திரை எழுத்தாளர்களின் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (SWAN),ஐபி கிளைம்ப் உடன் இணைந்து இணைந்து ஸ்வேன் அகாடமியை சென்னையில் தொடங்கியது.


நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்ற ஸ்வேன் அமைப்பின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சேரன், ஸ்வேன் அகாடமியின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். 


ஸ்வேன் அகாடெமி தொடக்கத்தை முன்னிட்டு, ஸ்வேன் மற்றும்  ஐபி கிளைம்ப் இணைந்து, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் திரை எழுத்தாளர்கள் மற்றும் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்றனர்.


கதை உருவாக்கம், திரைக்கதை எழுதும் நுணுக்கங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த கருத்தரங்குகள் மற்றும் ஆழமான கலந்துரையாடல்கள் இதில் இடம்பெற்றன.


விழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எழுத்துப் பயணத்தின் அனுபவங்களையும், திரைக்கதை உருவாக்கம் தொடர்பான முக்கியமான கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து, புதிதாக தொடங்கப்பட்ட ஸ்வேன் அகாடமியின் லோகோ மற்றும் பாடத்திட்டத்தை அவர் வெளியிட்டார்.


வளர்ந்து வரும் கதைசொல்லிகள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கும் வகையில் ஸ்வேன் அகாடமி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்வின் முக்கிய அம்சமாக, ஐபி கிளைம்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


நவீன கதைசொல்லல் குறித்த விரிவான புரிதலை வழங்கும் வகையில் பல்வேறு சிறப்பு அமர்வுகளும் நடைபெற்றன. பாடலாசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்க்கி, நவீன கதை சொல்லலில் உருவாகி வரும் புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகள் மற்றும் கதை இயக்கவியல் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 916 ஸ்டூடியோ சார்பில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில், தற்போது வேகமாக வளர்ந்து வரும் வெர்ட்டிக்கல் ஷார்ட் பார்ம் டிராமா வடிவம் குறித்து விவாதிக்கப்பட்டது.


மேலும், எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை, மலையாள எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அனுராஜ் மனோகர், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி படைப்பாளர்கள் பல்வேறு முக்கிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர். திரைக்கதை எழுத்தின் நுட்பங்கள், நவீன கதைசொல்லல் முறைகள், டிஜிட்டல் காலகட்டத்தில் எழுத்தாளர்களுக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் விரிவாகப் பேசப்பட்டது.


நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், சேரன், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர். சுந்தர்ராஜன், சமுத்திரக்கனி மற்றும் சினேகன் உள்ளிட்ட மூத்த படைப்பாளிகளின் தலைமையில் செயல்பட்டு வரும் ஸ்வேன் அமைப்பு, தென்னிந்திய சினிமாவில் திரை எழுத்துக்கான முறையான கல்வி மற்றும் பயிற்சி கட்டமைப்பை உருவாக்குவதிலும், எழுத்தாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


ஸ்வேன் அகாடமியின் தொடக்கம், தென்னிந்திய திரைக்கதை எழுத்தாளர்களின் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கும், அவர்களின் படைப்பாற்றலுக்கு உரிய வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் வழங்குவதற்குமான முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

 

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன.


தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளில் செயல்பட்டு வந்த அமைப்புகள் தற்போது ஒரே குடையின் கீழ் இணைந்துள்ளன. இதன் மூலம், தென்னிந்திய தயாரிப்பாளர்களின் நலன்களுக்கான ஒற்றுமை மிக்க மற்றும் வலிமை வாய்ந்த அமைப்பு உருவாகியுள்ளது.


தொலைக்காட்சி துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது, கலைஞர்களின் கால்ஷீட் மற்றும் பணிநேரங்களை முறைப்படுத்துவது, தயாரிப்பாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை இந்த புதிய சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.


இதன் மூலம் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒரு வலுவான பாலமாக இந்த அமைப்பு செயல்பட்டு, மாநில எல்லைகளைக் கடந்து நடைபெறும் தயாரிப்புப் பணிகள் சீரான முறையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், ஒழுங்குமுறையுடனும் நடைபெறுவதற்கு தேவையான ஆதரவை வழங்கும்.


இந்த புதிய கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் தலைவராக தெலுங்கு தொலைக்காட்சி துறையைச் சேர்ந்த பிரசாத் செயல்படுவார். துணைத் தலைவர்களாக தமிழகத்தைச் சேர்ந்த உதயசங்கர், கன்னட துறையைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். ராஜவேலு பொதுச் செயலாளராக செயல்படுவார். தமிழக சங்கத்தின் கெளரவத் தலைவர் ராதிகா சரத்குமார் புதிய கூட்டமைப்பை தொடங்கி வைத்தார். சத்யஜோதி டி.ஜி. தியாகராஜன் மற்றொரு கெளரவத் தலைவர் ஆவார்.


நான்கு மொழி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த ஒருங்கிணைந்த அமைப்பு, தயாரிப்பாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், தயாரிப்பு தரத்தை மேலும் உயர்த்துவதிலும், தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தென்னிந்தியாவின் நான்கு முக்கிய மொழித் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைகள் ஒரே அமைப்பின் கீழ் இணைந்திருப்பது, பிராந்திய பொழுதுபோக்குத் துறையின் ஒற்றுமை மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

 

ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.


ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  விசாரணை நடைபெற்று முடியும் வரை, ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி பதிப்பை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடுதல், பயன்படுத்துதல், விநியோகித்தல் அல்லது வேறு எந்த வகையிலும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர்மனுதாரர்கள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மலையாளத்தில் உருவான ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தைத் தழுவி உருவாக்கப்படும் இந்தி பதிப்பில் அஜய் தேவ்கன், தபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை அபிஷேக் பதக் இயக்கியுள்ளார்.


இந்த வழக்கு இன்று, செப்டம்பர் 29, 2026 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி திரு. கே. குமரேஷ் பாபு அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.


மனுதாரரான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், வழக்கறிஞர்கள் M/s. Rugan and Arya அவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் திரு. கே. ரவி அவர்கள் ஆஜரானார்.


வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிமன்றம், எதிர்மனுதாரர்களின் பதில் மனுவைத் தாக்கல் செய்வதற்கும், மனுவை விசாரித்து முடிவு செய்வதற்கும் வழக்கை அக்டோபர் 1, 2026 அன்று மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.


‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி பதிப்பை எதிர்காலத்தில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது தொடர்பாக தங்களுக்குள்ள ஒப்பந்த மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.


தங்களது ஒப்பந்த உரிமைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தங்களது உரிமைகள் சட்டப்படி உரிய முறையில் தீர்மானிக்கப்படுவதை உறுதி செய்வதில் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது.


மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கையும், முன்மொழியப்பட்ட விசாரணையையும் சட்டப்படி தொடர்ந்து முன்னெடுக்க நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

 

பிர்லா ஸ்டுடியோஸ் (Birla Studios ) - நீலம் ஸ்டுடியோஸ் (Neelam Studios )  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படம் - உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


நடிகர் கே. மணிகண்டன் (K. Manikandan) நடிப்பில் உருவாகும் இந்த அதிரடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி- அவரது பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்டுள்ளது


 கே. மணிகண்டன் நடிப்பில் பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள அதிரடி திரைப்படமான 'மக்கள் காவலன்' எதிர்வரும் டிசம்பர் மாதம்  4ஆம்  தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கே. மணிகண்டனின் பிறந்த நாளையொட்டி இந்த வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


லட்சியம் -மன உறுதி- தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல்- ஆகியவை 'மக்கள் காவலன்' படத்தின் மைய புள்ளியாகும். நடிகரின் சொந்த திரைப்பயணமும் இதனை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் 'மக்கள் காவலன்'. பிரம்மாண்டமான திரைப்படங்களை உருவாக்கும் பிர்லா ஸ்டுடியோஸின் லட்சியத்தையும்.... உணர்வு பூர்வமான மற்றும் சமூக பின்னணி கொண்ட சிறந்த சினிமா கதைகளை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும்... இந்த திரைப்படம் ஒன்றிணைக்கிறது. 


'குட் நைட்', 'லவ்வர்', 'குடும்பஸ்தன்' ஆகிய திரைப்படங்களின் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து கே. மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் 'மக்கள் காவலன்'. அவரின் தொடர் வெற்றிகள் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது. 'மக்கள் காவலன்' படத்தின் மூலம் மணிகண்டன் முதன்முறையாக ஒரு அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். 


இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியிருக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படம் - கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் கதையை உரக்க பேசுகிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு... அவரை சரணடைவது அல்லது எதிர்த்து போராடுவது என்ற இரண்டு தேர்வுகளுக்குள் உந்தித் தள்ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர் வாழ்வதற்கான போராட்டமாக தொடங்கும் இது... மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது. இதனால் அவர் ஒருபோதும் விரும்பாத... ஒரு தலைவராக மாற வேண்டிய கட்டாய சூழல் உருவாகிறது. போராட்டம் தீவிரம் அடையும் போது.. அதற்கான விலையும் அதிகரிக்கிறது. அதே சமயத்தில் ஒரு சாதாரண மனிதனுக்கும், மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மறைய தொடங்குகிறது. தனது பிறப்பு சூழலோ... அல்லது தன்னை சுற்றியுள்ள தடைகளோ... தனது லட்சியத்தின் எல்லையை தீர்மானிக்க அனுமதிக்காத ஒரு மனிதனின் கதையே.. இப்படத்தின் மையப் பொருளாகும். உலகம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால் கனவு காணும் துணிச்சலையும்... அந்த எல்லைகள் முக்கியத்துவமற்றதாக மாறும் வரை தொடர்ந்து முன்னேறும் மன உறுதியையும்... இத்திரைப்படம் அழுத்தமாக பேசுகிறது. 


மணிகண்டனின் பிறந்த நாளன்று இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது, அந்த மன உறுதியைப் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.. 


எழுத்து, டப்பிங் மற்றும் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கி.. இன்று ஒரு முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் மணிகண்டனின் பயணமானது விடாமுயற்சி- தன்னை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளுதல் - மற்றும் தனது கலை மீதான அசைக்க இயலாத அர்ப்பணிப்பு - ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்டது. 


இந்த திரைப்படத்தில் கே. மணிகண்டன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர் .கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன்,  உன்னி மாயா,  திவ்யா ஸ்ரீபாதா ,ஜென்சன் திவாகர், லல்லு , ஜெமினி மணி,  ரகு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'பைசன் காளமாடன்' படத்திற்கு பிறகு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை அருள் மோசஸ் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை பாப்பநாடு சி. உதயகுமார் கவனித்திருக்கிறார். சண்டை பயிற்சியை டான் அசோக் - ஒலி வடிவமைப்பினை ஆண்டனி ஜெயரூபன் - ஆடை வடிவமைப்பை சுரேஷ்குமார்-  ஒப்பனையை ராமச்சந்திரன் - ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

 

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) - ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் - அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி (sakthi film factory) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். 


இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான  பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா,  ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன்  நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். 


இந்நிகழ்வில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், 


''ஹாலிவுட்டில் பிரம்மாண்டத்தைக் காண்பிக்க வேண்டும் என்றால்... அவர்களுக்கு பெரிய பெரிய டைனோசர்கள் தேவைப்பட்டது. ஆனால் எங்கள் ஊரில் இருந்து 'ஈ'யை வைத்து உலகம் முழுவதும் பிரம்மாண்டத்தை காண்பித்தவர் எங்கள் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. எங்களுக்கெல்லாம் பிரம்மாண்டம் என்றால் ஹாலிவுட் தான் என்றிருக்கும் போது.. அது இல்லை என்று எங்களை நம்ப வைத்த இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் முத்திரையில் வெளியாகும் ஒரு திரைப்படம் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'. இதைக் கடந்து இந்தப் படத்தைப் பற்றி நாங்கள் எல்லாம் என்ன சொல்லி விடப் போகிறோம் ?. 


இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகிக்கும் பொறுப்பை எங்கள் நிறுவனத்திற்கு அளித்ததை பெருமையாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயாவிற்கு நன்றி. 


இப்படத்தின் டீசர் வெளியாகும் போது எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் படத்தில் ஃபஹத் பாசில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு அனைத்து பக்கங்களிலிருந்தும்... என்னுடைய நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்ற ஒரு பேச்சு எழுந்தது. இது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்திருக்கிறது. 


தயாரிப்பாளர் கார்த்திகேயாவிடம் இந்த திரைப்படம் 3 D தொழில்நுட்பத்தில் வந்திருக்க வேண்டிய திரைப்படம், 2 D தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள். இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யும்போது 3 D தொழில்நுட்பத்தில் வெளியிட்டால், கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என்றேன்.


இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி அடுத்த ஜெனரேஷனுக்கான இன்ஸ்பிரேஷனாகத் திகழ்கிறார். இங்கு  ஃபஹத் பாசிக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இந்தப் படத்தை பார்ப்பதற்கு குடும்ப ரசிகர்களும் இணைவார்கள் என்பதால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது'' என்றார். 


தயாரிப்பாளர் எஸ்.எஸ்.  கார்த்திகேயா பேசுகையில்,


''சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் சூர்யாவிற்கு நன்றி. இது எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம். இந்தப் படம் நேர்மையான... இனிமையான... திரைப்படம். எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் என்றால்.. இந்தப் படத்தின் பட்ஜெட்டை விட, அவருடைய படங்களில் உள்ளதைப் போன்ற எமோஷனை சொல்லும் படம் என்று குறிப்பிடலாம். அது உங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். இப்படத்தின் இரண்டாம் பாதியில் இடம் பிடித்திருக்கும் எமோஷனல் உங்கள் அனைவரையும் கவரும். இயக்குநர் ஷஷாங்க் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 


நான்  ஃபஹத் பாசில் மிகப்பெரிய ரசிகன். பேபி சாரா இப்படத்தில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார். அக்டோபர் 2ம் தேதி 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார். 


படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி பேசுகையில், 


''ஆர்ஆர்ஆர் படத்தின் ட்ரெய்லருக்காக இந்தக் குழுவை முதன் முதலில் சந்தித்தேன். அப்போதுதான் எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயாவை சந்தித்தேன். நான் தயாரிப்பாளர் கார்த்திகேயாவை சகோதரர் என்று தான் அழைப்பேன். அந்த தருணத்திலிருந்து என் மீது மிகப்பெரிய நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அதனால் தான் இப்படத்தின் படத்தொகுப்பு பணியை எனக்கு வழங்கினார்கள். 


என் மீதான நம்பிக்கை இருக்கிறது என்றால்... நான் செய்யும் அனைத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இப்படத்தின் ட்ரெய்லருக்கு எத்தனை வெர்ஷன் உருவாக்கினோம் என்று தெரியாது. ஒரு வகையில் எடிட் செய்தால் நன்றாக இருக்கிறது, ஆனால் முதல் பகுதி சற்று மாற்றலாம் என்பார். அதை மாற்றி கொடுத்தால்... முதல் பகுதி ஓகே. ஆனால் இரண்டாம் பகுதியில் சற்று மாற்றலாம் என்பார். அதன் பிறகு இரண்டாம் பகுதியையும் மாற்றுவோம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்... எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஒரு ட்ரெய்லர் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் ?  எதை ஏற்படுத்த வேண்டும் ? என்பதில் கார்த்திகேயா தெளிவாக இருப்பார். இந்த விசயத்தை இந்தஙக குழுவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.


எஸ். எஸ். ராஜமௌலியும் அப்படித்தான் இருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றும்போது அவருடன் இணைந்து பணியாற்றுகிறோமோ.. என்ற ஆச்சரியம் தான் இருக்கும். 


இந்தப் படத்தின் திரைக்கதையை வாசிக்கும் போது இயக்குநர் ஷஷாங்கிடம் இந்தந்த இடங்களில் இருக்கும் விசயங்களை எப்படி காட்சிப்படுத்தப் போகிறீர்கள் ? என்பதைப் பற்றி கேட்டேன். பொதுவாக திரைக்கதையில் எழுதப்பட்டிருப்பதை 60 சதவீதம் காட்சிகளாக உருவாக்கப்பட்டாலே... அதுவே மிகப்பெரிய வெற்றி என்பார்கள். ஆனால் இந்த படம் என்னை பொறுத்தவரை 200 சதவீதம் நேர்த்தியாக உழைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது திரைக்கதையிலிருந்து திரை மொழியை 200 சதவீதமாக வழங்கியிருக்கிறார்கள். இயக்குநரின் பார்வை... ஒளிப்பதிவாளரின் பார்வை... அதனுடன் ஃபஹத் பாசிலின் பங்களிப்பு.. ஆகியவை இருப்பதால் மிகச் சிறப்பானதாக இருக்கிறது. 


 ஃபஹத் பாசில்  சாரா இருவரும் திரையில் தோன்றும் போது இது குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல அனைவருக்குமான படமாக இருக்கும். இந்த காலாண்டுத் தேர்வு விடுமுறையில் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் அளவில் இந்த திரைப்படம் இருக்கிறது. இந்தப் படத்தை தமிழ் டப்பிங் படமாக மட்டும் இல்லாமல் தமிழுக்காக சிறிய சிறிய விசயங்களையும் நுட்பமாக கவனித்து உருவாக்கியிருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி,'' என்றார். 


குழந்தை நட்சத்திரம் சாரா பேசுகையில், '


'' ஆப்ரா கா ஷாப்ரா. வணக்கம் சென்னை. சூர்யா சாருக்கு நன்றி. நான் இந்தப் படத்தில் திவ்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். திவ்யாவின் பெஸ்ட் பிரண்ட் சூரி.‌ இந்தப் படத்தில் நாங்கள் அனைவரும் ஃபேண்டஸியான மேஜிக்கல் உலகத்திற்கு ரசிகர்களை வரவேற்கிறோம். இந்த திரைப்படத்தில் சாகசமும் இருக்கிறது.  இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. அனைவரும் காந்தி ஜெயந்தி தினத்தன்று படத்தைக் காண இப்படத்தின் மேஜிக்கல் உலகத்தை காண திரையரங்கத்திற்கும் வருகை தாருங்கள், '' என்றார். 


இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி பேசுகையில், 


'' இந்த படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த 'உலக நாயகன்' கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நன்றி. 'கருப்பு', 'விஸ்வநாத் ‌& சன்ஸ்' என டபுள் டமாக்கா வெற்றியை வழங்கிய சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. 'சிங்கம்' படத்தின் மூலம் மாஸான போலீஸ் அதிகாரியை காட்சி படுத்திய உங்களிடமிருந்து, 'சீன்' படத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறோம். நவம்பரில் அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்த திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.‌


ஒரு முறை என்னிடம் மிகப் பெரிய கட்டிடக் கலை நிபுணர் சொன்னார்... 'நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டிடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால்.. அதுதான் மிகச் சிறந்த கட்டிடம்' என்றார். இது என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் பொருந்தும். இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஷஷாங்கிடம் சொன்னேன். 


இயக்குநர் கதை சொல்வதற்காக என்னை சந்தித்தார். அப்போது அவர் எனக்கு மூன்று மணி நேரத்தைத் தாருங்கள். இப்படத்தின் கதையை சொல்கிறேன் என்றார். அவரிடம் நிச்சயமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாது. உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை சொல்ல முடியுமா ? என கேட்டேன். அது எப்படி சாத்தியம் ? எனக் கேட்டார். ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால்.... அது எனக்குப் பிடித்திருந்தால்... நான் இரண்டரை மணி நேர கதையைக் கேட்கிறேன் என்றேன்.‌ அப்போது அவர் யோசித்து எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம். ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக் கதையை சொல்கிறேன் என்றார்.


'ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை.._ என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விசயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது. 


 ஃபஹத் பாசில்  ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'கும்பளாங்கி நைட்ஸ்', 'ஜோஷி',  'ட்ரான்ஸ்', என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் எப்படி, இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர் தொடர்ந்து டார்க் ஷேடுள்ள கேரக்டர்களில் நடிக்கிறார் என வியப்பாகவே இருக்கும். இந்த படத்திலும் அவர் நடித்திருப்பது சிறப்பு. 


மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தின் ராஸ்கல் அவர்தான். சூரி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பிரதியை டப்பிங் இல்லாமல்... இசை இல்லாமல்... பார்க்கும் போது நான் அழுதேன். சிரித்தேன். அந்த அளவிற்கு என்னை இந்தப் படம் கவர்ந்தது. அந்த அளவிற்கு அந்த சூரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி. 


படத்தில் சூரி கதாபாத்திரத்தை ஓட ஓட விரட்டுவது திவ்யா. அந்த கதாபாத்திரத்தில் சாரா நடித்திருக்கிறார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். திரையில் சூரி என் பெஸ்ட் பிரண்ட் என்று சொன்னாலும்.. படப்பிடிப்பு தளங்களில் இருவரும் நடிக்கும்போது எதிரிகளாகவே இருந்திருப்பார்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று போட்டி இருந்திருக்கும். இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும்... ஒவ்வொரு உரையாடலுக்கும்... ஒவ்வொரு சிறு சிறு நடிப்பிற்கும்.... சூரிக்கு, திவ்யா சரியான போட்டியாளராக இருப்பார். இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். 


எடிட்டர் பிரவீன் சொன்னது போல் இந்த திரைப்படம் பேத்தி முதல் பாட்டி வரை குடும்பத்தில் உள்ள அனைவருக்குமானது. அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் வருகை தந்து.. இந்தத் திரைப்படம் தரும் மேஜிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் அனுபவியுங்கள்.


இந்தப் படத்தின் தெலுங்கு முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும், தமிழில் பின்னணி குரல் கொடுத்த 'உலகநாயகன்' கமல்ஹாசனுக்கும், மலையாள மொழியில் பின்னணி குரல் கொடுத்த நடிகர் மோகன்லாலுக்கும் நன்றி,'' என்றார். 


தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பேசுகையில், 


'' இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என பகத் பாஸில் இரண்டு நாள் முன்னதாக அழைப்பு விடுத்தார்.  அவர் நடிக்கும் திரைப்படத்தை நிறைவு செய்து இருக்கிறேன். இயக்குநர் ராஜமவுலி சொன்னதை போல் நான் அந்தப் படத்தை பற்றி பேசினால் அதுதான் செய்தியாகும். அதனால் அதைப் பற்றி தற்போது பேச மாட்டேன்.‌ இந்த படத்தின் டிரைலரை ஃபஹத் பாசில் எனக்கு காண்பித்தார். பார்த்துவிட்டு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினேன். இந்தத் திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும்,'' என்றார்.


நடிகர்  ஃபஹத் பாசில் பேசுகையில், 


'' இந்தக் கதையை கேட்ட தருணத்திலிருந்து எனக்குள் இரண்டு விசயங்கள் மட்டும் தான் எப்போதும் நினைவில் இருக்கிறது. அதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். 


தயாரிப்பாளர் கார்த்திகேயா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதில் 'இரண்டு கதைகளை மட்டும் அனுப்பி இருக்கிறேன்.‌ இந்த இரண்டில் எந்தக் கதையை நீங்கள் தேர்வு செய்தாலும் எங்களுக்கு ஓகே' என குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவரை சந்தித்தேன். இரண்டு கதைகளையும் கேட்டேன். இரண்டு கதைகளும் பிடித்திருந்தது. இரண்டு கதைகளிலும் நடிக்கிறேன் என்றேன். அப்போதுதான் அவர், 'நான் தான் தயாரிக்கிறேன்' என்றார். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு ஒரு விசயம் சொன்னார். 'இந்த படத்தை ராஜமௌலி தான் வழங்குகிறார்' என்றார். அப்படி சொன்னவுடன் என்னை விட வேறு சிறந்த நடிகர்களை வைத்து தயாரிக்கலாமே..! என சொன்னேன்.


இதுவரை எனக்கு தெலுங்கில் நல்லதொரு ஓபனிங் இருந்ததில்லை என நினைக்கிறேன். இந்தப் படம் அதனை மாற்றும் என்று நம்புகிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கும் ராஜமௌலிக்கும் நன்றி. 


தயாரிப்பாளர் கார்த்திகேயா இப்படத்தின் நிகழ்விற்கு சூர்யா வருகை தருகிறார் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகமாகியது .ஏனென்றால் அவர் எனக்கு சகோதரர். அவர் இன்று இங்கு வருகை தந்ததற்கும், வாழ்த்துவதற்கும் நன்றி.


நான் இதுவரை இப்படி ஒரு கதையை கேட்டதும் இல்லை, இப்படி ஒரு படத்தை பார்த்ததும் இல்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நான் நடித்ததில்லை. இது மிகவும் புதிது. அதனால் தான் இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தேன். நாங்கள் இந்தப் படத்திற்காக 100, 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இப்படத்தினை அண்மையில் பார்த்தபோது வியந்தேன்.  படத்தில் பணியாற்றிய இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி, ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ்,  தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தீப், மோகன், இசையமைப்பாளர் காலா பைரவா, படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி ஆகிய அனைவருக்கும் நன்றி. 


தயாரிப்பாளர் எஸ் எஸ் கார்த்திகேயாவிற்கு நன்றி. ஹைதராபாத்தில் ஒரு அரங்கத்தில் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். அடுத்த அரங்கத்தில் 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இரண்டிற்கும் அவர்தான் தயாரிப்பாளர். ஆனால் அவர் எப்போதும் எங்கள் படக் குழுவுடன் தான் இருப்பார். அதற்காக அவருக்கு நன்றி. 


என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திய குழந்தை என்றால் அது சாரா தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் என்னிடம் இப்படி பேசலாமே..! என என்னுடைய வசனத்தையும் அவள் சொல்லிக் காட்டுவாள். என்னுடன் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் யாருமில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அற்புதமான சக நடிகை தான் சாரா. நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தில் அற்புதமான மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறோம். நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தை அனைவரும் அக்டோபர் 2ம் தேதி திரையரங்கில் காண வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். மிகவும் சிறப்பான படம்.‌ இந்தப் படத்தை நீங்கள் குடும்பத்தினருடனும்... நண்பர்களுடனும்... விருப்பத்திற்குரியவர்களுடனும்.... பார்க்கலாம். இந்தப் படம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், அந்த அளவிற்கு அழகான அற்புதமான படம்'' என்றார். 


நடிகர் சூர்யா பேசுகையில்,


''இந்த மாலைப்பொழுதில் 'டோன்ட் டிரபுள் தி டிரபுள்' படக் குழுவினருடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 


விருந்தோம்பல் என்றொரு வார்த்தை இருக்கிறது. விருந்தோம்பலை இங்கு நாம் தான் சிறப்பாக போற்றுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆந்திராவிலும் , தெலுங்கானாவிலும் நம்மை விட மிக சிறப்பாக விருந்தோம்பலை மேற்கொள்கிறார்கள். அவர்களைப் போல் நம்மால் விருந்தோம்பலை கடைபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு நம் மீது அவர்கள் நிபந்தனையற்ற அன்பை செலுத்துவார்கள்.


சினிமா என்பது என்னைப் பொறுத்தவரை நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும். நாம் பிறந்ததிலிருந்து சினிமாவை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். எனக்கு தற்போது ஐம்பது வயதாகி விட்டது. ஒவ்வொரு சினிமாவும் புதுப்புது படங்கள்... புதுப்புது முயற்சிகள்... என நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதைப்போலத்தான், நான் இந்தத் திரைப்படத்தையும் பார்க்கிறேன். யாரும் எதிர்பார்க்காத ஒரு காம்பினேஷன்.  ஃபஹத் பாசில் - ராஜமௌலி - கார்த்திகேயா-  கூட்டணியில் இப்படி ஒரு திரைப்படம் உருவாகும் என நாம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இப்படி ஒரு ட்ரெய்லர். அதில் இப்படி ஒரு கதை. ஒருவர் ஒரு பேயை கடத்தி விட முடியுமா ?, என கற்பனை செய்ய முடியாத ஒரு விசயம் தான் கதை. கடத்திவிட்டால் என்ன ஆகும் ?, என்பதை யாராலும் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான், நான் இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 


பகத் என்னை அண்ணன் என்று அழைத்து விட்டார். சந்தோஷம். நாங்கள் இருவரும் நிறைய பேசியிருக்கிறோம். காலை, மாலை, மதியம், இரவு, நடு இரவு என பல தருணங்களில் பேசியிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையே ஏராளமான பசுமையான நினைவுகள் இருக்கிறது.


எங்கள் இருவருக்கும் இடையே தொடக்கக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை பற்றி பேசி இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒற்றுமைகளைப் பற்றி பேசியிருக்கிறோம். தற்போது உள்ள நிலைக்காக நாங்கள் எளிதாக வந்துவிடவில்லை. முட்டி உடைந்து.. கால் உடைந்து.. எழுந்து நின்று... அதன் பிறகு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் இருவரும் மனதார விவாதித்து இருக்கிறோம். அதற்காக அவருக்கு நன்றி. 


நாம் அனைவரும் ஒரு கணக்கு போடுவோம். இந்த மாதிரி படம் எடுத்தால்... இவர்களுக்குப் பிடிக்கும், ஆனால் இவர்களுக்குப் பிடிக்காது. இந்த மாதிரி படம் எடுத்தால்... மற்றவர்களுக்கு எல்லாம் பிடிக்கும். ஆனால் குறிப்பிட்டவர்களுக்கு பிடிக்காதே..! என ஒரு கணக்கு வாத்தியார் போல் நிறைய கணக்குகளை போடுவோம். நடிகர்கள் எல்லாரும் ஒரு இமேஜுக்குள் சிக்கிக் கொண்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஃபஹத் பாசிலிடம் இல்லை. நான் இன்னும் இந்த கணக்குகளை தப்பு தப்பாகத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன். இவரைப் போல் என்னால் இருக்க முடியவில்லை. அவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். கதை நன்றாக இருக்கிறதா..? அதில் தன்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா..? என்பதை மட்டுமே பார்க்கிறார். இந்த ‘கன்டன்ட்’டை ரசிகர்களுக்கு நம்மால் கரெக்டாக கொடுத்து விட முடியுமா..? என்று சிந்திக்கும் நபர்தான் பகத் பாசில். அதனால் தான் அவரால் இதுபோன்று கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடிகிறது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. 


அவருடைய கதாபாத்திரத்திற்கு அனைத்து மொழிகளிலும் அவரே பின்னணியும் பேசி இருக்கிறார். நாமெல்லாம் ஒரு கேரக்டராக இருக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் பகத் அந்த கேரக்டராகவே இருப்பார் 


எந்த ஒரு படத்திலும் ஒரு குழந்தை இருந்தால்.. அவர்கள் அந்த உலகத்தை உண்மையானதாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரம் சாரா இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை அனைவரும் ரசிக்கிறார்கள். 


எங்களைப் போன்று இந்த வசனத்தை இப்படி உச்சரிக்கலாமா...! அப்படி உச்சரிக்கலாமா..! என குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்தப் படத்தில் உன்னுடைய வசனம் அழகாக இயல்பாக இருக்கிறது.  ஒரு இயக்குநருக்கு இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற கற்பனை இருக்கலாம். அதில் ஒரு குழந்தை நட்சத்திரம் நடிக்கிறார் என்றால்... அவர்களை கையாளுவதற்கு இயக்குநருக்கு ஒரு குழந்தைக்கான மனம் வேண்டும்.


நான் என்னுடைய சின்ன வயதில் பார்த்த படங்கள் எல்லாம் இன்றும் பசுமையாக மனதில் இருக்கிறது. இப்போது நாம் ஆறு வயதிற்கு மேற்பட்ட... எட்டு வயதிற்கு மேற்பட்ட... குழந்தைகளுக்கான படங்களை வழங்குவதில்லை. இதற்கெல்லாம் தற்போது நெட்பிளிக்ஸ், அமேசான், வால்ட் டிஸ்னி ஆகியோர் உருவாக்கும் குழந்தைகளுக்கான படங்களை காண்பிக்கிறோம்.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தைகளும் பார்க்கக்கூடிய படங்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் பெரியவர்களுக்கான குழந்தைகள் படம்.‌ இதில் எல்லா வகையான எமோஷன்களும் இருக்கிறது. 


திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி 25வது ஆண்டை நிறைவு செய்திருக்கும் ராஜமௌலிக்கு நன்றி.‌ நான் திரைத்துறையில் அறிமுகமாகி 28, 29 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு உங்கள் படத்தில் ஒரு நாள்.. ஒரு நிமிடம்.. வருவதைப் போன்ற ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினால் நன்றி. 


ஆனால் நீங்கள் எப்போதும் புது திறமைசாலிகளுக்கும்... புதிய கண்டெண்டுகளுக்கும்... ஆதரவு அளிப்பதற்காக நன்றி. அதில் உங்களுடைய முத்திரையை இடம்பெறச் செய்ததற்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை புதிதாக இருக்கிறது என்று நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மிகப்பெரிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.


இந்தியன் சினிமாவை உங்களுடைய பெயர் மூலம் உலகத்திற்கு வழங்கியதற்கு நன்றி. இதனால் இங்குள்ள அனைவருக்கும் அடையாளம் கிடைத்திருக்கிறது. உங்களுடைய படங்களை இந்திய படங்கள் என்று பார்க்க வைப்பதற்காக நன்றி. 


நான் ஒரு கதை சொல்கிறேன். உங்களை அமர்ந்து படம் பார்க்க வைப்பேன். உங்களுடைய நேரத்தை வீணடிக்க மாட்டேன்.. என ஒவ்வொரு ரசிகர்களையும் திரைப்படத்தை பார்க்க வைக்கின்ற உங்களுடைய திறமைக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. அதனை இந்த திரைப்படத்திலும் ரசிகர்களால் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.‌ இதன் காரணத்தினாலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது 


வழக்கமான படங்கள் வெளியாகும் தருணத்தில் ஒரு வித்தியாசமான கன்டென்ட் ஜெயிக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். அதனால் இதிலும் திரை துறையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் அதேபோல் ஒரு தயாரிப்பாளர்களாக.. இந்த திரைப்படத்தை இவ்வளவுதான் விற்பனை செய்ய முடியும் என்ற அளவுகோல் உண்டு .அதனால் அதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அதேபோல் நடிகர்களுக்கும் இந்த வட்டத்திற்குள் தான் நடிக்க முடியும் என்ற ஒரு எல்லை உண்டு. அந்த வசதியான ஒரு வட்டத்தை உடைத்திருக்கிறீர்கள். அந்த வகையிலும் நீங்கள் நடிகர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.‌


எனவே எல்லா வயதினரும் குடும்பத்தினருடன் அக்டோபர் 2ம் தேதி 'டோன்ட் டிரபுள் தி டிரபுள்' படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

 

அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டி, சினேகா ரெட்டி தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தொழில்முனைவோர், தாய், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வம் கொண்டவர், டிஜிட்டல் பிரபலம் என பன்முகத்தன்மையுடன் செயல்பட்டு வரும் அவர், சமூக வலைதளங்களில் 9.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட வலுவான சோஷியல் மீடியா கம்யூனிட்டியை உருவாக்கியுள்ளார்.


அவரது தொழில்முனைவுப் பயணத்தின் முக்கிய அங்கமாக ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ உள்ளது. தனது தொழில்முறை பணிகளுடன், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்திலும் சினேகா அதிக ஆர்வம் உள்ளவர். தனது உடற்பயிற்சி மற்றும்  லைஃப்ஸ்டைல் பற்றிய கிளிம்ப்ஸை அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.


தனது குழந்தைகளுடன் செலவிடும் தருணங்களையும் அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அதேபோல் அவரது பயணங்கள், ஃபேஷன் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான பதிவுகளும் ரசிகர்களுடனான அவரது நெருக்கத்தை மேலும் அதிகரித்துள்ளன. அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அந்தஸ்து அவரை பிரபலமாக்கினாலும் கடந்த சில ஆண்டுகளில் தொழில்முனைவு, குடும்பம், உடற்பயிற்சி, பயணம் என தனக்கு விருப்பமானவைகளில் கவனம் செலுத்தி, சினேகா தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.


இன்று சினேகா ரெட்டி அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளத்தால் மட்டுமல்லாமல், வெற்றிகரமான தொழில்முனைவோர் மற்றும் தனக்கென தனி டிஜிட்டல் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட பிரபல ஆளுமையாகவும் அறியப்படுகிறார்.

 

தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என பல்வேறு காலகட்டங்களில் வெளியான காதல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில், புதிய தலைமுறைக்கான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் தமிழ் திரையரங்க விநியோகத்தினை முன்னணியில் உள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரி கைப்பற்றியுள்ளது. ‘ஹைக்கூ’ படக்குழுவுடன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் இடையில் உள்ள பரஸ்பர நம்பிக்கையையும் இது காட்டுகிறது.   


திரையரங்க விநியோகத்தில் முன்னணி நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வணிக ரீதியாக நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் பெயர் பெற்றது. அந்த வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தை இந்நிறுவனம் விநியோகம் செய்வது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. 


உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில், ‘ஹைக்கூ’ திரைப்படம் காதலின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் ஒரு முழுமையான கதையாக உருவாகியுள்ளது. ‘அலைபாயுதே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடம் ஏற்படுத்திய உணர்வுப்பூர்வமான தாக்கத்தை நினைவூட்டும் வகையிலும் சமகாலத்து காதலை பேசும் திரைப்படமாகவும் இது இருக்கும்.


இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். ஏகன், ஸ்ரீதேவி மற்றும் பெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் மற்றும் மேத்யூ இப்படத்தைத் தயாரித்துள்ளனர். நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது. 


அக்டோபர் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு சகோதரன் அமைப்புடன் இணைந்து செயல்படும் மூன்றாம் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை, அடையாளம் மற்றும் அவர்களின் உணர்வுப் போராட்டங்களை மக்கள் கூடுதல் புரிதலுடனும், உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் பார்க்கும் வகையில் இந்தத் திரைப்படம் முக்கியமான முயற்சியாக அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


மூன்றாம் பாலினத்தவர்களின் கதாபாத்திரங்களை வழக்கமான கோணத்தில் சித்தரிப்பதைத் தாண்டி, சமூகத்தால் பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் பல்வேறு உண்மைகளை ‘டோரதி’ திரைப்படம் பேசுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் பலர் தங்களது பாலின அடையாளத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாமல், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினரால் நிராகரிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். இதன் காரணமாக, தங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட பாலின அடையாள உணர்வு இருந்தாலும், வெளிப்படையாக ஆண்களாகவே வாழ வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்படுகிறது என்றும் தெரிவித்தனர். இத்தகைய வேதனையான யதார்த்தத்தை ‘டோரதி’ திரைப்படம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுடன், இதுபோன்ற அனுபவங்களுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுப் போராட்டத்தைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது என்று அவர்கள் கூறினர்.


பல்வேறு சமூகச் சூழல்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளையும் ’டோரதி’ திரைப்படம் பதிவு செய்திருப்பதை அமைப்பினர் பாராட்டினர். மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்பு என்பது பலரின் வாழ்க்கையில் இருக்கும் யதார்த்தம் என்றும், அவர்களின் சமூக மற்றும் வாழ்வியல் பின்னணிக்கு ஏற்ப இந்தப் பாகுபாடுகள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சில கிராமப்புறங்களில் இதுபோன்ற சூழல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டனர். மூன்றாம் பாலினத்தவர்கள் வாழ்க்கை அனுபவத்தை ஒரே மாதிரியான பிம்பமாக சுருக்கிவிடாமல், யதார்த்தத்தை ‘டோரதி’ திரைப்படம் உரையாடலுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


திரைப்படத்தில் குழந்தைப் பருவம் தொடர்பான காட்சிகளும் முக்கியமானதாக இருப்பதாக அமைப்பினர் குறிப்பிட்டனர். தங்களது உண்மையான அடையாளத்தை தங்களது நெருங்கிய ஆண் நண்பர்களிடம் கூட வெளிப்படுத்த அஞ்சியபடியே மூன்றாம் பாலினத்தவர்கள் வளர்கின்றனர். கேலி, நிராகரிப்பு அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவோம் என்ற அச்சம், சிறு வயதிலிருந்தே தங்களது உணர்வுகளை அடக்கிக்கொள்ளும் நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது என்று அவர்கள் விளக்கினர். இந்த உள்மனப் போராட்டத்தை ‘டோரதி’ திரைப்படம் திரையில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதன் மூலம் பார்வையாளர்கள் அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


மூன்றாம் பாலினத்தவர்களின் காதல் மற்றும் உறவுகளை திரைப்படம் சித்தரித்துள்ள விதத்தையும் வரவேற்று அமைப்பினர் பகிர்ந்து கொண்டதாவது, “நாங்களும் மனிதர்கள்தான். மற்ற அனைவரையும் போல எங்களுக்கும் உணர்வுகள், கனவுகள், ஆசைகள் உள்ளன. எங்களுக்கும் காதல், துணை மற்றும் திருமணம் தேவை. மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் மற்றவர்களைப் போலவே மனித உணர்வுகளும், உறவுகளை உருவாக்கி நிறைவான வாழ்க்கையை வாழும் உரிமையும் உள்ளது என்பதை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களை தங்களது பாலின அடையாளத்தின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்படாமல், காதல் மற்றும் துணை வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை கொண்டவர்கள் என்பதைப் பற்றிய முக்கியமான உரையாடலை இந்தத் திரைப்படம் தொடங்க உதவுகிறது” என்றனர்.


மேலும், “பல தலைமுறைகளாக மூன்றாம் பாலினத்தவர்கள் சினிமாவில் வெவ்வேறு விதங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ‘டோரதி’ திரைப்படம் அந்த வழக்கமான சித்தரிப்பைத் தாண்டி, அவர்களின் உணர்வுகள், அச்சங்கள், உறவுகள் மற்றும் சமூக யதார்த்தங்களை நெருக்கமாகப் பேச முயற்சிக்கிறது. இதை நாங்கள் பாராட்டுகிறோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


திரைப்படம் குறித்து சமூகவலைதளங்களில் வரும் கருத்துகளை வைத்து முன்முடிவுக்கு வராமல், திரையரங்குகளில் முழுத் திரைப்படத்தையும் பார்த்த பிறகே பார்வையாளர்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றும் சகோதரன் அமைப்பினர் வேண்டுகோள் வைத்தனர்.


திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கும் அமைப்பினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். “எங்களது வாழ்க்கையையும் உணர்வுகளையும் பேசும் ஒரு திரைப்படத்திற்கு இசைஞானி இசையமைத்திருப்பது எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம். இதை பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறோம். இத்தகைய உணர்வுப்பூர்வமான விஷயங்களையும் யதார்த்தங்களையும் திரையில் கொண்டு வந்த இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.


மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த வழக்கமான பிம்பங்களைக் கடந்து, அவர்களின் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு, சமூகத்தில் அவர்களுக்கான இடத்தை உணர்வுப்பூர்வமாக அணுகுவதற்கு ‘டோரதி’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு கதவுகளை திறக்கும் என்ற நம்பிக்கையையும் சகோதரன் அமைப்பினர் தெரிவித்தனர்.


Pageviews