தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா (SIIMA) விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. 


அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.


சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம். நகைச்சுவை, குடும்ப உணர்வு, மனிதநேயம் என பல்வேறு அம்சங்களை அழகாக இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அதன் வித்தியாசமான கதை சொல்லும் முறையாலும் பாராட்டுகளைப் பெற்றது.


இப்படத்தின் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தற்போது சைமா விருதுகளில் விமர்சகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த நடிகர்,  சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகர் என மொத்தம் 6 விருதுகளை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வென்றுள்ளது.


குறிப்பாக, அறிமுக இயக்குநராக களமிறங்கிய அபிஷன் ஜீவிந்திற்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிடைத்திருப்பது அவரது முதல் படைப்புக்கு கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாக அமைந்துள்ளது. அதேபோல் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோரின் நடிப்பிற்கும் விமர்சகர்கள் பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளன. படத்தின் நகைச்சுவை அம்சத்திற்காக யோகிபாபுவிற்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருதும், இசைப் பங்களிப்பில் விஜய் யேசுதாஸ் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகர் – ஆண் விருதும் கிடைத்துள்ளன.


‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பசிலியான், மகேஷ் ராஜ் பசிலியான்  மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன், தற்போது சைமா விருது விழாவிலும் 6 விருதுகளை வென்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ தனது வெற்றிப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது. இந்த விருதுகள் படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்துள்ள நிலையில், உண்மையான சினிமா ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான தருணமாக அமைந்துள்ளது. ஒரு நல்ல கதை, சிறந்த நடிப்பு, இசை மற்றும் புதிய படைப்புத் திறமை ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

 

தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு - கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் - கூட்டணியில் உருவாகும் 'எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ' படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது


'இசை மேதை', 'பாரத ரத்னா' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் திரைப்படம் 'எம். எஸ்.: எ லெகசி ஆன் ஸ்கிரீன்-  M.S. : A LEGACY ON SCREEN ' படத்தின் பாரம்பரியமான தொடக்க நிகழ்வை மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகருமான கமல்ஹாசன் கிளாப் அடித்து, தொடங்கி வைத்தார்.


தேசிய விருதை வென்ற இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகும் 'எம். எஸ். : எ லெகசி ஆன் ஸ்கிரீன்- திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியாக 'நேஷனல் கிரஷ்' நடிகை ரஷ்மிகா மந்தானா நடிக்கிறார். அனிருத்  இசையமைக்கும் இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ்- ராக் லைன் என்டர்டெய்ன்மென்ட் - பென்னி வாசு பிலிம்ஸ் - ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் - ராக்லைன் வெங்கடேஷ்-  பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். 


இப்படத்தின் தொடக்க விழா எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இசை அரங்கமாக திகழ்ந்த சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் எம் .எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகளும் , அவருடைய நலம் விரும்பிகளும், திரை உலகத்தை சார்ந்த தயாரிப்பாளர்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்களை.. இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து இசைத்து, அவருக்கு இசையஞ்சலியும் நடத்தினர். 


இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநரான கௌதம் தின்னனூரி பேசுகையில்,

 '' மரியாதைக்குரிய எம். எஸ். சுப்புலட்சுமி குடும்பத்தினருக்கு முதல் நன்றி. மதுரையில் இசையின் பின்னணியில் பிறந்து வளர்ந்த பத்து வயது சிறிய பெண். இசை துறையில் நுழைந்து தென்னிந்தியாவிற்கு உலகளாவிய பெருமை தேடி தந்தார். எம். எஸ். அம்மாவின் வாழ்க்கையை பார்க்கும்போது பாரத ரத்னா விருது - ஏராளமான தியாகங்கள்- மிகப் பெரிய மேடைகளில் இசை கச்சேரி நிகழ்த்தியது-  ஆகியவை அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் இதற்குப் பின்னணியில் அவர் மிகுந்த மனித நேயம் கொண்ட பெண்மணியாக திகழ்ந்தார். 


மகள்-  பாடகி- நடிகை-  பெண்மணி- கலைஞர்- என பன்முக ஆளுமை திறன் கொண்டவராக இருந்தாலும்.. அடுத்த தலைமுறைக்கான அழுத்தமான செய்திகளும் அவருடைய வாழ்க்கையில் இருக்கிறது 


எங்களுடைய படக் குழு-  அவர் மீது முழுமையான மரியாதையும், அன்பையும் வைத்திருக்கிறது. எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவற்கு கிடைத்த வாய்ப்பிற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு வருகை தந்திருக்கும் அனைவரின் ஆசிகளுடனும், வாழ்த்துகளுடனும் எம் எஸ் அம்மாவின் அர்ப்பணிப்பு- பக்தி- ஆகியவற்றை அவர்களுடைய சுயசரிதையாக தயாராகும் இந்த படைப்பில் நேர்த்தியாக கொண்டு வருவதற்கு உண்மையாக உழைப்போம் '' என்றார்.  


பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில்,


 '' எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பது பலருடைய பல ஆண்டு கனவுகளாகும். அந்தக் கனவை நனவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


பொதுவாக வாழ்க்கை வரலாறு தொடர்பான திரைப்படங்களை உருவாக்கும் போது அதில் ஏராளமான சவால்கள் இருக்கும். ஏனெனில் ஒருவரது வாழ்க்கை மிகப்பெரிய வெற்றி பெற்ற வாழ்க்கையாக இருக்கும். 


எங்கள் அம்மா, நான் குழந்தையாக இருக்கும்போது குமுதம் பத்திரிக்கைக்காக எம் எஸ் அம்மாவை நேர்காணல் செய்தார். அப்போது அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு அவர்களைப் பற்றி தெரியாது. அவர்களைப் பற்றி நாம் எல்லோருக்கும் தெரிந்தது போல் 'குறை ஒன்றும் இல்லை' என்ற பாட்டை அவர்கள் பாடினார்கள் என்ற சில விவரங்கள் மட்டும்தான் எனக்கும் தெரியும்


அதன் பிறகு என்னுடைய நண்பர் ராஜீவ் மேனன் சில பாடல்களை உருவாக்கலாம் என விவாதித்தபோது, நான்- பாம்பே ஜெயஸ்ரீ- கார்த்திக் -ஆகியோர் இணைந்து ஒரு சில பாடல்களை உருவாக்கினோம். அது மறக்க இயலாத அனுபவம். அப்போதுதான் எம் எஸ் அம்மாவின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள தொடங்கினேன். 


இயக்குநர் கௌதம் ஒரு திரைக்கதையை எழுதி அதை எனக்கு வாசிக்க கொடுத்தார். அதை வாசிக்கும் பொழுது தான் எவ்வளவு அழகான வாழ்க்கையை எம் எஸ் அம்மா வாழ்ந்திருக்கிறார் என்பது புரிந்தது. அழகான வாழ்க்கை மட்டுமல்ல... எவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையே.. அதனை மீறி அவர்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். இந்த விழா நடைபெறும் சென்னை மியூசிக் அகாடமி அவர்களுடைய வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான மேடையாக இருந்தது என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொரு முறையும் தடைகளை உடைத்து அதனை கடந்திருக்கிறார்கள். அதனால் இந்த வாழ்க்கையை சொல்ல வேண்டும் என தோன்றியது. இதற்காக இயக்குநர் கௌதமிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய வாழ்க்கையை ஒரு கதையாக நேர்த்தியாக அவர் எழுதி இருந்தார்.  


இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. உதாரணத்திற்கு இப்படத்தின் இயக்குநரை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முன் எத்தனையோ இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் செய்ய இயலாத ஒரு விசயத்தை இவர் செய்திருக்கிறார். அது எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவது.  அந்த சவாலில் அவர் எப்படி வெற்றி பெறப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.  


இந்தத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அவருக்கு இந்த படத்தில் மிகப்பெரிய சவால் இருக்கிறது. அந்த சவாலுக்கு சொந்தக்காரர்கள் ரசிகர்களாகிய நீங்கள் தான். அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு மார்டன் மியூசிக்கை உருவாக்கி ரசிகர்களை வசீகரித்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தின் இசை மாண்பிணையும் அவர் காப்பாற்ற வேண்டும். அதனால் அவருக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. 

அதேபோல் இந்தப் படத்தில் எம் எஸ் அம்மா கதாபாத்திரத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார்கள். அவர் இதற்கு முன் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருக்கலாம். அவை அனைத்தையும் மறக்கடித்து விட்டு.. அவர் எம் எஸ் அம்மாவாக மாற வேண்டும் என்பது மிகவும் சவாலானது. 


இதில் ஒவ்வொருவருக்கும் சவால் இருக்கிறது. இந்த சவாலை கடந்து வரும் துணிச்சலையும் எம்எஸ் அம்மா தான் கொடுப்பார். ஏனெனில் அவர் எதிர்கொண்ட சவால்களை விட நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறைவுதான்.‌ இதனால் இந்த திரைப்படத்தில் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.  

தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் பேசுகையில்,

'' திரையுலகில் இருந்து வருகை தந்திருக்கும் நண்பர்களான சிவக்குமார்- மகேந்திரன்- சமுத்திரக்கனி- தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு- சுகாசினி - உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.  


எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவதற்காக கிட்டத்தட்ட ஏழு எட்டு ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். தற்போதைய சூழலில் ஒரு நல்ல கதை கிடைத்து, அதை திரைப்படமாக உருவாக்குவது என்பது கடினம். அதிலும் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவது என்பது மிகவும் கடினமானது. கடந்த ஏழு ஆண்டுகளாக பல ஆய்வுகளை செய்து, நான் -அல்லு அரவிந்த்- பென்னி வாசு- என மூவரும் இணைந்து இதற்காக திட்டமிட்டு உழைத்தோம்.  


எங்களைப் போல் பலரும் எம்எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் மூவரையும் எம். எஸ். அம்மா தான் தேர்வு செய்திருப்பார்கள் என நம்புகிறேன். எங்களை மட்டுமல்ல இயக்குநரையும் எம் எஸ் அம்மா தான் தேர்வு செய்தார்கள். இயக்குநர் கௌதம் தின்னனூரியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போது, அவர் வேறு படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க மறுத்து, இந்தப் படத்தை தான் இயக்குவேன் என இப்படத்தை இயக்க ஒப்புக் கொண்டார்.  


எம் எஸ் அம்மாவாக நடிப்பதற்கு  நடிகைகளை தேர்வு செய்வது எளிதான விசயம் அல்ல. நிறைய யோசித்த பிறகு ரஷ்மிகாவிடம் கேட்டபோது, அவர் மனதார நடிக்க ஒப்புக்கொண்டார்.இவற்றையெல்லாம் விட இந்தப் படம் உருவாவதற்கு எம் எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் தான் முதன்மையானது.‌ அவர்களுக்கும் எங்கள் நன்றி. '' என்றார்.


தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில்,


 ''இசையரசி- கானக்குயில்- என் பல்வேறு பட்டங்களுடன் இசை உலகில் தனக்கென தனித்துவமான முத்திரையை பதித்த எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்கும் என்னுடைய இனிய நண்பர்களான தயாரிப்பாளர்கள் மூவருக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்தும்.  


இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவருக்கு இது சவாலானது என்றாலும், அவருடைய தாத்தா ரமணனின் ஆசி அவருக்கு உண்டு. திரைப்படத்தின் இசையை அகில உலகம் போற்றும் வகையில் அவர் இசையமைப்பார். அத்தகைய இசை புரட்சியை இந்த திரைப்படம் உருவாக்கும். இந்தப் படம் நாளைய நம்பிக்கை. இந்த படத்தை இயக்கும் இயக்குநருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.  


எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என நான்- ராஜீவ் மேனன்- சுரேஷ் சக்கரவர்த்தி -ஆகியோர் முயற்சி செய்தோம். இது மிகப்பெரிய படைப்பு. எம் எஸ் அம்மா அம்மையார் ராஷ்டிரபதி பவனில் பாடி பெருமை சேர்த்திருக்கிறார். பாரத ரத்னா விருதையும் பெற்றிருக்கிறார். அவருடைய காலம் இசை உலகின் பொற்காலம்.  

அவர் நடிப்பில் வெளியான 'மீரா' திரைப்படத்தின் உரிமை சதாசிவம் உள்ளிட்ட அவருடைய குடும்ப உறுப்பினர்களிடம் தான் இருக்கிறது. அதை அவர்களிடம் இருந்து வாங்கி பெற்று, பார்த்து, அவர்களின் நடை- உடை மற்றும் உடல் மொழியை கவனிக்க வேண்டும் என படக் குழுவினருக்கு கேட்டுக் கொள்கிறேன். 


இந்த திரைப்படம் திரையுலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். காலம் காலமாக இருக்கும் ஒரு புதையல். அனைவருக்கும் வாழ்த்துக்கள் '' என்றார்.


நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,


''எம் எஸ் அம்மாவின் 110 வது பிறந்த நாளில் அவருடைய சுயசரிதையை தழுவி தயாராகும் திரைப்படத்தின் தொடக்க விழா மேடையில் நிற்பதை பெருமிதமாக கருதுகிறேன்.தயாரிப்பாளர்கள் மூவரும் இணைந்து மிகப்பெரிய வரலாற்று படைப்பை உருவாக்க உள்ளார்கள். இதில் நானும்  சிறிய பங்களிப்பை செய்கிறேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இயக்குநர் கௌதமுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எம் எஸ் அம்மாவை பற்றி பேசும் பல விசயங்கள் இப்படத்தை பல பாகங்களாக எடுக்கும் அளவிற்கு இருந்தது. அவ்வளவு விசயங்களை அவர் கடந்து வந்திருக்கிறார். அதை கேட்கும்போது எனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்தக் குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக இருக்கும்'' என்றார்.  


நடிகர் சிவகுமார் பேசுகையில்,

 '' உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெறுகிறது. ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த படத்தை தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தயாரிக்கிறார்கள். நாம் செய்ய வேண்டிய விசயத்தை அவர்கள் செய்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு ஒரு சல்யூட். இது பெருமிதமாகவும் இருக்கிறது.

 

அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி நான் சிறுவயதில் படித்திருக்கிறேன். அவர்களுடைய வீட்டில் பாட்டு கேட்பதற்கு ரேடியோ கூட இருக்காதாம். அருகிலுள்ள பூங்காவிற்கு சென்று தான் கேட்பார்களாம் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருந்த பெண்.. இது போன்ற சபாக்களில் பாடுவதற்கு எப்படியெல்லாம் சதாசிவம் உதவி செய்தார் என்பதையும் படித்திருக்கிறேன். அந்த மகத்தான அம்மாவை பற்றி சுயசரிதை திரைப்படத்தை உருவாக்குகிறார்கள் என்றவுடன் அதற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார் என்பதை கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.  


தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில்,  


'' சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் கமல்ஹாசனுக்கு நன்றி. இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டதற்கும் நன்றி.இன்று காலை இந்த நிகழ்வு நடைபெறும் இடத்தை பார்வையிட்டேன். எம் எஸ் அம்மாவின் மிகப்பெரிய புகைப்படத்தை பார்த்தேன்.  அப்போது அவருடைய சுயசரிதையை நாங்கள் தயாரிக்கவில்லை. அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்குவதற்கு அவர்தான் எங்களை தேர்வு செய்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் உணர்வுபூர்வமாக இருந்தது.அதேபோல் அவருடைய கதாபாத்திரத்தில் ரஷ்மிகா நடித்திருப்பது அவருடைய தேர்வு தான்.எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை ஏன் திரைப்படமாக தயாரிக்க வேண்டும்? .. அவர் ஒரு இசைக் கலைஞர். அவர் ஒரு பாடகி. அவர் ஒரு சாதனையாளர்.. ஆகிய அடையாளங்களை எல்லாம் கடந்து அவருடைய வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதுதான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.

அவர் வாழ்க்கையில் பின்பற்றிய கொள்கை- ஒழுக்கம்- நேர்மை- அர்ப்பணிப்பு -அதுவும் அவருடைய பத்தாவது  வயதிலிருந்து இருபது வயது வரையிலான வாழ்க்கையில், அதுவும் அவருடைய கடினமான தருணங்களில் தன்னுடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த வாழ்க்கை.. இசை மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், பற்றும்.. என பல விசயங்கள் இதில் உள்ளது. இதைப் பற்றி நான் மேலும் விரிவாக சொல்ல விரும்பவில்லை. அனைத்தும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது.


இளம் வயதில் அவர் எவ்வளவு சங்கடங்களையும்... கடினமான தருணங்களையும்... எதிர்கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இப்படத்தின் இயக்குநர் கௌதம் கடந்த ஓராண்டாக பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, பலரை சந்தித்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறார். இதற்காக அவருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  


இயக்குநர் கௌதம் அவர் இயக்கிய முதல் திரைப்படத்திற்காக தேசிய  விருதினை வென்றவர். அவர் மிகப்பெரிய படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் எம் எஸ் அம்மாவின் சுயசரிதையை திரைப்படமாக தயாரிக்க உள்ளோம் என்றதும்.. அந்த படத்தில் இருந்து விலகி, இதில் பணியாற்ற மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். 


தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கடந்த ஏழு ஆண்டுகளாக இப்படத்தை உருவாக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார். எம் எஸ் அம்மாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலர் முயற்சி செய்திருந்தாலும் இதில் அவர் நம்பிக்கையுடன் இருந்தார். இறுதியில் அவர் எம் எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினர்களிடம் திரைப்படமாக தயாரிக்கும் உரிமையை பெற்றார். இந்த திரைப்படம் உருவாகுவதற்கு எம் எஸ் அம்மாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் மனமுவந்த ஆதரவை தெரிவித்துள்ளனர். இதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  


இந்த திரைப்படத்திற்கு அனிருத் ஏன் இசையமைக்க வேண்டும்? இசைக்கு இந்த கால இளைய தலைமுறையினருக்கும்.. அடுத்த தலைமுறையினருக்கும் அனிருத் ஒரு இசை பாலமாக திகழ்கிறார். இவர்தான் ஜென் ஸீ தலைமுறையையும், கடந்த தலைமுறை இசையால் இணைக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறார்.  


ஒவ்வொரு நாளும் நாம் ஏராளமான இசைகளை கேட்கிறோம். ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் எம் எஸ் அம்மாவின் குரலில் ஒலிக்கும் சுப்ரபாதத்தை கேட்கிறோம். தற்போது சமூக ஊடகங்கள் மூலமாக ஏராளமான இசைகளை... இசை வடிவங்களை... நாம் கேட்கிறோம். இதில் நாம் எதனை ரீ கிரியேட் செய்கிறோம். ஆனால் நாங்கள் எம் எஸ் அம்மாவின் இசையை ரீ கிரியேட் செய்யவில்லை. செய்யவும் முடியாது.  


நாங்கள் இசைக் கலைஞர் எம் எஸ் அம்மாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குகிறோம். அனிருத் வேறு திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கலாம். இந்த திரைப்படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்றவுடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் இசை குடும்பத்தைச் சார்ந்த இசை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் அவர் எந்த மாதிரி இசையை வழங்குவார் என்பதை கேட்பதற்கு காத்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படத்தின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம்? என்றபோது, எங்களுக்கு கமல்ஹாசனை தவிர வேறு யாரையும் யோசிக்க தோன்றவில்லை. இங்கு வருகை தந்து படத்தின் பாரம்பரியமான படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்ததற்காக அவருக்கு எங்கள் குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்த அரங்கத்தில் நம்முடைய கண்களுக்கு புலப்படாமல் அமர்ந்து ரசிக்கும் எம் எஸ் அம்மாவின் ஆசி நம் அனைவருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்'' என்றார். 


நடிகை ராஷ்மிகா மந்தானா பேசுகையில்,  


''எனக்கு தற்போது என்னுடைய மனதில் ஒரே ஒரு ஃபீலிங்ஸ் தான் இருக்கிறது. அது கிராட்டிடியூட் தான். எம் எஸ் அம்மாவின் சிறப்பு நாளான இன்று நீங்கள் அனைவரும் இங்கு ஒன்று கூடி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு நன்றி. ஹாப்பி பர்த்டே எம் எஸ் அம்மா.இன்று நாங்கள் எம் எஸ் அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். இதை பார்த்து இந்த அரங்கத்தில் எங்கேனும் அமர்ந்து ரசிப்பீர்கள் என்றும்.. உங்களிடத்தில் சிறிய அளவில் புன்னகை இருக்கும் என்றும்.. நம்புகிறோம். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி.உங்களுடைய குரலில் தனித்துவமான தெய்வீக சக்தி இருக்கிறது. அதை கேட்கும் போதெல்லாம் எனக்கு கடவுள் முன் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு எழும்.அம்மா உங்களுடைய வாழ்க்கையில் சிறிய பகுதியாக இருப்பதற்கு என்னை தேர்வு செய்து இருக்கிறீர்கள். இதற்காக நான் எப்போதும் உங்களுக்கு நன்றி கடன் பட்டவராக இருப்பேன். உங்களுடைய ஆசீர்வாதம் - சதாசிவம் சாரின் ஆசீர்வாதம் - சண்முக வடிவு அம்மாவின் ஆசிர்வாதம்-  உங்களுடைய குடும்பம் மற்றும் உங்களுடைய நலம் விரும்பிகளின் ஆசீர்வாதமும், வாழ்த்தும் எங்களுக்கும், எங்கள் குழுவினருக்கும் தேவை. என்னுடைய சிறந்த பங்களிப்பை இந்த படைப்பிற்காக வழங்குவேன் என உறுதி கூறுகிறேன்'' என்றார்.  


நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,


 '' நான் குழந்தை நடிகராக நடிக்கும்போது அந்த வாழ்க்கை அப்படியே தொடருமா? என்றெல்லாம் தெரியாது. வேடிக்கைக்காக என்னுடைய அப்பா சினிமாவிற்கு அனுப்பி வைத்தார். படிக்க வேண்டும் என்று சொன்னார். எனக்கு படிப்பு வரவில்லை. அதன் பிறகு தான் எனக்கு இசை என்றால் என்ன என்பது புரிய தொடங்கியது. படிப்பு வரவில்லை என்றதும்.. எது புரிந்ததோ..! அதை செய்யலாம் என்று எண்ணினேன். அதன் பிறகு இசை புரிந்ததால் அதைத் தொடர்ந்தேன். ஆனால் அதிலும் எனக்கு பிரமாதமாக வரவில்லை. அதன் பிறகு தேடித்தேடி டான்ஸ் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு டான்ஸ் அசிஸ்டன்டாக இருந்து, அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகி கிளாப் அடித்தேன். அதன் பிறகு இப்போது மீண்டும் கிளாப் அடித்திருக்கிறேன். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 


இந்த படத்தின் இயக்குநரை நான் சந்தித்திருக்கிறேன். அவர் எல்லீஸ் ஆர் டங்கன். இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான காட்ஃபாதர். அவர்  எண்பத்தியெட்டாவது வயதில் டாக்குமென்டரி படத்தை எடுப்பதற்காக இங்கு வந்தார். அப்போது அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரிடம் சென்று கையெழுத்தும் வாங்கினேன். ஆனால் அவரிடம் இணைந்து பணியாற்ற முடியவில்லையே..! என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தை நீக்கியதற்காக இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. 


எம் எஸ் அம்மா - இசையின் ஒன்றிணைக்கும் சக்தி. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் குரல். அவர் தமிழ், சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழ்- தெலுங்கு- கன்னடம் என எல்லா மொழிகளிலும் அவருடைய உச்சரிப்பு உன்னதமானது. இது இன்றும் என்னைப் போன்றவர்களுக்கு பாடமாக இருக்கிறது.  


தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் அவர் குரலில் ஒலித்த 'ரங்க பூர்வ விஹாரா..' பாடலை கேட்டிருப்பார்கள். சுப்ரபாதத்தை ஆலயங்களில் தினமும் ஒலிக்க விடுகிறார்கள். லலிதா சகஸ்ரநாமம் என பல பாடல்களாக இருக்கட்டும். இவற்றையெல்லாம் விட 'ரங்கபூர்வ விஹாரா..' பாடலை கேட்கும் போது மனதிற்கு ஒரு சின்ன சந்தோஷ உணர்வு பரவும். அது எம் எஸ் அம்மாவை விட மூத்த இசைக்கலைஞர் ஒருவரின் கம்போசிங்கில் உருவானது. இருந்தாலும் அந்தப் பாடல் எம் எஸ் அம்மாவின் குரலில் பாடும்போது அந்த பாடலுக்கான கம்போசிங்கிற்கு என்ன வயதோ.. அதை விட.. அதை தன்னுடைய இனிய குரலில் பாடி அதன் வயதை மும்மடங்காக்கி விட்டார்கள். 


நான் அவர்களை ரசிகனாக தான் பார்த்திருக்கிறேன். அவர்களை அருகில் இருந்து பார்ப்பதற்கு அனுமதி இல்லை. எனக்கு அதற்கான அருகதையும் இல்லை.இந்த விழா அரங்கத்திற்கு அருகே சின்னதொரு மியூசிக் அகாடமி இருக்கிறது. அவர்தான் பாலமுரளி கிருஷ்ணா. அவரிடம் தான் நான் இசையை கற்றுக் கொண்டேன். அவர் பலமுறை எம்.எஸ். அம்மாவை பற்றி பேசுவதை கேட்டிருக்கிறேன். அப்போதுதான் எம் எஸ் அம்மாவின் பெருமையை புரிந்து கொள்ள முடிந்தது.பிறகு நான் 'ஹே ராம்' படத்தை உருவாக்கும் போது அவர்களை சந்திக்க நேர்ந்தது. சுயநலமாகத்தான் அவர்களை சந்தித்தேன். 'ஹே ராம்' படத்தின் பாடலை அவர்தான் பாட வேண்டும் என விரும்பினேன். ஏனெனில் என்னுடைய நாயகனான கரம் சந்த் காந்தியை பற்றிய படத்தில் அவருடைய குரல் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த தருணத்தில் உடல்நலக்குறைவு இருந்தது. அந்த வீட்டில் இருந்து கிடைத்த பரிந்துரையின் அடிப்படையில் தான் நான் டி கே பட்டம்மாளை சந்தித்தேன். அவர்களுக்கும் உடல் நலம் சரியில்லை. இருப்பினும் அவர்களை சக்கர நாற்காலியில் அமர வைத்து அவருடைய குரலை பதிவு செய்தோம்.நான் எம் எஸ் அம்மா-  டி கே பட்டம்மாள்-  எம்எல் வசந்தகுமாரி - ஆகிய மூன்று சக்தி வாய்ந்த ஐகானிக் பெண்மணிகளிடம் நெருங்கி பழகியுள்ளேன். இந்த மூவரும் என் தலையை தொட்டு ஆசீர்வதித்திருக்கிறார்கள். அதனால் தான் இவர்கள் கேட்டதும் இந்த நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டேன். இது எனக்கு கிடைத்த கௌரவம்.இந்தப் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் குறிப்பாக அனிருத்துக்கும் வாழ்த்துக்கள்.  


எப்படி பாலச்சந்தருக்கு 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ...எப்படி இயக்குநர் கே விஸ்வநாத்திற்கு 'சங்கராபரணம்' படத்தின் மூலம் திடீர் திருப்பம் ஏற்பட்டதோ...இந்தப் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அனிருத்தின் திரையிசை பயணத்திலும் மிகப்பெரிய மாற்றமும், திருப்புமுனையும் ஏற்படும். இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை அனிருத் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அவர் தற்போது செல்லும் பாதையை நான் நன்கு அறிவேன்.இயக்குநர் கௌதமிற்கு இது மிகப்பெரிய பொறுப்பு.  இதற்காக நீங்கள் உயிரை கொடுக்க வேண்டாம். கடுமையாக உழைத்தால் போதும். இந்த படத்தில் தவறு நேராது. ஏனெனில் இப்படத்திற்கான திரைக்கதையை எம்எஸ் அம்மா எழுதிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதை மெருகேற்றினால் போதும். இயக்குநரின் பணியை எம்எஸ் அம்மா எளிதாக்கி விட்டு சென்றிருக்கிறார்.  

எம் எஸ் அம்மா பூஜைக்கு உரியவர்கள் என்பதை விட.. நம் அனைவரின் பிரியத்திற்கு உரியவர்கள்.  அதை நீங்கள் திரையில் காண்பிக்க வேண்டும். இங்கு அவர்களை வணங்குவதற்கு நிறைய பேர் உள்ளனர். அவர்கள் காட்டிய அன்பு - பாசம்-  அதைத்தான் திரையில் காண்பித்திட வேண்டும்.  


இந்தியாவின் பான் இந்திய லேடி சூப்பர் ஸ்டார் எம் எஸ் அம்மா தான். அவர்களிடம் ஏராளமான திறமை இருந்தது. அவர்கள் நடிகை மட்டுமல்ல வீணை வாசிப்பார்கள்... நடனம் ஆடுவார்கள்... 'மீரா' படத்தின் பாடல்கள் இன்றும் நம் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.  


மைக்கேல் ஜாக்சனின் படத்தை உருவாக்கும்போது அந்த நடிகருக்கு எவ்வளவு பதட்டம் இருந்திருக்கும். அந்த பதட்டம் ரஷ்மிகாவிற்கும் இருக்கும். அதனை களைவதற்கு அருமையான குழுவும் இருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  

என்னால் 'அவ்வை சண்முகி' போன்ற வேடத்தை போட்டு நடிக்க முடியும். ஆனால் எம்.எஸ். அம்மாவாக ஒருபோதும் நடிக்க முடியாது. அதனால் இந்த கதாபாத்திரத்தை நீங்கள் ஏற்று தைரியமாக நடியுங்கள். 

எம் எஸ் அம்மா இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி. குறிப்பாக தென்னிந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்மணி. 

இந்த திரைப்படக் குழுவினரை எல்லீஸ் ஆர் டங்கன் சார்பாக வாழ்த்துகிறேன். அவர்தான் என்னை இங்கு சென்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வா என்றார். இதெல்லாம் நம்முடைய எமோஷன். 


இந்த அரங்கம் ஏராளமான இசை கலைஞர்களையும், இசை ரசிகர்களையும் உருவாக்கியது. இங்கு இந்த விழா நடைபெறுவது தான் பொருத்தமானது. எம் எஸ் அம்மாவின் புகைப்படம் இங்கு மட்டுமல்ல திருப்பதியிலும் இருக்கும்... ஐக்கிய நாடுகள் சபையிலும் இருக்கும்.... அவருடைய புகைப்படம் இல்லாத இடமே இல்லை.  


எனக்கு எல்லீஸ் ஆர் டங்கன் தான் ஹீரோ. எங்கிருந்தோ இங்கு வந்து தமிழில் படத்தை இயக்கியிருக்கிறார். அதே மரியாதையை நான் இப்படத்தின் தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் -ராக்லைன் வெங்கடேஷ்- பென்னி வாசு- ஆகியோருக்கு கொடுக்க வேண்டும். ஏனெனில் நான் கனவு கண்ட தென்னிந்தியா... கடந்த காலத்தில் அப்படித்தான் இருந்தது. சென்னை ஒரு ஹப்பாக இருந்தது. தற்போது மீண்டும் அது உருவாகிக்கொண்டிருக்கிறது. அது ஒரே ஊரில் மட்டும் இல்லாமல் பெங்களூருவாகவும்... ஹைதராபாத் ஆகவும்... சென்னை ஆகவும்... இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரே குடும்பம். இதை எப்போதும் மறந்து விடக் கூடாது. தற்போது ஒவ்வொரு படங்களும் அந்தந்த மொழிகளில் வெளியாகி வெற்றி பெற போகிறது.  


இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால் ...நான் 'மரோ சரித்ரா' படத்தின் நாயகன். நான் மட்டுமல்ல எனக்கு முன்னாடியே மற்றொரு ஹீரோவும் இருக்கிறார். அவர் நாகேஸ்வரராவ். அவர் நடித்த 'தேவதாஸ்' இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்த திராவிட குடும்பம். இதில் அரசியலை நுழைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.  

இசை அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதிலும் எம் எஸ் அம்மாவின் குரல் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் பெற்றது . அவரது சுயசரிதையை உருவாக்குவதால் இந்தியா பெருமை கொள்கிறது. குறிப்பாக தமிழகமும் பெருமை கொள்கிறது. இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதை நான் இந்தியனாகவும் பெருமிதம் கொள்கிறேன்'' என்றார்.


 மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் 'வேர்ல்ட் ஆஃப் பத்தா' டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் பயணிக்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் தேடலின் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. கதை குறித்த முக்கிய தகவல்கள் எதையும் வெளிப்படுத்தாமல், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


டீசரில் விஜய் சேதுபதியின் பல்வேறு தோற்றங்களும், வித்தியாசமான பரிமாணங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அவரது ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் இருக்கும் கதை என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதால், ‘பத்தா’ படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


80s-களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காட்சியமைப்பும் டீசரின் முக்கிய சிறப்பம்சமாக உள்ளது. அந்தக் காலத்தின் தோற்றம், உடைகள், சூழல் மற்றும் சினிமா பாணியை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. ஏற்கனவே ‘மகளே’ பாடல் மூலம் 80s-களின் இசை உலகை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், டீசரும் அதே காலகட்டத்தின் உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.


இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ‘மகளே’ முதல் சிங்கிள் மூலம் மென்மையான மெலடி இசையில் வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்த சாய் அப்யங்கரின் இசை, தற்போது டீசரிலும் படத்தின் காலகட்டத்திற்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் கவனம் ஈர்க்கிறது. 80s-களின் பின்னணியை மையமாகக் கொண்ட இப்படத்தின் இசை உலகமும் படத்தின் முக்கிய அம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வழக்கமான டீசர் பாணியில் கதையின் மையத்தை வெளிப்படுத்தாமல், கதாபாத்திரங்கள், காட்சிகள் மற்றும் மர்மத்தை மட்டுமே முன்னிறுத்தியுள்ளது ‘பத்தா’ டீசர். விஜய் சேதுபதியின் தோற்றங்கள், 80s-களின் களப்பின்னணி, இசை மற்றும் காட்சியமைப்பு ஆகியவை இணைந்து, படம் முற்றிலும் புதுவிதமான அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.


விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் சாய் அபயங்கர் உள்ளிட்ட திறமையான கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பத்தா’, பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கிய படைப்பாக உருவாகியுள்ளது. முதல் சிங்கிளைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

சில குரல்கள் அவ்வப்போது கேட்கப்படும். சில குரல்கள் நினைவில் நிலைத்திருக்கும். ஆனால், ஒரு நாட்டின் ஆன்மாவோடு இரண்டறக் கலந்துவிடும் குரல்கள் வெகு சிலவே. அத்தகைய மகத்தான கலை ஆளுமைகளில் ஒருவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா.


மொழி, எல்லை, தலைமுறை என அனைத்து வரம்புகளையும் கடந்து அவரது இசை பயணித்தது. கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பக்தியையும் உணர்வையும் விதைத்த அவரது குரல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தின் அழியாத அங்கமாக மாறியது. அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது இசை, வீடுகள், கோயில்கள், இசை அரங்குகள் என தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில், அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடைபெறும் இந்த அறிவிப்பு, இந்திய பாரம்பரிய இசை வரலாற்றுடன் ஆழமாக தொடர்புடைய இந்த இடத்தை மேலும் சிறப்பிக்கிறது.


பல ஆண்டுகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி


இத்தகைய மிகப்பெரிய ஆளுமையின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்வது சாதாரணமான முயற்சி அல்ல. அவரது வாழ்க்கையை உண்மைத் தன்மையுடனும் உரிய மரியாதையுடனும் சொல்ல, தேவையான உரிமைகள், அனுமதிகள், இலக்கிய ஆதாரங்கள் மற்றும் குடும்பத்தினருடனான தொடர்புகள் என பல்வேறு பணிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அந்த நீண்ட பயணம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் வாழ்க்கை இனி சினிமா எனும் மொழியின் வழியாக உலகம் முழுவதும் சென்றடைய இருக்கிறது.


இரு தலைமுறைகளை இணைக்கும் இசைப் பாலம்


இந்தப் படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் காலத்தால் அழியாத இசை மரபை இன்றைய தலைமுறையுடன் இணைக்கும் முயற்சி அமைந்துள்ளது.


இன்றைய தலைமுறையின் முன்னணி இசை ஆளுமைகளில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இளைஞர்களை உடனடியாக ஈர்க்கும் வகையிலும், அதே நேரத்தில் உணர்வுபூர்வமான மற்றும் கலாச்சாரத் தொடர்பை தக்கவைக்கும் வகையிலும் இசையை உருவாக்கும் அனிருத்தின் பங்களிப்பு, எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை உலகத்தையும் புதிய தலைமுறையையும் இணைக்கும் முக்கிய பாலமாக அமையும்.


எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா


இந்த பிரம்மாண்டமான பயணத்தின் மையக் கதாபாத்திரமாக ராஷ்மிகா மந்தனா, எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


புதிய தலைமுறையின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகாவுக்கு, இசையையும் சினிமாவையும் தாண்டி இந்திய மக்களின் மனங்களில் இடம்பெற்ற ஒரு மாபெரும் ஆளுமையை திரையில் பிரதிபலிக்கும் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


அவரது நடிப்பின் மூலம், உலகம் அறிந்த அந்த புகழ்பெற்ற குரலுக்குப் பின்னால் இருந்த பெண்ணை — அவரது உணர்வுகள், ஆசைகள், போராட்டங்கள், மனவலிமை மற்றும் ஆன்மிகப் பயணம் ஆகியவற்றை புதிய தலைமுறைக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


மகத்தான வாழ்க்கையை சொல்லும் நட்சத்திரக் கூட்டணி


எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் சாதனை வாழ்க்கையையும் மரபையும் அனைத்து தலைமுறை ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில், தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகிய மூவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக அறியப்படும் கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார்.


இது வெறுமனே ஒரு பாடகியின் வாழ்க்கைக் கதை அல்ல.


இசையை பக்தியாகவும், பக்தியை உணர்வாகவும், அந்த உணர்வை தலைமுறைகளை கடந்து வாழும் மரபாகவும் மாற்றிய ஒரு பெண்ணின் வாழ்க்கைக் கதை.


எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110-வது பிறந்தநாளில் தொடங்கும் புதிய அத்தியாயம்


அவரது 110-வது பிறந்தநாளில் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்படுவது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.


இன்றும் உலகம் முழுவதும் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் இசை மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அவரது அசாதாரண வாழ்க்கைப் பயணத்தை வருங்கால தலைமுறைகளுக்காகப் பதிவு செய்து வழங்கும் பொறுப்பை சினிமா ஏற்றுக்கொள்கிறது.


ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய இசை அரங்குகளை நிரப்பிய அந்தக் குரல், இப்போது வெள்ளித்திரையிலும் புதிய தலைமுறையினரை சென்றடைய இருக்கிறது.


எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் கதை இனி ஒரு நினைவாக மட்டும் இருக்காது. அது ஒரு திரைப்பட மரபாக மாறுகிறது.


எம்.எஸ். –  அழிக்க முடியாத வரலாறு திரையில் வருகிறது

 

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் 'ரைஸ் ஆஃப் மஹாசக்தி' டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தின் டீசர் 'ரைஸ் ஆப்  மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 


இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், 'மைனா' நந்தினி, 'கருடா' ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை - வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியிருக்கிறார். மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர் - குஷ்மிதா கணேஷ்- இஷான் சக்சேனா- விக்னேஷ் சிவன் - ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர். 


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் 'ரைஸ் ஆஃப்  மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்... ரசிகர்களை வியக்க வைத்திருப்பதுடன் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதி செய்திருப்பதால்.. இதற்கான வரவேற்பும், டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.‌

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் அழுத்தமான நடிப்பிலும் கவனம் ஈர்த்து வரும் துருவ் விக்ரம், முதல் முறையாக ரசிகர்களை அதிக அளவில் கவரும் வகையிலான கமர்ஷியல் கதைக்களத்தில் நடிக்கவுள்ளார்.


படத்தின் தலைப்புடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துருவ் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். நேரடி ஆக்‌ஷன் காட்சிகளின் தன்மையுடன் காமிக் புக் பாணியிலான காட்சியமைப்பும் இணைந்திருக்கும் இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


புதிய போஸ்டரில் பிரவுன் நிற உடையில், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் துருவ் விக்ரம் தோன்றுகிறார். அவரது தீவிரமான பார்வையும் ஆக்ரோஷமான உடல்மொழியும் கதாபாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக முன்னோக்கி நீட்டியிருக்கும் அவரது கை, போஸ்டருக்கு அதிரடியான தோற்றத்தை கொடுக்கிறது. ‘No Retakes Allowed’ என்ற டேக்லைனும் படத்தின் ஆக்‌ஷன் பின்னணியை உணர்த்துகிறது.


ஃபர்ஸ்ட் லுக் ‘ஜாக்கி’ திரைப்படம் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருவதையும், துருவ் விக்ரமின் புதிய திரைமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறது.


இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, ஜெயசூர்யா எஸ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஜி.எம். சேகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர் விக்ரம் மோர் வடிவமைக்கிறார்.


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் – இசை, விக்கி – ஒளிப்பதிவு, ஜெயசூர்யா எஸ் – படத்தொகுப்பு, ஜி.எம். சேகர் –தயாரிப்பு வடிவமைப்பாளர், விக்ரம் மோர் – சண்டைப்பயிற்சி என சிறப்பான தொழில்நுட்பக் குழு பணியாற்றுகிறது. இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கின்றனர். மார்க்கெட்டிங் பணிகளை ஃபர்ஸ்ட் ஷோ நிறுவனம் கவனிக்கிறது.


 


*'கன்னடத்து பைங்கிளி' படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா*


*கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமான'கன்னடத்து பைங்கிளி'-யை  சாய் ரமணி இயக்க எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க ஆர். கோபி வழங்குகிறார்*


எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் (MBM Entertainment) நிறுவனத்தின் சார்பில் இந்துமதி கோபி தயாரிப்பில் ஆர். கோபி வழங்கும் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்தை 'சிங்கம் புலி', 'மொட்ட சிவா கெட்ட சிவா'  படங்களை இயக்கிய சாய் ரமணி எழுதி இயக்கியுள்ளார். 


பன்முக வித்தகரான டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமாக இது அமைந்துள்ளது. டி.ஆர். மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படம் 'கன்னடத்து பைங்கிளி' என்பதும் குறிப்பிடத்தக்கது. நாயகனின் தந்தையாக படம் முழுவதும் வரும் பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை பாக்யராஜ் வழங்கியுள்ளார்.  


சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இது தான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர். இப்படத்தில் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக் மற்றும் இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் ஸ்ரீகாந்த் ஐயங்கார் எனும் தெலுங்கில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர் அறிமுகம் ஆகிறார். கர்நாடகாவில் இருந்து ஸ்வேதா எனும் நடிகையும் அறிமுகமாகிறார்.


'பேராண்மை', 'மீகாமன்', 'வாகா' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ். ஆர். சதீஷ் குமார் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டை பயிற்சி: பவர் பாண்டியன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு-கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சாய் ரமணி தெரிவித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

 


பல நூறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய இசைஞானி திரு. இளையராஜா அவர்களையும், மூன்று திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய திரு. சரத்குமார் அவர்களையும் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், துணைத் தலைவர் சினேகன், இணைச் செயலாளர் பாஸ்கர் சக்தி, செயற்குழு உறுப்பினர் நவீன் ஆகியோர் சந்தித்தோம்.

“நீங்கள் நமது சங்கத்தில் உறுப்பினராக இருப்பது சங்கத்திற்குப் பெருமை” என்ற எங்களது வேண்டுகோளை இருவரும் உடனடியாக ஏற்றுக்கொண்டு, விண்ணப்பப் படிவத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கையெழுத்திட்டார்கள். எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் இருவருக்கும் ஒரு பேனா அன்புடன் வழங்கப்பட்டது.

நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணையும் தகுதியுடன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குப் பங்களித்து வரும் பிரமுகர்களைச் சந்தித்து, அவர்களைச் சங்கத்தில் இணைக்கும் நமது பணி தொடர்ந்து நடைபெறும். 

#SWAN

Pageviews