இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில்,  ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும்  திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. 

சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம்,  அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன். 

நாயகன் ஷான் அடிப்பட்டு இரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக  வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்,  ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.  

இப்படத்தில் புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ்,  விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். 

அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள  இப்படம்,  சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். 

தொழில்நுட்பக் குழு விபரம் 

தயாரிப்பு - இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத்
இயக்குநர் - சிவனேசன் 
ஒளிப்பதிவு- M.S.நவீன்குமார்.
இசை  - விபீன் R 
எடிட்டிங்  - பிரேம் B 
கலை இயக்கம்  - நீலகண்டன் 
ஸ்டன்ட்  -  யுனிவர்ஸ் ராஜேஸ். 
பாடல்கள்  - மதன் கார்க்கி, விவேக், திருமாலி, அபிலாஷ் பிரிட்டோ. 
பாடியவர்கள் - GV பிரகாஷ், கார்த்திக், சைந்தவி, மாளவிகா சுந்தர், திருமாலி.

யுவா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்–நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.
முகூர்த்த நேரத்தில் முதல் ஷாட்டுக்கு எஸ்.கே.என் கிளாப் அடிக்க, வம்சி நந்திபதி கேமராவை ஆன் செய்தார். தனிகில்லா பரணி படத்தின் திரைக்கதையை படக்குழுவினரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முழு படக்குழுவும் கலந்து கொண்டது.

இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே. கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். விவேக் அண்ணாமலை கலை இயக்குநராக இருக்கிறார்.

விழாவில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி பேசுகையில்:
“அனைவருக்கும் என் வணக்கம். இயக்குநர் மெஹர் என் நண்பர். இந்த படத்திற்காக பல கதைகளை கேட்டேன். ஆனால் மெஹர் இந்த கதையை சொன்னவுடனே மிகவும் பிடித்தது. அருமையான திரைக்கதை. நடிகர்களுக்கு நடிப்பில் சிறந்த வாய்ப்புகள் உள்ள கதை இது. இந்த கதையை கேட்டவுடன் முதலில் பாபி சிம்ஹா அவர்கள்தான் நினைவுக்கு வந்தார். பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த வேளையில் அவரை அணுகி இப்படத்தின் கதையை கூறினோம். அவரும் கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்ததாக சொல்லி உடனே ஒப்புக்கொண்டார். அது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. தயாரிப்பாளராக எந்த சமரசமும் இல்லாமல், கதைக்கு தேவையான அனைத்தையும் வழங்கி ஒரு சிறந்த படமாக உங்கள்முன் கொண்டு வருகிறோம்.”

இயக்குநர் மெஹர் யாரமாட்டி:
“அனைவருக்கும் வணக்கம். இது இயக்குநராக எனது முதல் படம். உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். எங்கள் முழு குழுவிற்கும் நன்றி.”

சூர்யா ஸ்ரீனிவாஸ்:
“அனைவருக்கும் வணக்கம். பாபி சிம்ஹா அவர்களுடன் முதல் முறையாக வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஹெப்பா படேல் அவர்களுடன் மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. எங்கள் முழு குழுவிற்கும் நன்றி. இந்த படம் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்.”

நடிகர் தனிகில்லா பரணி:
“பாபி சிம்ஹா ஒரு சிறந்த நடிகர். அவர் பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சூர்யா ஸ்ரீனிவாஸுடன் ‘ப்ரோ’ படத்தில் ஏற்கனவே நடித்துள்ளேன். மெஹர் இந்த படத்தை சிறந்த கதைக்களத்துடன் உருவாக்குகிறார். இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பாபி சிம்ஹாவுக்கு இது மிகவும் சவாலான கதாபாத்திரம்.”

ஹெப்பா படேல்:
“அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு சிறந்த கதைக்களத்துடன் ஒரு படம் கிடைத்துள்ளது. சூர்யாவுடன் இரண்டாவது முறையாக பணியாற்றுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. பாபி சிம்ஹா அவர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும்.”

நாயகன் பாபி சிம்ஹா:
“அனைவருக்கும் வணக்கம். ‘வால்டேர் வீரய்யா’ படத்திற்கு பிறகு உங்களை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்கில் நாயகனாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது பல கதைகளை கேட்டேன். ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்தது. இது ஒரு நடிகனாக எனக்கு சவாலான கதை. என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. இதில் தாத்தா கதாபாத்திரம் உள்ளது. அந்த வேடத்தை பரணி அவர்கள் செய்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருடன் நடிப்பது ஒரு பெரிய சந்தோஷம். ஹெப்பா ஒரு சிறந்த நடிகை. அவருடன் பணியாற்றுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நல்ல குழுவுடன் இந்த படத்தை செய்கிறோம். தயாரிப்பாளர் யுவா மிகவும் ஆர்வமுள்ளவர். இந்த கதை சவாலானதாக இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். டிசம்பர் 22 முதல் விசாகபட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம்.”

நடிகர்கள்:

பாபி சிம்ஹா, ஹெப்பா படேல், தனிகில்லா பரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ்

தொழில்நுட்ப குழு:
தயாரிப்பாளர்: யுவா கிருஷ்ணா தொலட்டி
தயாரிப்பு நிறுவனம்: யுவா புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம்: மெஹர் யாரமாட்டி
ஒளிப்பதிவு: ஜே. கிருஷ்ணா தாஸ்
இசை: சித்தார்த் சதாசிவுனி
கலை இயக்குநர்: விவேக் அண்ணாமலை
திரைக்கதை எழுத்தாளர்கள்: வம்சி கே, யஷ்வந்த் சனா
VFX: பானு
உடை வடிவமைப்பு: ஸ்ராவ்யா பெட்டி
பப்ளிசிட்டி டிசைனர்கள்: தானி ஏலய
PRO: வம்சி சேகர், சதிஷ் (AIM)

45  பட பிரம்மாண்ட டிரெய்லர் வெளியானது – வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி திரைப்படம்  வெளியாகிறது !! 

கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45’ படம் வரும்  2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் பெங்களூருவில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது.

சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்த எதிர்பார்ப்பு நிறைந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி, இசையமைப்பாளராக புகழ்பெற்று தற்போது இப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமாகும் அர்ஜுன் ஜான்யா, நடிகை சுதாராணி, நடிகர் பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெங்களூரு நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் அவர்கள், ‘45’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்திய திரை ரசிகர்கள் இதுவரை திரையில் பார்திராத பிரம்மாண்ட காட்சிகளுடன்  ஃபேண்டஸி உலகிற்குள் அழைத்து செல்லும் டிரெய்லர், கதாப்பாத்திரங்களின் அசத்தலான அறிமுகங்களுடன், எம் ஜி ஆரின் ராஜாவின் பார்வையில் ராணியின் பக்கம் எனும் பாடலுடன் ரசிகர்களை அசத்துகிறது. 

டிரெய்லரை வெளியிட்ட காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் பேசுகையில்,
“‘45’ திரைப்படம் காவல் துறைக்கு நல்ல செய்தியைக் கூறுகிறது. சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால், படம் வசூலில் மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று,
“‘45’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த படம் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. ‘45’ அனைவராலும் கொண்டாடப்படும்” என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் அர்ஜுன் ஜான்யா பேசுகையில்,
“சிவண்ணா (சிவராஜ்குமார்) என்னை இயக்குநராக முயற்சி செய்ய ஊக்குவிக்கவில்லை என்றால், இன்று நான் இங்கே நிற்க முடியாது. உபேந்திரா ஒரு இயக்குநர் ஐகான்; அவரது நிழலில் வளர்ந்து நான் பலவற்றை கற்றுக்கொண்டேன். இன்றைய காலத்தில் நாம் மறந்துவிடப்பட்ட சில உண்மையான மதிப்புமிக்க விஷயங்களை இந்தப் படம் அழுத்தமாக பேசுகிறது. அவற்றை உணர்ந்தால் நம் ஒவ்வொரு இல்லமும் ஒளிரும். இந்த படத்தில் மூன்று ஹீரோக்களுடன் சேர்த்து, நான்காவது ஹீரோ தயாரிப்பாளர்தான். அவரின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை” என்றார்.

டாக்டர் சிவராஜ்குமார் பேசுகையில்,
“‘45’ என் 129வது படம். என் முதல் படமான ‘ஆனந்த்’ செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும் எனக்கு இருந்தது. அர்ஜுன் ஜான்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என மிகவும் ஆச்சரியப்பட்டேன். ‘45’ என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும். இது ஒரே மனிதனின் கதை அல்ல, அனைவரையும் இணைக்கும் படம். கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கியபோது, நான் கீமோதெரபியில் இருந்தேன். ஒரு இயக்குநர் உருவாக்கியதை கலைஞன் முழுமையாக செய்தால்தான் அதற்கு மதிப்பு கிடைக்கும் – அது டூயட் பாடலாக இருந்தாலும், கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும்”.  நாங்கள் இயக்குநரின் கனவை முழுமையாக்கியுள்ளோம். இப்படம் கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் என்றார்.

நடிகர் உபேந்திரா பேசுகையில்..,
“இந்த படத்திற்கு திரைக்குப் பின்னால் மூன்று ஹீரோக்கள் இருக்கிறார்கள். முதலாவது தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி, இரண்டாவது இயக்குநர் அர்ஜுன் ஜான்யா, மூன்றாவது ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே. சிவராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்துடன் எனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது. ‘ரசிகர்களே கடவுள்’ என்று கூறிய டாக்டர் ராஜ்குமாரை நினைவுகூர வேண்டிய தருணம் இது. டாக்டர் குவெம்பு எழுத்தில் கடவுளைக் கண்டுள்ளார். டாக்டர் சிவராம கரந்த் இயற்கையில் கடவுளைக் கண்டுள்ளார்” என்றார்.

ராஜ் B. ஷெட்டி பேசுகையில்,
“நான் சிவராஜ்குமார் மற்றும் உப்பேந்திராவின் ரசிகன். என் சமீபத்திய படம் ‘சு ஃப்ரம் ஸோ’ மூலம் லாபமாக பெற்ற முதல் ஆயிரம் ரூபாயை, இயக்குநர் அர்ஜுன் ஜான்யா மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி ஆகியோருக்கு தலா 500 ரூபாய் வீதம் வழங்கினேன். ‘45’ படத்திற்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

நடிகை சுதாராணி, சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இப்படத்தில் நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறினார்.

நடிகர் பிரமோத் ஷெட்டி, “என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்றார்.

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணக்  காத்திருக்கும் ‘45’ திரைப்படம்,  01-01-2026 அன்று, திரையரங்குகளில் வெளியாகிறது.

Trailer - https://youtu.be/3s-cy1zF8Xo?si=VBckk4hLTd6kIc0j

 

நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி" பாடல் சென்னை VIT கல்லூரி  மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”


வரும்  டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.


சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் திரை ஆர்வலர்களிடையேயும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது


தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “மின்னு வட்டம் பூச்சி" பாடல் இன்று  VIT கல்லூரியில் பிரத்தியோகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்துகொள்ள, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்பட பாடல் வெளியிட்டப்பட்டது.  


யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை இளங்காற்றல் வருடும் இந்த " மின்னு வட்டம் பூச்சி" பாடலை கேட்டவுடன் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது


இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் அருமையான மெலடியாக உருவாகியுள்ள  இப்பாடலை, பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மற்றும் பத்மஜா ஶ்ரீனிவாசன் இப்பாடலை பாடியுள்ளனர்.

டாணாக்காரன்  இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.


நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க,  ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.  இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ  சார்பில்  SS லலித்குமார்  தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக  அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 


இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

 

நாடெங்கிலும் 1000 தொழில்முனைவோர்களை உருவாக்குவது என்ற இலக்கை நோக்கி முன்னேறும் நேச்சுரல்ஸ் சலூன் அதன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலாவை நியமனம்


சென்னை: டிசம்பர் 16, 2025: தொழில்முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய சலூன் பிராண்டுகளில் ஒன்றான நேச்சுரல்ஸ் சலூன்ஸ், நடிகை ஸ்ரீலீலாவை தனது புதிய பிராண்டு தூதராக இன்று அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 தொழில்முனைவோரை உருவாக்கி, 15,000-க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை நோக்கி இந்த பிராண்டு துடிப்புடன் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒற்றைப் பிராண்ட், ஃப்ரான்சைஸ் (தனியுரிமை) அடிப்படையிலான வணிக மாதிரியில் கட்டமைக்கப்பட்ட நேச்சுரல்ஸ், இந்திய சலூன் துறையில் ஒரு முன்னோடி பிராண்டாகத் திகழ்கிறது. பெரும்பாலும் ஒழுங்கமைக்கப்படாத நிலையிலிருந்த இத்துறையை, முறையான மற்றும் தொழில்முறை வணிகச் சூழலாக மாற்றுவதில் நேச்சுரல்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளது. 


பிரபல திரைப்பட நட்சத்திரம் ஸ்ரீலீலாவின் நியமனம், தனது  சேவை வினியோக வலையமைப்பில் நான்கு இலக்க மைல்கல்லை (1000 கிளைகள்) நேச்சுரல்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில் நிகழ்ந்துள்ளது. பிராந்திய அளவில் வலுவான நிறுவனமாக தன்னை நிலைநாட்டிய பிறகு, தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட அழகு சேவைகளை வணிக உரிமை மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் வெற்றிகரமாக இணைத்து, தேசிய அளவில் பிரபலமான சலூன் பிராண்டாக நேச்சுரல்ஸ் வளர்ச்சியடைந்துள்ளதை இது உறுதிசெய்கிறது. 


பல ஆண்டுகளாக, நேச்சுரல்ஸ் வெறும் விற்பனை நிலைய விரிவாக்கத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மையப்படுத்தப்பட்ட பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் தரக் கட்டுப்பாடு அமைப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது. இந்த பிராண்டின் கீழ், சுதந்திரமான தொழில்முனைவோர்கள் நிர்வகிக்கும் சலூன்களின் மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்கி, தனது தனித்துவத்தை நேச்சுரல்ஸ் வெளிப்படுத்தியிருக்கிறது. 


திருமதி. கே. வீணாவால் நிறுவப்பட்ட நேச்சுரல்ஸ், இந்தியாவின் பரந்த மற்றும் பன்முக நுகர்வோர் தளத்தைப் பயன்படுத்தி சீராக வளர்ந்து வருகிறது. பெருநகரங்கள் முதல் கிராமப்புற சந்தைகள் வரை ஒழுங்கமைக்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு சேவைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவது இதற்கு சான்றாகும். பிராண்டின் ஃப்ரான்சைஸ் அடிப்படையிலான அணுகுமுறை, உள்ளூர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறது; அத்துடன், சிகை அலங்கார, ஒப்பனைக் கலைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் நீண்ட கால அடிப்படையிலான சிறந்த பணி வாய்ப்புகளை சாத்தியமாக்குகிறது.  இதுவே நேச்சுரல்ஸ் – ன் வளர்ச்சிக் கொள்கையின் முக்கிய அம்சமாகும்.


பிராண்டு தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள நடிகை ஸ்ரீலீலாவுடனான இந்த கூட்டணி, அழகுச் சேவைகள் பிரிவில் நுகர்வுக் கலாச்சாரத்தை வடிவமைத்து வரும் இளம் தலைமுறை மற்றும் மில்லினியல் நுகர்வோருடன் தனது பிணைப்பை வலுப்படுத்த நேச்சுரல்ஸ் விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. தனது இளமைத் துடிப்பான நடிப்பு மற்றும் நாடு முழுவதும் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீலீலா, இந்த பிராண்டின் நோக்கத்துடன் மிகச்சரியாகப் பொருந்துகிறார். இந்தியாவின் சலூன் சந்தை மிகப்பெரியதாக இருப்பினும், பெருமளவு முறைப்படுத்தப்படாததாக இருப்பதனால், பொறுப்புடன் சமகாலத்திற்கு ஏற்றதாக வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே, நேச்சுரல்ஸ் – ன் குறிக்கோளாகும். 


ஸ்ரீலீலாவை பிராண்டு தூதராக அறிவித்ததுடன் இணைந்து, நேச்சுரல்ஸ் தனது முக்கியமான நம்பிக்கை திட்டமான “Customer First Card”-ஐயும் அறிமுகப்படுத்தியது. தொழில்முறை அழகு சேவைகளை மேலும் எளிதாகவும், பயனளிக்கும் வகையிலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், வாடிக்கையாளர்களை முதன்மைப்படுத்தும் நேச்சுரல்ஸின் நீண்டகால தத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், உறுப்பினர்கள் ஒரே ஆண்டில் ₹30,000 மதிப்புள்ள சலூன் சேவைகளை ₹20,000 மட்டும் செலுத்தி பயன்படுத்தலாம். மேலும், வசதியான EMI விருப்பங்களுடன், நாடு முழுவதும் உள்ள 900-க்கும் மேற்பட்ட நேச்சுரல்ஸ் சலூன்களில், குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த சேவைகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவை உருவாக்கும் நேச்சுரல்ஸின் உறுதியை இந்த முயற்சி மேலும் வலுப்படுத்துகிறது; தொடர்ந்து சுய பராமரிப்பை ஊக்குவிப்பதோடு, கண்கூடிய மதிப்பையும் வழங்குகிறது.


இந்தக் கூட்டணி குறித்து நேச்சுரல்ஸ் சலூன்ஸின் நிறுவனர் கே. வீணா கருத்து தெரிவிக்கையில், “எங்கள் முந்தைய பிராண்ட் முகங்களான – ஜெனிலியா டி சௌசா, கரீனா கபூர் மற்றும் தீபிகா பல்லிகல் – ஆகியோர் எங்கள் குறிக்கோள் சார்ந்த பயணத்தின் முக்கியமான கட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தினர். நாங்கள் எதிர்நோக்கும் நிலையில், இளம் தலைமுறையினரான Gen Z மற்றும் மில்லினியல்களின் மனம் கவர்ந்த இளமையான, துடிப்பும், இலட்சியமும் நிறைந்த  ஒருவரை பிராண்டு தூதராக நியமனம் செய்ய நாங்கள் விரும்பினோம். நடிகை ஸ்ரீலீலா இதற்கு முற்றிலும் பொருத்தமானவராக திகழ்கிறார். அகில இந்திய  திரைப்படங்களில் மட்டுமல்லாமல், இந்தி திரைப்பட உலகமான பாலிவுட்டிலும், அவர் நுழைந்திருப்பதால், நாங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பரந்த பார்வையாளர்களுடன் பிணைப்பை உருவாக்க இந்த நியமனம் எங்களுக்கு உதவும்.” என்று கூறினார். 


நேச்சுரல்ஸின் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்பு, இந்தியாவின் புவியியல் மற்றும் மக்கள்தொகை கட்டமைப்பில் உள்ளது என்றும், இது ஒழுங்கமைக்கப்பட்ட சலூன் சேவைகளுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தொடர்ந்து வழங்குகிறது என்று குறிப்பிட்ட திருமதி. வீணா, “நாங்கள் இந்தியாவுக்குள் ஆழமான விரிவாக்கத்தையும் வேகமான வளர்ச்சியையும் உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம். 1,000 தொழில்முனைவோரையும் ஆயிரக்கணக்கான திறன்மிக்க வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டுமென்ற எமது இலட்சிய இலக்கானது,  கட்டமைக்கப்பட்ட, உயர்தர சேவை பிராண்டுகளுக்கு இந்த நாட்டில் மிகப்பெரிய சாத்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கையை சார்ந்திருக்கிறது” என்றும் கூறினார்.


இந்தக் கூட்டணி குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நேச்சுரல்ஸ் சலூன்ஸின் பிராண்ட் தூதர் ஸ்ரீலீலா கூறியதாவது, “நேச்சுரல்ஸ், அழகு என்பதற்கும் அப்பாற்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்ட பிராண்டாகும். இது வாய்ப்பு, லட்சியம் மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்கும் சிறப்பான குறிக்கோளைக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தொழில்முனைவோருக்கு வாய்ப்புகளை வழங்கி, ஆயிரக்கணக்கான ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வரும் ஒரு பிரபல பிராண்டின் அங்கமாக இணைந்திருப்பது, உண்மையிலேயே அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.” 


1,000 தொழில்முனைவோரை உருவாக்கும் மைல்கல்லைக் கடக்க நேச்சுரல்ஸ் தயாராகி வரும் நிலையில், அதன் விரிவடைந்து வரும் வலையமைப்பை வலுப்படுத்த  பயிற்சி நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயல்பாட்டுச் சிறப்பில் இந்த பிராண்டு தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் அணுகல்தன்மை ஆகியவற்றில் நேச்சுரல்ஸ் உறுதியான கவனம் செலுத்துகிறது.  நேச்சுரல்ஸ், இந்தியாவின் வளர்ந்து வரும் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்புச் சூழலுடன் இணைந்து, ஒழுங்கமைக்கப்பட்ட அழகு மற்றும் நலவாழ்வு சேவைகள் துறையில் ஒரு முன்னணி பங்களிப்பாளராக தனது நிலையை நேச்சுரல்ஸ் வலுப்படுத்தி வருகிறது. 


About Naturals:In the 2000s, beauty in India was still a luxury. Naturals democratised the beauty and made it personal.  What started as one salon in Chennai (India) is today a beauty movement across nations. A brand that empowered 15,000 people with jobs and changed the narrative of the grooming industry by removing long-standing taboos.  Naturals grew not just  in size, but in soul, nurturing women, creating careers, and bringing everyday luxury to every corner of India

 

தென்னிந்தியாவின் இசைத் தலைவராக அசோக் பர்வானியை நியமித்ததாக வார்னர் மியூசிக் இந்தியா இன்று அறிவித்துள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா மற்றும் இசை நிறுவனங்களில் ஒன்றான டிவோவை வார்னர் மியூசிக் இந்தியா பெரும்பான்மையாக கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


பிராந்திய பட்டியல் விரிவாக்கத்தை விரைவுபடுத்துதல், படைப்பாளர் மற்றும் பார்ட்னர் உறவுகளை வலுப்படுத்துதல், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுபடுத்துதல் போன்றவற்றில் வார்னர் மியூசிக் இந்தியாவும் டிவோவும் இணைந்து கவனம் செலுத்துகின்றன.


இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நாற்பது வருடங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்தை கொண்டுள்ளார் பர்வானி. குறிப்பாக, சோனி மியூசிக் இந்தியாவில் தனது இருபது வருடகால பதவிக்காலத்தில், பிராந்தியத்தில் சோனி மியூசிக் சவுத் வணிகத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இதுமட்டுமல்லாது, முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் நல்லுறவையும் தக்க வைத்தார். 


விநியோகம், வெளியீடு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் இன்ஃபுளூயன்சர் மார்க்கெட்டிங் ஆகியவற்றை வழங்கும் டிவோ தென்னிந்திய இசையமைப்பில் ஒரு முக்கிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. வார்னர் மியூசிக் இந்தியா 2023 ஆம் ஆண்டில் டிவோவை பெரும்பான்மையாக கையகப்படுத்தியது. 


இந்த நிறுவனம் தற்போது பெரிய அளவிலான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் இசை பட்டியலை நிர்வகிக்கிறது. இதுமட்டுமல்லாது, வார்னர் இசை குழுமத்தின் வலுவான உலகளாவிய நெட்வொர்க்கை பிரதிபலிக்கும் வகையிலும் சமீபத்தில் சுயாதீன திறமைகளை மையமாகக் கொண்ட ஆர்டிஸ்ட்-ஃப்ர்ஸ்ட் லேபிளான லூப்டை அறிமுகப்படுத்தியது. பிராந்திய கலைஞர்களுக்கு புதிய சர்வதேச வாய்ப்புகளை உருவாக்க வடிவமைக்கப்பட்ட இலங்கையின் எம்-என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டிவோவுடன் கூட்டு முயற்சியுடன் வார்னர் மியூசிக்கின் தடம் மேலும் விரிவடைந்தது.


வார்னர் மியூசிக் இந்தியா & சார்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய் மேத்தா கூறுகையில், "தென்னிந்தியாவில் எங்கள் எதிர்கால திட்டத்துடன் ஒத்துப்போகும் நிபுணத்துவம் மற்றும் தொழில் உறவுகளை நிச்சயம் அசோக் வலுப்படுத்துவார். உள்ளூர் கலைஞர்களுக்கான உலகத் தரம் வாய்ந்த பாதைகளை உருவாக்குவதற்கும் இந்தியாவின் அற்புதமான இசையை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் அவரது அனுபவம் வாய்ந்த தலைமை மிக முக்கியமானதாக இருக்கும்" என்றார். 


டிவோவின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஷாஹிர் முனீர் பகிர்ந்து கொண்டதாவது, “அசோக்கின் அனுபவமும் தொழில்துறை உறவுகளும் வார்னர் மியூசிக் இந்தியாவின் தெற்கு பிராந்தியத்திற்கு மிகப்பெரும் பலம். எங்கள் கேட்டலாக், பார்ட்னர்ஷிப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு வலுவான வணிக வாய்ப்புகளை உருவாக்குவது என அவரது தலைமை வார்னர் மியூசிக் நெட்வொர்க்கிற்குள் டிவோவின் பணியை வலுப்படுத்தும்" என்றார்.  


ஹெட் ஆஃப் மியூசிக், அசோக் பர்வானி பகிர்ந்து கொண்டதாவது, "இத்தகைய துடிப்பான தருணத்தில் வார்னர் மியூசிக் இந்தியாவில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டிவோவின் வலுவான கூட்டணியுடன் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் தென்னிந்திய இசையை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்பாக இதை கருதுகிறேன். தென்னிந்திய இசை உலகளவில் செழிக்கவும் திறமையாளர்களுக்கு புதிய வாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்” என்றார். 


வார்னர் மியூசிக் இந்தியாவின் தெற்கு உத்தியை வலுப்படுத்துவதிலும், டிவோவின் திறன்களை ஒருங்கிணைப்பதிலும், உலக அரங்கில் தென்னிந்திய இசையை விரிவுபடுத்துவதிலும் முக்கியமான படியாக பர்வானியின் நியமனம் பார்க்கப்படுகிறது. 


வார்னர் மியூசிக் இந்தியா பற்றி: 


2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வார்னர் மியூசிக் இந்தியா நாட்டின் முன்னணி லேபிள்களில் ஒன்றாக குறுகிய காலத்திலேயே மாறியுள்ளது. இதில் தர்ஷன் ராவல், தில்ஜித் டோசன்ஜ், கர்மா, கிங் மற்றும் சஞ்சித் ஹெக்டே போன்ற சிறந்த உள்நாட்டு கலைஞர்களும், பென்சன் பூன், புருனோ மார்ஸ், கோல்ட்ப்ளே, துவா லிபா மற்றும் எட் ஷீரன் உள்ளிட்ட உலகளாவிய பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.


தென்னிந்தியாவின் டிவோவில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பது, ஆர்டிஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான இ-பாசிட்டிவ் நிறுவனத்தை கையகப்படுத்துவது மற்றும் நேரடி பொழுதுபோக்கு தளமான ஸ்கில்பாக்ஸில் முதலீடு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் நிறுவனம் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது. டிப்ஸ் மியூசிக் உடனான உரிம ஒப்பந்தம், ஸ்கை டிஜிட்டல் (பஞ்சாபி மியூசிக்) மற்றும் குளோபல் மியூசிக் ஜங்ஷன் (ஹரியான்வி மற்றும் போஜ்புரி) உடனான பிராந்திய ஒத்துழைப்புகளும் இதில் அடங்கும்.


இந்திய இசையை கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட வார்னர் மியூசிக் இந்தியா விஷால் தத்லானி, மோஹித் சவுகான், ராணி கோஎனூர், மைக்கி மெக்கிளியரி மற்றும் வருண் குரோவர் போன்ற கலைஞர்களைக் கொண்ட MAATI-ஐ அறிமுகப்படுத்தியது. இது வார்னர் மியூசிக் கனடாவுடன் இணைந்து 91 நார்த் ரெக்கார்டுகளை உருவாக்கியது. பஞ்சாபி நட்சத்திரங்களான கரண் அவுஜ்லா மற்றும் ஜோனிதா காந்தியுடன் இணைந்து உலகளவில் தெற்காசிய திறமைகளை வென்றது.


டிவோ மியூசிக் பற்றி:


இந்தியாவின் முன்னணி மியூசிக் லேபிள், விநியோகம் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றான டிவோவின் ஒரு பிரிவுதான் டிவோ மியூசிக். இது தற்போது வார்னர் மியூசிக் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது. டிவோ மியூசிக் திரைப்பட தயாரிப்பாளர்கள், சுயாதீன லேபிள்கள் மற்றும் ஆர்டிஸ்ட்டுகளுடன் இணைந்து தங்கள் ஒலிப்பதிவுகள் மற்றும் பாடல்களை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறது.


வார்னர் மியூசிக்கின் உலகளாவிய விநியோக திட்டத்துடன் இணைந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி இசையை உள்ளடக்கிய பட்டியலை டிவோ மியூசிக் கொண்டுள்ளது. இதன்மூலம், உலகளாவிய விநியோகம், வெளியீட்டுக்கான அணுகல் மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை ஒத்திசைப்பதன் மூலம் பார்ட்னர் பயனடைவதை டிவோ மியூசிக் உறுதி செய்கிறது.


பிளாக்பஸ்டர் சவுண்ட்டிராக்ஸ் முதல் சுயாதீன இசை அறிமுகங்கள் வரை, டிவோ மியூசிக் கலைஞர்களுக்கு உள்ளூர் முதல் உலகளவில் தளம் அமைத்து தருகிறது. இது அவர்களின் படைப்பு அடையாளத்தைத் தக்க வைப்பதோடு அனைத்து தரப்பு ரசிகர்களுடனும் இணைக்க உதவுகிறது.

 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’. இந்த மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


தயாரிப்பாளர் தனஞ்செயன், “எப்போதும் இயக்குநர்களுக்கு பிடித்த நடிகர் கிச்சா. இந்தப் படத்திற்கு அவர் கொடுத்துள்ள உழைப்பு அசுரத்தனமானது. இந்த கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரசிகர்களுக்குப் பிடித்த ஆக்‌ஷன் படமாக ’மார்க்’ இருக்கும். மற்ற நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள். அஜனீஷூடைய இசை படத்திற்கு பெரும் பலம். அணியினருக்கு வாழ்த்துக்கள்!”


தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி, “தலைமுறை தலைமுறையாக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்த வரிசையில் நிச்சயம் ‘மார்க்’ படமும் இணையும். கிச்சா சுதீப்பும் மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். எந்தவொரு பிளாக்மார்க்கும் இல்லாமல் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வருவது பெருமையான விஷயம். கிச்சா சுதீப் தமிழிலும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”.


நடிகர் குரு சோமசுந்தரம், “கன்னட சினிமாவில் மிகப்பெரிய ஹீரோ சுதீப்புடன் மிகப்பெரிய கமர்ஷியல் படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. படத்தில் எனக்கு மிக நல்ல கதாபாத்திரமும் ஸ்டைலிஷான காஸ்ட்யூமும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். நடனமும் ஆடியிருக்கிறேன். படம் பார்த்து மகிழுங்கள்”.


இயக்குநர் விஜய் கார்த்திகேயன், “இந்த மேடையில் நான் இருக்க முக்கிய காரணமே சுதீப் சார்தான். அவர் போன்ற பெரிய நடிகருடன் இரண்டாவது முறை படம் செய்வது எளிது கிடையாது. அவருடன் வேலை செய்வது என் சகோதரருடன் பணிபுரிவது போல இருக்கும். ’மேக்ஸ்’ படத்திற்கான சீக்வல் செய்ய ஒன்றும் இல்லை. அதனால், வேறு கதை என்று யோசித்தபோது சுதீப்பின் நகைச்சுவை பக்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது. அதை ‘மார்க்’ படத்தில் பார்ப்பீர்கள். சுதீப் ரசிகர்களுக்காகவே எழுதிய கதை இது. நிச்சயம் படம் அவர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாங்கள் மூன்றாவது முறை இணையவும் வாய்ப்பிருக்கிறது. அதை காலமும் சூழலும் முடிவு செய்யும்”.


நடிகர் நவீன் சந்திரா, “பல வருடங்களாக தமிழ், தெலுங்கில் படம் நடித்துக் கொண்டிருந்தேன். கன்னட ரசிகர்கள் அவர்களுடன் என்னை கனெக்ட் செய்து கொள்ளும்படியான கதாபாத்திரம் வர வேண்டும் என காத்திருந்தேன். அப்படியான படமாக ‘மார்க்’ எனக்கு அமைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பெயர் ‘பத்ரா’. என்னுடைய அம்மா சுதீப் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருக்கும் இந்தப் படத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி. எங்கள் படக்குழுவினரை சுதீப் சார் உற்சாகமாக வைத்திருந்தார்”. 


நடிகர் யோகிபாபு, “நான் சினிமாத்துறைக்கு வந்து 22 வருடங்கள் ஆகிறது. வளர்ச்சி வந்தால் பிரச்சினைகளும் கூடவே வரும் என்பார்கள். அதுபோலதான் என் மீது சுமத்தப்படும் பல பழிகளும். இந்தப் படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம். படத்தில் கிச்சா சுதீப் சார் நிறைய விஷயங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது”.


நடிகை தீப்ஷிகா, "'மார்க்' படம் எங்களுக்கு அற்புதமான அனுபவத்தை கொடுத்தது. சுதீப் சார் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்". 


நடிகை ரோஷிணி, “சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா சுதீப் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. இந்தப் படம் நன்றாக வர வேண்டும் என எல்லோரும் உழைத்திருக்கிறோம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார். 

 

நடிகர் கிச்சா சுதீப் பேசியதாவது, “’மார்க்’ போன்ற படத்திற்காக சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது பெருமையான விஷயம். நிச்சயம் அதற்கான அவுட்புட் திரையில் பார்ப்பீர்கள். கதை சொல்லுதல், புது காட்சிகள், பிசினஸ், நடிகர்களின் நடிப்பு என எல்லாவற்றிலும் புதுமை- வெரைட்டியை பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்ற பணியை இந்தப் படத்தில் செய்திருக்கிறோம் என நம்புகிறேன். விஜய் கார்த்திகேயன் கதை, இயக்கம் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். எங்க செட்டிலேயே பயங்கர பிஸியான நடிகர் என்றால் யோகிபாபுதான். இன்ஸ்டால்மெண்ட்டில் வந்து நடித்துக் கொடுப்பார். நடிகர்கள் நாங்களாவது அவ்வப்போது ஓய்வெடுத்தோம். ஆனால், இந்தப் படத்திற்காக இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் இயக்குநர், மற்றொருவர் ஒளிப்பதிவாளர். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

 

'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'இளைய கேப்டன்' சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் ,முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 


கிராமிய பின்னணியிலான ஆக்ஷன் வித் காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா தயாரித்திருக்கிறார்.


பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 


வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், எல். கே. சுதீஷ், விஜய பிரபாகரன், இயக்குநர்கள் எஸ். ஏ. சந்திரசேகரன், எம். ராஜேஷ், மித்ரன் ஆர். ஜவகர், நடிகர் ரியோ, நாயகர்கள் சரத்குமார் - சண்முக பாண்டியன் விஜயகாந்த், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், கலை இயக்குநர் சரவணன் அபிராமன், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், நடிகர் கல்கி ராஜா, தயாரிப்பாளர் முகேஷ்.T.செல்லையா, இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசுகையில், ''கொம்பு சீவி படத்தின் போஸ்டரை பார்க்கும்போது எனர்ஜியாக இருக்கிறது. கொம்பு சீவி என கிராமப்புறத்தில் காளையை குறிப்பிடுவார்கள். இதில் யார் கொம்பு சீவி என தெரியவில்லை. இரண்டு பேரும் அந்த அளவிற்கு இருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்த் கண்களில் ஒரு நெருப்பு இருக்கும், ஒரு வேகம் இருக்கும். அந்த நெருப்பு கலந்த பார்வை சண்முக பாண்டியனிடமும் இருக்கிறது. 'உனக்கு நான் சளைத்தவன் இல்லடா..!'  என சரத்குமாரும் அதில் ஆக்ரோஷமாக இருக்கிறார்.‌ அவரது கெட்டப் நன்றாக இருக்கிறது.  'வயதானாலும் நான் கொம்பு சீவின காளை டா..!' என்பது போல் இருக்கிறது அவருடைய தோற்றம். அந்த வகையில் இந்த போஸ்டரே படத்தின் வீரத்தை காட்டுகிறது.


இயக்குநர் பொன்ராமிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நகைச்சுவையை விட வேகம் - ஆக்ஷன் அதிகம் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இன்றைய தலைமுறையினர் இதைத்தான் ரசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏனென்றால் பொன்ராம் என்னுடைய பிள்ளைகளில் ஒருவர்.


இயக்குநர் ஒரு இளைஞர், ஹீரோ ஒரு இளைஞர், சரத்குமார் ஒரு இளைஞர், இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா ஒரு இளைஞர். இப்படி இளைஞர்கள் புதிய வேகத்துடன் இணைந்திருக்கிறார்கள்.


உலகத்திற்கே உரிய ஒரு சரித்திரம் இருக்கிறது. மாற்றம் என்பது மட்டுமே மாறாதது. அது எல்லாத் துறையிலும் உண்டு. சமூகம்- அரசியல்- திரைத்துறை- என எல்லாத் துறையிலும் இது உண்டு. எனக்குத் தெரிந்து திரையுலகில் ஒரு காலத்தில் எம் கே தியாகராஜ பாகவதர்-பி யு சின்னப்பா, அதற்குப் பிறகு எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் அதற்குப் பிறகு இன்றைய சூப்பர் ஸ்டார்கள் என மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை யாராலும் மாற்ற முடியாது. இது காலத்தின் கட்டாயம். ஆகவே மாற்றத்திற்குரிய இளைஞர்கள் வெற்றி பெற வேண்டும். ஏனெனில் இந்த இளைஞர்களும், தமிழகத்தில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை விரும்பி கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் இந்த திரைப்படத்திலும் நிகழ வேண்டும், வாழ்த்தி விடைபெறுகிறேன், நன்றி,'' என்றார்.


நடிகர் ரியோ பேசுகையில், ''கொம்பு சீவி படத்திற்கு வரவேற்பு வழங்க உள்ள அனைவருக்கும் நன்றி. சிவகார்த்திகேயனை வைத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' என மூன்று படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் பொன்ராம். மூன்று திரைப்படங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் குடும்பம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிப்பார்கள். தொலைக்காட்சி பார்வையாளர்களின் ரேட்டிங் கணக்குப்படி தமிழில் முதன்மையான இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் சீம ராஜா. இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் 'பிராப்பரான டெலிவிஷன் மூவி' என்றால் இயக்குநர் பொன் ராமிற்கு தான் அதில் முதலிடம். நான் அவருடைய இயக்கத்திற்கு மிகப்பெரிய ரசிகன். நிறைய சிரித்து ரசிக்க கூடிய படங்களை உருவாக்கக்கூடிய இயக்குநர் அவர். அவருடைய இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.


இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது காமெடியும், ஆக்ஷனும் அதிகம் இருக்கிறது. இது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொன் ராமின் இயக்கத்தில் எங்கள் தலைவர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகி இருக்கும் படம் இது. கிராமிய பின்னணியிலான படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஸ்பெஷலாக இருக்கும்.  உதாரணத்திற்கு 'பருத்திவீரன்', சமீபத்தில் வெளியான ' விருமன்' என பல படங்களை குறிப்பிடலாம்.  இது போன்ற படங்களுக்கு அவருடைய இசை மண்ணின் இயற்கையான மணத்தையும் மண்ணின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.


கேப்டனின் மனசு அவருடைய  வாரிசுகளுக்கும் இருக்கும் என்பதை விஜய பிரபாகரன் நிரூபித்திருக்கிறார். அண்மையில் அவர் பாலாவின் படத்தை பார்த்து பாராட்டியதே இதற்கு சான்று.‌


சரத்குமார் நடித்த 'அரவிந்தன்' படத்தின் மூலமாகத்தான் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று பார்த்தது போலவே இன்றும் சரத்குமார் இளமையாக இருக்கிறார். அவரை ஓல்டு கெட்டப் போட்டு தான்  வயதானவராக காண்பிக்க வேண்டியது இருக்கிறது. யுவனின் இசை எப்படி இளமையாக இருக்கிறதோ, அதேபோல் சரத்குமாரும் இருக்கிறார். அவரும் இந்த படத்தில் இருப்பதால் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.


பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், ''இந்த மேடை என் மனதிற்கு நெருக்கமான மேடை. நிகழ்வு தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை பாசத்தின் குழுமமாகத்தான் இங்கு அனைவரும் வந்திருக்கிறார்கள். இதற்காக வாய்ப்பளித்த இயக்குநர் பொன்ராமிற்கு நன்றி.


இயக்குநர்கள் பொன்ராம் மற்றும் ராஜேஷ் ஆகியோர் எஸ். ஏ  சந்திரசேகரின் உதவியாளர்களாக பணியாற்றும் தருணத்திலேயே என்னுடைய நண்பர்கள். ஆனால் நான் அவர்களுடைய எந்த படத்திலும் நான் பாடல் எழுதவில்லை. கொம்பு சீவி படத்தை இயக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் இயக்குநர் பொன்ராமை சந்தித்து இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என உரிமையுடன் கேட்டேன். ஏனெனில் கேப்டன் மீது வைத்திருக்கும் நட்பின் காரணமாகவே கேட்டேன்.‌


பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் நான் 'ராஜ்ஜியம்' படத்தில் 'தமிழன் தமிழன்..' என்பது போன்ற பாடல் எழுதுவதற்கான சூழல் போன்று தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் சண்முக பாண்டியன் நடிக்கும் இந்த படத்தில் கமர்ஷியல் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் கேப்டனுக்கு எழுதியது போல் அசைக்க முடியாத பாடல் ஒன்றை சண்முக பாண்டியனுக்காக விரைவில் எழுதுவேன். இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.


'பருத்திவீரன்' படத்தில் எல்லா பாடல்களையும் நான் தான் எழுதினேன். இதுபோன்ற கிராமியத்தை நினைவுபடுத்தும் படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பளித்த யுவனுக்கும்,  இயக்குநருக்கும் நன்றி.‌


எங்கள் வீட்டு பிள்ளை சண்முக பாண்டியனுக்கு மிகப்பெரிய அளவில் படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவர் கேப்டன் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவே இது நடைபெற்றது. இதற்காகவும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.


கேப்டனுடன் ஆறு, ஏழு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் முதன் முதலாக கேப்டன் நடிப்பில் உருவான 'வாஞ்சிநாதன்' படத்திற்கு பாடல் எழுதுவதற்காக தான் சென்னையில் இருந்து மும்பைக்கு விமான பயணம் மேற்கொண்டேன். அது மறக்க முடியாது. அவரைப் பற்றிய நினைவுகள் ஏராளம்.‌ அதைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம்.


அந்த வகையில் சண்முக பாண்டியன் திரையுலகில் வளர்ந்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். கேப்டனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய அன்பை உங்கள் மீது செலுத்துவோம். அதற்கான களமும், காலமும் வருவதற்காக காத்திருக்கிறோம். நீங்கள் அன்பால் உருவான குழந்தை. அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. அன்பு வெல்லும். சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான கொம்பு சீவியும் வெல்லும் என நம்புகிறேன், வாழ்த்துகள்,'' என்றார்.


இயக்குநர் எம் ராஜேஷ் பேசுகையில், ''சந்தோஷமாக இருக்கிறது. இந்த விழா ஒரு குடும்ப விழாவை போல் தான் இருக்கிறது. நானும் பொன்ராமும் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய காலத்தில் இருந்தே நண்பர்கள். 'நண்பேன்டா..' என சொல்லிக் கொள்வது போல உள்ள நண்பர்கள். அவருடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலிருந்து இந்த கொம்பு சீவி படம் வரை நான் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நண்பனாகவும் கதை விவாதத்தில் பங்கு கொண்டும் உதவி செய்து இருக்கிறேன். இதே போல் அவரும் என்னுடைய படங்களுக்கு உதவி செய்திருக்கிறார். எங்களுக்கு இடையேயான இந்த நட்பு இன்றும் தொடர்கிறது.


இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். மிகவும் பிடித்திருந்தது. திரையில் இரண்டு தூண்களாக சரத்குமார் - சண்முக பாண்டியன் தோன்றுகிறார்கள். இந்தப் படத்தில் சரத்குமார் எனர்ஜியுடன் கூடிய நடிப்பை வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார். நான் படத்தை பார்க்கும் போது நிறைய இடங்களில் சண்முக பாண்டியன் நடிப்பில் கேப்டனை பார்ப்பது போல் இருந்தது. திரையரங்கில் இந்த காட்சிகளை பார்க்கும் போது ரசிகர்களுக்கு குறிப்பாக கேப்டனின் ரசிகர்களுக்கு அற்புதமான தருணமாக இருக்கும்.


திரைக்குப் பின்னால் இரண்டு தூண்களாக ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். படத்தின் முன்னோட்டத்தை மிகவும் ரசித்தேன்,'' என்றார்.


இயக்குநர் மித்ரன் ஆர் ஜவகர் பேசுகையில், ''பொன்ராம் என்னுடைய பேவரைட் ஆன டைரக்டர். அவருடைய காமெடி திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது அவருடைய இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களின் பட்டியலில் இருப்பதை போல் இருக்கிறது. இதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


சண்முக பாண்டியனை நான் சந்தித்து இருக்கிறேன். அவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது என்றால், அவருக்காக மிகப்பெரிய இடம் ஒன்று காத்திருக்கிறது. தைரியத்துடன் கண்ணை மூடிக்கொண்டு அதில் பயணம் செய்யுங்கள். எல்லா திறமைகளும் உங்களிடத்தில் இருக்கிறது. இவற்றையெல்லாம் விட உங்களுடைய அப்பா அம்மாவின் ஆசியும் இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன்.  திரையில் உங்களை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. இந்த படம் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்.


இந்த விழாவின் நாயகன் யுவன் ஷங்கர் ராஜா. அவருடன் நான் 15 ஆண்டு காலமாக பயணித்து வருகிறேன்.‌ அவருடைய இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களும் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.


விஜய பிரபாகரன் பேசுகையில், ''இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஹீரோவோட அண்ணனாக இல்லாமல் சண்முக பாண்டியனின் ரசிகனாக இங்கு வந்திருக்கிறேன்.

சண்முகத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், 2012ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார்.  சினிமாவில் 13 ஆண்டு காலமாக சண்முகம் பயணிக்கிறார். இந்த 13 ஆண்டு கால பயணம் எங்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த 13 ஆண்டில் எத்தனையோ ஹீரோக்கள் எத்தனையோ படங்களை செய்து இருக்கலாம். ஆனால் இது சண்முகம் நடிக்கும் நான்காவது படம் தான். ஏனென்றால், நடுவில் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டது சண்முகம் தான். 'எனக்கு படங்களில் நடிப்பதை விட அப்பாவுடன் இருந்து அவரை மீட்டு மீண்டும் தமிழக மக்களுக்கு தர வேண்டும்' என உறுதியாக சொன்னார். அதனால்தான் அப்பா என்னை அரசியலில் ஈடுபடு என சொன்னார்.


நான் இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து இதுவரை எந்த இடத்திலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு முன் பல படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானாலும் அவை முறையாக நடைபெறவில்லை. இருந்தாலும் அவன் எந்த சலனமும் இல்லாமல் நான் உறுதியாக வருவேன் என நம்பிக்கையுடன் இருந்தான். கேப்டனின் மகன் என்னால் முடியும் என தைரியத்துடன் இருந்தான். 13 ஆண்டுகளில் அவருடைய நண்பர்கள் சினிமாவில் ஜெயித்தாலும் சினிமா மீதான அவனுடைய ஆர்வம் சிறிதும் குறையவில்லை. இந்த தருணத்தில் ஸ்டார் சினிமாஸ் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவிற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  சண்முகத்திற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவிலான அறிமுகமாக இருக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டு வருகிறார்.


தயாரிப்பாளர் முகேஷ் சார், சண்முகத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று இயக்குநர் பொன்ராம் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று எங்களிடம் சொன்னதும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.


நான் கல்லூரி படிக்கும்போது சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் உருவான படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அந்த அளவிற்கு பெரிய இயக்குநரின் இயக்கத்தில் சண்முகம் நடிக்கப் போகிறான் என்றவுடன் சந்தோஷப்பட்டேன்.  வேறு யார் நடிக்கிறார்கள் என்று பார்த்தபோது பொன்ராம் இந்த படத்தில் சரத் சார் நடிக்கிறார் என்று சொன்னவுடன் எங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்பட்டது.


புலன் விசாரணை காலகட்டத்தில் இருந்து கேப்டனும் சரத் சாரும் ஒன்றாகவே பயணித்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான நட்பு தனித்துவமானது. இன்று அப்பா இல்லாத நிலையில் சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக சரத் சார் கை கொடுத்து ஆதரவு தருவதை பாசிட்டிவாகத்தான் பார்க்கிறேன்.


இந்தப் படத்தில் இடம்பெற்ற 'வஸ்தாரா..'  பாடலில் சண்முகமும், சரத் சாரும் நடனமாடும் போது, யார் பெட்டர் என்று தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ரெண்டு பேருமே நன்றாக ஆடினார்கள்.


யுவன் ஷங்கர் ராஜாவை நான் முதல் முறையாக 'அலெக்ஸாண்டர் மூவி பி ஜி எம் -  யுவன் ஷங்கர் ராஜா ' என்ற டைட்டில் வரும் போது தான் பார்த்தேன். அதற்குப் பிறகு இப்போது தான் அவரை நேரில் சந்திக்கிறேன். சந்தித்து பேச தொடங்கியவுடன் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டோம்.


'சகாப்தம்' படத்தின் பணிகளை தொடங்கும் போது கேப்டன் எங்களிடம் என்ன சொன்னார் என்றால், சண்முகத்தின் முதல் படத்தில் இளையராஜாவின் குடும்பத்திலிருந்து தான் இசை இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 'சகாப்தம்' படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார். சண்முகத்தின் அடுத்த படமான 'படைத்தலைவன்' படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அவருடைய அடுத்த படமான 'கொம்பு சீவி' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கேப்டனின் ஆசை சண்முகத்தின் முதல் மூன்று படங்களிலும் நிறைவேறி இருக்கிறது. பவதாரணி கூட 'சகாப்தம்' படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். இதனாலேயே சண்முகத்திற்கு கேப்டனின் ஆசி பரிபூரணமாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.


அப்பா சின்ன வயதில் இருந்தே சினிமா என்றால் ஹீரோ, ஹீரோயின் மட்டும் இல்ல அதுல ஒர்க் பண்ற எல்லா டெக்னீஷியன் பெயரையும் நீ படிக்க வேண்டும் என சொல்வார். எல்லோரும் ஒன்றிணைந்து தான் ஒரு படத்தினை உருவாக்குகிறார்கள் என்பார்.  அதனால் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்ற போது நானும், அம்மாவும் சென்றிருந்தோம். அப்போது இந்த 'உசிலம்பட்டி..' பாடல் ஒலித்த போது அனைவரும் ரசித்தனர். இதை பார்த்த உடன் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைத்தேன்.  படம் வெளியான பிறகு இதற்காகவே நிறைய ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருவார்கள். இது சண்முகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன்.  அத்துடன் இது ஒரு புது கூட்டணி என்பதாகவும் பார்க்கிறேன். டிசம்பர் 19ம் தேதி அன்று கொம்பு சீவி மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன்,'' என்றார்.


இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், '' நான் இந்த மேடையில் இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேச வேண்டும். நான் குழந்தை பருவத்தில் இருந்து கேப்டனின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். கேப்டன் எனக்கு மிகவும் இன்ஸ்பயரிங்கான பர்சன்.


கேப்டன் திருமணம் ஆகி முதல் முறையாக தம்பதிகளாய் எங்களது வீட்டிற்கு விருந்திற்காக வருகை தந்தார்கள். அப்போது நான் , என்னுடைய உறவினர்கள் அனைவரும் அப்பாவின் இசையை ஒலிக்க விட்டு நடனமாடிக் கொண்டிருந்தோம்.


இயக்குநர் பொன்ராம் என்னை சந்தித்தபோது, யார் ஹீரோ என கேட்டேன். சண்முக பாண்டியன் என்று சொன்னது ஒரு வினாடி கூட தாமதிக்காமல் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன். கேப்டன் சார், ஏராளமானவர்களுக்கு பில்லராக இருந்திருக்கிறார். என்னுடைய சகோதரரான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் நிச்சயமாக ஒரு பெரிய இடம் உண்டு.


சரத் சாரிடமிருந்து தொடங்கி இன்று சண்முக பாண்டியனுக்கும் பணியாற்றுகிறேன்.


இந்தப் படத்தின் திரைக்கதையை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் பொன்ராமின் டிரேட் மார்க் காமெடி காட்சிகள் சூப்பராக இருந்தன. அவருடன் பணியாற்றிய அனுபவம் ஜாலியாக இருந்தது.


கேப்டன் சார் நடித்த 'தென்னவன்' படத்திற்கு நான் இசையமைத்தேன். 'அரவிந்தன்' படத்திற்கு இசையமைப்பதற்கு முன் அண்ணன் கார்த்திக் ராஜா இசையமைத்த 'அலெக்சாண்டர்' படத்திற்கு நான் பின்னணி இசையமைத்தேன். அப்போது தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு , தான் அந்தப் படத்திற்கு பின்னணி இசையமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த படத்தில் ஒரு பாடலையும், பின்னணி இசையும் அமைத்தேன். இந்த வகையில் என்னுடைய திரையுலக பயணம் 'அலெக்ஸாண்டர்' படத்திலிருந்து தான் தொடங்கியது. இன்று கேப்டன் மகன் நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருப்பது அவரின் ஆசியாகவும், எங்களுடைய குடும்பத்தினருக்கு பணியாற்றுவது போலும் இருக்கிறது,'' என்றார்.


திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''இங்கு இருக்கும் அனைவரும் கேப்டனை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனக்கு தெரிந்தவர்கள் தான், அறிமுகமானவர்கள் தான்.

யுவன் ஷங்கர் ராஜா பிறந்ததில் இருந்தே எனக்கு தெரியும். இளையராஜா சார், ஜீவா ஆன்ட்டி எங்களுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். திரையுலகத்தில் எனக்கு சிலர்தான் நண்பர்கள். அதில் மிகவும் முக்கியமானவர் ஜீவா ஆன்ட்டி தான். அவர்கள் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்றும் சொல்லலாம்.


அப்போதெல்லாம் எல்லா படங்களும் வெளியாகும். ஹீரோக்களை விட நாங்கள் மிகவும் பரபரப்பாக இருப்போம். இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லா படத்திற்கும் பிரிவியூ காட்சி பார்க்க ஜீவா என்னை அழைப்பார்கள். கேப்டன் படம் என்றால் நான் என்னுடைய நண்பர்கள், தோழிகள் அனைவரையும் அழைப்பேன்.


பிரபாகரன், சண்முகம் போல் யுவனும் எனக்கு ஒரு பிள்ளை தான். எனக்கு எந்த பிரச்சனை என்றாலும் இளையராஜா குடும்பத்துடன் மனம் விட்டு பேசுவேன். அதேபோல் சரத்குமாருடனும் பேசுவேன்.

எங்களுடைய திருமணம் நடந்தது ஜனவரி 31 1990. அன்றுதான் 'புலன் விசாரணை' திரைப்படமும் வெளியானது. அன்று முதல் அவர்கள் இருவரிடத்திலும் உண்டான பிணைப்பு, நட்பு இன்று வரை உறுதியுடன் தொடர்கிறது. நடிகர் சங்க தலைவராக பணியாற்றிய போது சரத் சாரும் நெப்போலியன் சாரும் கேப்டனுக்கு இரண்டு கரங்கள் போல் இணைந்து செயல்பட்டார்கள். இப்படி பழைய நினைவுகளை நினைக்கும் போது ஒவ்வொன்றும் அற்புதமான தருணங்களாகத்தான் இருக்கிறது.


சண்முக பாண்டியன் நடித்த 'சகாப்தம்' படத்திற்கு தயாரிப்பாளர் எல் கே சுதீஷ். அவருடைய தாய் மாமாவாக மட்டும் இல்லாமல் அவருடைய அனைத்துமாக இன்று வரை அவர் இருக்கிறார்.‌


இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். இந்தப் படம் குடும்பம் குடும்பமாக திரையரங்கத்திற்குச் சென்று பார்த்து ரசித்து கொண்டாட கூடிய படமாக இருக்கும். இதனை தமிழக மக்கள் அங்கீகரிப்பார்கள்.


இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், ராஜா சாரும், யுவனும் இணைந்து ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். அம்மா பற்றிய சென்டிமென்ட் பாடல் என்றால் அது ராஜா சார் பாடினால்தான் சிறப்பு.


படத்தில் சண்முகமும் , சண்முகத்தின் தாய் மாமாவாக நடித்திருக்கும் சரத் சாரும் அடிக்கும் லூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கும். இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். டிசம்பர் 19ம் தேதியன்று கொம்பு சீவி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து, ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


இயக்குநர் பொன் ராம் பேசுகையில், ''மூன்றாண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் முகேஷ் செல்லையாவை சந்தித்தேன். அவர்தான் சண்முக பாண்டியனை

வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதற்காக அவருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பிறகு கேப்டனையும், சண்முக பாண்டியனையும் சந்தித்தேன். சண்முக பாண்டியனை நேரில் பார்த்ததும் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.


என்னை பொறுத்தவரை ஒரு படத்தை உருவாக்குவதற்கு இயக்குநர் மட்டும் பணியாற்றுவதுடன் தயாரிப்பாளரும் இணைந்து கிரியேட்டிவ்வாக பணியாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பவன். அந்த வகையில் இந்த படத்திற்கும், இந்த நிகழ்விற்கும் தயாரிப்பாளர் முகேஷின் பங்களிப்பும் அதிகம். இதை நான் பாராட்டுகிறேன்.


இந்தப் படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படமாக்கி கொண்டிருந்தபோது வைகை அணையின் உள்பகுதிக்கு சென்றேன்.‌ அங்கு மோட்டார் வைத்த கிணறு மூலம் பாசனம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அணையின் உள் பகுதிக்குள் யாரேனும் விவசாயம் செய்வார்களா என்ற ஆச்சரியத்துடன் பார்த்தேன். அதைப்பற்றி விசாரித்த போது அணையில் நீர் வற்றி விட்டால் எங்களுடைய நிலம், விவசாயம் இதெல்லாம் தெரியும்.‌ நீரின் அளவு உயர்ந்தால் விவசாயத்தை விட்டு விட்டு சென்று விடுவோம் என்றார்கள். இந்த விஷயம் தான் இந்தப் படத்திற்கான கதையாக உருவானது.


அதன் பிறகு கொரோனா காலகட்டத்தின் போது தேனியில் முகாமிட்டிருந்தேன். அப்போது அணை முழுவதும் நீர் நிரம்பி வழிந்து ஓடிக் கொண்டிருந்தது அப்போது ஒரு பெரியவர் கையில் குடையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வை எனக்குள் எதையெதையோ உணர்த்தியது.‌ அதுதான் எனக்கு இந்தப் படத்திற்கான உந்துதல்.


இப்படி ஒரு சீரியஸான கதையில் எப்படி காமெடி என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். இதுதான் எனக்கான சவால்.  இதில் தான் 'ரொக்க புலி' என சரத் சாரும், 'பாண்டி' என சண்முக பாண்டியனையும் கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் இந்த படம் ஆக்ஷனும் காமெடியும் கலந்த என்டர்டெய்னராக இருக்கும்.


யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என எனக்கு நீண்ட நாளாக ஆசை இருந்தது. என்னை முதன் முதலாக துபாய்க்கு அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு மட்டும் தான் உண்டு. இந்தப் படத்தில் இடம்பெறும் அம்மா பாடலை பாடியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு மிகப்பெரிய நன்றி.


சரத் சாரிடம் கதை சொல்லும் போது சற்று பயம் இருந்தது. எப்போதாவது ஒருமுறை தான் அவர் பெரிய மனிதர் போல் நடந்து கொள்வார். மீதமுள்ள அனைத்து நேரங்களிலும் இளைஞராகவும், மனதளவில் குழந்தையாகவும் இருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.


இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் தார்னிக்காவிற்கும், சரத்குமாருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சரத்குமார் நடித்த நாட்டாமை படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்த நடிகை ராணியின் மகள்தான் தார்னிகா.


சண்முக பாண்டியன் இந்தப் படத்தில்  நடிக்கும் போது காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்க வேண்டும் என்றதும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்.‌ ஆனால் சண்டை காட்சிகளுக்காக ஒத்திகை பார்க்காமல் நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஏனென்றால் அது கேப்டனின் ரத்தத்தில் ஊறிய விஷயம்.  அவருக்கு ஒரு குளோசப் காட்சி வைக்கும் போது கேப்டனை பார்த்தது போலவே இருந்தது. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. 'படைத்தலைவன்' படத்தின் தோற்றத்திலிருந்து தான் அவருடைய இந்த படத்திற்கான கதாபாத்திர தோற்றத்தை உருவாக்கினோம். இந்த  திரைப்படத்தின் கதை களம் 1996ம் ஆண்டு என்பதால் அதற்கு ஏற்ற வகையில் மாற்றினோம். பகல், இரவு என்று பாராமல் படப்பிடிப்பில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கான உயரமும், இடமும் தமிழ் சினிமாவில் காத்துக்கொண்டிருக்கிறது.


முதலில் திருமதி பிரேமலதா விஜயகாந்த்தின் அழைப்பின் பேரில் மரியாதை நிமித்தமாக தான் அவர்களை சந்தித்தேன்.  அவர்கள் தான் சண்முகத்திற்காக கதை ஒன்றை உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டார். அந்த சந்திப்புக்கு பிறகு தான் இந்த கதைக்கான எண்ணம் உதித்தது. இதற்காக இந்த தருணத்தில் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌


இந்த படத்திற்காக பின்னணி குரல் கொடுத்திருக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


தயாரிப்பாளர் முகேஷ் த செல்லையா பேசுகையில், ''எல்லோரும் சினிமாவிற்காக சென்னைக்கு வருவார்கள். என்னை கொம்பு சீவி விட்டது இரண்டு பேர். ஒருவர் இளையராஜா. மற்றொருவர் கேப்டன் விஜயகாந்த். அவர்களுடைய இன்ஸ்பிரேஷன், அவர்களுடைய வாழ்க்கை முறைகள் தான் எனக்கு ஊக்கம் தருபவை.


இளையராஜா இன்றும் காலையில் 6:00 மணிக்கு தன்னுடைய ஒலிப்பதிவு பணியை தொடங்குவார். மாலை 6:00 மணி அளவில் நிறைவு செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார். இந்த இடைப்பட்ட தருணத்தில் அவர் வழங்கும் இசை படைப்பு என்பது மகத்தானது அவர் சென்றடையாத இடமே இல்லை.


கேப்டன் விஜயகாந்தின் நடிப்பு மட்டுமல்ல அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் அவருடைய கதாபாத்திரங்களும் மக்களுடைய மனதில் ஆழமாக சென்றடைந்திருக்கிறது.  அவர் பிரியாணி மட்டும் போடவில்லை. அதனை பாசத்துடன் வழங்குவார். பிரியாணி உணவு மட்டுமல்ல அவரின் அன்பும் கூட.  இதனை பார்த்து வியந்து தான் சென்னைக்கு வருகை தந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது தான் பட தயாரிப்பினை தொடங்கி இருக்கிறேன். உங்கள் அனைவரது ஆசியும், ஆதரவும் எங்களுடைய நிறுவனத்திற்கு தேவை. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


நடிகர் சண்முக பாண்டியன் பேசுகையில், ''இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். திரைத்துறையில் நீண்ட கால அனுபவமிக்க பலர் என்னுடன் நடித்தார்கள். அப்பாவின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றியதிலிருந்து எனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார். அவருடன் பழகிய நாட்கள் அனைத்தும் மறக்க முடியாதவை. குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். பல நடிகர்களுக்கு அவர் உதவி செய்திருக்கிறார்.


வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை பார்த்த பிறகு, நானும் இயக்குநர் பொன்ராமின் ரசிகனாகி விட்டேன். அவருடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அவருடன் பணியாற்ற முடியுமா என்ற எண்ணம் ஏற்பட்டது. அது இன்று சாத்தியமாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் இருக்கும் நகைச்சுவை நடிப்பையும், எதிர்வினையையும் அவர்தான் வெளிக்கொண்டு வந்தார். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஒத்திகையும், பயிற்சியும் செய்தோம். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை அளித்தார். காட்சிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் உருவாக்கி தந்தார். குறிப்பாக நான்- சரத் சார் -கல்கி- மூவரும் லாரி தொடர்பான காட்சி ஒன்றில் நடித்தோம். அந்த காட்சியில் நாங்களாக தான் ஒரு எல்லைக்கு மேல் நிறுத்திக் கொண்டோம்.


இந்தப் படம் சீரியஸான கதை. அதை இயக்குநர் பொன்ராம் நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இதை நீங்கள் அனைவரும்  திரையரங்கத்திற்குச் சென்று ரசித்து அனுபவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.


நடிகர் சரத்குமார் பேசுகையில், ''இந்த விழா கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இது ஒரு உணர்வுப்பூர்வமான விழாவாக கருதுகிறேன். இந்த விழாவிற்காக இந்த மேடையில் நிற்கும் போது எனது அன்பு நண்பர் விஜயகாந்தை நினைக்காமல் இருக்க இயலாது. அவரைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினால் என் கண்கள் கண்ணீரால் நிரம்பி விடும். என்னால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது.


திருமதி பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில் நட்பை பற்றி குறிப்பிட்டார்கள். இந்தப் படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் பொன்ராம் ஒரு காரணமாக இருந்தாலும், சண்முக பாண்டியன் நடிக்கிறார் என்றதும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.‌ ஏனெனில் கலை உலக பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் விஜயகாந்தின் ஒப்பனைக் கலைஞர் ராஜு, புலன் விசாரணை படத்திற்காக ஒரு வில்லனை தேடிக் கொண்டிருக்கும் போது சரத்குமார் வாட்ட சாட்டமாக இருக்கிறார் என என்னை விஜயகாந்த்திடம் பரிந்துரை செய்திருக்கிறார். உடனடியாக என்னை அழைத்துக் கொண்டு விஜயகாந்தின் அலுவலகத்தில் அவர் முன் நிறுத்துகிறார்கள். அவர் என்னை பார்த்தவுடன் உடனடியாக இயக்குநர் செல்வமணியையும், என்னுடைய நண்பர் ராவுத்தரையும் பார்த்து விடுங்கள் என சொன்னார். என்னை பார்த்ததும் அவர் முடிவு செய்துவிட்டார். அப்போது இயக்குநரும், விஜயகாந்த்தும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் . உடனடியாக நான் அருகில் உள்ள முடி திருத்தும் நிலையத்திற்கு சென்று என்னுடைய மீசையை மழித்து விட்டு அவர்கள் முன் நின்றேன். அன்று தொடங்கியது தான் இந்த கலைப் பயணம். அது மறக்க முடியாத தருணம்.


அந்தப் படம் நிறைவடைந்து வெளியான பிறகு எந்த கதாநாயகனும் பகிர்ந்து கொள்ளாத ஒரு விஷயத்தை விஜயகாந்த் என்னிடம் சொன்னார். 'சரத் இந்த படத்தில் உங்களுக்குத் தான் மிகப்பெரிய பெயர்' என்றார். அதைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் நடித்தேன்.


புலன்விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் போதும் சண்டை காட்சிகளில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மற்றவர்கள் மாற்று வழியை சொன்ன போதும், சரத் குணம் அடைந்து வந்த பின் அந்த காட்சியை படமாக்கிக் கொள்ளலாம் என்று விஜயகாந்த் உறுதியாக சொல்லி விட்டார். அவருடைய உறுதி தான் என்னை மிகவும் கவர்ந்தது இன்று வரை அவருடைய என்னை பிணைத்து வைத்திருப்பதும் அவருடைய அந்த குணம் தான். அவருடைய திறமை, அன்பு, பாசம் ஆகிய அனைத்தையும் அவருக்கு அருகே இருந்து அனுபவித்தவன் நான்.


இன்று இந்த மேடையில் இருந்து ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன். சண்முக பாண்டியன் எதிர்காலத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராவார்.  அதில் எந்த மாற்றமும் இல்லை. கேப்டன் விஜயகாந்த் எப்படி இருப்பாரோ அதேபோல் இவரும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.


இந்தப் படத்தில் மாமன்- மச்சினனாக நாங்கள் நடிக்கவில்லை.  வாழ்ந்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த குடும்ப ரீதியிலான உறவு தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.


சண்முக பாண்டியனுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் உயரத்தை பற்றி தவறாக நினைக்காமல் உங்கள் உயரத்திற்கு ஏற்ற பொருத்தமான கதையை தேர்வு செய்து நடிக்க வேண்டும். நீங்கள் 'தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன்'. அதனால் கழுத்தை குனிந்து மற்றவர்களிடம் கேட்காமல் நிமிர்ந்து கதையைக் கேட்டு பணியாற்ற வேண்டும்.


இந்த 'கொம்பு சீவி' படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.


ஒரு திரைப்படம் வெளியாகி 30 நாட்களில் டிஜிட்டல் தளத்தில் வந்துவிடும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்காமல், இந்த படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும். அதே தருணத்தில் டிஜிட்டல் தளங்களுக்கும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். நீங்கள் ஒரு திரைப்படத்திற்கு 30 நாட்கள் அவகாசம் கொடுப்பதை, 50 நாளாக உயர்த்தினால் நன்றாக இருக்கும். மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசிப்பார்கள். ரசிகர்களை திரையரங்கத்திற்கு வரவழைப்பதில் டிஜிட்டல் தளங்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் அப்போதுதான் திரைத்துறை ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


இந்தத் திரைப்படம் விவசாயத்தை பற்றியும், விவசாயம் சிறப்பாக இல்லாத தருணத்தில் விவசாயிகள் என்ன செய்தார்கள் என்பது குறித்தும் ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக் கொண்டு இயக்குநர் அதனை நகைச்சுவையுடன் கலந்து சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.


BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”.  

வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்.., 

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது ,
திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குனர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார் எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் திறமைசாலி, இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு தெரியும். இந்தப் படத்திற்கு அது சரியாக பொருந்தியுள்ளது. கூடிய விரைவில் என்னுடைய தயாரிப்பிலும் ஒரு படம் இயக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அருண் விஜய் 15 வருடங்களுக்கு பின்னும் அதே போல, இன்னும் அப்படியே இளமையாக இருக்கிறார். மிகப்பெரும் ஆச்சர்யம் தான். அவர் ஒரு கடின உழைப்பாளி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. தமிழ் சினிமாவில் அவருக்கு இன்னும் பெரிய இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன். படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் படத்திற்கு பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர், கண்டிப்பாக பெரியவெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி. 

இயக்குநர் முத்தையா பேசியதாவது.., 
“ரெட்ட தல” படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன் நன்றாக இருந்தது. இயக்குநர் திருவை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். இருவரும் உதவி இயக்குநராக இருந்ததிலிருந்து பழகி வருகிறோம். இந்த படம் நிச்சயம் அவருக்கும், அருண் விஜய்க்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமையும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி. 

இயக்குநர் கிஷோர் முத்துராமன் பேசியதாவது.., 
இந்தப் படத்தின் தலைப்பில் அஜித் சாரை வைத்து, இயக்குநர் முருகதாஸ் இயக்குவதாக நிறைய செய்திகள் கேட்டேன். இன்று அதே பெயரில் அருண் விஜய்யை வைத்து, இயக்குநர் திரு இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் உலகத்திரத்தில் இருக்கிறது, கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும். அனைவருக்கும் என் வாழ்த்துகள் நன்றி. 

இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது.., 
இந்ததலைப்பு எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்திற்காக அருண் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்களாக நடிப்பதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். உங்களின் பொறுமைக்கு இந்தப் படம் ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்கும். இயக்குநர் திருவின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரத்தில் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படமும் அப்படிதான் இருக்கிறது. பல வருடங்களாக வெளிநாடுகளில் பாடல் எடுப்பதில்லை. இந்தப் படத்தில் அந்தப் பாடல் இன்னும் கூடுதல் சிறப்பு. சில படங்கள் ஆண்டின் இறுதியில் வரும், அது அந்த வருடத்தில் வெளியான அனைத்து படங்களையும் மறக்கடித்து விடும், அது போல இந்தப் படம் இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகள். 

இயக்குநர் கோகுல் பேசியதாவது, 
இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும், ஏனென்றால் அப்போது தான் தயாரிப்பாளர் எனக்கொரு படம் கொடுப்பார். எனவே இந்த படம் வெற்றி பெற தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். அருண் விஜய் ஒரு நல்ல உழைப்பாளி, அவரின் உழைப்பிற்கு இந்தப்படம் ஒரு சான்று. அவருடன் எனக்கும் ஒரு படம் பண்ண ஆசை இருக்கிறது, கண்டிப்பாக இணைவோம் என்று நம்புகிறேன். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. படம் டெக்னிக்கலாக சிறப்பாக உள்ளது. கண்டிப்பாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் இந்தப் படம் வெற்றியைக் கொடுக்கட்டும். அனைவருக்கும் வாழ்த்துகள். 

இயக்குநர் ஏ ஆர் கே சரவணன் பேசியதாவது.., 
அருண் விஜய் சாரை நன்றாகத் தெரியும். அவரைப் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வேன். அவரது முயற்சி இன்னும் என்னை வியக்க வைக்கிறது. கண்டிப்பாக அவர் மிகப்பெரிய உச்சத்தை அடைவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கதாநாயகி சித்தி நல்ல குணசித்திர முக பாவனை கொண்ட நடிகை. ஸ்க்ரீனில் அது நன்றாக தெரிகிறது. பாடல்கள் காட்சிகள் என அனைத்தும் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி. 

இயக்குநர் அறிவழகன் பேசியதாவது, 
ஒரு உதவி இயக்குநருக்கு அவருடைய இயக்குநரின் தயாரிப்பில் படம் இயக்குவது என்பது ஒரு அதிர்ஷ்டம், எனக்கும் திருவிக்கும் அது அமைந்தது. நானும், திருவும் நீண்ட கால நண்பர்கள். கண்டிப்பாக எனக்கு இது மகிழ்வான தருணம். அருண் விஜய் சாரை பற்றி பல நண்பர்கள் மூலம் பேசி கேட்டிருக்கிறேன், அவருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தை உருவாக்குவேன். இந்தப் படம் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் பாபி சாருக்கு வாழ்த்துகள். மேலும் மேலும் படங்களை அவர் தயாரிக்க வேண்டும் நன்றி. படத்தில் பணி புரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி.

ட்றம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் விவேக் பேசியதாவது..,
தயாரிப்பாளர் பாபி அண்ணனை, எனக்கு நன்றாகத் தெரியம். நானும் அவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி, இந்தப் படத்தின் மூலம் அவருக்கு கிடைக்கும். அருண் விஜய் எனக்கு அண்ணன் தான், அவர் தன்னால் முடிந்த முழு உழைப்பையும் இந்த படத்திற்கு கொடுத்துள்ளார். படக்குழு அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த டிரெய்லர் கண்டிப்பாக அனைவரையும் கவர்ந்திருக்குமென நம்புகிறேன், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது, 
என்னுடைய முதல் படத்திற்கு பிறகு நான் கொஞ்சம் ரிலாக்ஸாக மாறி விட்டேன் என்று நினைக்கிறேன். அந்த எண்ணத்தை இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் விட்டு விட்டேன். இனிமேல் தேடலுடன் பணியாற்ற போகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் முக்கிய கதாபாத்திரம். அதுவே என்னை இங்கு நிறுத்தியுள்ளது. கண்டிப்பாக அது உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநர் திரு சாருக்கு நன்றி. அருண் விஜய் சாருக்கும் நன்றி. அவருடன் பணி புரிந்தது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் பணி புரிந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் பணி புரிந்தோம். நானும் தமிழ் கற்றுக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முழுவதுமாக கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன். இந்த படம் அனைவருக்கும் ஒரு நல்ல என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றி. 

படத்தின் எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, 
இந்தப் படத்தில் திருவுடன் இணைந்து பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு எடிட்டிங்கில் மிகவும் உதவியாக இருந்த என்னுடைய உதவியாளர் வெரோனிகாவிற்கு நன்றி. இந்தப் படத்தில் முழுக்க முழுக்க எடிட்டிங்கில் பணி புரிந்துள்ளார், அவருக்கும் நீங்கள் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி. 

இயக்குநர் கிரிஷ் திருகுமரன் பேசியதாவது, 
விழாவிற்கு வந்த இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி, இந்தப்படத்தில் என்னுடன் பணி புரிந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பாபி சாருக்கும், அருண் விஜய் சாருக்கும் நன்றி. படத்தை அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்கவும் இந்தப் படம் ஒரு நல்ல திரை அனுபவத்தை அனைவருக்கும் கொடுக்கும் நன்றி. 

நடிகர் அருண் விஜய் பேசியதாவது, 
திரு சார் அதிகம் பேசுவார் என்று நினைத்தேன், ஆனால் படம் பேசும் என்று சுருக்கமாக பேசியுள்ளார். இந்தப் படத்தின் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் எனக்கு சவாலாக இருந்தது. அப்போதே நான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். இந்தப் படத்தின் முக்கிய தூணாக இருந்தது எடிட்டர் ஆண்டனி சார். படம் படு வேகமாக இருந்தது, அதை சரியாக கட் செய்து கொடுத்துள்ளார். படத்தில் பாடல்களும் காட்சிகளும் உயர்ந்த தரத்தில் இருக்கும். நடிகை சித்தி இத்னானி தனது முழு உழைப்பைக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமா இதற்கு பின் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்குமென நம்புகிறேன். இந்தப் படத்தில் அதிக ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது நன்றாகவே வந்துள்ளது. கண்டிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும். தனுஷ் சார் ஒரு பாடலைப் பாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்படத்திற்காக அனைவரும் பெரும் உழைப்பு கொடுத்துள்ளோம், கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.

முழுக்க முழுக்க ஸ்டைலீஷாக ஆக்சன், ரொமான்ஸ் கலந்து, ஒரு கலர்ஃபுல் எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், அருண் விஜய் மாறுபட்ட இரண்டு விதமான கதாப்பாத்திரங்களில், இரட்டை வேடத்தில் மிரட்டியிருக்கிறார். 

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல், உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் 

தயாரிப்பு - BTG Universal
தயாரிப்பாளர் - பாபி பாலச்சந்திரன்
இயக்கம் - கிரிஷ் திருக்குமரன்
இசை - சாம் CS 
ஒளிப்பதிவு - டிஜோ டாமி
எடிட்டர் - ஆண்டனி
ஸ்டண்ட் – P.C. ஸ்டண்ட்ஸ்
கலை இயக்கம் - அருண்சங்கர் துரை
உடை வடிவமைப்பு - கிருத்திகா சேகர்
நடன அமைப்பு – சுரேன் R, பாபி ஆன்டனி
பாடல் வரிகள் – கார்த்திக் நேதா, சாம்.CS, விவேகா
VFX மேற்பார்வை – H மோனேஷ் 
நிர்வாக தயாரிப்பாளர் – மணிகண்டன்
தயாரிப்பு மேற்பார்வை - S R லோகநாதன்
DI - ஸ்ரீஜித் சாரங்க்
ஒலி வடிவமைப்பு - T உதயகுமார் ( Sound Vibe )
பப்ளிசிட்டி டிசைனிங் - பிரதூல் NT
பப்ளிசிட்டி போட்டோகிராஃபர் - வெங்கட் ராம் 
ஸ்டில்ஸ் - மணியன்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

Trailer - https://youtu.be/lnMtW2xM2O0?si=JDYxEiWVlqGI11wx

தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு, இயக்குநர் K பாக்யராஜ், ஓவியர் டிராட்ஸ்கி மருது, இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதி பெருமாள், இயக்குநர் குட்டி ரேவதி, Gembrio pictures MD சுகுமார் பாலகிருஷ்ணன், விகடன் K ராஜசேகரன், இயக்குநர் ராகவ் மிர்தாத், இயக்குநர் சுகுமார் அழகர்சாமி, இயக்குநர் பாலமுருகன், ஊடகவியலாளர் உமாபதி கிருஷ்ணன் ஆகியோர் விருது விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்

நிகழ்வின் துவக்கத்தில் " தமிழ் பிலிம் பேக்டரி " திரைப்பட தயாரிப்பு & மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. Tamil film factory Logoவை திரு. கலைப்புலி S தாணு அவர்கள், இயக்குநர் k பாக்யராஜ் அவர்கள் வெளியிட இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன் ஆகியோர் பெற்றுகொண்டனர். நிறுவனத்தின் இயக்குநர்கள் திருமதி கருணா விலாசினி, திருமதி சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பதிவு செய்யப்பட்ட 48 குறும்படங்களில் துணை, ஆலம்நாட், அரைவேக்காடு, Coffee with Avanthika, shadow, Lowgun, கடல்கொண்டான், Love Lust retro, காஞ்சனா, மீண்டும் மழை ஆகிய சிறந்த 10 குறும்படங்கள் திரையிடப்பட்டன. 

அரைவேக்காடு, கடல்கொண்டான், காஞ்சனா, நீயே யாவுமாகி ஆகிய படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது வழங்கப்பட்டது

சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த editor, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த வசனம், சமுக விழிப்புணர்வு, சமுக உணர்வு, சிறப்பு நடுவர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன

ஆலம்நாட் குறும்படத்திற்கு மூன்றாம் பரிசு ரூ 25000 வழங்கப்பட்டது, Love Lust retro- கடல்கொண்டான் படங்களுக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. பரிசுத்தொகை தலா 25000 வழங்கப்பட்டது
மீண்டும் மழை படத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், பரிசுத்தொகை ரூ 1 லட்சமும் வழங்கப்பட்டது. பரிசுகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் வெற்றி பெற்றவர்களுடன் அனைவரும் இணைந்து கொண்டாடியது மகிழ்வான தருணமாக இருந்தது. 

Firstframe- 2025 விருது விழாவில் முதல் பரிசு வாங்கும் அணியுடன் இணைந்து திரைப்படம் தயாரிக்கவுள்ளதாக Gembrio pictures MD திரு சுகுமார் பாலகிருஷ்ணன் அறிவித்தது மிகவும் முத்தாயப்பான விஷயமாக இருந்தது. அரைவேக்காடு படத்தையும் தயாரிக்க விரும்புகிறோம் என்று ஒரு தயாரிப்பாளர் அறிவித்தார். தயாரிப்பாளர் இமயம் கலைப்புலி S தாணு அவர்களும் படங்களை பார்த்துவிட்டு திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக பேசினார்.

இயக்குநர் K பாக்யராஜ் பேசும் போது Firstframe- 2025 இளம் இயக்குனர்களுக்கும், கலைஞர்களும் மிகவும் அருமையான ஒரு மேடையை அமைத்து கொடுத்திருக்கிறது. அதேபோல் மிகவும் திறமையான இயக்குநர்கள், நடிகர்கள், திரைக்கலைஞர்களை காணமுடிகிறது. இந்நிகழ்வு மூலமாக இவர்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்

இயக்குநர் அரவிந்தராஜ், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் மணிகண்டன், நடிகர் பகவதிபெருமாள், இயக்குநர் குட்டிரேவதி, இயக்குநர் ராகவ் மிர்தாத் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்ததோடு இயக்குனர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திரைக்குரலின் Editor-in-chief ஆதவன் UK, அறம் மீடியாவின் நிர்வாக செயல் அதிகாரி சுகுமார் K  ஆகியோர்   நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தினார்கள்.

Pageviews