RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதையின் நாயகனாக  நடிகர்  சூரி நடிக்கும் “விடுதலை”  ! 


தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங்களில், தன் தனித்த முத்திரை கொண்ட  படங்களினால்  இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றுள்ளார். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் RS Infotainment நிறுவனம் சார்பில்  அழுத்தமான கதைகள் கொண்ட வெற்றி படங்களை தந்து விமர்சர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கொண்டாடும்,  மிக சிறந்த தயாரிப்பாளராக மிளிர்ந்து வருகிறார். இவ்விருவரும் தற்போது ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்கள். “விடுதலை” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். 


இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியம்ங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உட்பட மொத்த படக்குழுவும் அங்கேயே குடியிருப்பு  வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்துகின்றனர். 


“அசுரன்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், சீட் நுனியில் அமரவைக்கும், பரபர திரில்லான திரைக்கதையுடன்  ரசிகர்களை அசத்தவுள்ளார். 


வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். R.ராமர் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். ஜாக்கி கலை இயக்கம் செய்கிறார். RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார்  இப்படத்தினை பிரமாண்ட முறையில், இந்தியாவெங்கும் தமிழ் மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்.

 


தனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார். அதேபோல, நிஜ வாழ்க்கையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விவேக், மரம் நடுதலின் அவசியத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார். மேலும் தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என்பதை தனது லட்சிய கனவாக கொண்டு செயல்பட்டு வந்த அவர், 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு செயற்கரிய பணியையும் செய்துவிட்டு சென்றுள்ளார்.


அவருக்கு அஞ்சலி செலுத்தியபோது, நடிகர் சிலம்பரசன், விவேக்கின் கனவை நனவாக்கும் விதமாக, ஆளுக்கொரு மரமாவது நடுவதுதான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என கூறியிருந்தார். அப்படி கூறியதுடன் நில்லாமல் தற்போது அதை செய்தும் காட்டியுள்ளார் சிலம்பரசன்.

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை விஜிபி கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இன்று படிப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக மறைந்த நடிகர் விவேக்கின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி படக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர். 

அதைத் தொடர்ந்து ஏற்கெனவே தான் கூறியபடி படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து பத்து மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு தனது அஞ்சலியை செலுத்தினார் சிலம்பரசன். இந்த நிகழ்வில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஸ்டன்ட் சில்வா, ஒளிப்பதிவாளர், இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோரும் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.. இந்த நிகழ்வை பிளாக் ஷீப் யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், தொடர்ந்து மரங்களை நடுவதில் தான் ஆர்வம் காட்டப்போவதாக கூறிய நடிகர் சிலம்பரசன், தனது ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் ஆளுக்கொரு மரம் நட்டு, விவேக் கண்ட கனவை நனவாக்குவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.


 


குமார் தாஸ்  தயாரிப்பில் அபி சரவணன், மஹானா மற்றும் சாம்ஸ்  நடிப்பில் இயக்குனர் கெவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் கும்பாரி. இந்த படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெறுகிறது.


இந்த படக்குழுவினர் அனைவரும் 'சின்ன கலைவாணர்' விவேக் அவர்களின் மறைவிற்கு படப்பிடிப்பு தளத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

  


நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “ஆர்ட்டிகள் 15” படத்தின் தமிழ் பதிப்பு,  கடந்த 10 நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கியது.  இந்நிலையில் இன்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.  முன்னதாக படப்பிடிப்பு துவங்கும் முன்னர் மொத்த படக்குழுவும், மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்தியில் வெளியான “ஆர்டிகள் 15” மூல படம், இந்தியா முழுக்கவெ பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில்,    தமிழ் பதிப்பு  அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இங்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு  எகிறியுள்ளது. சமீப காலங்களில் நடிகர் உதயநிதி அழுத்தமான கதைகளில் சிறந்த கதாப்பாத்திரங்களில் தன்னை பொருத்திகொண்டு, ரசிகர்களிடம் நல்ல நடிகர் என்ற பாராட்டை பெற்றிருக்கிறார். தொடர் வெற்றிகளால், அவர் படங்களுக்கு விநியோக தளத்திலும் மிகுந்த மதிப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் மூலமும் அவர்  மேலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் “கனா” படத்தின் பிரமாண்ட வெற்றி மூலம்  எல்லைகள் கடந்து கவனம் ஈர்த்த இயக்குநர் அருண்ராஜ் காமராஜ் இப்படத்தை இயக்குவது ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தை Romeo Pictures சார்பில் ராகுல் தயாரிக்கிறார். Bayview Project LLP மற்றும்  Zee Studios நிறுவனங்கள் இப்படத்தினை இணைந்து வழங்குகின்றனர். Bayview Project LLP மற்றும் Zee Studios நிறுவனங்கள் தமிழில் “நேர் கொண்ட பார்வை” படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை  பெற்றுள்ளனர்.  மேலும்  தமிழ் ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பு மிக்க அஜித்குமாரின் “வலிமை” படத்தினை தற்போது தயாரித்து வருகின்றனர். இந்நிறுவனங்களின் சார்பில் உருவாகும் இப்படமும் மிகப்பெரும் வெற்றியை பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 


 


பன்முக திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ஹிப்ஹாப் ஆதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான “அன்பறிவு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதிரடியான புதிய தோற்றத்தில் அசத்தலாக தோன்றியுள்ளார்.


அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்  நிறுவனம் சார்பில் T.G.தியாகராஜன் தயாரித்துள்ளார்.அனைத்து வகை ரசிகர்களும் குடும்பத்துடன் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக “அன்பறிவு” படம் உருவாகியுள்ளது. மிகபெரும் பொருட்செலவில், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா, காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கிராமத்து பின்னணியில் மதுரை வட்டார வழக்கு பேசி நடித்துள்ளார்.


நெப்போலியன், ஹிப்ஹாப் ஆதி இணைந்து தோன்றும் காட்சிகள் படத்தின் வெகு முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் திரிஷியம் புகழ் ஆஷா சரத் மற்றும் காஷ்மீரா ஆகியோருடன் முன்னெப்போதும் கண்டிராத பாத்திரத்தில் விதார்த் ஆகியோர் இப்படத்தில் தோன்றியுள்ளனர்.


“அன்பறிவு”  கிராமத்து பின்னணியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஷ்யாவின் வெகு அழகான இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. திறமையான,  புத்தம் புது நாயகி ஷிவானி ராஜசேகர் பங்குபெறும் காட்சிகள் ரஷ்ய பின்னணியில் அனைவர் மனதையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.


சரியான அளவில் காமெடி, காதல், செண்டிமெண்ட், கிராம மற்றும் நகர பின்னணி என அனைத்தும் கலந்த வகையில் குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான திரைப்படமாக அன்பறிவு உருவாகியிருக்கிறது.


இப்படத்தல்  ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் பாடல்கள் அருமையாக அமைந்துள்ளது.


படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. 8 லிருந்து 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் படத்தினை விரைவில் வெளியிட தீவிரமான பணிகள் நடந்து வருகிறது.


பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ட்ரெயலர் மற்றும் இசை வெளியீட்டை சிறப்பாக செய்திட திட்டமிட்டு வருகிறது.


இப்படத்தின் வசனத்தை பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 ஆவது நினைவு தினத்தை போற்றும் விதமாக, கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு ஒரு அழகான மோஷன் டீஸரை வெளியிட்டுள்ளது.


இது குறித்து இயக்குநர் அருண் சந்திரன் கூறியதாவது...

“செல்லப்பிள்ளை” படக்குழு சார்பாக எங்களின் மோஷன் போஸ்டரை மிகப்பெரும் வெற்றி பெற செய்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நம் தேசத்தின் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது நினைவு தினத்தை போற்றும் விதமாக,  அவருக்கான அர்ப்பணிப்பாக, எங்கள் சார்பில் ஒரு அருமையான காணொளியை உருவாக்கினோம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நம் தேசத்தின் தந்தை. அவரின் தியாகத்தையும், வீரத்தையும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேதாஜி குறித்து பேசிய “ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போருக்கு கூப்பிட்டப்போ, வீச்சறிவாளும் வேல்கம்புமா... கெளம்புன பயலுக நம்ம பயலுகதேன்” ( தமிழர்கள் ) எனும் வசனம் என்னை ஆழமாக பாதித்தது. இந்த மோஷன் டீஸரில் நேதாஜி 1942 ல் துவங்கிய  இந்திய தேசிய ராணுவத்தின்,  ஜப்பான், ஆங்கிலம், சிங்கப்பூர் மற்றும் தமிழ் மொழியில் அமைந்துள்ள அடிக்கல்லை  காட்டியுள்ளோம். இது நம் அனைவருக்கும் பெருமை. தமிழர்களுக்கும் நேதாஜிக்கும் உள்ள அசைக்க முடியாத உறவு, அவரது தீரத்தை இப்படத்திலும் இணைக்க வைத்துள்ளது. முழுக்க முழுக்க கொண்டாட்ட திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின், நடிகர் மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும் இப்படத்தினை SST Productions  சார்பில்  தயாரிப்பாளர் ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப்  தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தீஷன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

 


ஆகஸ்ட் 19 ரசிகர்கள் ஒரு புதிய நாயகனை காண போகிறார்கள். பிரபல கன்னட நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்களின் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் வரும் 2021 ஆகஸ்ட் 19 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  

நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்கள் திரைத்துறையில் நுழைந்து  25 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பன்மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும்  “விக்ராந்த் ரோணா” படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 190 நொடிகள் கொண்ட   ஸ்நீக் பீக் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் காலிஃபாவில் பிரமாண்டமாக வெளியிடபட்டது.கன்னட சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழும் பாட்ஷா கிச்சா சுதீப், பொதுமுடக்கத்திற்கு பிறகு திரையரங்கில் திரைப்படத்தை காணும் அனுபவத்தை ஊக்குவிக்கும் விதமாக எதிர்பார்பு மிக்க தனது திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது, ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்மொழிகளில் ஆக்சன் அட்வெஞ்சர் படமாக தயாராகியுள்ள இப்படம், உலகம் முழுதும் 14 மொழிகள் 55 நாடுகளில் வெளியாகிறது. 2021 வருடத்தின் தவிர்க்கவியலாத படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.


தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் கூறியதாவது...

ஒரு தயாரிப்பாளராக விக்ராந்த் ரோணா திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி. இப்படம் மூலம் உலகிற்கு, ஒரு புதிய நாயகனாக விக்ராந்த் ரோணாவை அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி.  விஷிவலாக திரையில் பலவிதமான மேஜிக்கை நிகழ்த்தக்கூடிய பிரமாண்ட படைப்பு இது. பொது முடக்க காலத்தால் திரைப்படங்கள் வெளிவராத நிலையில் இப்பிரமாண்ட படைப்பை ரசிகர்கள் திரையரங்கில் காணவேண்டுமென்று ஆசைப்படுகிறோம். பாட்ஷா கிச்சா சுதீப் போன்ற நட்சத்திர நடிகரின் நடிப்பில், ரசிகர்களை மிகப்பெரும் கொண்டாட்டத்திற்கு கண்டிப்பாக கொண்டுசெல்வோம் என உறுதியாக நம்புகிறோம்.இயக்குநர் அனூப் பந்தாரி கூறியதாவது...

திரை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது மிகப்பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மிக அற்புதமான தொழில்நுட்ப குழுவினரின் உதவியில் விக்ராந்த் ரோணா வாழ்வின் தருணங்களை பிரமாண்டமான வழியில் ரசிகர்களுக்கு விருந்தாக்குவோம்.


"விக்ராந்த் ரோணா"  படக்குழுவினர் இப்படம் 3D தொழில்நுடபத்திலும் வெளியாகும் என்பதை உறுதிசெய்துள்ளனர். அது பற்றிய விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும்.


இப்படத்தை அனூப் பந்தாரி இயக்கியுள்ளார். ஜாக் மஞ்சுநாத் மற்றும் ஷாலினி மஞ்சுநாத் தயாரித்துள்ளனர். அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பினை செய்துள்ளார். B. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே ஜி எஃப் படப்புகழ் சிவக்குமார் படத்தின் செட்களை அமைத்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை சிவகுமார் J செய்துள்ளார். கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி, நீதா அசோக்  நடித்திருக்கும் “விக்ராந்த் ரோணா”  திரைப்படம் 2021 ஆகஸ்ட் 19 உலகம் முழுதும் திரையரங்குகளில்  வெளியாகிறது.


 

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை, ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருகும் “கோடியில் ஒருவன்” மற்றும் “ “காக்கி”  படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ள நிலையில், இவ்விரண்டு படங்களின் முழு உரிமையை பெற்றிருக்கும் Infiniti Film Ventures நிறுவனம் மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறது. பரபர திரில்லராக தயாராகவுள்ள இப்படத்தை தமிழ்படம் தொடர் புகழ் இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார்.

படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது...
Infiniti Film Ventures நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக இணைவது, பெருமையாக உள்ளது. Infiniti Film Ventures நிறுவன தயாரிப்பாளர்கள் தரமிகுந்த, கொண்டாட்டமான படைப்புகளை தேர்ந்தெடுத்து செய்பவர்கள். கோடியில் ஒருவன் மற்றும் காக்கி படங்கள் மூலம் அது உறுதியாகியுள்ளது. இயக்குநர்  CS அமுதன் என்னிடம் இக்கதையினை சொன்ன போது முற்றிலும் வாயடைத்து போனேன். தமிழ் படங்களின் குறைபாடுகளை கிண்டலடில்கும், ஸ்பூஃப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்திருந்தார். இக்கதையை அவர் கூறும்போது அவர் முழுதுமாக ஒளிர்ந்துகொண்டிருந்தார். அவர் கதையுடன் அந்தளவு ஒன்றியிருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு மிகச்சிறந்த திரில்லர் இயக்குநராக அவர் கொண்டாடப்படுவார்.  

Infiniti Film Ventures நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  கமல் போரா கூறியதாவது..
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக,  வசூல் நாயகனாக திகழ்கிறார். அவர் படங்கள் நல்ல விமர்சனங்களை பெறுவதுடன், வசூலிலும் அசத்துகிறது. கொலைகாரன் படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு கோடியில் ஒருவன், காக்கி, அக்னி சிறகுகள் என அவர் படங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்பே அதற்கு சாட்சி. அவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு விருப்ப நாயகனாக இருந்து வருகிறார். அவருடன் Infiniti Film Ventures நிறுவனம் மூன்றாவது முறையாக இணைந்தது மிக மகிழ்ச்சி. இயக்குநர் CS அமுதன் அவர்கள் தனது மாறுப்பட்ட கதை சொல்லலில், சிறந்த நகைச்சுவை படங்கள் மூலம் பெரும் கம்ர்சியல் படங்களை தந்துள்ளார். இம்முறை மாறுபட்ட களத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தில் அவரை காணலாம். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இயக்குநர்  CS அமுதன் கூறியதாவது...
 நடிகர் விஜய் ஆண்டனியின் புதிய படத்தில் இணைந்து, பணியாற்றும் செய்தியை அறிவிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். அதிலும் மிகச் சிறந்த தயாரிப்பு நிறுவனமான Infiniti Film Ventures நிறுவனத்துடன் இணைவது பெரும் மகிழ்ச்சி. நகைச்சுவை படங்களிலிருந்து மாறுபட்டு இம்முறை ஒரு திரில்லர் திரைப்படத்தை இயக்கவுள்ளேன். இந்நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்த நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் Infiniti Film Ventures நிறுவனத்தாருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளோம். படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.


இப்படத்தினை கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் P மற்றும் Infiniti Film Ventures நிறுவன பங்கஜ் போரா ஆகியோர் தயாரிகின்றனர்.

Pageviews