அநீதி விமர்சனம்

 

சென்னையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் ஓசிடி பிரச்சினை கொண்ட திருமேனி (அர்ஜூன் தாஸ்). மன அழுத்தம் நிறைந்த அவரது வாழ்க்கையில் பணக்கார வீட்டு பணிப்பெண் சுப்புலட்சுமியின் (துஷாரா விஜயன்) காதல் கிடைக்க, காட்சிகள் மாறுகிறது. அதுவரை இருந்த விரக்தியான மனநிலையிலிருந்து காதல் அவரை மீட்டெடுத்து சிரிக்க வைத்து ஆசுவாசப்படுத்துகிறது. இப்படியான சூழலில் திடீரென ஒருநாள் சுப்புலட்சுமியின் முதலாளி இறந்து விட, அந்த கொலைப்பழி சுப்புலட்சுமி மற்றும் திருமேனியின் மீது விழுகிறது. இந்தக் கொலைப்பழியிலிருந்து இவரும் தப்பித்தார்களா? இல்லையா? இதைச்சுற்றி நடக்கும் அரசியல் என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை.


நாயகனாக நடித்திரும் அர்ஜுன் தாஸ், பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக கவனமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார். எளிய மக்களை இழிவாக நடத்துபவர்களை பார்த்தால் அவர்கள் மீது கொலைவெறி கொள்வது, யாருடனும் பேசாமல் இருக்கமாக இருப்பது, காதலிக்க தொடங்கிய உடன் தனது மனநிலையில் நடைபெறும் மாற்றத்தை வெளிப்படுத்துவது, காதலி சொல்லால் கலங்கி நிர்பது என அனைத்து இடங்களிலும் மிக சிறப்பாக நடித்திருப்பவர், தனது அப்பாவை நினைத்து அழும் காட்சியில், பார்வையாளர்களையும் கண் கலங்க வைக்கிறார். ஆக்‌ஷன் படங்களை மட்டும் இன்றி, காதல் மற்றும் எமோஷனல் படங்களையும் தன்னால் சிறப்பாக கையாள முடியும் என்பதை அர்ஜுன் தாஸ் இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.


நாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். காளி வெங்கட், சாந்தா தனஜெயன், வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் எளிமையை அழகாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. படத்தொகுப்பாளர் ரவிகுமார், கதையில் இருக்கும் வலிகளை மக்களிடம் கடத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.


எளியவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் தொடர்ந்து தனது படங்களில் பதிவு செய்து வரும் இயக்குநர் வசந்தபாலன், இந்த படத்திலும் எளியவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உழைப்பாளிகளுக்கு முதலாளிகள் இழைக்கும் அநீதிகள் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

0 comments:

Pageviews