வெப்பன் திரை விமர்சனம்

 

யூடியூபராக இருக்கும் வசந்த் ரவி சுற்றுசூழல் மீது அதிக ஆர்வமாக இருக்கிறார். இவர் நண்பர்களுடன் சேர்ந்து சூப்பர் ஹியூமன்ஸ் பற்றி வீடியோ பதிவிடுகிறார். அப்போது, தேனி அருகில் லாரி விபத்தில் சிக்க இருக்கும் ஒரு சிறுவன் அறியப்படாத சக்தியால் காப்பாற்றப்படுகிறான். இதைத்தேடி வசந்த் ரவி மற்றும் அவருடைய குழு தேனி செல்கிறது.மற்றொரு பக்கம் பிளாக் சொசைட்டிக்கு தலைவராக இருக்கும் ராஜீவ் மேனன் சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாதென மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ராஜீவ் மேனன் குழுவினர் உயிரிழக்கின்றனர். இதற்கு காரணம் சூப்பர் ஹியூமன் என்பதை அறிந்து கொள்ளும் ராஜீவ் மேனன், அதை தேடி செல்கிறார். இறுதியில் வசந்த் ரவியும், ராஜீவ் மேனனும் சூப்பர் ஹியூமனை கண்டுபிடித்தார்களா? வசந்த் ரவிக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.

சத்யராஜ் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் கம்பீரமாக நடித்திருக்கிறார்.  வசந்த் ரவி உணர்ச்சிகரமாக நடித்தாலும் பல இடங்களில் அளவாக நடித்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும்  தன்யா ஹோப், வில்லனாக நடித்திருக்கும் ராஜீவ் மேனன் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கன்னிகா, கஜராஜ், வேலு பிரபாகரன் உள்ளிட்ட படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்திருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ், இயக்குநரின் வித்தியாசமான முயற்சிக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார். ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.  எழுதி இயக்கியிருக்கும் குகன் சென்னியப்பன், தமிழ் சினிமாவில் புதிய சூப்பர் ஹூயுமன் உலகத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார்.

0 comments:

Pageviews