நா ஹாங்-ஜின் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு (sci-fi) மற்றும் அரக்கர்கள் குறித்த திரைப்படமாகும்! மர்மமான உயிரினம் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு கிராமப்புறச் சமூகத்தைச் சுற்றி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது! அந்த உயிரினத்தின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு, உள்ளூர் காவல் துறைத் தலைவருக்கும் அவரது உதவியாளருக்கும் வந்து சேர்கிறது. அதிரடி, நாடகம், நகைச்சுவை, சிலிர்ப்பூட்டும் தருணங்கள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு கதையோட்டம் இதில் உள்ளது.


சுருக்கம்

'ஹோப் ஹார்பர்' (Hope Harbour) எனும் சிறிய நகரத்தில் கதை நடக்கிறது. முள்வேலிகள், தடுப்புகள் மற்றும் கண்ணிவெடிகளால் சூழப்பட்ட அந்த நகரத்திற்கு, எல்லைக்கு அப்பாலிருந்து அல்ல, வானத்திலிருந்து ஆபத்து வருகிறது! வேற்றுலக உயிரினங்களின் படையெடுப்பால் அந்த நகரம் நிலைகுலைந்து போகிறது; மக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகிறார்கள்! எங்கும் ரத்தமும் குழப்பமும் நிறைந்த சூழலில், காவல் துறைத் தலைவர் பம்-சியோக் (ஹ்வாங் ஜங்-மின்) மற்றும் அவரது குழுவினரான சுங்-கி (ஜோ இன்-சுங்), சுங்-ஏ (ஹோயியோன்) ஆகியோர் அந்த அரக்கர்களை எதிர்த்துப் போராடத் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்கிறார்கள்!


வேற்றுலக உயிரினங்கள் ஏன் பூமியைத் தாக்கின என்பதற்கான காரணத்தை இந்தப் படம் வெளிப்படுத்தவில்லை; அதே சமயம், படத்தின் இறுதிக்காட்சி, இதன் தொடர்ச்சி (sequel) வரக்கூடும் என்பதற்கான குறிப்பை வழங்குகிறது!


மைக்கேல் ஃபாஸ்பெண்டர், அலிசியா விகாண்டர் மற்றும் டெய்லர் ரஸ்ஸல் ஆகியோர் வேற்றுலக உயிரினங்களாக நடித்துள்ளனர்.


படக்குழு

எழுத்து மற்றும் இயக்கம் - நா ஹாங்-ஜின்; நடிகர்கள் - ஹ்வாங் ஜங்-மின், ஜோ இன்-சுங், ஹோயியோன், மைக்கேல் ஃபாஸ்பெண்டர், அலிசியா விகாண்டர், டெய்லர் ரஸ்ஸல்; ஒளிப்பதிவு - ஹாங் கியுங்-ப்யோ; இசை - மைக்கேல் ஏபெல்ஸ்.

இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அமெரிக்காவில் வெளியான சர்வதேசத் திரைப்படங்களிலேயே, இந்தப் படம் மிகப்பெரிய தொடக்கத்தைப் (opening) பெற்றுள்ளது.

 

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ என ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பல பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் சித்து குமார். காதலை உணர்வுப்பூர்வமாக இசை மூலம் வெளிப்படுத்துவதிலும் இவர் திறமையாளர் என்பதை ‘தீராக் காதல்’ போன்ற படங்களிலும் நிரூபித்துள்ளார். 


தற்போது, யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள ‘ஹைக்கூ’ படத்திற்கு இசையமைத்துள்ளார். காதல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படம், இன்று (அக்டோபர் 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் பாடல்கள் ஏற்கெனவே இசை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தை முன்னோட்டக் காட்சிகளில் பார்த்த விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்தும் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இதனால் சித்து குமார் மகிழ்ச்சியடைந்துள்ளார்.


‘ஹைக்கூ’ படத்தின் இசைப் பயணம் குறித்துப் பேசிய இசையமைப்பாளர் சித்து குமார் பகிர்ந்து கொண்டதாவது, “யுவராஜ் சின்னசாமி ‘ஹைக்கூ’ படத்தின் கதையைச் சொன்னபோதே, அதில் இசைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை என்னால் உணர முடிந்தது. அதே நேரத்தில், சில சவால்களும் இருந்தன. காதல் கதைகள் எப்போதுமே இசையமைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனெனில், மனதில் நிற்கும் இனிமையான மெலடிகளை உருவாக்குவதற்குப் பல வாய்ப்புகள் கிடைக்கும். அதேசமயம், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்குத் துணையாக இசை இருக்க வேண்டுமே தவிர, அவற்றைத் தாண்டி ஆதிக்கம் செலுத்திவிடக் கூடாது.


‘ஹைக்கூ’ படத்தைப் பொறுத்தவரை, இசை திரைக்கதையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். கிட்டத்தட்ட படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தைப் போல மெளனமாக இசை செயல்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இதற்காகப் பல்வேறு இசை வடிவங்களையும், மாற்றங்களையும் முயற்சி செய்து பார்த்தேன். ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு இசைக் குறிப்பும் கதையின் உணர்வுகளுக்கும் அதன் நகர்வுக்கும் உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, படத்துக்குப் பொருத்தமான இசையை உருவாக்குவதற்கான சுதந்திரத்தை வழங்கிய இயக்குநருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.


உலகப் புகழ்பெற்ற புடாபெஸ்டில் இப்படத்தின் பின்னணி இசையைப் பதிவு செய்யும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய வரப்பிரசாதம். இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசை மேதைகள் தங்களது மகத்தான இசைப் படைப்புகளை உருவாக்கிய இடத்தில் எங்களது படத்தின் பின்னணி இசையையும் பதிவு செய்தது சிறப்பான அனுபவமாக இருந்தது.


படத்தின் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்தவர்களிடமிருந்து பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் கிடைத்துவரும் வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் இந்தப் படத்தின் இசையை உருவாக்கியிருக்கிறோம். ‘ஹைக்கூ’ படத்தைத் திரையரங்குகளில் பார்க்கும்போது, ரசிகர்களுக்கு அழகான இசை அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.


யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி மற்றும் இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணீஷ் பி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஹரிஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். தமிழக வெளியீட்டுப் பணிகளை சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் பி. சக்திவேலன் மேற்கொண்டுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஆர். ரவீந்திரன் தலைமையிலான டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 22வது திரைப்படத்தை தொடங்கியுள்ளது. இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் & மீடியா எல் எல் பி பேனர்களில் சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார்.


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பிரபல கன்னட இயக்குநரும் பாடலாசிரியருமான ஹரி சந்தோஷ் இயக்க சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். சுவாசிகா, நரேன், அஞ்சலி நாயர், நந்திதா ஸ்வேதா, ஹரிஷங்கர், ஹரீஷ் பேரடி, தேனப்பன், வையாபுரி, ஆனந்த் நாக் மற்றும் வசந்தி குரு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஹரி சந்தோஷ், "இது ஒரு புதுமையான குடும்ப திரில்லர் வகையை சேர்ந்த கதை ஆகும். ஒரு திரில்லரில் இதர அம்சங்களை சரியான விகிதங்களில் சேர்த்து பார்வையாளர்கள் ரசிக்கும் வண்ணம் வழங்கவுள்ளோம். தமிழில் எனது முதல் திரைப்படத்திற்காக டிரெடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் சசிகுமார் உள்ளிட்டோரோடு இணைவது மிக்க மகிழ்ச்சி," என்றார். 


கிருஷ் ஜே நாக்ரேச்சா இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார். சஞ்சய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜிப்ரான் இசையைமக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு: சான் லோகேஷ், கலை: துரைராஜ், உடைகள் வடிவமைப்பு: துர்கா, ஒப்பனை & சிகை அலங்காரம்: மாலிக், , சண்டைப் பயிற்சி: அபிஷேக், பப்ளிசிட்டி டிசைன்ஸ்: வியாகி, பாடல்கள்: கார்த்திக் நேத்தா, வசனம்: மந்த்ரா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன், கிரியேட்டிவ் புரோமோஷன்ஸ்: ஹரிஹரன் ஜெ (லக்ஸெரான் ஸ்டூடியோஸ்), மார்க்கெட்டிங் & புரோமோஷன்ஸ்: ஏகேடி‍ ‍ ‍- லின்க்.


டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் 6 டைமென்ஷன்ஸ் பிலிம்ஸ் பேனர்களில்  ஆர். ரவீந்திரன், சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் தயாரிப்பில் ஹரி சந்தோஷ் இயக்கத்தில்  சசிகுமார், சுவாசிகா, நரேன், நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் நடிக்கும் குடும்ப திரில்லர் திரைப்படத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து வெளியிட படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

 

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கி தனது முதல் படைப்பாக 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 24 அன்று வெளியாகவுள்ள இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஏ ஜி எஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 


நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரித்துள்ள 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' திரைப்படத்தை 'கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார். பிரபல மலையாள நடிகையும் 'கொட்டுக்காளி' தமிழ் படத்தில் நடித்தவருமான‌ அன்னா பென் நாயகியாக நடிக்க, கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், CWC மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.


திரைப்படம் குறித்து பேசிய இயக்குநரும் நாயகனுமான கிஷோர் ராஜ்குமார், "வெறும் 29 நாட்களில் 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படப்பிடிப்பை முடித்துள்ளோம். குண்டாக இருப்பவர்களை நகைச்சுவை வேடங்களில் சித்தரித்து நிறைய படங்கள் வந்துள்ள நிலையில், உடல் எடை அதிகமாகக் கொண்ட பாத்திரத்தை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அந்த வேடத்தில் நானே நடிப்பது மகிழ்ச்சி.  அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இப்படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும்," என்று தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், "காதலும் நகைச்சுவையும் நிரம்பிய‌ கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி," என்றார்.


இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கையாண்டுள்ளார். இவர்கள் இருவரும் சதீஷ் நாயகனாக அறிமுகமாகி கிஷோர் ராஜ்குமார் இயக்கிய 'நாய் சேகர்' படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கலகலப்பான பாடல் ஒன்றுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்குநர் ஆவார். ஆடை வடிவமைப்பு - கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு - எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.


நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

 

மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE) வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.


ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம். மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்ற முக்கியமான கருத்துகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


 மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, செவிலியர்களின் சேவை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தின் மீதான ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகியவற்றையும் வலுவாக எடுத்துரைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


பொழுதுபோக்குடன் சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Cast & Crew Details:


- எச். ராஜா – தமிழ்நாடு முதலமைச்சர்  

- டாக்டர் எஸ். ராஜா – டாக்டர் சந்திரபோஸ்  

- குரு விஜய் – டாக்டர் விஜய்  

- தர்ஷினி ரெட்டி – டாக்டர் விஜயலட்சுமி  

- பிரதிக்ஷா மனோ பிரசாந்த் – திவ்யா (குழந்தை நட்சத்திரம்)  

- சிதம்பரம் PDK – தங்கதுரை  

- மௌனிகா ப்ரீத்தி V – டாக்டர் மௌனிகா  

- தபிதா குணரத்னே – டாக்டர் பிரியா  


தொழில்நுட்பக் குழு


தயாரிப்பு: ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்  

தயாரிப்பாளர்: சுப்புலட்சுமி ஜெயராம்  (B.Sc), California, USA  

கதை / திரைக்கதை / வசனம் / இயக்கம்: டாக்டர் எஸ். ராஜா (M.D., USA)  

ஒளிப்பதிவு: வாசு பி. ராம்நாத்  

படத்தொகுப்பு: ராஜா முகமது  

இசை: டாக்டர் எஸ். ராஜா & ஹரிணி சுப்பு மியூசிக் டீம்  

சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் கார்த்திக்

 

விஷன் பிலிம் ஹவுஸ் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், ஏகன், பெமினா ஜார்ஜ் மற்றும் ஸ்ரீதேவி அபல்லா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஹைக்கூ' (Haiku). 


சில எதிர்பாராத சூழ்நிலைகளால், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே படிக்கும் ஒரு மகளிர் கல்லூரியில் நாயகன் ஏகன் ஒரே ஒரு ஆண் மாணவனாகச் சேர வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு அவர் சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், நகைச்சுவை கலாட்டாக்கள் மற்றும் Gen-Z தலைமுறையினரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப நகரும் இரண்டு வெவ்வேறு விதமான காதல் கதைகளே இந்த 'ஹைக்கூ'


நிதானமான அதே சமயம் பொருத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஏகன். ரீதேவி அப்பாலாவும் ஃபெமினா ஜார்ஜும் தங்களது நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். ஸ்ரீதேவி அப்பாலாவின் முகபாவனைகள் கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. ஃபெமினா ஜார்ஜின் புன்னகையும், காதல் மற்றும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் நடிப்பும் கவனத்தை ஈர்க்கின்றன.


படத்தின் மிகப்பெரிய பலம் சித்து குமாரின் பின்னணி இசையும் பாடல்களும்தான். குறிப்பாக, காட்சிகளோடு ஒன்றிப்போகும் 'கருவிழி' பாடலும், துள்ளலான 'எப்ப யேசப்பா' பாடலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்கின்றன.


அறிமுக இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் இயக்கத்தில் நேர்த்தி தெரிந்தாலும், கதையையும் திரைக்கதையையும் இன்னும் கவனமாகச் செதுக்கியிருக்கலாம்.  கல்லூரி மற்றும் இளமைப் பருவத்துக்கே உரிய துள்ளலான காமெடி மற்றும் கலாட்டா காட்சிகளுடன் முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது.  இரண்டாம் பாதியில் வரும் காதல், பிரிவின் வலி மற்றும் திருமண உறவுகளில் ஏற்படும் எதார்த்தமான சிக்கல்களை இயக்குநர் நேர்மையுடனும் கவித்துவத்துடனும் கையாண்டுள்ளார்


'ஹைக்கூ' திரைப்படம் இன்றைய தலைமுறையினரின் காதல் மற்றும் எதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒரு நேர்மையான மற்றும் கவித்துவமான காதல் காவியம்.

 

பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றையே மாற்றி எழுதிய 'பாகுபலி' நாயகன்! தெலுங்கு சினிமாவை பான் இந்தியா தளத்திற்குக் கொண்டு சென்ற 'சலார்' நாயகன்! தனது நடிப்பால் அனைவரது மனதையும் வென்ற 'ஃபௌஜி' நாயகன்! இந்திய சினிமாவை ஒரு புதிய சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும் 'கல்கி' நாயகன்! தனது 'ஸ்பிரிட்' மூலம் தன்னை நேசிக்கும் ஒவ்வொரு 'டார்லிங்' ரசிகரையும் பெருமிதம் அடையச் செய்வதே அவரது இலக்கு!


இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டாரும், 'ரெபெல் ஸ்டார்' (Rebel Star) என்று அழைக்கப்படுபவருமான பிரபாஸ், பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படங்களின் பட்டியலுடன் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறார். முக்கியமான திரைப்படங்கள், திரையில் அவரது தனித்துவமான தோற்றம் மற்றும் தனது கலை மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், இந்திய சினிமாவின் பெருமையை அவர் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்கிறார்.


'ஈஸ்வர்' (Eeshwar) திரைப்படத்துடன் தொடங்கிய அவரது திரைப்பயணம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வெற்றிகரமாகத் தொடர்ந்து, பாக்ஸ் ஆபீஸில் பல மறக்க முடியாத மைல்கற்களை உருவாக்கியுள்ளது. அவரது திரைப்படங்கள் படைக்கும் சாதனைகள் அவரது நட்சத்திர அந்தஸ்தை எதிரொலிக்கின்றன. அதே சமயத்தில், ரசிகர்கள் அவரை அன்புடன் 'டார்லிங்' (Darling) என்று அழைப்பது, அவர் எவ்வளவு அற்புதமான மனிதர் என்பதைக் காட்டுகிறது. அவரது எளிமை, கனிவு, மக்கள் மீதான அன்பு ஆகியவை கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அவருக்குச் சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன.


 'பாகுபலி' ஒரு பான் இந்திய நிகழ்வின் தொடக்கம்...


'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் பிரபாஸ், பிராந்திய சினிமா எனும் எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஒரு பெரும் நட்சத்திரமாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த பிரம்மாண்டமான திரைப்படங்கள் அவரது சந்தை எல்லையை விரிவுபடுத்தியதுடன், இந்திய சினிமாவின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக அவரை அடையாளப்படுத்தின.


திரையரங்கு வசூல் முதல் டிஜிட்டல், செயற்கைக்கோள் (Satellite) மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் வரை, பிரபாஸின் திரைப்படங்கள் மிகப்பெரும் கவனத்தை ஈர்க்கின்றன. 'பாகுபலி 2', 'கல்கி 2898 ஏ.டி.' (Kalki 2898 AD) ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலகளவில் தலா ஆயிரம் கோடிக்கும் மேலான வசூலைக் குவித்து, இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்தன.


அவரது திரைப்படங்கள் இந்தித் திரைப்படத் துறையின் வணிகச் சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தெலுங்கு பேசும் மாநிலங்களுக்கு அப்பால் உள்ள ரசிகர்களையும் ஈர்த்துள்ளன. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிச் சந்தைகளிலும் அவருக்கு இருக்கும் அபரிமிதமான வரவேற்பு, அவர் இந்தியா முழுவதும் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர் என்பதை உணர்த்துகிறது.


அமெரிக்கா, இங்கிலாந்து முதல் ஜப்பான் உள்ளிட்ட பிற சர்வதேச நாடுகள் வரை, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரது திரைப்படங்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பிரபாஸ் மொழி, புவியியல், கலாச்சாரம் ஆகிய எல்லைகளைக் கடந்த ஒரு சர்வதேச அளவிலான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இதனால், அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய ஒரு நிகழ்வாக மாறுகிறது.


புகழுக்கு அப்பால், அவரது அன்பான இதயம்...


அசாத்தியமான நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், பிரபாஸ் தனது அன்பான, தாராளமான மனப்பான்மைக்காகத் தொடர்ந்து அனைவராலும் போற்றப்படுகிறார். சமூக நலன் சார்ந்த விஷயங்களுக்கு அவர் அளிக்கும் ஆதரவும், இயற்கைப் பேரிடர் காலங்களில் அவர் செய்யும் உதவிகளும் சமூகத்தின் மீதான அவரது அக்கறையையும், தேவைப்படுபவர்களுக்கு உதவும் அவரது மனப்பான்மையையும் வெளிப்படுத்துகின்றன.


அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் அவரது பணிவு, அர்ப்பணிப்பு, மற்றவர்களுக்கு ஆதரவளிக்கும் குணம் ஆகியவற்றைக் குறித்து அடிக்கடி பாராட்டிப் பேசியுள்ளனர். 'திரைப்படத் தயாரிப்பாளர்களின் பார்வையை முழுமையாக நம்பும் பிரபாஸைப் போன்ற ஒரு நட்சத்திரத்துடன் பணியாற்றுவது மிகுந்த அதிர்ஷ்டம்' என இயக்குநர் நாக் அஷ்வின் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.


பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, தான் ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கப் பிரபாஸ் கடுமையான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்குகிறார். தனது கலை மீதான ஈடுபாடும், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திட வேண்டும் என்ற அவரது விருப்பமும் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்து அடையாளப்படுத்துகின்றன.


மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய அவரது பிரம்மாண்டமான திரைப்படப் பட்டியல்...


பிரபாஸ் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்தும் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


'ஸ்பிரிட்' (Spirit) – சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், டி-சீரிஸ் (T-Series) நிறுவனத்தின் தயாரிப்பில்...


'ஃபௌஜி' (Fauzi) – ஹனு ராகவபுடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனத்தின் தயாரிப்பில்...


'கல்கி 2' (Kalki 2) – நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் (Vyjayanthi Movies) நிறுவனத்தின் தயாரிப்பில்...


'சலார் 2' (Salaar 2) – பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஹொம்பாலே பிலிம்ஸ் (Hombale Films) நிறுவனத்தின் தயாரிப்பில்...


எனப் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களின் மூலம், பிரபாஸ் மீண்டும் பல மறக்க முடியாத சினிமா அனுபவங்களை வழங்கவும், இந்தியா மற்றும் சர்வதேசச் சந்தைகளில் தனது சிறப்பான பயணத்தைத் தொடரவும் தயாராகி வருகிறார்.


தங்களின் அன்புக்குரிய 'டார்லிங்' பிரபாஸின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், அவர் தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விக்கவும், புதிய சாதனைகளைப் படைக்கவும், வரும் காலங்களில் தனது ரசிகர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கவும் வாழ்த்துகள்!


இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார், 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அன்பும், அபரிமிதமான வெற்றியும், எண்ணற்ற மைல்கற்களும் நிறைந்த அவரது பயணம் தொடர்ந்து சிறக்கட்டும்!

 

செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார்.


தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும் செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கருவாகும். அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.


முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இந்திரஜா, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு ,திருவனந்தபுரம், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. ஜென் மார்ட்டின் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார். உமா சங்கர் – ஜெயமுருகன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளனர். கவின் மூர்த்தி, சந்திரன் வசனங்களை எழுதியுள்ளனர். ஏ. ராஜா இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மணி சந்திரா, விஜி நடன அமைப்பையும், ஃபீனிக்ஸ் பிரபு, மிராக்கிள் மைக்கேல் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.


‘மைலோ’ படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்ல நாயின் துணையுடன் 18 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றத்தின் மர்மத்தை நாயகன் கண்டறியும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Pageviews