சத்திய சோதனை விமர்சனம்

 

சங்குப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்த நபரை அவர் கை, கழுத்தில் பல சவரன் நகைகளோடு அவரை ஒரு வனாந்தரத்தில் வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர் கொலைகாரர்கள். அப்போது அந்த வழியே வந்த பிரேம்ஜி, அந்தப் பிணத்தின் மீது இருந்த அவரது வாட்ச், செல்போன் மற்றும் அரை பவுன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் வந்து ஒப்படைக்கிறார். வந்த இடத்தில் அவரை போலீஸ்காரர்கள் பிடித்து வைத்துக் கொண்டு மற்ற நகைகள் எங்கே என அவரை விசாரிக்கின்றனர். இதற்கிடையே கொலை செய்த நான்கு பேரும் போலீசில் சரணடைகின்றனர். அப்பொழுது அவர்கள் வாக்குமூலத்தின் படி பிணத்தின் மீது பல சவரன் நகைகள் இருந்தது தெரிய வருகிறது. போலீசின் கவனம் முழுவதும் பிரேம்ஜி பக்கம் திரும்புகிறது. இதையடுத்து அந்த முழு நகைகளையும் திருடியது யார்? அதைப் போலீசார் கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.


பிரேம்ஜிக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமைய நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிறப்பான சிறிய பட்ஜெட் திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றிருக்கிறார். இந்தப் படம் இவருக்கு ஒரு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் ஸ்வயம் சித்தா. படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஞான சம்பந்தம் அவர்கள், தனக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றுள்ளார். இவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக நகர்ந்து ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றுள்ளது. சங்குப்பட்டி போலீசாக நடித்திருக்கும் சித்தன் மோகன், செல்வன் முருகன் ஆகியோர் சின்னச் சின்ன டைமிங் காமெடிகள் மூலம் கலகலப்பைக் கூட்டி உள்ளனர். இவர்களின் எதார்த்த நடிப்பு படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமி பாட்டி வரும் காட்சிகள் எல்லாம் தன் நடிப்பால் தெறிக்க விட்டிருக்கிறார். குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகளில் இவரது எதார்த்த நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவரும் திரையரங்குகளில் கைத்தட்டல் பெறுகிறார். 


ரகுராமின் இசையில் பாடல்களும், தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசையும் இயல்பு மாறாமல் ஒலித்திருக்கிறது. ஒரே லொகேஷனில் கதை நகர்ந்தாலும் இருப்பதை வைத்துக் கொண்டு இயல்பாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.வி. சரண்.


ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு ஒரு காவல் நிலையம், அதில் ஒரு பெண் போலீஸ், இரண்டு ஆண் போலீஸ், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு பாட்டி, ஒரு இன்பார்மர், ஒரு நாயகன், நான்கு கைதிகள் என இவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரப் படத்தை மிக எதார்த்தமாகவும், சிறப்பாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் கொடுக்க முடியும் என்று நிரூபித்து, ஒரு கலகலப்பான படத்தைக் கொடுத்து கவனம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா

0 comments:

Pageviews