அஞ்சாமை திரை விமர்சனம்
திண்டுக்கல் அருகே உள்ள சாதாரண கிராமத்தில் விவசாயியாக வாழ்பவர் விதார்த். இவருக்கு இரு பிள்ளைகள் மனைவி வாணி போஜனுடன் அழகான வாழ்கையை நடத்தி வருகிறார் விதார்த். இவரது மகன் அரசு பள்ளியில் படித்து மேல்நிலை கல்வியில் மிகச்சிறந்த மதிப்பெண்ணை வாங்குகிறார். அடுத்து மருத்துவராக ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். மத்திய அரசு அப்போது அமல்படுத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வு விதார்த்தின் மகனுக்கு ஒரு தடையாக இருக்கிறது, விதார்த் கஷ்டப்பட்டு மகனை கோச்சிங் கிளாசில் சேர்க்கிறார். அதற்கடுத்து என்ன ஆனது, மகனின் கனவை விதார்த் நிறைவேற்றினாரா? மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு அவர்களை எந்த சிரமத்திற்கு ஆளாக்குகிறது? அதனால் அவர்கள் படும் இன்னல்கள் என்ன? அந்த இன்னல்களை எதிர்த்து அவர்கள் எவ்வாறு போராடுகின்றனர்? அவர்களுக்கு சமூக பொறுப்புள்ள ரகுமான் எவ்வாறு உதவுகிறார்? என்பதே படத்தின் கதை.
ஏழை விவசாயியாக நடித்திருக்கும் விதார்த், அவரது மகனாக நடித்திருக்கும் கிருத்திக் மோகன், வழக்கறிஞராக நடித்திருக்கும் ரஹ்மான், விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் வாணி போஜன் ஆகியோரது நடிப்பு, கதையில் இருக்கும் வலியை மக்களிடத்தில் எளிதியில் கடத்தி விடுகிறது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக், நட்சத்திரங்களை கதாபாத்திரங்களாக பயணிக்க வைத்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்து கவனம் ஈர்க்கிறது.
நீட் தேர்வின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகி இருப்பதை, புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கும் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன், வசனங்கள் மூலம் நீட் தேர்வை அமல்படுத்திய அரசாங்கத்தை சம்மட்டியால் அடிக்கவும் செய்திருக்கிறார்.
வியாபாரமான கல்வியின் மூலம் மாணவர்கள் மட்டும் இன்றி பெற்றோர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை காட்சி மொழியின் மூலம் சொல்லி ரசிகர்களை கலங்கடிக்கும் இயக்குநர் வசனங்கள் மூலம் கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘அஞ்சாமை’ நீட் தேர்வினால் பாதிக்கப்படும் மாணவர்களின் வலியை அஞ்சாமல் சொல்லியிருக்கிறது.
0 comments:
Post a Comment