தடை அதை உடை திரை விமர்சனம்
மூன்று நெருங்கிய நண்பர்கள் செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் சாதாரண இளைஞர்கள். ஆனால், சமூக ஊடக காலத்தில் அனைவரும் போல், யூடியூப்பின் மூலம் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற கனவு இவர்களுக்கும் இருக்கிறது. அந்த ஆசையில் மூவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை தொடங்குகிறார்கள். சில நாட்களிலேயே அவர்கள் வீடியோக்கள் வைரலாகி, யூடியூப்பில் பிரபலங்களாக மாறுகிறார்கள், ஆனால் அந்த வெற்றி நீடிக்கவில்லை. திரைப்பட உலகில் அடியெடுத்து வைக்க முயன்ற இவர்களின் முதல் முயற்சி மிகப் பெரிய தோல்வியிலும் நஷ்டத்திலும் முடிகிறது. அதோடு, எதிர்பாராத பிரச்சனையிலும் சிக்கி விடுகிறார்கள். அதன் பின்னர் இவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
வித்தியாசமான கதை. கிராமத்து லோக்கேஷன்களை அருமையாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் தோட்டா மணிகண்டனும், தங்கப் பாண்டியனும்.
சாய் சுந்தர் இசை சாய்ந்து கிடக்கிறது. டாய்சியின் படத்தொகுப்பு இருக்கிற காட்சிகளோடு போராடுகிறது. படத்தின் வசனங்கள் சில இடங்களில் சிறப்பாகவும் சில இடங்களில் வெகு சாதரணமாகவும் கடக்கின்றன. அதேபோல சோஷியல் மீடியாவில் ஒருவன் போடும் கமெண்டுகளை வைத்தே அவர் ஊர், குணாதிசயம் உள்ளிட்ட விவரங்களைக் கண்டுபிடிப்பதும் சிறப்பு. ஆபாச கமெண்ட் போடுபவன் யார் என்ற டுவிஸ்ட்டும் பாராட்டுக்குரியதே.
இயக்குனர், சமூக ஊடகத்தின் தாக்கம் எவ்வளவு ஆழமாக நம்மை பாதிக்க முடியும் என்பதைச் சிந்திக்க வைக்கும் விதத்தில் காட்சிகளைக் கட்டமைத்துள்ளார். மூன்று இளைஞர்களின் நட்பு, கனவு, வீழ்ச்சி ஆகியவற்றை நம்பத்தகுந்த வகையில் சொல்லி, இறுதியில் ஒரு வலுவான செய்தியையும் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்.











0 comments:
Post a Comment