ஹரா திரை விமர்சனம்

 

ஊட்டியில் நாயகன் மோகன், மனைவி அனுமோல் மகள் ஸ்வாதி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். மகள் ஸ்வாதி மீது அதிக அன்போடு இருக்கிறார் மோகன். கல்லூரியில் படித்து வரும் ஸ்வாதி, ஒரு நாள் இரவு மோகனுக்கு போன் செய்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறார். மனவேதனை படும் மோகன், மகள் இறப்புக்கான காரணத்தை தேடுகிறார். இந்த தேடுதலில் பல திடுக்கிடும் தகவல்கள் மோகனுக்கு கிடைக்கிறது. இறுதியில் தன் மகள் ஸ்வாதி இறப்புக்கான காரணத்தை மோகன் கண்டுபிடித்தாரா? இல்லையா? ஸ்வாதிக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கிறார் என்கிற எண்ணம் வராத வண்ணம் நடித்திருக்கிறார் மோகன்.உடலில் சில மாற்றங்கள் தெரிந்தாலும் நடிப்பில் அதை மறக்கச் செய்து வரவேற்புப் பெறுகிறார். மோகனின் மனைவியாக நடித்திருக்கும் அனுமோல், மகளாக நடித்திருக்கும் சுவாதி, வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன், அமைச்சராக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், முதலமைச்சராக நடித்திருக்கு பழ கருப்பையா, அனிதா நாயர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். 


யோகி பாபு ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். அவருடன் சேர்ந்து சிங்கம் புலியும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.  


ஒளிப்பதிவாளர்கள் பிரகாஷ் முனுசாமி, மோகன் குமார் மற்றும் விஜய் ஸ்ரீ ஜி ஆகியோரது ஒளிப்பதிவும், ராஷாந்த் அர்வினின் இசையும் சுமார் ரகம்.


எழுதி இயக்கியிருக்கும் விஜய் ஸ்ரீ ஜி, ஒன்றல்ல.. இரண்டல்ல..., பல விசயங்களை படத்தில் திணித்து ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

0 comments:

Pageviews