பெர்ஜெயா குழும நிறுவனங்களும் ரேடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் ‘டாக்ஸி’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டனர்.


இவ்விழாவில் பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆலோசகரான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வின்சென்ட் டான், மஹா பெர்ஜெயா ஃப்ரோஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சப்ரினா சியாமலா பின்தி அப்துல்லா, புவான் ஸ்ரீ வோங் யோக் லியான் மற்றும் மலேசிய மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், கிரீன் பேக்கெட் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஷாஹுல் ஹமீத் பின் ஷேக் தாவூத் ஆகிய நால்வரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவுக்குத் தலைமை தாங்கினர்.


இயக்குநர் மணி ரத்னமும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். இயக்குநர் தனா, மணி ரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். பொதுவாக குறைவாக பேசும் இயல்புடைய இயக்குநர் மணி ரத்னம், தனாவின் முயற்சியை வெகுவாகப் பாராட்டியதுடன், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


 தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார், சிறப்பு விருந்தினர்களையும் விழாவுக்கு வருகை தந்திருந்த முக்கியப் பிரமுகர்களையும் வரவேற்றார்.


முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்தியத் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்திருப்பதுடன், ஆக்‌ஷன் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் நடிகர் சரத்குமாரின் 177 ஆவது திரைப்படமான ‘டாக்ஸி’ அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகிறது. வெவ்வேறு தலைமுறைகளைக் கடந்தும் ஆக்‌ஷன் ஹீரோவாகத் தனது செல்வாக்கையும் ரசிகர்களின் வரவேற்பையும் தக்கவைத்திருக்கும் அவரது பயணத்தில் ‘டாக்ஸி’ திரைப்படம் மற்றுமொரு முக்கியமான திரைப்படமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் மூலம் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் தனா இப்படத்தை இயக்குகிறார். ஐ.நவீன்குமார் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதுகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும், சண்டைக் காட்சிகளை சில்வா மாஸ்டர் வடிவமைக்கிறார். சங்கத் தமிழன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ஹர்ஷினி ரவிச்சந்தர் ஆடை வடிவமைப்பாளராகவும், உத்ரா மீனாட்சி கொங்கரா நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.


படைப்பாற்றல், அனுபவம் மற்றும் தயாரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இரு நிறுவனங்கள் முதன்முறையாகத் திரைப்படத் தயாரிப்பில் கைகோத்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகை பவ்யா திரிகா. இதுவரை அவர் நடித்த படங்கள் வெவ்வேறு கதைக்களங்களையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டிருந்தன. அந்த வகையில், தற்போது அவர் நடித்துள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் அவருக்கு மறக்க முடியாத அனுபவம் தந்துள்ளது. 


சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னடா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை மலர்விழி நடேசன் இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை பவ்யா திரிகா பகிர்ந்துகொண்டுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “மலர்விழி மேமின் கதை சொல்லும் விதமும், படத்தின் மீதான அவரது பார்வையும்தான் முதலில் என்னை இந்தப் படத்துடன் இணைத்தது. பெண் இயக்குநருடன் பணிபுரிய போகிறோம் என்பதும், ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் கதைக்களமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


பெண் இயக்குநர்கள் அதிக அளவில் திரைப்படங்களை இயக்க வேண்டும். ஒரு படத்தைப் பற்றிய விவாதம் நடக்கும்போது, அதை இயக்கியவர் பெண் என்பதைக் கடந்து, அவரது படைப்பைப் பற்றியதாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.


படப்பிடிப்புத் தளத்தில் மலர் மேடம் அனைத்து கலைஞர்களிடமும் மிகவும் அன்பாகவும், அக்கறையுடனும் நடந்துகொண்டார். அதனால் படத்தில் பணிபுரிந்த அனைவரும் ஒத்துழைப்போடு வேலை பார்த்தோம். 


ஜெயப்பிரகாஷ் சார் மிகவும் எளிமையானவர், அனைவரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்.


என்னுடைய முதல் படத்திலேயே சந்தோஷ் பிரதாப்புடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். மீண்டும் அவருடன் இந்தப் படத்தில் இணைந்தது மகிழ்ச்சி அளித்தது. புஜிதாவும் மிகவும் இனிமையானவர். ஏற்கெனவே அறிமுகமானவர்களுடன் இணைந்து பணியாற்றியது போன்ற உணர்வு படப்பிடிப்புத் தளத்தில் இருந்ததால், அனைவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டது. அந்த நேர்மறையான சூழல் படப்பிடிப்பு முழுவதும் தொடர்ந்தது” என்றார்.


மேலும், இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் இதுவரை தனக்கு கிடைத்திராத புதிய அனுபவத்தைக் கொடுத்ததாகக் கூறும் பவ்யா திரிகா, சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு ஒத்துழைப்பும் தனக்கு பெரிதும் உதவியதாகத் தெரிவித்துள்ளார்.


இறுதியாக, “ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் 'சிக்னல் அட் 11.30'. இதுவரை இல்லாத புதிய அனுபவத்தை இந்தப் படம் அவர்களுக்குக் கொடுக்கும்” என்றார்.


மலர்விழி நடேசன் இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னடா, ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இப்படத்தை வழங்குகின்றனர்.


டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்புப் பணிகளையும், ஷெரிப் நடன அமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

 


மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், புஜிதா பொன்னாடா, பவ்யா திரிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


காதல் மற்றும் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் எதிர்பாராத திருப்பங்களும், உணர்வுபூர்வமான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு திரைக்கதை என்பது காகிதத்தில் இருக்கும் கற்பனை மட்டுமே. அதைத் திரைப்படமாக மாற்றுவது அதற்காக உழைக்கும் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும்தான். ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி ஒவ்வொரு காட்சியையும் படமாக்கிய விதம் கதைக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. இசையமைப்பாளர் டி. இமானின் இசை படத்தின் உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உதவியுள்ளது. பின்னணி இசையும் பாடல்களும் ஒவ்வொரு காட்சிக்கும் உயிரோட்டம் கொடுத்துள்ளன.


இந்தக் கதைக்கு உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடிய நடிப்பு தேவைப்பட்டது. அந்த வகையில் சந்தோஷ் பிரதாப் தனது கதாபாத்திரத்தை முழுமையான அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். பவ்யா திரிகா மற்றும் புஜிதா பொன்னாடா ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன் மற்றும் நடன இயக்குநர் ஷெரிப் ஆகியோரின் பங்களிப்பும் படத்தின் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்கும் உதவியுள்ளது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


படத்தின் ஒவ்வொரு திருப்பத்தையும், உணர்வுபூர்வமான காட்சிகளையும் ரசிகர்கள் திரையரங்கில் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், படத்தின் தலைப்புக்குப் பின்னால் இருக்கும் காரணம் கதையின் முக்கிய அம்சத்துடன் தொடர்புடையது என்பதால், அதனை இப்போது வெளியிட விரும்பவில்லை என்றும், அது ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் சிவானி சுப்ரமணியம் இப்படத்தை வழங்குகின்றனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும், ஷெரிப் நடன இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.


இப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 




திருநாளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ்!


‘லாரா’ திரைப்படத்தைத் தயாரித்து, நடித்தவர் மு. கார்த்திகேசன். தொடர்ந்து தனது எம். கே. பிலிம் மீடியா ஒர்க்ஸ் பி.லிட் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக ‘அறுவடை’ திரைப்படத்தைத் தயாரித்து, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.


தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமான மு. கார்த்திகேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.


இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்க, ராஜசிம்மன், கஜராஜ், அனுராமி, தீபா பாஸ்கர், கவிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஒளிப்பதிவு பிரேம்குமார் முருகேசன், இசை – ரகு ஸ்ரவன் குமார், படத்தொகுப்பு கே.கே. விக்னேஷ்,பாடல்கள் கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி,நடனம் – ஏ.எம்.ஜே,கலை இயக்கம் – ஜோதின் விஷாக் – அனுப்ஷா, சண்டைக்காட்சிகள் டி.ஆர்,இணை இயக்குநர் ஜெயன்.


படத்தின் கதை குறித்து இயக்குநர் மு. கார்த்திகேசன் கூறியதாவது:


"ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து, அது ஒட்டுமொத்த சமூகத்தையும் எப்படிச் சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டே இப்படத்திற்கு அறுவடை எனப் பெயரிட்டுள்ளோம்.


இப்படத்தின் க்ளிம்ப்ஸை நடிகர் நட்பி வெளியிட்டு படக்குழுவினருக்கு உற்சாகம் அளித்தார். காட்சிகளைப் பார்த்த அவர், மிகவும் சிறப்பாக இருப்பதாக மனதாரப் பாராட்டியதுடன், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தனது வாழ்த்துகளையும் படக்குழுவினருக்குத் தெரிவித்தார்.


கார்த்திகை தீபத் திருநாளின் சிறப்பான நாளில் வெளியான ‘அறுவடை’ திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

 



மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, சாகிஷ்ணா சேவியர் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அரிக்கொம்பன். மிதுன் மகேஷ்வரன் நீ கதாநாயகனாக நடித்துள்ளார் தேவகி கிருஷ்ணன் அறிமுக நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அப்பு குட்டி ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா 24.11.2026 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவின் தொடக்கத்திலேயே படக் குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பட குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது :


*இயக்குனர் மற்றும் நடிகர் மீதுன் மகேஸ்வரன் பேசும்போது,*


நடிகராகத் திரையுலகில் அறிமுகமாக வேண்டும் என்ற ஆசையுடன் வந்த எனக்கு, இன்று இயக்குநராகவும் இந்த மேடையில் நிற்பது மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அதே நேரத்தில், இந்தப் பயணம் மனதளவில் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.



இப்படத்தை இயக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது, இயக்குநராகப் பணியாற்றிய முன் அனுபவம் எதுவும் எனக்குக் கிடையாது. இதுவரை எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. நான் நடித்த திரைப்படங்களின் அனுபவங்களையே அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கினேன். நான் பணியாற்றிய அனைத்து திரைப்படங்களின் இயக்குநர்களையும் எனது குருவாகவே கருதுகிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட அனுபவங்களே இப்படத்தை உருவாக்குவதற்குப் பெரிதும் உதவின.


‘அரிகொம்பன்’ திரைப்படம் 1980-ஆம் ஆண்டின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தை உருவாக்குவதற்காகப் பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளோம். குறிப்பாக, படத்தில் இடம்பெறும் காட்டுப் பகுதி முழுவதும் அரங்குகளாக அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமங்கள், குளம் உள்ளிட்ட படத்தில் இடம்பெறும் அனைத்து இடங்களையும் கலை இயக்குநர் சிறப்பாக உருவாக்கியுள்ளார். இதற்காகச் சுமார் ஆறு மாதங்கள் உழைத்த அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யானை தொடர்பான காட்சிகளையும் அவரே உருவாக்கியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் எங்களைவிட அதிக நேரம் செலவிட்டு உழைத்தவர் அவர்தான். அவரது பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது.


இப்படத்தின் இசையமைப்பாளர் சாகிஷ்ணா சேவியர் எனது நீண்டகால நண்பர். அவரைப் பற்றிப் பேசுவதற்கு வார்த்தைகள் போதாது. இப்படத்தின் பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். படத்தைப் பார்க்கும்போது அவரது பின்னணி இசையின் வலிமையை ரசிகர்கள் உணர்வார்கள். அது படத்திற்கு யானை பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவாளர் அனீஷ் லால் கேரளத் திரையுலகில் சுமார் 15 முதல் 16 திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது அவருடைய முதல் தமிழ்த் திரைப்படம். கதையைக் கேட்டவுடன் இப்படத்தில் பணியாற்ற ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார். சாகிஷ்ணா சேவியர் மற்றும் அனீஷ் லால் ஆகிய இருவரும் தங்களது முழுமையான உழைப்பை வழங்கி, இப்படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். ஒரு கதையைத் தாளில் எழுதுவது எளிது. ஆனால், அதனைத் திரையில் காட்சிகளாக மாற்றி, ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது மிகப்பெரிய சவால். அந்தப் பணியை இருவரும் சிறப்பாகச் செய்துள்ளனர்.


மேலும், இப்படத்தில் நடித்த மூத்த நடிகர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின்போது பல சுவாரஸ்யமான அனுபவங்கள் கிடைத்தன. காட்டுப் பகுதியிலேயே அனைவரும் ஒன்றாக வாழ்ந்து பணியாற்றிய அனுபவம் என்றும் மறக்க முடியாததாக இருக்கும். படத்தில் பங்களித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நேரம் கருதி எனது உரையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். ‘அரிகொம்பன்’ திரைப்படம் நிச்சயம் வெற்றிகரமான படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம் என்றார்.


*இயக்குனர் சுப்ரமணிய சிவா பேசும்போது,*


‘அரிக்கொம்பன்’ திரைப்படம் இயற்கையையும் வனத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்!


பெரிய பின்னணியைக் கொண்ட குடும்பங்களில் பிறந்தவர்களிடம் பண்பும் அன்பும் பொறுப்புணர்வும் ஒருங்கே அமைந்திருப்பது அரிதான விஷயம். அத்தகைய பண்புகளைக் கொண்டவர்களில் மிதுனும் ஒருவர். தனது தந்தை ஒப்படைத்த பொறுப்பை நூறு சதவீதம் நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. திருக்குறளில் இடம்பெறும் 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி' என்ற கருத்துக்கு எடுத்துக்காட்டாக மிதுனின் செயல்பாடு அமைந்துள்ளது.

சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகிய வனப்பகுதியையும், அங்கு வளர்க்கப்படும் பல்வேறு வகையான மரங்களையும் பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. குறிப்பாக, செம்மரம் மற்றும் அகர் மரம் போன்றவற்றை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை கேள்விப்பட்டிராத பல விஷயங்களை அந்த வனப்பகுதி அறிமுகப்படுத்தியது.

அந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கிராமத்தைக் காணும்போது, அது திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட அரங்கம் என்ற எண்ணமே ஏற்படவில்லை. உண்மையான மலைவாழ் மக்களின் கிராமத்திற்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்தியது. அங்கிருந்த மக்களையே படத்தில் பயன்படுத்திய விதமும், அவர்களின் இயல்பான தோற்றமும் பாராட்டுக்குரியவை. குறிப்பாக, கலை இயக்குநர் தினேஷின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.

இயக்குநர் மிதுன் எந்த இயக்குநரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை என்றாலும், படத்தில் வெளிப்பட்ட அவரது புரிதலும் காட்சியமைப்பும் ஆச்சரியமளிக்கின்றன.

உலகத்தை நாம் பார்க்கும் பார்வையில்தான் நமது தரம் வெளிப்படுகிறது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக ரவீந்திரநாத் தாகூருக்கும் சிறுவன் சத்யஜித் ரேவுக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை நினைவுக் கூறலாம். உலகத்தைப் புரிந்துகொள்வதற்காகப் பல இடங்களுக்குச் சென்றாலும், இறுதியில் தனது வீட்டு வாசலில் இருக்கும் புல்லின் நுனியில் தங்கியிருக்கும் பனித்துளியிலேயே இந்தப் பிரபஞ்சத்தின் அழகைக் காண முடியும் என்ற ஆழமான கருத்து அதில் இடம்பெற்றுள்ளது.


சிறிய விஷயங்களைக்கூட முழுமையாகப் புரிந்துகொண்டு ரசிக்கத் தெரிந்தவர்களால்தான் பெரிய விஷயங்களையும் சிறப்பாகப் படைக்க முடியும். அந்த வகையில், இயற்கையையும் காடுகளையும் அவற்றில் வாழும் மனிதர்களையும் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட படமாக 'அரிக்கொம்பன்' அமைந்துள்ளது.


காடுகளைப் பாதுகாப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் உயிரோட்டத்திற்கும் மழை வளத்திற்கும் காடுகள் மிக முக்கியமானவை. காடுகளின் பாதுகாப்பு என்பது மனித வாழ்க்கையின் பாதுகாப்புடன் தொடர்புடையது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அவர்களையே மையமாகக் கொண்டு அழகாகப் படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் டிரெய்லரை உருவாக்கிய குழுவினருக்கும், இசையமைப்பாளருக்கும் வாழ்த்துகள். இசை மிகவும் அருமையாக அமைந்துள்ளது. அதேபோல் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது திறமையும் அனுபவமும் வெளிப்படுகின்றன.

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தையும் நினைவுகூர வேண்டும். சுமார் 28 நிமிடங்களுக்குப் பிறகே கதாநாயகன் அறிமுகமாகும் வகையில் உருவாக்கப்பட்ட அந்தப் படம், இன்றளவும் தனித்துவமான படைப்பாகத் திகழ்கிறது. காடுகள் மற்றும் யானைகளை மையமாகக் கொண்ட அந்தப் படத்திற்கும் 'அரிக்கொம்பன்' படத்திற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் செயல்பாடும் பாராட்டுக்குரியது. பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதன் வெற்றிவிழாவைச் சென்னையில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், தான் தயாரித்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஊருக்கே சென்று, அங்குள்ள சுமார் 10,000 மக்களுக்கு விருந்து அளித்து வெற்றிவிழாவைக் கொண்டாடியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. திரைப்படம் உருவாக உதவிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு நின்றுவிடாமல், வெற்றியையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சிறந்த முன்னுதாரணம்.

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைய வேண்டும்.


யானைகளின் சிறப்புகள் குறித்துப் பார்க்கும்போது, அவற்றின் நீண்ட ஆயுள், உணவுப் பழக்கம், உடல் அமைப்பு மற்றும் சமூக வாழ்க்கை வியப்பை ஏற்படுத்துகின்றன. யானைகள் மனிதர்களைப் போலவே ஆழமான உணர்வுகளையும் அன்பையும் வெளிப்படுத்தக்கூடியவை. கூட்டமாக வாழும் இயல்பும் குடும்பப் பிணைப்பும் அவற்றிடம் அதிகம் காணப்படுகின்றன. உலகிலேயே நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கான யானையை மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கியிருப்பது சிறப்பான முயற்சி. திருக்குறளில் இருக்கும் ஒரே விலங்கு யானை. திருவள்ளுவர் தனது குறள்களில் யானையை 3 இடங்களில் குறிப்பிட்டுள்ளார். யானையின் முக்கியத்துவத்தையும் அதன் மீதான மனிதர்களின் மதிப்பையும் எடுத்துரைக்கும் வகையில் 'அரிக்கொம்பன்' திரைப்படம் உருவாகியுள்ளது.

'அரிக்கொம்பன்' என்ற பெயரின் பின்னணியும் சுவாரஸ்யமானது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அரிசிக் கடைகளுக்கும் வீடுகளுக்கும் சென்று அரிசியை உணவாக எடுத்துக்கொண்ட யானை ஒன்று 'அரிக்கொம்பன்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் கம்பம் பகுதி வரை அந்த யானை வந்த சம்பவங்களும் கவனம் பெற்றன. அந்த யானையின் கதையின் பின்னணியிலும் திரைப்படம் உருவாகியிருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படப்பிடிப்பிற்காக ஒரு மாத காலம் அங்கு தங்கியிருந்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த ஒரு மாதமும் தூய்மையான காற்று, இயற்கையான உணவு, மரங்கள் நிறைந்த சூழல் என நல்ல ஆரோக்கியமான மனநிலையுடன் வாழ்ந்தேன். இயற்கையோடு இணைந்து வாழ்வதன் மகத்துவத்தை அந்த அனுபவம் உணர்த்தியது.

படத்தில் நடித்த கதாநாயகியின் நடிப்பும் பாராட்டுக்குரியது. கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணைப் போலவே மிகவும் இயல்பாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற நடிகர் தங்கம், நடிகர் அப்புக்குட்டி, முருகன் உள்ளிட்ட கலைஞர்களின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.

குறிப்பாக, நடிகர் முருகனின் அறிவாற்றல் பாராட்டுக்குரியது. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள பிடித்த பத்து, யாத்திரைப் பத்து, அச்சப் பத்து ஆகியவற்றின் சிறப்புகளை அறிமுகப்படுத்தியவர் முருகன். அவரது நடிப்பும் அறிவும் பாராட்டுக்குரியவை.

தனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கிய தினா சாருக்கும், இயக்குநர் எழில்குமாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற மறக்க முடியாத படைப்பை வழங்கிய இயக்குநர் எழில்குமாரின் திரைப்படப் பயணம் பாராட்டுக்குரியது.

'அரிக்கொம்பன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இயக்குநர் மிதுன் இதே அர்ப்பணிப்புடனும் புரிதலுடனும் தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும். இறைவன், இயற்கை மற்றும் பிரபஞ்சத்தின் ஆசீர்வாதத்துடன் இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


*இசையமைப்பாளர் சாகிஷ்ணா சேவியர் பேசும்போது,*


நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், சாதனையாளர்கள், கரு. நாகராஜன் சார் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கிய மிதுன் சார் ஆகிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை உயர்த்திப் பேசும் வகையில் எனது பங்களிப்பு அமைந்துள்ளதாக மிதுன் சார் குறிப்பிட்டது அவரது பெருந்தன்மை. ஆனால், இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்புகளும் அனுபவங்களும் ஏராளம்.


ஜி.வி. பிரகாஷ் குமார், மறைந்த தேனிசைத் தென்றல் தேவா மற்றும் சின்மயி ஆகியோர் இப்படத்தின் பாடல்களைப் பாடியுள்ளனர். குறிப்பாக, கவிஞர் கபிலனுடன் இணைந்து பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு எனக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர் 'உன் சமையலறையில்' பாடலை எழுதியபோது எனக்கு 11 வயது. அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். இன்று அவருடன் அமர்ந்து பாடல் வரிகளைப் பெறும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம். அவர் ஒரு சிறந்த படைப்பாளி.


'செங்காட்டு தேவதையே என் கோதையே' பாடலுக்காக நான் உருவாக்கிய ஆரம்பகட்ட இசை வடிவத்தில், 'உன் உசுர குத்தகைக்கு எடுத்துக்கிறேன்' என்ற வரியைப் பயன்படுத்தியிருந்தேன். அதைக் கேட்ட கபிலன், இசை வடிவத்தை அப்படியே அனுப்பியிருக்கலாம் என்று கூறிவிட்டு, பாடலின் சந்தங்களையும் சொற்களின் அசைகளையும் எளிமைப்படுத்தி, 'செங்காட்டு தேவதையே' என்று அழகான இசைநயத்துடன் மாற்றியமைத்தார். அதேபோல், பாடலின் தொடக்கத்தில் நான் உருவாக்கிய 'கள்ளச் சிரிக்கி, கண்ணு முறுக்கி' என்ற வரிகளையும் இசைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்தார். ஒரு சிறந்த பாடலாசிரியருடன் நேரடியாக அமர்ந்து பணியாற்றும்போதுதான் அவரது படைப்பாற்றலின் ஆழத்தை உணர முடியும். சுமார் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு பாடலை எழுதி வழங்கிய அவரது திறமை வியப்பளித்தது. இத்தகைய அனுபவத்தை வழங்கிய மிதுன் சார் மற்றும் கருணாகராஜன் சார் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


தேனிசைத் தென்றல் தேவா குறித்துப் பேசாமல் இந்த நிகழ்வை நிறைவு செய்ய முடியாது. இப்படத்தில் அவர் பாடியிருக்கும் பாடலை ஒரு சிறப்பான அஞ்சலியாகவே பார்க்கிறேன். அவரைப் பற்றி பலரிடமும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் முற்றிலும் தனித்துவமானது. சுமார் 400 திரைப்படங்களுக்கு இசையமைத்த ஒரு மூத்த இசையமைப்பாளரிடம் பாடல் திருத்தங்களைக் கூறுவதற்குத் தயக்கமாக இருந்தது. அப்போது, எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தங்களைக் கூறலாம்; அதற்கேற்ப பாடித் தருகிறேன் என்று அன்புடன் கூறி எனக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கினார். அவரது மேதமை மட்டுமின்றி, எளிமை, அன்பு, கனிவு ஆகிய பண்புகளும் என்னைக் கவர்ந்தன. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இத்தகைய சாதனையாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். இதனை எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். இன்று அவர் நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது ஆசீர்வாதம் எப்போதும் எங்களுடன் இருக்கும்.

படத்தின் மூன்றாவது பாடலான 'கர்ஜிக்கும்' என்ற தலைப்புப் பாடலை மணிகண்டன் எழுதியுள்ளார். மிகச் சிறப்பாகப் பாடல் வரிகளை உருவாக்கியிருக்கிறார். இது அவரது முதல் திரைப்படம் என்பதால், அவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடல்களை எழுதிப் புகழ்பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

எனது ஒலிப்பதிவுப் பொறியாளர் கிபிக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பலரும் ஒரு திரைப்படத்தில் பணியாற்றிவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், இறுதிவரை நம்முடன் பயணிப்பவர் ஒலிப்பதிவுப் பொறியாளர்தான். கடைசி நேரத்தில்கூட பாடல்களின் ஒலிக்கலவையில் சில மாற்றங்களைக் கேட்டபோது, அவற்றைச் சிறப்பாகச் செய்து கொடுத்த கிபியின் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது.

இந்தத் திரைப்படம் நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் கண்டு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சரிகம இசை நிறுவனத்தின் மூலம் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று வெளியாகியுள்ளன. பாடல்களுக்கும் திரைப்படத்திற்கும் உங்களது ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.


*ஒளிப்பதிவாளர் அனிஷ் லால் பேசும்போது,*


சுமார் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியபோது ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது. அதன்பிறகு ஹிந்தித் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்தபோது இந்தப் படத்தை இயக்கப்போவதாகவும், அதில் இணைந்து பணியாற்ற முடியுமா என்றும் கேட்டேன். கதையைக் கேட்டவுடன் மிகவும் பிடித்தது. இயக்குநர் கதையைச் சிறப்பாக விவரித்துக் கூறினார்.

இந்தத் திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று. படப்பிடிப்புத் தளத்தில் பெரிய அளவிலான வசதிகள் எதுவும் இல்லாத சூழலிலும், ஒட்டுமொத்த படக்குழுவினரும் ஒரே இடத்தில் தங்கி, ஒற்றுமையுடன் பணியாற்றினோம்.

சுமார் 25 ஆண்டுகளாகத் திரைத்துறையில் பயணித்து வரும் எனக்கு, உணர்ச்சிகரமான காட்சிகளைப் படமாக்கும்போது கண்ணீர் மல்கப் பணியாற்றிய ஃபோகஸ் புல்லரைப் பார்ப்பது இதுவே முதல் அனுபவம், அந்த அளவுக்கு அவர் படத்தின் காட்சிகளுடன் ஒன்றிடுவேன். படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் பார்வையாளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்ததற்கும் அவருடைய பங்களிப்பு முக்கியக் காரணம்.


இந்தப் படத்தின் பின்னணியில் எனக்கு உறுதுணையாக இருந்த தினேஷுக்கு நன்றி. அவர் வழங்கிய பின்னணியையும் ஆதரவையும் பயன்படுத்திக்கொண்டே எனது பணியைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ள முடிந்தது. மேலும், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட தனது குழுவினருக்கும் நன்றி.

குறிப்பாக, டிராக் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஏழுமலை அர்ப்பணிப்போடு பணியாற்றினார். முதல் நாளிலேயே படத்தின் தேவைகளைப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு சிறிய காட்சிக்கும் தேவையான அசைவுகளையும் கவனித்து உழைத்ததார். இரண்டாவது நாளிலிருந்து எனது பணிகளிலும் உறுதுணையாக நின்று, படத்தின் வெற்றிக்காக முழுமையாகப் பங்களித்தார்.

இறுதியாக, இந்தத் திரைப்படம் வழக்கமான வகையிலான தனித்தனிக் குழுக்களின் உழைப்பாக இல்லாமல், அனைவரும் ஒரே அணியாக இணைந்து பணியாற்றியது உண்மையான கூட்டுமுயற்சி. படத்தின் வெற்றிக்குப் பங்களித்த அனைவருக்கும் நன்றி என்றார்.


*கதாநாயகி தேவிகா கிருஷ்ணன் பேசும்போது,*


இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியதற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்தபோது, கல்லூரிக்குள் நுழைவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சுப்பிரமணி சார், முருகதாஸ் சார், அப்புக்குட்டி சார், ஆத்ரா மேடம், பாஸ்கர் சார் எனப் பல மூத்த மற்றும் அனுபவமிக்க கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய உயரத்தை அடையும் என்று நம்புகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து இப்படத்தை வெற்றிப் படமாக்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


*நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,*


திரைப்படங்களில் தொடர்ந்து தீவிரமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதால், இந்த மேடையிலாவது நகைச்சுவையாகப் பேசுகிறேன். இந்தப் படத்தில் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே 'எங்க காட்டுல மழை' திரைப்படத்தில் மிதுனுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். மிதுன் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது, கதையைக் கேட்டுத் தனது சம்மதத்தைத் தெரிவித்தேன். கதையை மிதுனே விவரித்தபோது, அவரே இப்படத்தின் இயக்குநர் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்தார். இயக்கம் என்பது மிகப்பெரிய பொறுப்பு என்பதால், மிதுன் இந்த முயற்சியில் இறங்குவது குறித்து ஆரம்பத்தில் எனக்குச் சிறிய தயக்கம் இருந்தது. ஆனால் கதையின் மீது இருந்த நம்பிக்கை மகிழ்ச்சியளித்தது. தனது கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருந்ததால் கதையைக் கேட்டதுமே நடிப்பதற்கு ஆர்வம் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, காடுகளின் பின்னணியில் உருவாகும் திரைப்படத்திற்கான அரங்குகள் மற்றும் சூழலை அமைப்பது மிகவும் கடினமான பணி என்றாலும், படப்பிடிப்புத் தளத்தை நேரில் பார்த்தபோது மிதுனின் இயக்கத் திறன் மீது நம்பிக்கை ஏற்பட்டது.

சிவா, முருகதாஸ் உள்ளிட்ட கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக அமைந்தது, படப்பிடிப்பு முடிந்ததும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாகப் பேசிப் பழகினோம். இப்படத்தில் கேரவன்கள் இல்லாமல் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தது கலைஞர்களிடையே நல்ல நட்பையும் நெருக்கத்தையும் உருவாக்கியது.

கலை இயக்குநரின் பணியைப் பாராட்டிய அவர், படப்பிடிப்பிற்காக அமைக்கப்பட்ட அரங்குகள் செயற்கையாகத் தெரியாமல், உண்மையான கிராமத்திற்குள் சென்று படப்பிடிப்பு நடத்தியதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. படப்பிடிப்புத் தளத்தில் அவ்வப்போது பாம்புகள் தென்பட்டது. ஆனால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.. அதிகாலையில் மயில்களின் ஒலியைக் கேட்டபடி இயற்கையான சூழலில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

மிதுனின் நடிப்பும் உழைப்பும் இப்படத்தில் பெரிதும் பேசப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், திரைப்படம் வெற்றிபெற அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.


*நடிகர் ஆடுகளம் முருகதாஸ் பேசும்போது,*


இந்தத் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த மிதுன் மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். சிறந்த திரைப்படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.


யானையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் வெற்றிபெறுவது வழக்கம். யானை கர்ப்பமாகி குட்டி ஈனுவதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்படுவதைப் போல, இந்தத் திரைப்படத்தையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறேன். யானையின் ஆயுட்காலம் 60 முதல் 70 ஆண்டுகள் வரை இருப்பதைப் போல, இப்படமும் நீண்ட காலம் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் என்றும், திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டத்தை மீண்டும் அனைவரும் இணைந்து கொண்டாடுவோம் என்றார்.


மேலும், யானை இடம்பெற்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு விஜய் அண்ணனின் கொடியிலும் யானை இடம்பெற்றிருக்கிறது. இப்படத்திற்காக ஒட்டுமொத்தக் குழுவினரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். எனக்கு இத்திரைப்படத்தில் சிறப்பான வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் நன்றி என்றார்.


*தயாரிப்பாளர் பைஜு பேசும்போது,*


அரிகொம்பன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.


*நடிகர் அஜய் பேசும்போது,*


இந்தப் படத்தில் வில்லனாக என்னை அறிமுகப்படுத்திய மிதுனுக்கு முதலில் நன்றி. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தன்னை அழைத்தபோது ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஒரு கதாநாயகனுக்கு இணையான வலுவான வில்லன் கதாபாத்திரம் அமைந்தால்தான் கதாநாயகனின் வெற்றி சிறப்பாக வெளிப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


மிதுனும் தொடர்ந்து ஊக்கமளித்து, எனக்குள் இருந்த நடிப்புத் திறனை மீண்டும் வெளிக்கொண்டு வந்தார். ஒவ்வொரு காட்சியிலும் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை மிதுன் விளக்கிய விதத்தையும், என்னைத் திரையில் அழகாகக் காட்டுவதாகச் சவாலேற்றுப் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அனியின் உழைப்பு பாராட்டுக்குரியது.


மேலும், திரைப்படத்தில் எனக்கான காட்சிகளுக்கு மிகச்சிறப்பான பின்னணி இசையை வழங்கிய இசையமைப்பாளருக்கு நன்றி. அவரை நேரில் சந்தித்திராத நிலையிலும், படத்தைப் பார்த்தவர்கள் இசையமைப்பாளர் எனது நண்பரா என்று கேட்டார்கள்.


என்னுடன் நடித்த அனைத்து கலைஞர்களும் தனது தவறுகளைப் பொறுத்துக்கொண்டு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவர்களின் ஆதரவால்தான் இந்த மேடையில் நிற்க முடிந்தது என்றார்.


 *நடிகர் எதிர்நீச்சல் விமல் பேசும்போது,*


‘அரிக்கொம்பன்’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய மிதுன் சாருக்கு எனது நன்றி. இ

 

நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹலோ காதல்’. காதல், நகைச்சுவை மற்றும் அழகான உணர்வுகள் நிறைந்த ஃபீல் குட் (Feel Good) திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்றைய தலைமுறையினரின் காதல் உணர்வுகளையும், உறவுகளின் அழகையும் வெளிப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ஆர்யா, சதீஷ், கராத்தே கார்த்தி, யுவராஜ் கணேஷ், சுனில் கார்த்திக், விஜே பப்பு, முத்தமிழ், வினோதினி, நிகிலா விமல் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.


இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில்,“‘ஹலோ காதல்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. இப்படத்தில் நடித்து தயாரித்திருக்கும் ஜாமுடன் இணைந்து எனது திரைப் பயணத்தைத் தொடங்கினேன். ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’ எனத் தொடர்ந்து இருவரும் இணைந்து பல முக்கியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளோம். மலையாளத்தில் வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் நிகில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ‘ராஜா ராணி’ படத்தைப் போலவே இனிமையான காதல் கதையைக் கொண்டுள்ளது. ஆர்யா, நிகிலா, வைஷ்ணவி ஆகிய மூவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படத்தில் ஆர்.ஜே. பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ‘கண்ணும் கண்ணும்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதற்கான பின்னணி இசைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ஹலோ காதல்’ திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகிறது. ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து இப்படத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.


கராத்தே கார்த்தி பேசுகையில், “இந்தப் படம் எனக்கு மூன்று விதங்களில் சிறப்பானது. முதலாவதாக, கிராமத்துப் பின்னணியில் தென்காசி பேச்சு வழக்கில் என்னை நடிக்க வைத்த இயக்குநர் நிகில் முரளி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. இரண்டாவதாக, ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் இயக்கத்தில் ‘சித்திரை செவ்வானம்’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் இணைந்து முதன்முறையாக ஸ்டண்ட் காட்சியில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. மூன்றாவதாக, ஷெரிஃப் மாஸ்டர் என்னை நடனமாட வைத்துள்ளார். கதாநாயகன் ஆர்யா சார் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார். பல ஆலோசனைகளையும் டிப்ஸ்களையும் வழங்கி வருகிறார். அவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.


யுவராஜ் கணேஷ் பேசுகையில், “என் கதாபாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் நிகில் ப்ரோவுக்கு நன்றி. சிறு வயதிலிருந்தே ‘பட்டியல்’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘நான் கடவுள்’ போன்ற படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இன்று ஆர்யா சாருடன் இணைந்து நடிப்பது எனது நடிப்புப் பயணத்தில் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். நிகிலா மேமுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும், வைஷ்ணவி மேமுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.


சுனில் கார்த்திக் பேசுகையில், “இது எனது முதல் மேடை அனுபவம். இப்படத்தில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நிகில் சார், ஆர்யா சார், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.


விஜே பப்பு பேசுகையில் ,“இன்று மேடையில் பேச அழைக்கப்படுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிறுவயதில் எனது அப்பாவுடன் ஜாக்கிங் செல்லும்போது ஆர்யா சாரையும் ஜாக்கிங் மற்றும் சைக்கிளிங் செய்வதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட இடத்திலிருந்து இன்று ஆர்யா சாரின் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதை முதலில் வீட்டில் சொன்னபோது அப்பா கிண்டலாகப் பேசினார். வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் ஒரு விஷயம் என்றாவது ஒருநாள் நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அனைவருக்கும் நன்றி. படத்தை அனைவரும் பாருங்கள்” என்றார்.


முத்தமிழ் பேசுகையில், “‘குடும்பஸ்தன்’ படத்திற்குப் பிறகு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். சிவா மற்றும் சிவபிரகாஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் நிகில் சாரைச் சந்தித்து இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏற்கெனவே ஜீவா சாருடன் நடித்திருந்தாலும், ஆர்யா சாருடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆர்யா சாரும் நிகிலா மேமும் மிகவும் நட்பாகவும் கலகலப்பாகவும் பழகினார்கள். அதனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடிக்க முடிந்தது. படப்பிடிப்பின்போது ‘குடும்பஸ்தன்’ படம் குறித்தும் ஆர்யா சாரிடம் பேசினேன். ‘சர்வம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் பார்த்தது போலவே இப்போதும் ஆர்யா சார் இருக்கிறார். அவருடைய அறிவுரையால் எனது உடல் எடையையும் குறைத்தேன். நிகிலா மேம், நிகில் முரளி சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.


நடிகை வினோதினி பேசுகையில், “இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆர்யா சாரின் படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நிறைய பிரார்த்தனை செய்திருக்கிறேன். எனது இரண்டு குழந்தைகளுக்கும் ஆர்யா சாரை மிகவும் பிடிக்கும். படப்பிடிப்புத் தளத்தில் இதுபற்றிக் கூறியவுடன், ஆர்யா சார் உடனடியாக வீடியோ கால் மூலம் எனது குழந்தைகளிடம் அன்பாகப் பேசினார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைய காலகட்டத்திலும் மிகவும் எளிமையாகப் பழகும் ஆர்யா சாரின் படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் மற்றும் நன்றி” என்றார்.


கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன் பேசுகையில், “சந்தானம் சார் படங்களில் தொடர்ச்சியாகப் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் வாய்ப்பளித்த ஆர்யா சாரைச் சந்தித்தபோது, என்னைப் பார்த்து ரைட்டர் பொன் பார்த்திபன் போல இருப்பதாகக் குறிப்பிட்டார். இது ஓர் அற்புதமான காதல் கதை என்பதால், அதற்கேற்ப அழகான செட்கள், லொகேஷன்கள் மற்றும் இன்டீரியர்களை உருவாக்கியுள்ளோம். கிஷோர் சார் மற்றும் மதன் ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவாக இருந்தனர். ஜீவா சார் ஒவ்வொரு காட்சியையும், பாடல்களையும், புகைப்படங்களையும் மிக அழகாகப் படமாக்கியுள்ளார். இயக்குநர் நிகில் சாரின் திரைக்கதை, சிவா மற்றும் ஆர்ட் குழுவினரின் திட்டமிட்ட உழைப்பு, நடன இயக்குநரின் சிறப்பான பணி என அனைத்தும் படத்திற்கு வலுசேர்த்துள்ளன. சினிமா ரசிகர்களுக்குப் பிடிக்கும் சுவாரசியமான காதல் படமாக இது இருக்கும். அனைவருக்கும் நன்றி” என்றார்.


சண்டை இயக்குநர் சில்வா பேசுகையில்,“இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இருந்தாலும், ஆர்யா சாரின் நெருங்கிய நண்பர் என்பதால் எனக்கு ஒரு சண்டைக் காட்சியில் பணியாற்ற வாய்ப்பளித்த நிகில் சாருக்கு நன்றி. பல நடிகர்கள் வெற்றிக்குப் பிறகு தங்களது உடலைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் ஆர்யா சார் விளையாட்டுப் பிள்ளை போலத் தெரிந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உடலைச் செதுக்கி வருகிறார். அவருடைய நட்பு வட்டாரமும் சிறப்பானது. ஜீவா சங்கர், மோகன் சார், நிகில் சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ் சார் தயாரிப்பு, நடிப்பு, இசையமைப்பு என மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.


ஆடை வடிவமைப்பாளர் நௌஷத் அகமது பேசுகையில், “ஆர்யா சாருடன் ‘வேட்டுவம்’ படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. தொடர்ந்து ‘சார்பட்டா 2’ வரை எங்களது பயணம் தொடர்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆர்யா சாருக்கு நன்றி. இப்படத்தில் இவ்வளவு தூரம் பயணிக்க உறுதுணையாக இருந்த நிகில் ப்ரோவுக்கும், எனது குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.


படத்தொகுப்பாளர் பினு நெப்போலியன் பேசுகையில், “இது எனது முதல் தமிழ்த் திரைப்படம். எனக்கு இது ஒரு கனவு நனவான தருணம். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் நிகில், ஏ.ஜே.எஸ்.ஆர். கிஷோர் சார் மற்றும் மதன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


நடன இயக்குநர் எம். ஷெரிஃப் பேசுகையில், “ஆர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தில் ‘கண்ணும் கண்ணும்’ உள்ளிட்ட மூன்று பாடல்களுக்கு நடன அமைப்பு செய்துள்ளேன். ஜீவா சங்கர் சார் ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகப் படமாக்கியுள்ளார். அறிமுகப் பாடலைப் பிரம்மாண்டமாக உருவாக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. இயக்குநர் நிகில், ஜி.வி. பிரகாஷ் சார், செல்வா மாஸ்டர், அருண், மதன், கிஷோர் சார், நிகிலா, ஷாம் சார், சதீஷ் சார் மற்றும் அபிஷேக் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பாண்டிச்சேரியில் படமாக்கிய அனுபவம் எனக்குப் புதுமையாக இருந்தது” என்றார்.


ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர் பேசுகையில் , “இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு நேர்மறையான ஃபீல் குட் திரைப்படம் ஜாம் மூலமாகக் கிடைத்துள்ளது. ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் போது ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது. இப்படத்தின் மூலம் ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு ஜி.வி. பிரகாஷ் சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. கதையையும் காட்சிகளின் விவரங்களையும் மிகத் தெளிவாக வழங்கிய இயக்குநர் நிகில், தயாரிப்பாளர்கள் கிஷோர் மற்றும் ஜாம் ஆகியோரின் முழு ஒத்துழைப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவை சிறப்பாக இருந்தன. நடன இயக்குநர் ஷெரிஃப், எடிட்டர் பினு, செல்வா மாஸ்டர், நௌஷத், கலை இயக்குநர் மோகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. பாண்டிச்சேரியில் புதிதாக உருவாக்கப்பட்ட லொகேஷன்களில் படமாக்கிய அனுபவம் தனித்துவமானது. பாடல்களும் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.


நடிகர் சதீஷ் பேசுகையில், “ஆர்யா என்னை மிகவும் நேசிக்கும் ஒரு சிறந்த மனிதர். யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக நிற்பவர். என்னை ‘கஜினிகாந்த்’ படத்தில் நடிக்க வைத்ததோடு, ஆர்யாவின் திருமண விஷயத்திலும் நான் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் காலத்திலிருந்து எங்களது நட்பு தொடர்கிறது. ஜி.வி. பிரகாஷ், நிகிலா, வினோதினி மேடம் மற்றும் மாஸ்டர் ஆகியோரின் திறமைகளைப் பாராட்டுகிறேன். எனது கடினமான காலகட்டத்தில் ஜி.வி. பிரகாஷ் எனக்கு செய்த உதவியை மறக்க முடியாது. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் ‘ஹலோ காதல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.


தினேஷ் குமார் பேசுகையில், “மலேசியாவிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைச் சிறப்பாக அழைத்து அறிமுகப்படுத்திய ஆர்யாவுக்கு நன்றி. சிறுவயதிலிருந்தே ஆர்யாவின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவரை மிகப்பெரிய உத்வேகமாகக் கருதுகிறேன். மலேசியாவில் வெளியான ‘மிஸ்டேக்ஸ்’ திரைப்படம் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து மேற்கொண்ட விளம்பரப் பணிகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆர்யா மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். ‘டெனிஸ்’ நம்பிக்கை வைத்து வாங்கிய படத்திற்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர் பணியாற்றிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படத்தின் விளம்பரத்திற்காக எனது மனைவி விமலா பெருமாளுடன் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன். படத்தின் வெற்றிக்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.


ஷாம் பேசுகையில் , “‘ஹலோ காதல்’ திரைப்படம் மிகவும் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்கிறது. திருமணமானவர்கள் மற்றும் காதலர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். ஜீவா சங்கர், நடன இயக்குநர் ஷெரிஃப் மற்றும் ஜி.வி. பிரகாஷ் ஆகியோரின் திறமைகள் பாராட்டுக்குரியவை. ஜி.வி. பிரகாஷின் பாடல்களுக்கு நான் தீவிர ரசிகன். இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்தின் காலத்திலிருந்து ஆர்யாவுடனான நட்பு தொடர்கிறது. அவருடைய எளிமையான குணமும் உதவும் மனப்பான்மையும் பாராட்டுக்குரியவை. அவரை வழிநடத்திச் செல்லும் தயாரிப்பாளர் கிஷோர் சாரின் பங்களிப்பும் சிறப்பானது. நிகில் மற்றும் சாயிஷாவுக்கு எனது வாழ்த்துகள். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.


நடிகை நிகிலா விமல் பேசுகையில், “‘ஹலோ காதல்’ படத்தின் கதையை முதலில் மலையாளத்தில் கேட்டேன். இயக்குநர் தமிழுக்கு வந்த பிறகு இப்படத்தில் இணைந்தேன். ஆர்யா சாருடன் முதல்முறையாக இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வைஷ்ணவியுடன் இணைந்து நடித்த காட்சிகளிலும் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றினேன். ஒளிப்பதிவாளர் ஜீவா சார் என்னை மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி” என்றார்.


இயக்குநர் நிகில் முரளி பேசுகையில், “ஆர்யா சாரின் வீட்டிற்குச் சென்று கதையைப் பேசிய தருணமும், இந்தத் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மிகவும் சிறப்பானது. படத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. ஜி.வி. பிரகாஷ், ஆர்யா, வைஷ்ணவி, ஜீவா சார், மோகன் சார், நௌஷத், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், எடிட்டர் பினு மற்றும் சாயிஷா மேம் ஆகியோரின் திறமையும் ஒத்துழைப்பும் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். இப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.


நடிகர் ஆர்யா பேசுகையில் , “நீண்ட நாட்களாக ஆக்ஷன் படங்களில் நடித்து வந்ததால், சாயிஷாவின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு லைட்டான திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தில் இணைந்தேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்திற்குப் பிறகு ஜீவா சாரின் ஆசீர்வாதமும் இப்படத்தில் கிடைத்துள்ளது. கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தபோது கிஷோர் சார் மூலமாக இப்படத்தின் கதையைக் கேட்டேன். மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் இல்லாமல், இன்றைய பார்வையாளர்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் வகையில் இயல்பாகவும் புத்துணர்ச்சியுடனும் கதை அமைந்திருந்தது. ஜி.வி. பிரகாஷ், நிகிலா விமல், இயக்குநர் நிகில், நடன இயக்குநர் ஷெரிஃப், சண்டை இயக்குநர் செல்வா மாஸ்டர், எடிட்டர் பினு, சதீஷ், ஷ்யாம், வெங்கட் சார் மற்றும் தயாரிப்பாளர்கள் கிரீஷ் மாத்ருபூதம், விக்னேஷ் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. படத்திற்குப் பலமாக இருக்கும் ஜீ குழுவினருக்கும் நன்றி. டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றார்.



நடிகர்கள் :

• ஆர்யா

• நிகிலா விமல்

• வைஷ்ணவி சைதன்யா

• முரளி ஷர்மா

• ஜெயபிரகாஷ்

• காளி வெங்கட்

• கருணாகரன்

• கராத்தே கார்த்தி

• சதீஷ்

• வினோதினி

• விஜே பப்பு

• முத்தமிழ்


குழு :

• இயக்குனர்: நிகில் முரளி

• கதை மற்றும் திரைக்கதை: சுனு ஏ.வி, ஜோதிஷ் எம்.

• கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்கள்: ஹலிதா ஷமீம்

• இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

• பாடல் வரிகள்: விவேக் , கார்த்திக் நேதா , விஷ்ணு எடவன், நீரஜ் மாதவ்

• ஒளிப்பதிவு: ஜீவா சங்கர்

• பதிப்பாசிரியர்: பினு நெப்போலியன்

• கலை இயக்கம்: ஏ.ஆர். மோகன்

• நடன அமைப்பு: எம். ஷெரிஃப்

• சண்டைக் காட்சி வடிவமைப்பு: ஸ்டன்ட் சில்வா

• ஆடை வடிவமைப்பு: நௌஷாத் அகமது

• ஒலி: எம்.ஆர். ராஜகிருஷ்ணன்

• மக்கள் தொடர்பு: ரியாஸ் K அகமது, பாரஸ் ரியாஸ்

• தயாரிப்பாளர்கள் / தயாரிப்பு: சயேஷா சைகல் , கிஷோர் டி.; தி ஷோ பீப்பிள், சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ்

 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தில், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தருண் தேஜா எழுதி இயக்குகிறார்.


சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கிய ‘மாவீரன்’, ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘3BHK’ ஆகிய வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தொடர்ந்து புதிய முயற்சிகளுக்கும் திறமையான படைப்பாளிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகவுள்ளது.


நடிகையாக மட்டுமின்றி, பாடகியாகவும் இசைக் கலைஞராகவும் பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர், தனித்துவமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.


இப்படத்தை எழுதி இயக்கும் தருண் தேஜா, ஏற்கெனவே வசந்த் ரவி நடிப்பில் வெளியான ‘அஸ்வின்ஸ்’ (Asvins) திரைப்படத்தை இயக்கியவர். உளவியல் ஹாரர் பின்னணியில் உருவான இப்படம், அதன் மிரட்டலான காட்சியமைப்புகள், ஒலி வடிவமைப்பு மற்றும் வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக, ஹாரர் வகைத் திரைப்படங்களில் தனது தனித்துவமான இயக்க அணுகுமுறையை வெளிப்படுத்திய தருண் தேஜா, தற்போது ஸ்ருதிஹாசனை கதாநாயகியாக வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்குகிறார்.


தயாரிப்பாளர் அருண் விஸ்வா, இயக்குநர் தருண் தேஜா மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் என இணைந்துள்ள இந்தப் புதிய கூட்டணி, சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் மற்றுமொரு வித்தியாசமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு குறித்த கூடுதல் விவரங்களைப் படக்குழு அடுத்தடுத்த அறிவிப்புகளாக வெளியிட உள்ளது.

 

2027-ஐத் தொடங்கி வைக்க வருகிறது பிரேம் குமார் - ஃபஹத் ஃபாசிலின் ‘அசரீரி’ – டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!  


‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இயக்குநர் பிரேம் குமார், தொடர்ந்து ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவரது இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் மற்றும் இயல்பான நடிப்பால் இந்திய அளவில் கவனம் பெற்றுவரும் ஃபஹத் ஃபாசில், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும், சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன், சரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோவிந்தராஜ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்க குமார் கங்கப்பன் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.


 திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் ‘அசரீரி’ திரைப்படம் 2027 ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pageviews