Paris Cafe திரை விமர்சனம்
வெளிநாட்டில் வேலை செய்யும் மகள் (அர்ச்சனா), தன் பெற்றோர் (குரு சோமசுந்தரம் - அனுமோல்) கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். அவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதற்காகத் தன் காதலனுடன் இந்தியா வருகிறார். தந்தை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன, பெற்றோர் பிரிந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பதை நோக்கி நகரும் கதையில், எதிர்பாராத திருப்பங்களுடன் சஸ்பென்ஸ் மற்றும் அரசியல் பின்னணிகள் வெளிவருகின்றன.
கதை நாயகனாக வரும் குரு சோமசுந்தரம், தனக்கே உரிய இயல்பான நடிப்பு மற்றும் மென்மையான பேச்சால் கவனிக்க வைக்கிறார். அறத்தின் பக்கம் நிற்கும் கதாபாத்திரத்தில் அனுமோல் நேர்த்தியாக நடித்துள்ளார். மகள் கதாபாத்திரத்தில் வரும் அர்ச்சனா மற்றும் காதலனாக வரும் விஜய் விஷ்வா ஆகியோரின் நடிப்பும் படத்திற்குப் பலம்.
கே-வின் பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம். தீஷ் ஜி-யின் ஒளிப்பதிவு காட்சியமைப்புகளுக்குத் தேவையான யதார்த்தமான அழகைக் கொடுத்துள்ளது.
இயக்குநர் சராஜ் சீலன் ஒரு அழுத்தமான, சமூக அக்கறையுள்ள ஒரு கதையை சொல்ல முயற்சி எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். உறவுச் சிக்கல்களையும், சமூகத்தில் அதிகம் பேசப்படும் சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். நல்ல சமூகக் கருத்து, சஸ்பென்ஸ் மற்றும் சிறந்த நடிப்பிற்காக இந்த 'பாரிஸ் கஃபே' திரைப்படத்தை ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம்.











0 comments:
Post a Comment