உரையை ஆற்றி அமர்ந்திருக்கிற அண்ணன் கே. பாக்ய ராஜ் அவர்களின் உரை, எல்லாவற்றையும் விடத் தம்பி சிவா அவர்களின் உரை, நம்முடைய கதாநாயகி அவர்களின் உரை எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் நம்மை ஆட்டி வைத்தது, வியப்புக்குள்ளாக்கியது. பறை குறித்து நம்முடைய தமிழர் பண்பாடு எவ்வாறு இருந்தது நாகரிகம் அடைந்தது என்ற உரையாக இது அமைந்தது ஒவ்வொருவரும் ஆற்றிய உரைகள் பறை என்பது இன்றைக்கு ஒரு இழிவான சொல்லாக மாறி இருக்கிறது. அதனால் அந்த கருவியும் இழிவாகப் பார்க்கப்படுகிற சூழல் அமைந்துவிட்டது. அந்த கருவியால் ஒரு இனம் இழிவாகக் கருதப்படுகிறதா? அல்லது ஒரு இனத்தால் ஒரு சமூகத்தால் அந்த கருவி குறைத்து மதிப்பிடப்படுகிறதா ? என்று நமக்குத் தெரியவில்லை.ஆனால் இது ஆதி சிவன் அடித்த பறை என்று கவிஞர் சினேகன் அவர்களின் வரிகளில் அண்ணன் தேனிசை தென்றல் அவர்கள் அமைத்திருக்கிற இந்த பாடல் நம் கவனத்தை ஈர்த்தது. மாண்புமிகு என்கிற பெருமைக்குரியது என்கிற வகையிலே இந்த திரைப்படத்திற்குப் பெயர் சூட்டி இருப்பது ஒரு துணிச்சலான செயல். போற்றுதலுக்குரிய செயல்.இயக்குநரின் துணிச்சலைக் கதை எழுதியவர்களின் துணிச்சலை நான் மனமாற பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் பறை என்பது ஒரு பொதுவான சொல் அனைத்து இசைக்கும் இசைக்கருவிகளுக்கும் மூலம் அதிலிருந்துதான் இசைக்கருவிகளின் வடிவங்கள் மாறி மாறி வெவ்வேறு பெயர்களைப் பெற்றிருக்கின்றன.இந்த சமூகத்தின் மூலச்சமகம் தான் பறை என்கிற பெயரில் அழைக்கப்படுகிற சமூகம் இது ஒரு சமூக ஆய்வாளரின் கருத்து. ஒரு குலத்திலிருந்துதான் எல்லா குலமும் என்கிற போது தமிழ் சமூகத்தில் அந்த மூல சமூகம் ஆதி குளம் பறையர் குளம்தான் என்று அந்த வல்லுனர்கள் பதிவு செய்கிறார்கள்.

பறை அடித்ததனால் பறையன் என்று பலரும் கருதுகிறார்கள் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை இன்றைக்கு நீங்கள் ஒரு கிராமத்திற்குப் போனால் பறையர் குடியிருப்புக்குப் போனால் 200 குடும்பங்கள் 300 குடும்பங்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த 300 குடும்பங்களைச் சார்ந்தவர்களும் பறை அடிப்பதில்லை, அவர்களுக்குப் பறை பற்றி தொடர்பும் இருப்பதில்லை அந்த கிராமத்தில் சிலர்தான் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் பறையடிக்கிற ஒரு வழக்கத்தை வைத்திருப்பார்கள். எல்லா மக்களும் விவசாயத்தைச் செய்யக்கூடியவர்கள்தான். அவர்களுக்கு ஏரோட்ட தெரியும். நடவு நடத் தெரியும். அருப்புறுக்க தெரியும், தால் அடிக்க தெரியும். விவசாய பெருங்குடி மக்கள்தான். அந்த விவசாய பெருங்குடி மக்களை ஒட்டுமொத்தமாகப் பறையர் என்ற பெயரில் அழைத்து இழிவுபடுத்தி இருப்பதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் இது குறித்து பலர் ஆய்வு செய்திருக்கிறார்கள் அதற்கு ஒரே காரணம்தான் இது மூலச் சமூகம் ஆதிச் சமூகம் அதிலிருந்து தோன்றுகிற ஒவ்வொரு புதிய சமூகமும் அதிலிருந்து தன்னை தனிமைப்படுத்தி அந்நியப்படுத்தி பிரிவுபடுத்தி காட்டிக் கொள்வதற்காக அந்த ஆதிசமூகத்தை இழிவுபடுத்துவதை ஒரு பண்பாடாக இங்கே வளர்த்திருக்கிறார்கள். அப்போதுதான் நாங்கள் அவர்களை விட மேலானவர்கள் என்று சொல்லுகிற அந்த நிலை வளர்ந்திருக்கிறது இது சமூக ஆய்வாளர்களின் கருத்து. பறை என்பதிலிருந்து பறையன் என்கிற ஒரு சமூகம் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவன் பயன்படுத்துவதனாலேயே அது இழிவான கருவி இழிவான பொருள் என்று பார்க்கிற ஒரு உளவியல் இங்கே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் மாற்ற வேண்டும் பொது உளவியலில் இந்த இழுக்கு இருக்கிறது அதைத் துடைத்தெறிய வேண்டும் என்று தான் பெரியார் கனவு கண்டார் புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்டார் அதைத்தான் நாம் பேசுகிறோம். அந்த அரசியல் புரிதல் இருப்பதனால் தான் விஜய சுகுமாரன் இந்த படத்திற்கு மாண்புமிகு பறை என்று பெயர் சூட்டி இருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் மாண்புமிகு முதலமைச்சர் என்று சொல்லுவது போல் மாண்புமிகு பறை என்று சொல்லுகிற அந்த துணிச்சல் அது ஒரு அரசியல் புரிதலிலிருந்து மட்டும்தான் செய்ய முடியும். அப்படிப்பட்ட ஒரு படத்தில் தம்பி சிவா போன்றவர்கள் இன்றைக்கு நடித்திருக்கிறார்கள் என்றால் அண்ணன் லியோனி அவர்களிடம் அவர் கற்றுக்கொண்ட அரசியலும் தான் அதற்கு அடிப்படை. இந்த சாதிய கட்டமைப்பை எதிர்த்து நடத்திய யுத்தத்தின் எச்சங்கள், பதிவுகள் நாம இன்றைக்கு புதுசா பேசவில்லை. இதை ஐயன் திருவள்ளுவனே இந்த சாதி அமைப்பு கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது நீண்ட நெடிய ஒரு போராட்டமாக இருக்கிறது. அந்த போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் இன்றைக்கு நாம் மைய நீரோட்டத்தில் இணைக்கிற முயற்சி தான் இவ்வளவு பெரிய நிகழ்ச்சி. திரைப்படங்களில் இன்றைக்குப் புதிதாக இது வரவில்லை திரைப்படங்களில் நீண்ட காலமாகவே இதற்கு எதிரான படைப்புகள் நிறைய வந்திருக்கின்றன. பழைய படங்களில் நிறையப் பாடல்கள் கூட இருக்கின்றன. அந்த பாடல்களை எல்லாம் இப்போது எடுத்து சமூக ஊடகங்களில் தோழர்கள் பரப்புகிறார்கள். ஆகவே இது ஒரு நீண்ட இடிய போராட்டம், அந்த போராட்டத்திலே திரைக்கலை ஆளுமைகள் தங்களையும் இணைத்துக் கொள்வது, அதற்காக தம்முடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துவது, இதுபோன்ற படைப்புகளைக் கொண்டு வருவது, இதன் மூலம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் சுகுமாரன் அவர்களை நெஞ்சார பாராட்டுகிறேன். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிற தம்பி சிவா அவர்கள் மிக அற்புதமாக உரையாற்றினார். அவருடைய உரையில் நல்ல ஒரு தெளிவு இருந்தது. அந்த தெளிவு அரசியல் புரிதலாக ஒரு நீண்ட கால அரசியல் தொலைநோக்கு பார்வை உள்ளதாக நான் புரிந்து கொள்கிறேன். இதுபோன்ற கலைஞர்கள் தான் திரைத்துறையைக் கையில் எடுக்க வேண்டும் பயன்படுத்த வேண்டும்.

இந்த திரைத்துறையை நாங்கள் முற்போக்கு சிந்தனை களமாகப் பயன்படுத்துவோம் என்கிற அந்த ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்த திரைப்படத்தில் நாம் முழுமையாகப் பார்த்தால் தான் என்ன கதை கருப்பொருளாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். என்றாலும் கூட இந்த தலைப்பே நம்மை வியக்க வைக்கிறது. ஆழமா ஆள சிந்திக்க வைக்கிறது. அந்த வகையிலே இது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற வைப்பதற்குத் தமிழ் சமூகம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகளும் அதற்கு ஒத்துழைப்பாக இருப்போம் என்பதை இந்த நேரத்திலே சொல்லி, எனக்கு இந்த அறிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் லியோனி அவர்களுக்கும் இயக்குநர் விஜய் சுகுமாரன் தம்பி சிவா போன்றவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்

எல்லா இசையும் ஒன்று தான், ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்குக் கிடைக்கும் மரியாதையும், புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை, அந்தப் பறை இசையின் பின்னணியை, வலியை,பெருமையைச் சொல்லும் படைப்பாக “மாண்புமிகு பறை” திரைப்படத்தை அறிமுக இயக்குநர் s. விஜய் சுகுமார் உருவாகியுள்ளார். 

இப்படத்தில் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார், காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக் ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.    

இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி அருகே துறையூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் இசையும், வாழ்வும் அச்சு அசலாக இப்படத்தில் படமாக்கப்பட்டுள்ளது. தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு அருமையான இசையை வழங்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.                          

தொழில் நுட்ப குழு 
கதை, திரைக்கதை: சுபா &சுரேஷ் ராம்         
இயக்கம் :எஸ்.விஜய் சுகுமார்
ஒளிப்பதிவாளர் :ரா. கொளஞ்சி குமார்
படத்தொகுப்பு :சி. எஸ். பிரேம் குமார்
இசை :தேனிசை தென்றல் தேவா
நடன இயக்குனர் :ஜானி
பாடல்கள் :சினேகன்         
கலை :விஜய் ஐயப்பன் 
தயாரிப்பு :சியா புரடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் :சுபா -சுரேஷ் ராம்
இணை தயாரிப்பு:ஜெ. எப். நக்கீரன் &கவிதா
நிர்வாக தயாரிப்பாளர் : த.முரளி
மக்கள் தொடர்பு - AIM சதீஷ்.
சென்னை, 19 நவம்பர் 2025:
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார்.
அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார்.
இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு நினைவிடத்தக்க நேரத்தை பகிர்ந்துகொண்டார். சமூக நலத்திற்கான தனது பற்றும், மனிதநேயத்தை மையமாக கொண்ட செயல்பாடுகளும் வெளிப்படுத்திய இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது.

Pageviews