சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது.


அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது.


சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.


இந்நிகழ்வினில்


நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது..,


“நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடராக ‘#Love’ உருவாகியுள்ளது. தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்கள், தனித்துவமான குரல்கள் மற்றும் புதிய அணுகுமுறைகளை வழங்க விரும்புகிறோம். அந்த வகையில் ‘#Love’ காதல் கதையை நவீனமான மற்றும் விளையாட்டுத்தனமான பார்வையில் சொல்லும் படைப்பாக அமைந்துள்ளது.


‘#Love’ தொடரில் இரண்டு போட்டியாளர்களான டேட்டிங் ஆப் நிறுவனர்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் காதல் என்பது பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது என நம்புகிறார்; மற்றொருவர் கெமிஸ்ட்ரிதான் முக்கியம் என்கிறார். தங்களது கருத்து சரி என்பதை நிரூபிக்க இருவரும் போட்டியில் இறங்கும் நிலையில், காதல் அவர்களது திட்டங்களையே மாற்றுகிறது. டேட்டிங் ஆப்களை பயன்படுத்தியிருக்கிறோமா இல்லையா என்பதைத் தாண்டி, காதல் குறித்த நம்முடைய எண்ணங்களை சில நேரங்களில் காதலே மாற்றிவிடும் என்பதை இந்தத் தொடர் பேசுகிறது.


இந்தத் தொடரை உருவாக்கிய இயக்குநர் பாலாஜி மோகன், அன்றாட உறவுகளில் இருக்கும் உண்மையான விஷயங்களை தனக்கே உரிய நகைச்சுவையான பார்வையில் சொல்லும் திறமை கொண்டவர். 


ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், ஆரம்பம் முதலே தெளிவான பார்வையுடன் ‘#Love’ தொடரின் உலகத்தை உருவாக்கியுள்ளார். எழுத்தாளர் நிர்மல் வில்லியம்ஸ், இணை எழுத்தாளர்கள் ஷரதா சுப்ரமணியன், ஸ்வேதா சக்ரவர்த்தி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர்கள் சாய் முத்துராமன், சிவா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.


மேத்யூ மற்றும் தாரா கதாபாத்திரங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் கெமிஸ்ட்ரி இந்தத் தொடரின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உலகம் மற்றும் உணர்வை வழங்க வேண்டும் என்பதே நெட்ஃப்ளிக்ஸின் நோக்கம் என்றும், அந்த வகையில் ‘Love’ சமகால இளைஞர்களின் காதல் மற்றும் உறவுகளை பிரதிபலிக்கும் படைப்பாக இருக்கும் அனைவருக்கும் நன்றி, "என்றார்.


ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது,


“இன்று எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான நாள். என்னை நம்பி இந்தக் கதையை வழங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கும், குறிப்பாக மோனிகாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் ‘#Love’ தொடருக்கான வாசிப்பு நிகழ்வு நடைபெற்றபோது அவருடன் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. என்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும், சிறந்த கதை சொல்லியாகவும் உருவாக அவர் அளித்த உத்வேகம் மறக்க முடியாதது.


நான் அதிகமான விஷயங்களால் எளிதில் வியப்படைவதில்லை. ஏனென்றால், நான் தலைவரின் மகள். அனைவராலும் போற்றப்படும் ஒருவருடன் வாழும்போது, மற்றவர்களைப் பார்த்து வியக்கும் பழக்கம் குறைந்துவிடும். ஆனால் மோனிகா என்னை மிகவும் வியக்க வைத்தவர். அவர் ஒரு சிறந்த தலைவர், மிகப்பெரிய உத்வேகம் தருபவர். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிப்பாளராகவும் ஷோ-ரன்னராகவும் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு அவருக்கு நன்றி. அதேபோல், ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் பயணித்த அபிஷேக் மற்றும் சுதான்ஷு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. ‘ஸ்பைடர்மேன்’ படத்தில் வரும் ‘With great power comes great responsibility’ என்ற வசனம் உண்மைதான். ஒரு கதையை ஆரம்பத்திலிருந்து இறுதிக்கட்டம் வரை கொண்டு செல்வது என்னுடைய பொறுப்பாக மாறியது. அந்தப் பயணத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பதோடு, தேவையான நேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.


இறுதியில், இந்தத் தொடரை நாங்கள் நினைத்த இடத்திற்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. இந்தப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம், முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும், சரியான நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான். ‘#Love’ தொடரின் டிரெய்லரையும், தொடர்ந்து முழுத் தொடரையும் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்”


இயக்குநர் பாலாஜி மோகன் பேசியதாவது..,


“காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வருகிறேன். ஆண்கள் பெண்களைப் பற்றியும், பெண்கள் ஆண்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம். இன்னும் பல ஆண்டுகள் சென்றாலும் காதலை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அதன் சிறப்பு.


காதலைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக நான் தொடர்ந்து அதைப் பற்றி பேசவில்லை. உண்மையில், எனக்கும் காதலைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. மற்ற அனைவரையும் போலவே நானும் தொடர்ந்து அதை புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் காதலை எப்போதும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் வைத்திருக்கிறது. அதனால்தான் காதல் கதைகளை தொடர்ந்து திரையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.


என்னுடைய படைப்புகளைப் பார்த்து ரசிகர்கள் காதல் குறித்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில், திரைப்படங்களில் வரும் காதல் கதைகளைப் பார்த்து நிஜ வாழ்க்கையிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். முடிந்தவரை என்னுடைய கதைகளை நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், அதே நேரத்தில் பார்வையாளர்கள் கனவு காணவும், தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் முடியும் வகையிலும் உருவாக்க முயற்சிக்கிறேன்.


அந்த வகையில்தான் ‘Love’ தொடரையும் உருவாக்கியுள்ளோம். காதலைப் பற்றிய சில கனவுகளையும், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து இந்தக் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்க்கும்போது தங்களது அனுபவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்”


தொடர்ந்து, ‘#Love’ தொடரில் காதலுக்கு கெமிஸ்ட்ரியா அல்லது காம்பாட்டிபிலிட்டியா முக்கியம் என்ற தலைப்பில் இருவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. ‘


#Love’ தொடரில் மேத்யூ கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸிடம், 


மேத்யூ நிஜ வாழ்க்கை கதாபாத்திரமாக இருந்தால் அவருடன் நட்பு வைத்திருப்பீர்களா என்று கேட்கப்பட்டபோது, “அவர் செய்யும் சாகசங்கள், மலை ஏறுவது போன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்காக அவருடன் நட்பு வைத்திருக்கலாம். அதே நேரத்தில், அவரது சில விஷயங்கள் எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். மேத்யூ கதாபாத்திரத்தில் என்னை அதிகம் கவர்ந்தது அவரது உணர்வுகளும், கதையில் அவர் வெளிப்படுத்தும் பலவீனமான பக்கமும்தான்” என்றார்.


தாரா கதாபாத்திரம் குறித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி,


 “தாராவாக நடித்தது எனக்கு மிகவும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என்னை 80 சதவீதம் தாராவுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல நேரங்களில் நான் நடிக்கவே இல்லை, அந்த கதாபாத்திரமாகவே இருந்தேன். நான் நடித்த சில கதாபாத்திரங்களைப் போல தாரா என்னிடமிருந்து வெகு தொலைவில் இருப்பவர் அல்ல. அதனால் அவரை நடிப்பது மிகவும் இயல்பாக இருந்தது. மேலும், காதல் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருந்தது. அதற்கு ‘#Love’ ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இதற்கு முன்பு அர்ஜுனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தோம்; அது நடக்காமல் போனதால் வருத்தப்பட்டேன். ஆனால் தற்போது ‘#Love’ உருவாகியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நல்ல விஷயங்கள் நடக்க சில நேரங்களில் காலம் தேவைப்படும்” என்றார்.


தொடர்ந்து, ‘#Love’ தொடரில் காதலுக்கு கெமிஸ்ட்ரியா அல்லது காம்பாட்டிபிலிட்டியா முக்கியம் என்ற தலைப்பில் இருவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. எது கெமிஸ்ட்ரி, எது காம்பாட்டிபிலிட்டி என இருவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக நல்ல முத்தம் குறித்து கேட்கப்பட்டபோது, கெமிஸ்ட்ரியும் காம்பாட்டிபிலிட்டியும் இரண்டுமே முக்கியம் என்று இருவரும் தெரிவித்தனர்.


நிஜ வாழ்க்கையில் காதலுக்கு இரண்டில் எது முக்கியம் என்று கேட்டபோது, அர்ஜுன் தாஸ் காம்பாட்டிபிலிட்டிதான் முக்கியம் என்றார். கெமிஸ்ட்ரி சில காலம் மட்டுமே நீடிக்கலாம்; அதன் பிறகு உறவு தொடர காம்பாட்டிபிலிட்டி அவசியம் என்ற கருத்தை அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, “கெமிஸ்ட்ரிதான் முதலில் உருவாகி, அதன் மூலம் காம்பாட்டிபிலிட்டியை நோக்கி உறவு செல்லும்” என்று தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார். இருவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக நல்ல முத்தம் குறித்து கேட்கப்பட்டபோது, கெமிஸ்ட்ரியும் காம்பாட்டிபிலிட்டியும் இரண்டுமே முக்கியம் என்று இருவரும் தெரிவித்தனர்.


இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது நேரில் சந்தித்து தொடங்குவதைத் தாண்டி, டேட்டிங் ஆப்களில் ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என டிஜிட்டல் உலகத்திலேயே ஆரம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நவீன காதல் மற்றும் உறவுகளின் மாற்றத்தை மையமாக வைத்தே ‘Love’ தொடர் உருவாகியுள்ளது.


இந்தத் தொடரை இயக்கியுள்ள பாலாஜி மோகன், தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கிய இயக்குநர். ‘காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், பின்னர் ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, ‘மாரி 2’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். காதல், இளைஞர்களின் வாழ்க்கை மற்றும் நவீன உறவுகளை இயல்பான நகைச்சுவையுடன் அணுகும் அவரது பாணி, ‘Love’ தொடரிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘Love’ தொடரின் கதை FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி நகர்கிறது. மற்றவர்களுக்கான சரியான துணையைத் தேடிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இந்த இரண்டு டேட்டிங் ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். போட்டியாளர்களாக இருக்கும் இருவருக்கிடையே உருவாகும் உறவு, காதல் மற்றும் கருத்து மோதல்கள்தான் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.


‘#Love’ தொடரை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். May6 Entertainment Factory நிறுவனம் தொடரைத் தயாரித்துள்ளது.


டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், நவீன தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை பாலாஜி மோகன் எப்படியான அணுகுமுறையில் சொல்லியிருக்கிறார், அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணி எப்படி அமைந்திருக்கிறது, கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா… என்ற கேள்விக்கு இந்தத் தொடர் என்ன பதிலைத் தருகிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


காதல், நட்பு, குடும்பம், லட்சியம் என உறவுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் ‘Love’ வெப் சீரிஸ் அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

 

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படம் குறித்த ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் போஸ்டர் வெளியானது முதலே இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.


இதனைத் தொடர்ந்து, படத்தில் ரன்பீர் கபூர் இடம்பெறும் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


முதல் போஸ்டரில் ஆலியா பட், கண்கவர் ஸ்லிட் ஸ்கர்ட் மற்றும் சிகை அலங்காரத்துடன் நாற்காலியில் அமர்ந்தபடி தோன்றுகிறார். அவரது தோற்றம் படத்தின் கிளாமர் அம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


இரண்டாவது போஸ்டரில், ஆலியா பட் முற்றிலும் மாறுபட்ட கேபரேட் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பின்னணியில் மின்னும் கேபரேட் மேடை இடம்பெற்றுள்ள நிலையில், அவரது உடை, அலங்காரம் மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படங்களுக்கே உரிய நுணுக்கமான கலை வடிவமைப்பு பிரதிபலிக்கிறது.


ஒரு பன்சாலி திரைப்படத்தின் கதாநாயகி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தனித்துவமான அழகியலை இந்த போஸ்டர்கள் வெளிப்படுத்துகின்றன. ஆலியா பட்டின் கிளாமரஸ் தோற்றம் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய பரிமாணத்தை காட்டுவதுடன், அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.


இந்த போஸ்டர்கள் மூலம் ஆலியா பட்டை இதுவரை காணாத ஒரு புதிய அவதாரத்தில் சஞ்சய் லீலா பன்சாலி காட்சிப்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தனது தலைமுறையின் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ள ஆலியா பட், இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக தெரிகிறது. குறிப்பாக, சஞ்சய் லீலா பன்சாலியுடன் அவர் மீண்டும் இணைந்திருப்பது படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.


‘லவ் & வார்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோரின் அடுத்தடுத்த தோற்றங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு போஸ்டரும் சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்டமான திரை உலகின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி வருவதால், படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘லவ் & வார்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027 ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios)மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இரண்டு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீர பிரதாபங்களைப் பற்றி விவாதிப்பதுடன் தொடங்குகிறது ‘பத்தா’ டிரெய்லர். யாராலும் தொட முடியாதவர், அசைத்து பார்க்க முடியாதவர் என பத்தாவின் வீரத்தைப் பற்றிப் பலரும்  பேச அப்படியே திரையில் வரும் காட்சிகள், அவர் மீதான எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.


தொடர்ந்து, ஆக்ஷன் காட்சிகளுடன் பத்தாவின் பல்வேறு முகங்களை அறிமுகப்படுத்தும் டிரெய்லர், எதிர்பாராத விதமாக அவரது குடும்பஸ்தன் முகத்தையும் காட்டி ஆச்சரியப்படுத்துகிறது. ரௌடியாக அறிமுகமாகும் பத்தாவுக்குள் இருக்கும் மற்றொரு மனிதனை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.


ஆக்ஷன் களமாக நகரும் என எதிர்பார்க்க வைக்கும் டிரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் நகைச்சுவை நிறைந்த தருணங்களுடன் வேறொரு கோணத்திற்கு மாறுகிறது. பத்தாவின் கதாபாத்திரத்தை சுற்றியுள்ள சம்பவங்கள், அவரது பல்வேறு முகங்கள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களின் உறவுகள் என டிரெய்லர் முழுவதும் சுவாரஸ்யமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெறும் ‘செல்லமே மகளே’ பாடல் காட்சிகள் படத்தின் உணர்வுப்பூர்வமான மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன. “அப்பா வந்திருவார்ல அம்மா?” என சிறுமி கேட்கும் கேள்வியுடன், ஜெயிலில் இருக்கும் பத்தாவின் காட்சியுடன் டிரெய்லர் நிறைவடைகிறது. இந்த இறுதிக் காட்சிகள், பத்தாவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்புகின்றன.


80-களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் உலகத்தையும் டிரெய்லர் அழுத்தமாகக் காட்டுகிறது. அந்தக் காலகட்டத்தின் தோற்றம், கதாபாத்திரங்களின் உடைகள், காட்சியமைப்பு மற்றும் சூழல் என அனைத்தும் கதையின் காலப்பின்னணியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.


அதே நேரத்தில், பத்தா உண்மையில் யார்?, அவரது பல்வேறு முகங்களுக்குப் பின்னால் இருக்கும் கதை என்ன?, ரௌடி பத்தா எப்படி குடும்பஸ்தனாக மாறுகிறார்?, அவர் ஏன் சிறையில் இருக்கிறார்? என பல கேள்விகளை டிரெய்லர் எழுப்புகிறது.


ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மர்மம் என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து வெளியாகியுள்ள ‘பத்தா’ டிரெய்லர், கதையின் முக்கிய முடிச்சுகளை வெளிப்படுத்தாமல் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.


விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் பல்வேறு கதாபாத்திரப் பரிமாணங்கள், 80-களின் பின்னணி, நகைச்சுவை நிறைந்த காட்சிகள், குடும்ப உணர்வுகள் என பல சுவாரஸ்ய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள ‘பத்தா’ திரைப்படம், திரையில் என்ன அனுபவத்தை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை டிரெய்லர் ஏற்படுத்தியுள்ளது.


‘பத்தா’ திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன், ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  


பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர்   இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 


‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


 

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளியாகியுள்ள 'டோரதி' (Dorothy) திரைப்படம்.


1980களில் மதுரையை மையமாகக் கொண்டு தொடங்கும் இக்கதை, சுப்பு (சனந்த்) மற்றும் கார்த்தி (ரிஷிகாந்த்) ஆகிய இரு நண்பர்களின் வாழ்க்கையைச் சுற்றியது. சாதி வெறியும் ஆணாதிக்கமும் நிறைந்த சூழலில், 'விசில்' வீரய்யா (முத்துக்குமார்) என்பவரின் ஆதிக்கக் குடும்பத்தில் சுப்பு வளர்கிறான். ஒரு கட்டத்தில் பிரியும் இந்த நண்பர்கள், பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். இப்போது சுப்புவின் அண்ணன் மனைவியாக, மலையாளப் பின்னணி கொண்ட 'டோரதி' (கீர்த்தி சுரேஷ்) அந்த வீட்டிற்குள் நுழைகிறார். அவரின் வருகைக்குப் பின், தீவிரமான ஆண்மைப் பெருமிதமும் சாதிப் பிடியும் கொண்ட அந்த வட்டத்தில் எற்படும் அதிர்வுகளும், ஒரு முக்கியப் பாத்திரத்தின் எல்ஜிபிடி அடையாள மாற்றமும், அதைச் சுற்றி நடக்கும் வன்முறைகளுமே படத்தின் மையக்கதை.


சுப்புவாக நடித்த சனந்தும், கார்த்தியாக நடித்த ரிஷிகாந்தும் தங்களின் வாழ்நாள் நடிப்பைக் கொடுத்துள்ளனர். கதாபாத்திரங்களின் அகப் போராட்டங்களை மிக நேர்த்தியாகக் கடத்தியுள்ளனர்.  டோரதி கதாபாத்திரத்தில் வரும் கீர்த்தி சுரேஷ், படத்திற்கு ஒரு பலமான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளத்தை வழங்குகிறார்.


திருவின் ஒளிப்பதிவு 80-90களின் காலக்கட்டத்தை மிகத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கிறது. படத்தின் ஆகச்சிறந்த பலம் இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்தான். முதல் பாதியின் அதிரடியிலும், இரண்டாம் பாதியின் எமோஷனல் காட்சிகளிலும் இவரது இசை விஸ்வரூபம் எடுத்துள்ளது.


வழக்கமான வணிகச் சமரசங்களுக்குப் போகாமல், சமூகம் பேசத் தயங்கும் ஒரு முற்போக்கான கருவைக் கையாண்டதற்காக கார்த்திக் சுப்பராஜைப் பாராட்டலாம். 'டோரதி' - தமிழ் சினிமாவில் ஆணாதிக்க முலாம் பூசப்பட்ட 'ஆண்மை' மற்றும் 'சாதிப் பெருமிதங்களை' சுக்குநூறாக்கும் ஒரு துணிச்சலான திரைப்படம்

 


இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ராமாயணம் திரைப்படத்தின் அடுத்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராவணனாக நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தங்கக் கிரீடம், முத்து மாலைகள், பிரம்மாண்டமான தங்க ஆபரணங்கள் என ராஜ கம்பீரத்தில் காட்சியளிக்கும் யஷ், தனது தீவிரமான பார்வையால் போஸ்டரையே ஆக்கிரமிக்கிறார்.

டிரெய்லர் வெளியானது முதலே யஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

வலிமை, அறிவு, அதிகாரம் மற்றும் கம்பீரம் என ராவணனின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் யஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ராமாயணம் திரைப்படம் உருவாகி வரும் பிரம்மாண்டத்தின் ஒரு சிறு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கும் இந்தப் பிரம்மாண்ட காவியம், தீபாவளி 2026-ல் பாகம் 1 ஆகவும், தீபாவளி 2027-ல் பாகம் 2 ஆகவும் வெளியாகிறது.

 


சொந்த ஊரின் பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறி, தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கும் கனவுகளுடன் புதிய நகரத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் கதைகள் எப்போதுமே உற்சாகம் தரக்கூடியவை. வாழ்வாதாரம், நட்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தைத் தேடி பெங்களூரு செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’. பெங்களூருவின் எனர்ஜி, இளமை, நட்பு, அன்பு மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் என இவர்கள் வாழ்க்கை மாறும் விதத்தை இந்த கதை பேசுகிறது. 

அறிமுகமில்லாத நகரத்தில் வாழ்வாதாரத்தைத் தேடி பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஐந்து நண்பர்கள் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் மையம். ஆரம்பத்தில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் அவர்களின் பயணம் அழைத்துச் செல்கிறது. படத்தின் கதைக்களம் குறித்து அதிகம் வெளிப்படுத்தாமல், இளமை துள்ளல், நட்பு, லட்சியம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றை சமகாலப் பின்னணியில் சுவாரஸ்யமான கதையாக ‘பீட்சா பாய்ஸ்’ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில், சிவம் சங்கர் நடிகராக அறிமுகமாகிறார். சரத் லோகிதாஷ்வா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல நடிகர் ஷோப்ராஜ், இன்ஸ்பெக்டர் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு இந்த படம். சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். சேகர் கேசவ் சிரின் கதை, இயக்கம் மற்றும் இசை ஆகியவற்றை கவனித்துள்ளார். குருபிரசாத் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக பெங்களூருவில் நடைபெற்றுது. காந்தீரவா ஸ்டுடியோஸ் மற்றும் நகரின் முக்கியமான இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 42 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

இளம் கதாநாயகர்கள், நட்பை மையமாகக் கொண்ட கதை மற்றும் பெங்களூருவின் சமகால நகரப் பின்னணி ஆகியவற்றுடன் உருவாகும் ‘பீட்சா பாய்ஸ்’, வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த ஊர்களை விட்டு வெளியேறும் இளைஞர்கள் எதிர்பாராத அனுபவங்களில் சிக்கிக்கொள்ளும் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் எடுத்துக்காட்டும். இப்படத்தின் கூடுதல் நடிகர்கள், புரோமோஷன்ஸ் போன்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.


 

சரண்ராஜ் செந்தில்குமாரின் சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படமான ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. 


சமீபத்தில் வெளியான ‘மண்டவெட்டி’ படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியாகியுள்ளது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் உணர்வுப்பூர்வமான குரல், தீபக் வேணுகோபாலின் இசை மற்றும் தமிழ்மணி எழுதியுள்ள பாடல் வரிகள் ஆகியவை இணைந்து, மர்மமான ஒரு பெண்ணைச் சுற்றியுள்ள மாயத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ‘ராட்சசியே’ பாடல் உருவாக்கியுள்ளது. மெல்லிசையும் மர்மமும் கலந்த இந்தப் பாடல், கேட்பவர்களை ‘மண்டவெட்டி’ உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது.


மர்மமான தொன்மக் கதைகள், பதற்றம் நிறைந்த சூழல் மற்றும் ‘செஞ்சி சாமி’ என இப்படத்தின் அமானுஷ்ய உலகத்தை சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது வெளியாகியுள்ள ’ராட்சசியே’ முதல் பாடல், இசையின் வாயிலாக அந்த உலகத்தை மேலும் விரிவுபடுத்தி, கதையின் மையத்தில் இருக்கும் மாயத்தன்மை மற்றும் உணர்வுப்பூர்வமான ஆழத்தை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 


வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்கள் இந்த வருடம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘மண்டவெட்டி’ திரைப்படமும் இந்தப் பட்டியலில் இணையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கதையின் முக்கிய அம்சமாக இடம்பெறும் ‘செஞ்சி’ என்ற உக்கிரமான உள்ளூர் தெய்வத்தைச் சுற்றியுள்ள தொன்மமும், படத்தின் சுவாரஸ்யமான கதைக்களமும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.


படத்தின் ஆடியோ வெளியீடு, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் சுபத்ரா ராபர்ட், அம்ரிதா, தேனப்பன், கஜராஜ், பிரேம் குமார், ரிதீஸ்வர் ராஜன், ஷிஜு ராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


‘மண்டவெட்டி’ படத்திற்கு பிரகாஷ் மணிதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். குணா பழனிசாமி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். தீபக் வேணுகோபால் இசையமைத்துள்ளார். கெளதம் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். சங்கீதா சென் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.


டோனி ஜே ஒலி கலவை பணிகளை மேற்கொண்டுள்ளார். பாலகங்காதரன் டிஐ கிரேடிங் பணிகளை கவனித்துள்ளார். விஜயன் விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். மகேந்திரன் கந்தசாமி தயாரிப்பு மேலாளராகவும், நர்மதா மேக்கப் கலைஞராகவும் பணியாற்றியுள்ளனர். சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் மக்கள் தொடர்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.

 

‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியிருப்பதன் மூலம் அதன் இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் ஆன்மீக அழைப்பாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும், திரையிசையின் அழகையும் ஒன்றிணைக்கிறது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன. பாடல் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஸ்ரீ ராமரின் திருநாமம் பாடலில் பக்தி மணம் பரப்புகிறது. 


இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “தலைமுறை தலைமுறையாக, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை வழிநடத்தும் ஸ்ரீ ராமர்தான் ‘ராமாயணம்’ கதையின் மையம். இருள் சூழும் தருணங்களிலும்,குழப்பம் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் அவரது பாதையைப் பின்பற்றுகிறோம். மகிழ்ச்சியான தருணங்களில் நன்றியுடன் அவரை நினைவுகூருகிறோம். ஸ்ரீ ராமருடன் நாம் கொண்டிருக்கும் வலுவான பிணைப்பில் இருந்து உருவானதுதான் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல்.‘ராமாயணம்’ மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உரு்ாக்கப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான அடித்தளம் அதன் உணர்விலும், மதிப்புகளிலும், பக்தியிலும்தான் உள்ளது. முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பக்தியை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். நாம் வழிபடும் ஒருவராக மட்டுமல்லாமல், நம்முள் இருக்கும் பாதுகாவலர், வழிகாட்டி மற்றும் வலிமையின் ஆதாரமாக ஸ்ரீ ராமரைக் கொண்டாட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார். 


ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்து கொண்டதாவது, “ஸ்ரீ ராமரின் திருநாமத்தை எளிமையாகவும் வலிமையாகவும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பதுதான் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல். பக்தி மாறாமல் கேட்பவர்களுக்கு என்றும் மனதில் ஒலிக்கும் பிரார்த்தனையாகவும் அதே சமயம் அந்த இசை ஒரு திரைப்பாடலாகவும் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தீபாலி சஹாய் மற்றும் ராகவ் கௌஷிக் ஆகியோர் ராகேந்து மௌலியின் வரிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில், பாடலின் பக்தி உணர்விலிருந்து அவர்கள் விலகவில்லை. இந்தப் பாடல் ரசிகர்களுக்கு அமைதியையும் ஆன்மீக  உணர்வையும் தரும் என்று நம்புகிறேன்” என்றார். 


நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில், ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல் மற்றும் லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை அகாடமி விருது வென்ற DNEG நிறுவனத்துடன் இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை விநியோகம் செய்கிறது.


இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ராமாயணம் – பாகம் 1’ திரையரங்குகளில் வெளியாகிறது.


DNEG பற்றி:


DNEG என்பது திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஆழமான உள்ளடக்கங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் அனிமேஷன் நிறுவனமாகும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அலுவலகங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை கொண்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட DNEG, 2011 முதல் 'சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்' பிரிவில் 8 அகாடமி விருதுகளை வென்றுள்ளது. மேலும், தனது உயர்தரமான படைப்புகளுக்காக பல BAFTA, பிரைம்டைம் எம்மி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகளையும் பெற்றுள்ளது. 


தி ஆடிஸி (ஜூலை 2026), மோட்டார் சிட்டி (ஜூலை 2026), கோயோட் vs அக்மே (ஆகஸ்ட் 2026), ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (ஆகஸ்ட் 2026), கிளாரா அண்ட் த சன் (அக்டோபர் 2026), ஸ்ட்ரீட் ஃபைட்டர் (அக்டோபர் 2026), தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் - சீசன் 3 (நவம்பர் 2026), தி கேட் இன் தி ஹேட் (நவம்பர் 2026), ராமாயணம்: பாகம் 1 (நவம்பர் 2026), தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 3 (டிசம்பர் 2026), அபோவ் தி பிலோ (டிசம்பர் 2026), அனிமல் பிரண்ட்ஸ் (ஜனவரி 2027), பேட் ஃபேரிஸ் (மே 2027), பிளேட் ரன்னர் 2099, அலோன் அட் டான், எஸ்ஏஎஸ்: ரோக் ஹீரோஸ் சீசன் 3, ஆன் தி லைன், ரோட் ஹவுஸ் 2, ஸ்னூபி அன்லீஷ்ட், பிளட் ஆன் ஸ்னோ, திஸ் சிட்டி இஸ் அவர்ஸ் சீசன் 2, பிளாக் பேலஸ், குண்டம் மற்றும் தி ஆடிஸி ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளது.


பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:


திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான நமித் மல்ஹோத்ராவால் நிறுவப்பட்ட பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ், உலகளாவிய பார்வையாளர்களுக்காகத் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் ஆகிய துறைகளில் புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய படைப்புகளுக்கு நிதியளித்து அவற்றை உருவாக்குகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக அல்கான் என்டர்டெயின்மென்ட் உடன் இணைந்து பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் சமீபத்தில் தயாரித்த 'தி கார்பீல்ட் மூவி’ என்ற அனிமேஷன் திரைப்படம், உலகம் முழுவதும் 257 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது. 


தற்போது பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் பல சுவாரஸ்யமான திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ரியான் ரெனால்ட்ஸின் தயாரிப்பு நிறுவனமான மேக்ஸிமம் எஃபோர்ட் ஆகியவற்றுடன் இணைந்து லைவ்-ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் கலந்த திரைப்படமான அனிமல் பிரண்ட்ஸ் மற்றும் பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காக ரோவியோ என்டர்டெயின்மென்ட் லிமிடெட், சேகா, ஃப்ளைவீல் மீடியா, ஒன் கூல் க்ரூப் மற்றும் டெண்ட்சு ஆகியவற்றுடன் இணைந்து அனிமேஷன் திரைப்படமான ‘தி ஆங்கிரி பேர்ட் மூவி 3’ ஆகியவை அடங்கும். மேலும், 5,000 ஆண்டுகள் பழமையான காவியத்தை அடிப்படையாகக் கொண்ட 'ராமாயணம்' கதையின் இரண்டு பாகங்களையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத திரைப்பட அனுபவமாக வழங்குவதோடு, விரிவான 'டிரான்ஸ்மீடியா' உலகத்தையும் உருவாக்கவுள்ளது.


மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பற்றி:


நடிகர் யாஷ் நிறுவிய மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் புதிய திறமையாளர்கள் மற்றும் கதைகளை ஊக்குவித்து சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் தயாரிப்பு நிறுவனம். மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு பிரம்மாண்டமான திரைப்படங்களை இணைந்து தயாரித்து வருகிறது. ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ திரைப்படம், மற்றொன்று பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ’ராமாயணம்‘ திரைப்படம்.


டி- சீரிஸ் மியூசிக் பற்றி:


இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமாகவும், உலகளவில் முக்கியமான பொழுதுபோக்கு நிறுவனமாகவும் டி- சீரிஸ் திகழ்கிறது. யூடியூப் தளத்தில் அதிகளவில் பார்வையாளர்களை கொண்டுள்ள டி-சீரிஸ் உலகின் முன்னணி சேனல்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பல பில்லியன் பார்வைகளையும், இந்தி திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள், சுயாதீன இசை மற்றும் பிராந்திய இசைப் படைப்புகள் என விரிவான இசைத் தொகுப்பையும் கொண்டுள்ளது. இசை மற்றும் திரைப்படத் துறையில் பல முன்னணி திறமைகளை அறிமுகப்படுத்தியுள்ள டி-சீரிஸ், இந்திய இசை உலகில் தொடர்ந்து புதிய டிரெண்ட் உருவாக்கி, புதுமையான இசை அனுபவத்தையும் கொடுத்து வருகிறது. காலத்தால் அழியாத மெட்டுகளையும், புதிய திறமைகளின் படைப்புகளையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து, உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுடன் இணையும் இசைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Pageviews