மிராய் திரை விமர்சனம்

 

அசோக மன்னர் பல நாடுகளின் மீது படையெடுத்து அனைத்து நாடுகளையும் கைப்பற்றி வருகிறார். அப்போது, அவருக்கு ஒரு அபூர்வ சக்தி கிடைக்கிறது. கிடைக்கும் சக்தியை ஒன்பது புத்தகங்களில் பிரித்து வைக்கிறார். ஒன்பது புத்தகத்தையும் ஒன்பது வீரர்களிடம் கொடுத்தும் வைக்கிறார். காலங்கள் கடந்து 21ஆம் நூற்றாண்டிற்கு வர, வில்லனான மனோஜ் மஞ்சு 9 புத்தகங்களை அடைந்தால் தான் அபூர்வ சக்தி கிடைக்கும். மக்களை கொன்று குவிக்கலாம் என்று எண்ணுகிறார். அதற்காக ஒவ்வொரு புத்தகங்களாக கைப்பற்றி வருகிறார் மனோஜ் மஞ்சு. இந்நிலையில், ஸ்ரேயா தனது குழந்தையை சிறுவயதிலேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். அனாதையாக வளரும் அவரே நாயகன் தேஜா சஜ்ஜா. இமயமலையிலிருந்து வரும் பெண் ஒருவர், மனோஜ் மஞ்சுவின் எண்ணத்தை தேஜா சஜ்ஜாவிடம் கூறுகிறார். ஒன்பதாவது புத்தகத்தை அடைந்தால், மனோஜ் மஞ்சுவை யாராலும் அழிக்க முடியாது என்றும் கூறுகிறார். 

மனோஜ் மஞ்சுவை அழிப்பதற்காக மிராய் என்ற ஆயுதத்தைத் தேடி செல்கிறார் தேஜா. இறுதியில் மிராய் ஆயுதத்தை தேஜா கைப்பற்றினாரா.? மனோஜ் மஞ்சுவை எப்படி கொலை செய்கிறார்.? என்பதே படத்தின் மீதிக் கதை.


நாயகன் தேஜா சஜ்ஜா, இதுபோன்ற படங்களில் தொடர்ந்து நடித்து அவர் செய்வதெல்லாம் சாத்தியம்தான் என்று மக்களை நம்ப வைத்துவிடுகிறார். வில்லனாக நடித்திருக்கும் மனோஜ் மஞ்சு, அதற்கேற்ற உடல்மொழி அளவான நடிப்பு ஆகியனவற்றின் மூலம் கதாநாயகனுக்கு இணையாக கவனிக்கப்படுகிறார். நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக், நாயகனின் இளம் வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு ஆகியோர் இருப்பு படத்துக்குப் பலம்.



கெள்ரா ஹரியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. கார்த்திக் கட்டம்னேனியின் ஒளிப்பதிவு  பிரமிக்க வைக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் குறைந்த பட்ஜெட்டில் உயர்தர காட்சியமைப்புகள் வழங்கியதற்காக விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவைப் பாராட்ட வேண்டும். புராணக் கதைகள் பிரமிக்க வைக்கின்றன. ஸ்ரீ ராமரின் தெய்வீக தோற்றம், மாபெரும் சம்பாதி பறவை காட்சி மற்றும் பல புராண துடிப்புகள் கதையில் பிரம்மாண்டத்தையும் உற்சாகத்தையும் செலுத்துகின்றன.


எழுத்தாளர்கள் கார்த்திக் கட்டம்னேனி மற்றும் மணிபாபு கரணம் ஆகியோர் புராணங்களை நவீன கூறுகளுடன் புத்திசாலித்தனமாக இணைக்கும் ஒரு திரைக்கதையை ஆக்ஷன் மற்றும் மயக்கும் புராணக் காட்சிகளால் பார்வையாளர்களை முழுவதும் கவர்ந்திழுக்கும் வகையில் காட்சிப்படுத்தி, ஒரு இயக்குனருக்கு ஒரு காட்சியை உருவாக்க நூற்றுக்கணக்கான கோடிகள் தேவையில்லை என்பதை நிரூபிக்க மிராய் ஒரு சரியான எடுத்துக்காட்டாக படைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி.

0 comments:

Pageviews