Gondhal திரை விமர்சனம்
இயக்குநர் சந்தோஷ் தவாகர் இயக்கத்தில், 2027 ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம் கோந்தல் (Gondhal).
மகாராஷ்டிராவின் கிராமம் ஒன்றில் புதுமணத் தம்பதியருக்காக இரவு முழுவதும் நடைபெறும் 'கோந்தல்' என்ற பாரம்பரியச் சடங்கைச் சுற்றிகதை நகர்கிறது. ஆனந்த் என்ற வசதியான குடும்பத்தை சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்யும் சுமனுக்கு, அந்த வாழ்க்கையில் விருப்பமில்லை. அவளது மனம் சஹிபா என்ற நாட்டுப்புறக் கலைஞரிடம் இருக்கிறது. இதற்கிடையில் சர்ஜே ராவ் என்ற ஊர்த் தலைவரின் மகனுக்கும் சுமன் மீது தீராத ஆசை இருக்கிறது. தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க நினைக்கும் சுமன், சர்ஜேராவின் பலவீனத்தையும் சடங்கு மீதான அவனது ஈடுபாட்டையும் பயன்படுத்தி தான் விரும்பிய வாழ்க்கையை அடைய திட்டமிடுகிறாள். அவள் திட்டம் நிறைவேறியதா? அந்த மனிதர்கள் ஒவ்வொருவரின் நிஜ முகம் என்ன? என்பதை ஒரு இரவில் நடைபெறும் சம்பவங்கள் மூலம் சொல்வதே இந்த ‘கோந்தல்'.
கிஷோர் கடம், இஷிதா தேஷ்முக் மற்றும் யோகேஷ் சோஹோனி ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். சர்ஜே ராவாக நிஷாத் போயர் கவனம் ஈர்க்கின்றனர். அதிகார மமதையும், நாயகி மீதான ஆசையும் அவர் கண்களாலேயே வெளிப்படுத்துகிறார். சுரேஷ் விஸ்வகர்மாவின் நடிப்பும் கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கிறது. படத்தில் நடித்த அத்தனை பேருமே குறையில்லாத நிறைவான நடிப்பை வழங்கியுள்ளனர்.
மூத்த ஒளிப்பதிவாளர் அமலேந்து சௌத்ரியின் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரிய பலம். குறிப்பாக, படத்தின் ஆரம்பத்தில் வரும் சுமார் 25 முதல் 30 நிமிடங்கள் கொண்ட சிங்கிள்-ஷாட் (One-take shot) காட்சி சர்வதேசத் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் கிராமிய வாத்தியங்களின் தாளம் படத்தின் மிகப்பெரிய பலம்.
இயக்குநர் சந்தோஷ் தாவக்கர், மகாராஷ்ட்ராவின் பாரம்பரிய சடங்கை வெறும் பின்னணியாக மட்டும் பயன்படுத்தாமல், அதையே கதையை நகர்த்தும் முக்கியமான அம்சங்களாக மாற்றியிருக்கிறார். ஆரம்பத்தில் வரும் சிங்கிள் ஷாட் காட்சியிலேயே ஒரு சில கதாபாத்திரங்களையும் அந்தச் சமூகத்தின் அதிகார அமைப்பையும் மிகச் சிறப்பாக நமக்கு அறிமுகம் செய்து விடுகிறார்.
வழக்கமான மசாலா படங்களைத் தாண்டி, அழுத்தமான திரைக்கதை மற்றும் கலைநயம் மிக்க திரில்லர் படங்களை விரும்புவோருக்கு 'கோந்தல்' ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.














0 comments:
Post a Comment