உலகளவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களில் தாங்களும் ஒருவர் என்பதை ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தின் வெளியீட்டின் மூலம் இந்திய மார்வெல் ரசிகர்கள்  மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். ரூஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தின் மறு வெளியீடாக உருவாகியுள்ள  ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படத்தை மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்க ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டுள்ளனர்.


பாக்ஸ் ஆபிஸ் மோஜோ தரவுகளின்படி, மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம்  வெளியான முதல் வார இறுதியில் சுமார் 86 மில்லியன் அமெரிக்க டாலர் உலகளவில் வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ள இப்படம், திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்ட திரைப்படங்களின் உலகளாவிய தொடக்க வசூலில் இரண்டாவது அதிகபட்ச சாதனையைப் பதிவு செய்துள்ளது. இதில் வட அமெரிக்காவில் 26 மில்லியன் அமெரிக்க டாலரும், சர்வதேச சந்தைகளில் 60 மில்லியன் அமெரிக்க டாலரும் வசூலாகியுள்ளன.


‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்திற்கு உலகளவில் அதிக பங்களிப்பு செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் வார இறுதியில் இந்தியாவில் சுமார் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ.25 கோடி) வசூலாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா (26 மில்லியன் அமெரிக்க டாலர்), சீனா (13.5 மில்லியன் அமெரிக்க டாலர்), இங்கிலாந்து (5.4 மில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் மெக்சிகோ (4.3 மில்லியன் அமெரிக்க டாலர்) ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.


மும்பை மற்றும் டெல்லி முதல் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை வரை, ரசிகர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ‘அவெஞ்சர்ஸ் தருணங்களை மீண்டும் பெரிய திரையில் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். குறிப்பாக கேப்டன் அமெரிக்காவின் புகழ்பெற்ற ’அவெஞ்சர்ஸ், அசெம்பிள்’ தருணம் முதல் அயர்ன் மேனின் உணர்வுப்பூர்வமான இறுதி தியாகம் வரை, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் கொண்டாடி வருகின்றனர்.


மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இப்படம் ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் அறிமுகப்படுத்தியுள்ள இன்ஃபினிட்டி விஷன் எனப்படும் புதிய பிரீமியம் லார்ஜ் ஃபார்மெட்(PLF) திரை அனுபவத்திலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் இந்த பிரம்மாண்டமான சாகசத்தை மேலும் பிரமாண்டமான திரை அனுபவத்துடன் கண்டு ரசிக்கலாம்.


‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தின் இந்த சிறப்பு திரையிடலில், இந்த வருடம் டிசம்பர் 18 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்துடன் தொடர்புடைய கூடுதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

 

நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்களிடையே நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இத்திரைப்படம் பேசியிருக்கும் விஷயங்களும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பெயரும் இன்று அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது. 


ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்கள் மூலம் படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகை தருவதுடன், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. படத்தின் முக்கியமான காட்சிகளின்போது ரசிகர்களின் ஆரவாரமும் கைத்தட்டல்களும் திரையரங்குகளை அதிரச் செய்கின்றன.


திரையரங்குகளில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த அம்சங்களில் படத்தின் இசையும் ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸில் ஒலிக்கும் ‘முத்துமணி’ பாடல் ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டியுள்ளது. படம் நிறைவடைந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டும் நிகழ்வுகளும் பல இடங்களில் பதிவாகியுள்ளன. ரசிகர்களின் இந்த வரவேற்பு, ‘டோரதி’ திரைப்படத்தை கொண்டாட்டமாக மாற்றியுள்ளது. தங்களுக்குப் பிடித்த காட்சிகள் குறித்து ரசிகர்கள் விவாதிப்பதுடன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமும் படத்தைப் பார்க்கப் பரிந்துரைத்து வருகின்றனர். இது படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. 


டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படத்திற்குக் கிடைத்த எழுந்து நின்று கிடைத்த பாராட்டு முதல், தற்போது இந்தியத் திரையரங்குகளில் கிடைத்து வரும் வரவேற்பு வரை, ரசிகர்களின் ஆதரவுடன் ‘டோரதி’ தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. மேலும், இந்தியத் திரையுலகின் பல பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.


‘டோரதி’ திரைப்படம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தலைசிறந்த படைப்பு என நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். துணிச்சலான, மனதைத் தொடும், யதார்த்தமான மற்றும் தீவிரமான படைப்பு என்று குறிப்பிட்ட அவர், நடிகர்களின் நடிப்பையும் இளையராஜாவின் பின்னணி இசையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். 


இயக்குநர் மணிரத்னம், கார்த்திக் சுப்பராஜை ‘ஸ்பெஷல் டேலண்ட்’ என்றும், ‘டோரதி’ திரைப்படத்தை மிகவும் சிறப்பான திரைப்படம் என்றும் பாராட்டியுள்ளார். படத்தின் காட்சிமொழியும், கார்த்திக் சுப்புராஜின் பார்வையும் இளையராஜாவின் இசையும் இணைந்துள்ள விதத்தையும் அவர் பாராட்டியுள்ளார்.


படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜாவும், ‘டோரதி’ ஒரு அழகான திரைப்படம் என்று பாராட்டியுள்ளார். 


நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களையும் அவர்களின் திறமையான நடிப்பையும் ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ‘டோரதி’ படத்தின் கதையையும் அதன் தேவையையும் புரிந்து கொண்ட ரசிகர்கள் மற்றவர்களையும் இந்தப் படம் பார்க்க பரிந்துரைக்கின்றனர். குடும்பம் குடும்பமாகத் திரையரங்குகளுக்கு வருவது, முக்கியமான காட்சிகளின்போது ஆரவாரம் செய்வது, ‘முத்துமணி’ பாடல் ஒலிக்கும்போது உற்சாகத்தில் திளைப்பது, படம் முடிந்ததும் எழுந்து நின்று பாராட்டுவது என ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது படமாக ‘டோரதி’ உருவாகியுள்ளது. மேலும், இசைஞானி இளையராஜாவுடன் அவர் இணைந்துள்ளதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கும் வரவேற்புக்கும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


டொராண்டோ முதல் இந்தியாவின் பல்வேறு திரையரங்குகள் வரை, ‘டோரதி’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறது. பாராட்டு, உணர்வுப்பூர்வமான தருணங்கள், இசை, ரசிகர்களிடையே பரவும் நேர்மறையான விமர்சனங்கள் என அனைத்தும் இணைந்து இப்படத்தின் வெற்றிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. ரசிகர்கள் ஒன்றிணைந்து எழுப்பும் ஆரவாரமும் கைத்தட்டல்களும் இந்த வரவேற்பின் அடையாளமாக மாறியுள்ளன.

 

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ராமாயணா’ படக்குழு ராமராக ரன்பீரின் சிறப்பு BTS காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்திய புராணங்களில் மிகவும் போற்றப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றான ராமர் கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட தயாரிப்பையும், தன்னை அந்தக் கதாபாத்திரமாக மாற்றிக்கொண்ட விதத்தையும் பார்வையாளர்கள் நெருக்கமாகக் காணும் வாய்ப்பை இந்த BTS வழங்குகிறது.


இந்த BTS வீடியோவில், ‘ராமாயணா’ போன்ற திரைப்படத்திற்கு சரியான நடிகரைத் தேர்வு செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை இயக்குநர் நிதேஷ் திவாரி பேசுகிறார். இந்த இதிகாசத்தின் மீது கோடிக்கணக்கான மக்களுக்கு ஆழமான நம்பிக்கையும் உணர்வுப்பூர்வமான தொடர்பும் இருப்பதால், கதாபாத்திரத்திற்கான நடிகரைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார். ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரன்பீர், ராமருக்கு உரிய மரியாதையுடன், தான் ஏற்றிருக்கும் இந்தப் பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வுடன் நடித்ததாகவும் அவர் பகிர்ந்து கொள்கிறார்.


இந்த BTS காட்சியில், தசரதராக நடிக்கும் அருண் கோவில், சீதையாக நடிக்கும் சாய் பல்லவி மற்றும் லட்சுமணராக நடிக்கும் ரவி துபே ஆகியோரும் இடம்பெறுகின்றனர். ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திற்கு எப்படி தயாரானார், அவர் எவ்வளவு பொருத்தமானவர் என அவர்கள் பேசுகின்றனர். நடிகர்களின் தோற்ற மாற்றங்கள் முதல் முக்கியமான காட்சிகளின் படப்பிடிப்பு வரை, திரைப்படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான தயாரிப்புகளையும் இந்த BTS காட்சி காட்டுகிறது. இதன் மூலம், இந்த பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படம் எவ்வாறு உருவாகியது என்பதையும் இதில் ரசிகர்கள் பார்க்கலாம். 


மேலும், உலகளவில்  ‘ராமாயணா’வை கொண்டு செல்லும் முயற்சியில் கிழக்கின் சிறந்த திறமைகளையும் மேற்குலகின் சிறந்த திறமைகளையும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஒன்றிணைத்திருப்பதையும் இந்த BTS காட்சி காட்டுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆக்ஷன் இயக்குநர் டெர்ரி நோட்டரி உள்ளிட்ட பல்வேறு திறமையாளர்கள் படக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். 


இரண்டு பாகங்களாக வெளியாகும் ‘ராமாயணா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு புதிய காட்சியும் வெளியாகும் போதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான டிரெய்லருக்கும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 


உலகின் மிகவும் போற்றப்படும் இதிகாசங்களில் ஒன்றை வெள்ளித்திரைக்கு கொண்டு வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக ராக்கிங் ஸ்டார் யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணராக ரவி துபே ஆகியோர் நடிக்கின்றனர்.


நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், 8 முறை ஆஸ்கர் விருது பெற்ற DNEG மற்றும் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ‘ராமாயணா’ இரண்டு பாகங்களாக வெளியாகிறது. இந்தியாவைத் தவிர உலகளவில் இப்படத்தை சோனி பிக்சர்ஸ் விநியோகிக்கிறது. இந்தி பேசும் சந்தைக்கான விநியோகப் பணிகளை தர்மா புரொடக்சன்ஸ் மேற்கொள்கிறது. இப்படம் உலகளவில் ஐமேக்ஸ் வடிவில் வெளியாகிறது. முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியிலும் வெளியாகும். இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும்.

 

தமிழ் திரைப்பட இசை கலைஞரர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்து மாயாபஜார் ஹப்  என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான  ஒப்பந்தத்தை செய்துள்ளனர். 


மாயா பஜார் நிறுவனம் தனது பல ஆண்டுகால அனுபவத்தை முன்னிறுத்தி சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான  இடத்தில்  மாபெரும்  வணிக வளாகம் அமைத்து, அதில்   திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க முடிவெடுத்தனர்.


இந்த பத்து மாடி கட்டிடத்தை கட்ட திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம்  சார்பில் மாபெரும் இசை நிகழ்ச்சிகள் சென்னை ஹைதராபாத் குஜராத் சிங்கப்பூர் மற்றும் துபாய் நகரங்களில் நடத்தி, அதில் வரும் வருமானத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இந்தத் திட்டத்திற்கு அனைத்து தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களும் ஒன்றிணைந்து தங்கள் சங்கத்திற்காக இலவசமாக இந்நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தி தர முன்வந்துள்ளனர்.


இம்மாபெரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. அதற்காக தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களிடம் அனுமதி பெற திரை இசை சங்கத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த மாபெரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடக்க தமிழ்த்திரை இசை சங்கம் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் வாயிலாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. 


இதை பத்திரிகை நண்பர்கள் தமிழக அரசிடம் கொண்டு சேர்க்குமாறு திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 


நன்றி

 

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை 'லப்பர் பந்து' மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர் – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.

“பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற சுவாரஸ்யமான அறிவிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கும் இப்படத்தில், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். மேலும் விஜய் பி. குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் இளம் திறமைகள் இணைந்துள்ள இந்தக் கூட்டணி, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது.

மதுரையில் இன்று நடைபெற்ற பூஜை நிகழ்வுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மதுரையைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் கதைக்களமும் காட்சியுலகமும் படமாக்கப்படவுள்ளது. 


இப்படத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார. தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘ஓம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் – சாய் அபயங்கர் இணையும் இரண்டாவது திரைப்படம் இது. இந்தக் கூட்டணியின் இசை மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் மற்றும் ப்ரிமார்க் புரொடக்ஷன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. நாக வம்சி, சாய் சௌஜன்யா மற்றும் எஸ். ஹரிதா லிங்கசாமி ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.


தனுஷ் நடிப்பில் தமிழில் வாத்தி மற்றும் தெலுங்கில் சார் என்ற படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் - சாய் சௌஜன்யா நிறுவனம் தயாரித்து பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.


சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் 

சமீபத்தில் வெளியான ‘D56’ படத்தின் அறிவிப்பு போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. ஏராளமான மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பாரம்பரிய கதவு, அதன் முன் இடம்பெற்றுள்ள தனுஷின் கதாபாத்திர வடிவமைப்பு என, போஸ்டர் படத்தின் கதைக்களம் மற்றும் உலகம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக, “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற வாசகமும், போஸ்டரின் தனித்துவமான வடிவமைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா என வலுவான நட்சத்திரக் கூட்டணி, தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகும் ‘D56’, ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் முதல் கட்டப் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில், ‘D56’ திரைப்படத்தின் உலகிற்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்ல படக்குழு தயாராகி வருகிறது. படத்தின் மீதமுள்ள துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. ‘D56’ திரைப்படம் 2027-ம் ஆண்டு கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும்.

 

இதில் எம்.ஜி.ஆர் ஆக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவர் தேசிய தலைவர் என்ற படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர் 


எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியவர்கள், குடும்பத்தினர், அரசியல் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், சக நடிகர்–நடிகைகள் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் அனுபவங்களுடன் உருவாகிறது


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, அவரது பெயரிலேயே “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.” என்ற தலைப்பில் முதன்முறையாக திரைப்படமாக உருவாகிறது.


நாடக மேடையில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகனாக உயர்ந்து, தனது நடிப்பாலும் மனிதநேயத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் எம்.ஜி.ஆர்.


அரசியல் களத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து பயணித்த அவர், பின்னர் 17.10.1972 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) என்ற பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கி, தேர்தல் அரசியலில் களம் கண்டார். தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.


திரைப்படம், அரசியல், மக்கள் சேவை என பல்வேறு தளங்களில் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை இன்றும் தலைமுறைகளைத் தாண்டி பேசப்படும் ஒன்றாக உள்ளது.


இந்த திரைப்படம் வெறும் வாழ்க்கை வரலாற்றை மட்டும் பதிவு செய்யாமல், எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி, அவருடன் பயணித்தவர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், அவரது ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள், சக நடிகர்–நடிகைகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோரின் நேரடி அனுபவங்களையும் நினைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.


எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை, திரைப்பயணம், அரசியல் வளர்ச்சி, மக்கள் தொடர்பு, மனிதநேயம் மற்றும் முதலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்கள் திரைப்படத்தில் இடம்பெற உள்ளன.


எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய அக்டோபர் 17-ம் தேதி, அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தில், முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட முக்கிய திரைப்படக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


மக்களின் மனதில் என்றும் வாழும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும் வரலாறும் திரையில் புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும் வகையில் இப்படம் உருவாகிறது.

 

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) இன்று சென்னை, வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது.


ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தமிழ் திரையுலகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், சங்கத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் குறித்து விவாதித்து, உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம். இவ்வாண்டு கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் திரையுலகின் முக்கிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதுடன், தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.


தமிழ்நாடு அரசிடம் TFAPA கோரிக்கைகள் அடங்கிய மனு:


தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு, பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசின் ஆதரவையும் தலையீட்டையும் கோரி, TFAPA சார்பில் மாண்புமிகு அமைச்சரிடம் விரிவான கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்கள் விரிவாகப் பார்வையிட்டதுடன், ஒவ்வொரு கோரிக்கை குறித்தும், அவற்றை நிறைவேற்ற அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.


TFAPA முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்: 


1. 4% உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை நீக்குதல். தற்போது தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த வரியை நீக்க வேண்டும்.

2. தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை ஆண்டுதோறும் வழங்குதல், நிலுவையில் உள்ள ஆண்டுகளுக்கான விருதுகளையும் வழங்கி முடித்தல்.

3. சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கான நிலுவையில் உள்ள 11 ஆண்டுகளுக்கான மானியங்களை வழங்குதல், மேலும் மானியத் திட்டத்தை ஆண்டுதோறும் தொடர்ந்து செயல்படுத்துவதுடன், தற்போதுள்ள ₹7 லட்சம் மானியத்தை ₹10 லட்சமாக உயர்த்துதல்.

4. தமிழ்நாடு முழுவதும் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு ஒற்றைச் சாளர (Single Window) அனுமதி முறையை அமல்படுத்துதல், குறிப்பாக மாநகர சாலைகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியையும் எளிதாக்குதல்.

5. Movie Ticket Tracking System-ஐ செயல்படுத்துதல். ஒவ்வொரு காட்சிக்கும் திரையரங்க வசூல் விவரங்களை தயாரிப்பாளர்கள் ஆன்லைனில் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் இம்முறையை செயல்படுத்தி, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், வருவாய் கசிவுகளையும் தடுக்க வேண்டும்.

6. தயாரிப்பாளர் சங்கங்கள் முன்மொழியும் புதிய OTT தளத்திற்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்குதல். சிறு முதலீட்டு தமிழ் திரைப்படங்களுக்கு பிரத்யேகமாக ஒரு OTT தளத்தை உருவாக்கி, அவற்றை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.

7. திரைப்படத் திருட்டை (Piracy) கட்டுப்படுத்தவும், தடுக்கவும், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் தனியான Anti-Piracy அமைப்பை உருவாக்குதல்.

8. டிஜிட்டல் சினிமா ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும் Virtual Print Fee (VPF)-ஐ நீக்குதல். தயாரிப்பாளர்களின் நீண்டகால கோரிக்கையான இதற்கு தமிழ்நாடு அரசின் தலையீட்டை TFAPA கோரியுள்ளது.

9. OTT வெளியீட்டு கால இடைவெளி (OTT Window) பிரச்சினைக்கு தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துதல். தயாரிப்பாளர் சங்கங்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோர் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தி, OTT Window மற்றும் VPF பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வை உருவாக்க வேண்டும்.


சிறப்பான திரைப்படங்களை உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கு கௌரவம்:


TFAPA சார்பில் முதன்முறையாக, அக்டோபர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரை வெளியான குறிப்பிடத்தக்க மற்றும் வெற்றிகரமான தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

திரையுலகிற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில், தயாரிப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. கௌரவிக்கப்பட்ட பல தயாரிப்பாளர்கள் நேரில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

கௌரவிக்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


தயாரிப்பாளர் சமூகத்தின் சிறப்பான பங்கேற்பு:


இந்த ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்களான திருமதி. குஷ்பு சுந்தர், திருமதி. சௌந்தர்யா ரஜினிகாந்த், திரு. விஜய் ஆண்டனி, திரு. கண்ணன் ரவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. G.K.M. தமிழ்குமரன், இணைச் செயலாளர் திருமதி. சுஜாதா விஜயகுமார், TFAPA-வின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தமிழ் திரைப்படத் துறையின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக TFAPA முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க முன்வந்ததற்காக மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்களுக்கு TFAPA தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்காக, தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து கலந்துரையாடி, சீரான தொடர்பின் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதுடன், தமிழ் திரைப்படத் துறையை மேலும் வலுப்படுத்த TFAPA தொடர்ந்து செயல்படும்.

 

சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இந்திய சினிமாவில் புதியதொரு மைல்கல்லை உருவாக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான சஞ்சய் லீலா பன்சாலி படைப்பு, ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இந்த போஸ்டர்கள் அவரது கதாபாத்திரத்தின் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன.


ஒரு போஸ்டரில் சிகரெட் மற்றும் லைட்டருடன், தீவிரமான பார்வையுடன் தோன்றும் விக்கி கௌஷல், மிகவும் கம்பீரமாகவும் வித்தியாசமாகவும் காட்சியளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், நீச்சல் குளத்தில் மலர்க்கொத்துடன் இருக்கும் அவர், முதல் போஸ்டரில் பார்த்த தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக காட்சியளிக்கிறார்.


இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. விக்கி கௌஷல் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரம் குறித்த பல கேள்விகளையும் இந்த போஸ்டர்கள் எழுப்புகின்றன. எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை தொடர்ந்து தன் கதைக்குள் ஈர்க்கும் சஞ்சய் லீலா பன்சாலியின் தனித்துவமான கதை சொல்லும் திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


விக்கி கௌஷலின் இதுவரை பார்த்திராத ஒரு புதிய பரிமாணத்தை இந்த போஸ்டர்கள் வெளிப்படுத்துகின்றன. முதன்முறையாக சஞ்சய் லீலா பன்சாலியின் உலகில் ஒரு கதாநாயகனாக விக்கி கௌஷல் களமிறங்குவது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அபாரமான நடிப்புத் திறன் இந்தப் படத்தில் எவ்வாறு வெளிப்படப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இரு போஸ்டர்களையும் பகிர்ந்து பதிவிட்டுள்ளனர் –


ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களைத் தொடர்ந்து, விக்கி கௌஷலின் இந்த போஸ்டர்களைப் பார்த்த பிறகு, இப்படத்தை வெள்ளித்திரையில் காணும் ஆவல் ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே, இப்படத்தின் உலகத்தைப் பற்றிய முதல் பார்வைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது முன்னணி நட்சத்திரங்களின் அசத்தலான போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் ‘Love & War’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027 ஜனவரி 21 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

Pageviews