பியார் பிரேமா கல்யாணம் திரை விமர்சனம்
இயக்குநர் இளன் இயக்கி, நாயகனாக அவதரித்துள்ள 'பியார் பிரேமா கல்யாணம்' (Pyaar Prema Kalyanam) திரைப்படம் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸராக இருக்கும் பவித்ரா (சான்வீ மேக்னா), திருமணத்திற்குப் பிறகு தன் சொந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்குச் செல்ல மறுக்கிறார். இதனால் நாயகன் இளன், பாரம்பரிய மரபுகளை உடைத்துவிட்டு மனைவியின் வீட்டிற்கு ‘வீட்டோட மாப்பிள்ளையாக’ குடியேறுகிறார். அங்கு அவர் சந்திக்கும் கலாச்சார மோதல்கள், மாமியார்-மருமகன் சண்டைகள், மற்றும் ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் படும் கஷ்டங்களை ஒரு ஆணை வைத்து இயக்குநர் காட்டியுள்ள விதம் தான் படத்தின் மையக்கதை.
நாயகன் இளன் கொஞ்சம் குறும்போடு சிரித்த முகத்துடனே இருக்கும் இளைஞராக கலக்கியிருக்கிறார். அவர் செயல்பாடுகள் ஒவ்வொன்றுமே காமெடியில் ரசிக்க வைக்கிறது. காதல் காட்சிகளிலும் எந்த தயக்கமும் இன்றி அசால்ட்டாக நடித்திருக்கிறார். நாயகி பவியாக நடித்திருக்கும் சான்வீ மேக்னா, தன்னம்பிக்கை மிக்க ஒரு பெண்ணாகத் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பவியின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார், எம். எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் தங்களின் அனுபவமிக்க நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.
படத்தின் காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு யுவனின் பின்னணி இசை மற்றும் எல்லா பாடல்களும் சிறப்பு. தினேஷ் கே பாபு ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக ரசிக்கும்படி உள்ளது.
நாயகன் மற்றும் இயக்குனரான இளன் தனக்கு என்ன வருமோ, தன்னுடைய பலம் என்னவோ அதை மிகச் சரியாக கணக்கிட்டு அழகாக எழுதி ஒரு ரொமாண்டிக் காமெடியாக தந்திருக்கிறார். வழக்கமான திருமண நடைமுறைகளை உடைக்கும் ஒரு நவீன குடும்பக் கதையாக, இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற படமாகவும் தந்திருக்கிறார். நிச்சயம் குடும்பத்துடன் இந்த வார இறுதியில் நெட்ஃபிளிக்ஸில் கண்டுகளிக்கலாம்.











0 comments:
Post a Comment