யாத்திசை விமர்சனம்
சரித்திர கதைகளுக்கு எப்போதுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கும். அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் யாத்திசை. பிரம்மாண்ட பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்கள் என எதுவும் இல்லாமல் வெளிவந்திருக்கும் இப்படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்பதை சிறு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
ஏழாம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக காட்டப்பட்டுள்ள இந்த கதைக்களம் ஆரம்பத்திலேயே ஒருவித சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது. பாண்டிய அரசுக்கு எதிராக நிற்கும் சேரர்களுக்கு துணையாக சோழர்களும், எயினர் குல மக்களும் இருக்கிறார்கள். அந்தப் போரில் பாண்டிய மன்னன் வெற்றி பெற்றதால் சேரர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.
அதை தொடர்ந்து சோழர்கள் தலைமறைவாகி விடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்த எயினர் குல மக்களும் பாலை நிலத்திற்கு அடித்து விரட்டப்பட்டு வாழ்வாதாரத்தை தொலைக்கின்றனர். இதனால் ஆத்திரம் அடையும் எயினர் குல தலைவன் கொதி சோழர்களையும் துணையாக வைத்துக் கொண்டு பாண்டியனை எதிர்க்கிறார்.
இந்தப் போராட்டத்தில் எயினர் குலத்திற்கு நியாயம் கிடைத்ததா, பாண்டிய அரசு வீழ்ந்ததா ஆகிய கேள்விகளுக்கு இப்படம் விடையளிக்கிறது. ஒரு சிறு இனக்குடி மக்கள், பலம் வாய்ந்த அரசை எதிர்ப்பதை சரியான விகிதத்தில் பதிவு செய்திருக்கும் இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
அதிலும் அந்தக் கால மக்கள் பேசும் தமிழ் மொழியிலிருந்து உடை அலங்காரம் என ஒவ்வொன்றுமே ரசிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் அவர்களுடைய உணவு பழக்கங்கள், பயன்படுத்தும் பொருட்கள், வாழும் இடங்கள் என அனைத்தையும் பார்க்கும் போதே நாமும் அந்த நூற்றாண்டுக்குள் செல்வது போன்ற ஒரு உணர்வும் ஏற்படுகிறது.
இதுவே படத்தோடு நம்மை ஒன்ற வைத்து விடுகிறது. அதிலிருந்து போர் காட்சிகளும், அதை தத்ரூபமாக காட்டி இருக்கும் விஷுவல் காட்சிகள், சவுண்ட் எபெக்ட் என அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இயக்குனருக்கு அடுத்தபடியாக ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் என அனைவரும் தங்கள் கடமையை உணர்ந்து பணி புரிந்திருக்கின்றனர்.
மேலும் புதுமுகமாக இருந்தாலும் பாண்டிய மன்னனாக வரும் சக்தி மித்திரன், எயினார் குல தலைவனாக வரும் சேயோன் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கின்றனர். அதிலும் பின்னணி இசை, காட்சிகளுக்கான பிரம்மாண்டத்தை கூட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இவை அனைத்தும் வெறும் 8 கோடியில் படமாக்கப்பட்டிருக்கிறது என்பது கொஞ்சம் வியப்பாக தான் இருக்கிறது. அந்த வகையில் மீண்டும் ஒரு வரலாற்று கதையை தரமாக பதிவு செய்திருக்கிறது இந்த யாத்திசை.
0 comments:
Post a Comment