நெட்ஃப்ளிக்ஸ் தனது முதல் தெலுங்கு நகைச்சுவைத் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. மாலிக் ராம் இயக்கியுள்ள இத்தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘சூப்பர் சுப்பு’ ஜூலை 2 அன்று நெட்ஃப்ளிக்ஸில் மட்டுமே வெளியாகிறது.


இந்த நகைச்சுவை கலந்த கதையில் சுப்பிரமணியம் ’சுப்பு’ சில்லுகுரி ராவ், எந்தவொரு ஆசிரியரும் செல்ல விரும்பாத ஒரு இடமான 'மாகிபூர்' (முற்றிலும் கற்பனையான) கிராமத்தில் பணி அமர்த்தப்படுகிறார். குடும்பத்தினர் மத்தியில் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளும் உறுதியுடன் அங்கு செல்லும் சுப்புவுக்கு, அக்கிராமத்தினருக்கு பாலியல் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற மிகவும் சங்கடமான பணி காத்திருக்கிறது. அவரது வகுப்பறையில் ஒவ்வொரு கேள்வியும் விவாதமாக மாறுகிறது. ஒவ்வொரு வதந்தியும் மின்னல் வேகத்தில் பரவுகிறது. ரகசியமாக எதுவும் நீண்ட நேரம் இருக்காது. அனுபவம் குறைவாக இருந்தாலும் நல்ல எண்ணங்களுடன் செயல்படும் சுப்பு, தவறான புரிதல்கள் மற்றும் எதிர்பாராத நட்புகளின் மத்தியில் கிராம மக்களுக்கு வாழ்க்கையின் முக்கியமான பாடங்களை கற்பிக்க முயல்கிறார். ஆனால் மாக்கிபூரை மாற்ற முயற்சிக்கும் சுப்புவையே அந்த கிராமம் மாற்றத் தொடங்குகிறது. 


சுப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளது பற்றி சந்தீப் கிஷன் பகிர்ந்து கொண்டதாவது, "மக்கள் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை நகைச்சுவை, அன்பு மற்றும் நேர்மையுடன் அணுகும் தொடர்தான் சூப்பர் சுப்பு. சுப்பு ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கும்போது, அதைவிட அதிக பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் நபர். வேலை தொடர்பான ஏமாற்றங்கள், காதல் சிக்கல்கள், தந்தையிடம் நல்ல பெயர் வாங்கும் முயற்சி, கிராம மக்களின் கோபத்திற்கு ஆளாகும் சூழ்நிலை என அவருக்கு எப்போதும் பிரச்சினைகள் உண்டு. ஆனால், அவர் எப்போதும் நல்லதே செய்ய விரும்புகிறார். மாகிபூரில் உள்ள வித்தியாசமான கதாபாத்திரங்களும், ஒவ்வொரு தவறான புரிதலும் இந்த தொடரின் நகைச்சுவையையும் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான இதில் நடித்திருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ரசிகர்கள் சுப்புவை சந்தித்து இந்த மறக்க முடியாத பயணத்தில் இணைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்றார். 


சமூகவலைதள இன்ஃப்ளூயன்சரும் நடிகையுமான மிதிலா பல்கர் பகிர்ந்து கொண்டதாவது, “நகைச்சுவையையும் மனித உணர்வுகளையும் 'சூப்பர் சுப்பு’ மிக அழகாக கையாண்டுள்ளது.குழப்பங்கள், ஆர்வம், மகிழ்ச்சி, உறவுகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளும் மனிதர்களின் கதை இருக்கிறது. மாலிக் ராம் உருவாக்கிய இந்த உலகம் தனித்துவமானது, உயிரோட்டமிக்கது. ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்தப் பயணத்தில் நினைவில் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதும் மனதுக்கு நெருக்கமானது. நெட்ஃப்ளிக்ஸின் ஆரம்பகால ஒரிஜினல்களில் ஒன்றான ‘லிட்டில் திங்ஸ்’ தொடரில் நான் நடித்தேன். இப்போது அதன் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’விலும் நடித்திருப்பது முழுமையடைந்த பயணமாக பார்க்கிறேன்" என்றார். 


சுப்புவின் தந்தை குகடேஸ்வர ராவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் முரளி சர்மா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதை உங்களை சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், பலர் தவிர்க்கும் உரையாடல்களை இயல்பாக்கவும் உதவும். நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் சமூக கருத்துக்களை இதன் மைய உணர்வை இழக்காமல் மிக இயல்பாக இந்தக் கதை பேசியிருக்கிறது. மாகிபூரில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் பார்வையாளர்கள் தங்களை இணைத்து கொள்ள முடியும். திறமையான நடிகர்களுடன் பணியாற்றியதும், நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரின் நடித்ததும் மகிழ்ச்சியான அனுபவம். மாக்கிபூரின் நகைச்சுவை, ஆச்சரியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்” என்றார். 


மாலிக் ராம், ரமேஷ் எலிகெட்டி மற்றும் ஷிவானி தோபல் ஆகியோர் திரைக்கதை எழுதி, சிலகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜீவ் சிலகா மற்றும் பரத் லட்சுமிபதி ஆகியோரது தயாரிப்பில் உருவாகியுள்ள 'சூப்பர் சுப்பு' தொடரில் கெட் அப் சீனு, மானசா சௌத்ரி, ஜீவன் மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


'சூப்பர் சுப்பு' தொடர் ஜூலை 2 அன்று நெட்ஃபிளிக்ஸில் மட்டும் வெளியாகிறது

 

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக ஹாரர் ஜானர் திரைப்படங்களில் சிலவற்றிற்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. உலகளவில் புகழ்பெற்ற ’தி கான்ஜூரிங்’ மற்றும் ’ஈவில் டெட்’ போன்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை உதாரணமாக சொல்லலாம். 


இந்திய சினிமாவிலும் மிகச்சில திரைப்படங்களின் அடுத்தடு்த்த பாகங்களுக்கே இத்தகைய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த வரிசையில், தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திகில் சீக்வல்தான் ’டிமான்டி காலனி’. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தத் திரைப்படமும் அதன் சீக்வலும் இன்றும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.


திகில் ரசிகர்களுக்கு செப்டம்பர் 11 மறக்க முடியாத நாளாக மாற உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் ’டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படத்தின் சீக்வலில் இருண்ட மற்றும் மர்மமான உலகிற்குள் மீண்டும் பார்வையாளர்கள் செல்ல இருக்கிறார்கள். அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அஜய் ஞானமுத்து கதையை இன்னும் விரிவுபடுத்தியுள்ளார். சில கதைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை.


சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து எழுதி இயக்கியுள்ளார். படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மற்றும் திரையுலகிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள படத்தின் வெளியீட்டு தேதி படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, "முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இணைத்த விதம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு திரைப்படத்தின் சீக்வலும் வெற்றி பெறுவது எளிதல்ல. ஆனால், ‘டிமான்டி காலனி 2’ மூலம் இயக்குநர் அதை சாத்தியப்படுத்தினார். படம் வெளியான பிறகு, ஒரு ரசிகர் என்னிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். ‘தி ஷைனிங்’ பட அனுபவத்தை ‘டாக்டர் ஸ்லீப்’ எவ்வாறு தொடர்ந்ததோ, அதைப் போலவே இந்த அனுபவம் இருந்தது என்று அவர் கூறினார். அத்தகைய கருத்துகளை கேட்கும்போது, இந்த சீக்வலின் அங்கமாக நானும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் மேலும் அதிகரித்தது. இன்று ‘டிமான்டி காலனி 3’ படத்தின் ஃபைனல் வெர்ஷன் பார்த்த பிறகு, இந்தப் படத்தில் இணைந்திருப்பதை பெருமையாக உணர்கிறேன். ரசிகர்களுக்காக பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தில் உள்ளது. அருள்நிதி, அஜய் ஞானமுத்து மற்றும் முழு குழுவும் இந்தப் படத்தை மிகுந்த பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விரைவில் படத்தின் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை தொடங்கவுள்ளோம்" என்றார். 


ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவற்றுடன் இணைந்து, பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் டங்கல் டிவி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டு படம் வழங்கப்படுகிறது.


நடிகர்கள்: அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆண்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹூசைன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர். 


தொழில்நுட்பக்குழு விவரம்:


தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை: ஃபைவ் ஸ்டார் கே. செந்தில்,

எழுத்து, இயக்கம்: அஜய் ஆர். ஞானமுத்து, 

இசை: சாம் சி.எஸ்.,

ஒளிப்பதிவு: சிவக்குமார் விஜயன்,

படத்தொகுப்பு: குமரேஷ்.டி

 


கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் .ஸ்விஸ்  ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தி டார்க் ஹெவன் '. 


நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு  மர்மமான க்ரைம் திரில்லராக உருவாகி உள்ளது. 

'ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை' என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை, பரபரப்பூட்டும்  திருப்பங்களுடன் படமாகியுள்ளது .


அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.


ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பாடல் வரிகள்: லாவர்தன்.


சித்து பிரதான நாயகனாக நடித்துள்ள இப்படம்

'எ சித்து இன்வெஸ்டிகேஷன்'என்கிற டேக் லைனுடன் ஜூலை 17 இல் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு ,ஹிந்திமொழிகளில் வெளியாகிறது.


இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது.


விழாவில் ட்ரெய்லர்,   பாடல்கள் திரையிடப்பட்டன.


விழாவின் தொடக்கத்தில் ஷரண், கோபால், மனோஜ் என மூன்று தயாரிப்பாளர்கள் பேசினார்கள்.


தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,


"இப்போது வரும் சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை. சில படங்கள் ஓடிடியில்  ஓடுகின்றன. எல்லா நல்ல படங்களும் ஓடுவதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலை இல்லையா? ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்று சொல்வது போல் ஒரு நல்ல படம் ஓடாமல் இருக்கக் கூடாது .நல்ல படங்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டு போய் சேர்க்க வேண்டும் .நிறைய தரமற்ற படங்கள் வருகின்றன .ஆனால் 'தி டார்க் ஹெவன்' நிச்சயம் வெற்றி பெறக்கூடிய நம்பிக்கை கொண்ட படமாக இருக்கிறது. இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

உப்புமா படங்களால்,

தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, பலருக்கும் பாதிப்பு.திறமையான  இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது.திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய கிரைம் திரில்லராக  இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது ''என்றார்.


இன்னொரு தயாரிப்பாளர் ஷரண் பேசும்போது,  


" நான் இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தேன் .ஆனால் பாலாஜி இந்தப் படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்தேன். அவர் சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று தோன்றியது .எனவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன்" என்றார்.


தயாரிப்பாளர் கோபால் பேசும் போது, 


"இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறப்பான படம்.பாலாஜி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர்.அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது. சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும்.இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள் .இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.


நடிகர் அருள் டி சங்கர் பேசும்போது,


"இந்தப் படத்தில் நிறைய வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்தன. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் பாலாஜியுடன் எனக்கு இது நாலாவது படம் .அவர் இயக்கத்தில் இது இரண்டாவது படம் .சில காட்சிகளை  ரீஷூட் செய்தார். அவர் நினைத்தது சரியாக வர வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பார் .இந்தப் படத்தின் போது அவருக்கு தாங்க முடியாத மன அழுத்தம் இருந்தது . அந்த அழுத்தத்தில் அவர் காரை அடித்து அவரது காருக்கு சேதாரம் ஏற்பட்டது. ஆனால் அதை வெளியே  மற்றவரிடம் காட்டாமல் படப்பிடிப்பில் பரபரப்பாக இருப்பார்.கிரிக்கெட் டீம் போல் அவரைச் சுற்றி எப்போதும் 11 பேர் கொண்ட ஒரு கூட்டம் இருக்கும்.

இந்தப் படத்தில் என்னுடன் நடித்தவர்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.


கேமராமேன் சிரிக்கவே மாட்டார் 

காரியத்தில் கண்ணாக இருப்பார் .

இந்தப் படப்பிடிப்பில் எனக்கு உதவியாளராக ஒரு வயதானவரை அமர்த்தியிருந்தார்கள். அவர் செய்யும் காரியங்கள் வேடிக்கையாக இருக்கும்.அவை எல்லாமே சிரிப்பை வரவழைக்கும்" என்றார்.


நடிகர் ஜெயக்குமார் பேசும்போது 


"நடந்து போக கூட முடியாத இடத்துக்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு  நடத்தினார். அதுதான் அவர்களின் தனித்தன்மையாக இருந்தது.


ஒவ்வொரு காட்சியையும் மூன்று முறை எடுப்பார். சரியானது வரும் வரை விட மாட்டார். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்தார்.படப்பிடிப்பின் போது எப்போதும் அவருக்கு அவரது மனைவி பெரும் பக்கபலமாக இருந்தார் 'என்றார்.


நடிகர் ,எழுத்தாளர் வேல ராமமூர்த்தி பேசும் போது,


" இன்று இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் காலமானது ஒரு பெரிய இழப்பு.  கடந்த 11 ஆம் தேதி பாரதிராஜாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியின் போது என் அருகில் இருந்தார்.

 இப்போது இல்லை. 

அந்தத் துயரத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.


இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி ஒரு நாள்  திருநெல்வேலியில் இருந்து பேசுகிறேன் என்று பேசினார் .வழக்கமாக கதை சொல்லும் இயக்குநர்கள் சொல்வது போல்தான் இருந்தது. போனில் மிகவும் நம்பிக்கையுடன் தான் பேசினார்.நான் சற்று சந்தேகப்பட்டேன். நான் இந்தப் படம் எடுக்க முடியாமல் தோற்று விட்டால் நான் அமெரிக்கா சென்று விடுவேன் என்றார்.அவரது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து நான் நடிக்கச் சம்மதித்தேன்.


 படப்பிடிப்பில் எல்லாரும் குடும்பம் போல் பழகினார்கள். பாலாஜியின் உழைப்புக்காகவே இந்தப் படம் ஓட வேண்டும். பெரிய பெரிய படங்களுக்குக் கூட இவ்வளவு லொகேஷன்களில் எடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் தேடித் தேடி  எடுத்தார்கள். நான் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரெய்லர் பார்க்கிற வரை எனக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை .இப்போது சொல்கிறேன் .இந்தப் படம் தோற்காது.அவர் அமெரிக்கா எல்லாம் செல்ல வேண்டியதில்லை" என்றார்.


இயக்குநர் மித்ரன் பேசும் போது ,


"இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும்போது  எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இவர்களின் கடின உழைப்பு ட்ரெய்லரில் தெரிகிறது. சினிமாவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு சினிமா திருப்பிக் கொடுக்கும்.இது மாதிரி  திரைப்படங்களுக்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார்.


நடிகர் புகழ் பேசும்போது,


 " இந்தப் படத்தின் நாயகன் சித்து எனக்கு ஒரு மாதமாகப் பழக்கம்.எல்லோரிடமும்  அன்பாகப் பழகுவார் .என்னை டார்லிங் என்று தான் கூப்பிடுவார். இந்தப் படத்தின் கான்செப்ட் பார்க்கும் போது அழகாக இருக்கிறது.இந்த படத்தில் பங்கெடுத்துள்ளவர்கள் பலரும் எனது நண்பர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள் "என்றார்.


இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,


" நான் இதற்கு முன்பு இசை அமைத்த உடன்பால் ,ஜாக்கி என்ற இரண்டு படங்களுக்குப்  பிறகு இசையமைக்கும் மூன்றாவது படம் இந்தப் படம் இது.

வேல ராமமூர்த்தி சார் போன்று நான் வியந்து பார்த்தவர்கள் என் படத்தில் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல  பெருமையாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் நான்கு பாடல்கள். நான்குமே சூழலுடன் தான் இருக்கிறது. என்னைச் சந்திக்க இயக்குநர் பாலாஜி வரும்போது எப்போதும் பத்து பேருடன் தான் வருவார். அந்த அளவிற்கு அந்த படக் குழு  ஒற்றுமையோடு இணைந்திருந்தார்கள்" என்றார்.


நடிகர் ரித்விகா பேசும்போது,


" இவ்வளவு தூரம் இந்தப் படம் வருமா என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு 70% படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான் .ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம். படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும்.புரிந்து கொள்வதில் சிக்கல் வரும்.மழை பெய்ய வேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது.மழை வேண்டாம் என்றால் மழை வரும்.


எப்படி இருந்தாலும் இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்தார்.

அவர் இந்த வேலைகளை எல்லாம் பார்ப்பதற்கு மேனேஜர் வைத்துக் கொள்ள வேண்டும்.ஒருவரே எல்லா வேலையும் பார்த்துக் கொண்டு சிரமப்படக்கூடாது.


 கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி ,நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஓடும் ஆதரவு கொடுங்கள்" என்றார்.


நடிகர் மைம் கோபி பேசும்போது,


" தம்பி சித்து இந்த அளவிற்கு இங்கே வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நடித்திருப்பவர்கள் பலரும் எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், தம்பிகள்,தங்கைகள் .சினிமா ஒரு அழகான துறை. சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.நம் நாட்டில் 140 கோடி பேர் இருக்கிறார்கள். எத்தனை பேரை கேமரா பதிவு செய்கிறது?சினிமாவில் நடிக்கும் இந்த குறைந்த அளவு மக்களைத்தான் பதிவு செய்கிறது .அப்படிப்பட்ட பெருமைக்குரியவர்கள் சினிமாவில் இருப்பவர்கள்.


சினிமா எல்லாரையும் மாற்றி விடும். ஏற்கும் பாத்திரத்தில் நல்லவனாக மட்டுமல்ல கெட்டவனாகவும் மாறி மாறி நடிக்கிறோம்.

 எல்லா திறமைசாலிகளுக்கும் இடம் தருவது சினிமா தான். நீங்கள் எப்போதும் சந்தோஷத்தை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். துக்கத்தைத் தள்ளி வையுங்கள். மகிழ்ச்சியாக வாழலாம் "என்றார்.


இயக்குநர் பாலாஜி பேசும்போது,


" இயக்குநர் பாக்யராஜ்  சார் காலமானது வருத்தமாக இருக்கிறது. சினிமாவுக்கு வந்து நான் முதலில் அவரிடம் தான் கதை சொன்னேன்.


இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷரண் இஷ்டப்பட்டு வந்தார் .அவர் இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. அதேபோல் கோபால் அவர்கள், என் தம்பி மனோஜ் ஆகியோர் பெரிதும் பக்கபலமாக நின்றார்கள்.அது போல இந்தப் படத்திற்கு நிறைய பேர் எனக்குத் துணையாக நின்று இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் நன்றி. சித்து ஒரு சிறப்பான  இடத்திற்கு இந்தப் படத்தின் மூலம் செல்வார். நான் திருநெல்வேலிக்காரன்,சென்னையைச் சேர்ந்தவன் அல்ல.என் படத்தில்

தமிழ் பேசும் நாயகியாக தர்ஷிகா  வந்ததில் பெரிய மகிழ்ச்சி . அடுத்து ரித்விகா போன்று ஒவ்வொருவராக இந்தப் படத்திற்குள் வந்த பிறகு படம் வேறு மாதிரியாக மாறிவிட்டது .நான் சீன் பேப்பரைக் கொடுத்து விட்டால் அவர்கள் தானாக எல்லாம் செய்து விடுவார்கள் என்கிற அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.எல்லாரையும் நான் மிகவும் சிரமப்படுத்தி இருக்கிறேன். இந்தப் படத்தின் மீதும் என் மீதும்  சிலருக்குச் சந்தேகம் இருந்தது .சந்தேகப்பட்டார்கள் .ஆனாலும் நான் இந்தப் படத்தை முடித்து விட்டேன்.மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன். "

என்றார்.


படத்தின் கதாநாயகன் சித்து பேசும்போது,


" எனக்குக் குருநாதர் போல இருப்பவர் மைம் கோபி அண்ணன்.  அவர் ஒரு நடிப்பு பயிற்சிப்பள்ளி வைத்திருக்கிறார் .அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குப் பலரின் அறிமுகங்கள் கிடைத்தது அவரால்தான்.


இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும் .அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். 'திருமணம்' தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் நடித்தவர்கள் மூலமும் நிறைய கற்றுக் கொண்டேன். உதாரணத்திற்கு இரவு மூன்று நான்கு மணிக்கு படப்பிடிப்பில் இருந்தால் கூட ஜெயக்குமார் சார் வந்து எங்களிடம் பேசி சிரிக்க வைப்பார் .எப்படி அவரால் முடிகிறது என்று நினைப்பேன்.இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டேன்.இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கம் வந்து பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன் "என்றார்.


'தி டார்க் ஹெவன்' திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

 

“பாகுபலி: தி பிகினிங்”  திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும் மறுக்க முடியாத பான்-இந்தியா சூப்பர் ஸ்டாராக தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறார். அந்த திரைப்படம் வசூல் சாதனைகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்திய நடிகர்களில் ஒருவராக பிரபாஸை மாற்றி, அவரை உலகளாவிய நட்சத்திரமாக உயர்த்தியது.


Baahubali: The Torch Bearer வெளியீட்டை முன்னிட்டு, பாகுபலி கதாபாத்திரம் தனது வாழ்க்கையில் ஏற்படுத்திய நம்ப முடியாத தாக்கத்தை பிரபாஸ் பகிர்ந்து கொண்டார். மொழிகளையும், நாடுகளையும், கலாச்சாரங்களையும் தாண்டி ‘பாகுபலி’ எவ்வாறு மக்களின் மனதில் இடம்பிடித்தது என்பதை நினைவுகூர்ந்த அவர், உலகின் பல பகுதிகளில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்தார்.


“இத்தாலியில் கூட மக்கள் என்னை பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு நான் அறப்பணிக்காகச் சென்றபோதும், அங்கிருந்த குழந்தைகள் ‘பாகுபலி’ படத்தை எவ்வளவு விரும்புகிறோம் என்று கூறினார்கள். ‘பாகுபலி’க்குப் பிறகு ஏற்பட்ட தாக்கம் சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது,” என்று பிரபாஸ் தெரிவித்தார்.


மேலும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் தொடர்புடைய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.


“நார்வேயில் ஒருவர் ராஜமௌலி சாரிடம் வந்து, ‘நீங்கள் ஒரு இயக்குநர் என்று நினைக்கிறேன்’ என்றார். சிறிது நேரம் கழித்து, ‘நீங்கள்தான் பாகுபலி படத்தின் இயக்குநர் என்று நினைக்கிறேன்’ என்றார். ‘பாகுபலி’ உலகின் எத்தனை இடங்களை சென்றடைந்திருந்தது என்பது உண்மையிலேயே ஒரு மாயாஜாலம்.”


இந்த திரைப்படம் தனது தனிப்பட்ட வாழ்க்கையையே எவ்வாறு மாற்றிவிட்டது என்பதையும் பிரபாஸ் பகிர்ந்தார்.


“நான் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுந்தாலும், அங்கும் மக்கள் என்னை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அப்போது நான் ராஜமௌலி சாருக்கு போன் செய்து, ‘என்னை இந்த ஜென்மத்தில் சுதந்திரமாக பயணம் செய்ய விட மாட்டீர்களா? எனக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை வேண்டாமா?’ என்று நகைச்சுவையாகக் கேட்பேன். முன்பெல்லாம் ஓய்வாக இருக்க மும்பை அல்லது டெல்லி செல்வோம். இப்போது அது கூட முடியவில்லை. உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் யாராவது ஒருவர் வந்து ‘பாகுபலி’ என்று அழைத்துவிடுகிறார்கள்.” என்கிறார்.


பத்து ஆண்டுகள் கடந்தும், பாகுபலியின் மரபும் தாக்கமும் இன்னும் ஈடு இணையற்றதாகவே திகழ்கிறது. இந்திய சினிமாவின் மைல்கல்லாக நிலைத்து நிற்கும் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய தூதுவராக பிரபாஸ் தொடர்ந்து இருந்து வருகிறார். பான்-இந்தியா சினிமாவின் முகமாகவும், உலக அரங்கில் இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவராகவும் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் வலுவடைந்துள்ளது.

 

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.


காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B . ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


தற்போது வெளியாகியுள்ள டீசர், பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மைகளை வெளிக்கொணர போராடும் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படேவின் கதாபாத்திரங்களை வலுவாக சித்தரிக்கிறது. அன்றாட உணவுப் பொருட்களில் கலந்து வரும் நச்சுப் பொருட்களால், குறிப்பாக இளம் தலைமுறையினரின் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை படம் உருக்கமாக எடுத்துரைக்கிறது. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்தக் கதை, பலரின் கவனத்திற்கே வராமல் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கிறது.


இப்படத்தை பற்றி சேட்டன் DK கூறுகையில்..,

“தி இந்தியா ஸ்டோரி என்பது வெறும் திரைப்படம் அல்ல; சமூகமாக நாம் அவசியம் பேச வேண்டிய ஒரு முக்கிய உரையாடல். பூச்சிக்கொல்லி விவசாயத்தின் அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும், அது உருவாக்கும் அமைதியான உடல்நல நெருக்கடியையும் இந்தக் கதையின் மூலம் வெளிப்படுத்த விரும்பினோம். டீசர் என்பது இந்தப் பிரச்சினையின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. தினமும் கோடிக்கணக்கான குடும்பங்களை பாதிக்கும் இந்த விஷயத்தைப் பற்றி மக்கள் சிந்திக்கவும், விழிப்புணர்வு பெறவும், தங்கள் உணவுத் தட்டில் என்ன வருகிறது என்பதை கேள்வி எழுப்பவும் இந்தப் படம் தூண்ட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார்.


நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது..,


“இந்தப் படத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அதன் கருப்பொருள்தான். பூச்சிக்கொல்லி விவசாயம் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக இருந்தாலும், அதன் நீண்டகால விளைவுகளை நாம் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. மிகப்பெரிய அமைப்புக்கு எதிராக போராடும் ஒரு சாதாரண தந்தையின் உணர்வுபூர்வமான பயணத்தை என் கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இது பொழுதுபோக்கு மட்டுமல்ல, மிக முக்கியமான ஒரு விவாதத்தையும் தொடங்கும் திரைப்படம்.”



நடிகை காஜல் அகர்வால் கூறுகையில்,


“தி இந்தியா ஸ்டோரி ஒரு வலுவான சமூகச் செய்தியை மையமாகக் கொண்ட திரைப்படம். ஒரு தாயாக இந்தக் கதை என்னை மிகவும் ஆழமாகத் தொட்டது. இன்றைய பெற்றோர்களின் அச்சங்களையும் கவலைகளையும் இது பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் பார்வைக்கு பெரும்பாலும் வராத ஒரு உண்மையை டீசர் வெளிப்படுத்துகிறது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் அது எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க இந்தப் படம் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார்.


இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 


தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி, ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்படம் Zee Studios  உலகளாவிய வெளியீடாக வெளியாகிறது.

 

பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர் தயாரித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்றிருக்கும் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 'அகிலன்' மற்றும் 'பிரதர்' திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்துள்ள 'கராத்தே பாபு' திரைப்படம் ஆகஸ்ட் 28 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.


சுந்தர் ஆறுமுகம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கும் பரபரப்பான அரசியல் கதையான 'கராத்தே பாபு' படத்தை 'டாடா' வெற்றிப் படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சோனி மியூசிக் நிறுவனம் இசை உரிமையை பெற்றுள்ளது.


இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆகஸ்ட் 28 அன்று 'கராத்தே பாபு' திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தற்போது வெளியிட்டுள்ளது.


தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே பாபு, "அரசியல்வாதிகள் குறித்து எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக திரையில் பேசப்படவில்லை. இந்த திரைப்படம் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இன்னொரு பக்கம் குறித்து அலசுகிறது. உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக 'கராத்தே பாபு' உருவாகி உள்ளது," என்று தெரிவித்தார்.


படக்குழுவினர்


இசை - சாம் சி எஸ்


ஒளிப்பதிவு - எழில் அரசு கே 


படத்தொகுப்பு - கதிரேஷ் அழகேசன் 


தயாரிப்பு வடிவமைப்பு - சண்முகராஜா


இதர நடிகர்கள்: நடிகர்கள்: வி.டி.வி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜா ராணி பாண்டியன், இலன், சாம் ஆண்டர்சன், ஸ்ரீ தன்யா, சந்தீப் ரவி ராஜ், ஆனந்தி, சிந்து பிரியா, அஜித் கோஷ், கல்கி ராஜா, நைஃப் நரேன், வெற்றி, அரவிந்த், தர்மராஜ், நந்தினி செந்தமிழன், ஜீவா சுப்ரமணியம், மணிமேகலா


இணை எழுத்தாளர்கள்: ரத்ன குமார், பாக்கியம் சங்கர்


சண்டை பயிற்சி: திலிப் சுப்பராயன்


ஒலி வடிவமைப்பாளர்: அருணாச்சலம் சிவலிங்கம்


நடன இயக்குநர்: சதீஷ் கிருஷ்ணன்


ஆடை வடிவமைப்பாளர்: காயத்ரி பாலசுப்ரமணியன்


தயாரிப்பு நிர்வாகி: கார்த்திக் ஆனந்த்கிருஷ்ணன்


நிர்வாகத் தயாரிப்பாளர்: கே.எஸ். செந்தில் குமார்


விநியோகத் தலைவர்: கிரண் குமார் எஸ்


கோ டைரக்டர்: எஸ் ஏ பாஸ்கரன்


தயாரிப்பு: சுந்தர் ஆறுமுகம்


கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கணேஷ் கே பாபு

 

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில்  தனது  கல்லூரி நண்பன் வாட்ஸ்-அப் மணி, நடத்தும் உணவகத்தில் நாயகன் சனத் வேலை பார்த்து வருகிறார். ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்ணான இமயாவும் நண்பர்களாக பழகுகிறார்கள்.  ஒரு கட்டத்தில் சனத் மீது இமயாவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், அவரது காதலை சனத் ஏற்க மறுக்கிறார். அதற்கு காரணம் தனது முன்னாள் காதலி தந்த காதல் வலியே ஆகும் .அவரது முன்னாள்  காதலி மடோனாவை  பற்றி அறிந்துக் கொண்ட பிறகும் அவர் மீது காதலோடு இருக்கும் இமயாவை சனத்தும் காதலிக்கிறார். 

இமயாவின் காதல் மூலம்  மீண்டும் தனது  மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு திரும்பும் சனத்,  ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு தனது  சில வருட நினைவுகளை இழந்து விடுகிறார். இதனையடுத்து சனத் இமயா உடனான  காதலை மறந்துவிடுவதோடு, தன்னுடைய முன்னாள் காதலியான மடோனாவை தேடி ஊட்டி செல்கிறார். நாயகனுக்கு மறந்த நினைவுகளை திரும்ப பெறுவதற்காக  இமயாவும், வாட்ஸ்-அப் மணி உடன் செல்ல இவர்களை பார்த்து  மடோனா அதிர்ச்சி அடைகிறார்.

இறுதியில் நாயகன் சனத்திற்கு மறந்த  நினைவுகள்  மீண்டும் கிடைத்ததா ? இல்லையா ?  சனத் காதலை மடோனா ஏற்றுக்கொண்டாரா ? இமயாவுடன் திருமணம் நடந்ததா ? இல்லையா ?  என்பதே ‘ஹார்ட்டின்’  படத்தின் மீதிக்கதை.


நாயகனாக நடித்திருக்கும் சனத்,  வேலை பார்க்கும் போது  எபோதும் எதையோ பறிகொடுத்தவர் போலவும் கல்லூரி காலங்களில் உருகி உருகி காதலிப்பவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  


அறிமுக நாயகியாக  நடித்திருக்கும் இமயா,  புதியவர் போல இல்லாமல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். நாயகனிடம் காதலை வெளிப்படுத்தும் விதம் அருமை,  குறிப்பாக சனத் , மடோனா காதலை மீண்டும் காதலிப்பதை பார்த்து கோபப்படும் இடங்கள் ரசிக்க முடிகிறது.


மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியன், தனது  லட்சியத்திற்காக காதலை இழப்பது சனத்  காட்டும் அன்பில் மீண்டும் காதலித்து விடுவோமோ என்று நினைக்கும் இடங்களில் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி  கவனம் ஈர்க்கிறார்.


நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி வரும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் முடிகிறது.  அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதா கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.


இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு  மெலோடி ரகம். பின்னணி இசை  கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.  முகேஷ்வரன்.வி பல ஊர்களின் அழகை அழகாக படம்பிடித்திருக்கிறார்.


ஒரு விபத்தால் சில வருட நினைவுகளை இழக்கும் நாயகன் , இன்னாள் காதல் மற்றும் முன்னாள் காதல் இரண்டில் எது கை கூடியது என்பதை மைய கருவாக வைத்து திரைக்கதை உருவாகியிருக்கும் இயக்குநர் கிஷோர் குமார் படத்தின் முதல்பாதியில் புதிய  காதல் , விபத்து, சென்று கொண்டு சென்றவர் இரண்டாம் பாதியில் முன்னாள் காதலி, நினைவுகள், மகிழ்ச்சி என கதையை அழகாக கொண்டு சென்றிருக்கிறார்.


பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல், மெதுவான காதல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ரசிகர்கள் ஒருமுறை பாக்கலாம்.

 

இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், ப்ரஜின் பத்மநாபன் மற்றும் இவானா வருண் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'அந்தரன்'.


செழியன் (ப்ரஜின் பத்மநாபன்) ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி. நகரில் தொடர்ச்சியாக அரங்கேறும் மர்ம மரணங்கள் மற்றும் கொலைகளைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் உண்மையான கொலையாளி யார் என்பதை அவர் தேடிச் செல்லும்போது, கார்த்திகா (இவானா வருண்) கதாபாத்திரமும் இந்த மர்மத்திற்குள் நுழைகிறது. இறுதியில், பல திருப்பங்களைக் கடந்து கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடித்தாரா, அதன் பின்னணியில் இருக்கும் சமூகக் கருத்து என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.


காவல் அதிகாரியாக வரும் ப்ரஜின், அதிகப்படியான ஹீரோயிசம் இல்லாமல், எதார்த்தமான மிரட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியாக வரும் இவானா வருண், வழக்கமான காதல் காட்சிகளைத் தாண்டி படத்தின் மையப்புள்ளியாக அழுத்தமான நடிப்பைத் தந்துள்ளார். நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும்எம் கே சாம்பசிவம் , அனுபமா குமார், பத்மன் , செந்தில்குமாரி, பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசை த்ரில்லர் படத்திற்குத் தேவையான சஸ்பென்ஸ் மற்றும் பதற்றத்தை அழகாகக் கடத்துகிறது. கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு படத்திற்குப் பலம் சேர்க்கிறது.


முதல் பாதியில் வழக்கமான பாணியில் நகர்ந்தாலும், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. குறிப்பாக, கிளைமாக்ஸ் வரை கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாதபடி இயக்குநர் சந்தோஷ் ராவணன் திரைக்கதை அமைத்துள்ளார்.  கிரைம்-சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை விரும்புபவர்கள் 'அந்தரன்' படத்தை தாராளமாகத் திரையரங்குகளில் பார்க்கலாம்.

 

94 வயதான புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'சிங் கீதம்' 


ஆந்திராவில் உள்ள 'குபேரபுரம்' என்ற வறண்ட கிராமத்தில் இருக்கும் தங்கச் சுரங்கத்தை அபகரிக்க கார்ப்பரேட் முதலாளிகள் முயல்கிறார்கள். கிராமத்தின் கடைசி மரத்தைப் பாதுகாக்கும் கௌரி (அஹில்யா பம்ரூ), பேராசை பிடிதவர்களிடமிருந்து கிராமத்தைக் காக்கப் போராடுகிறார். சுரங்கத்திற்காக அந்த மரம் வெட்டப்படும்போது ஏற்படும் ஒரு விசித்திரமான சம்பவமும், அதன் தொடர்ச்சியாக மனித பேராசைக்கு இயற்கை கற்பிக்கும் பாடமுமே படத்தின் மையக்கதை.


நாயகன் அயான், நாயகி அஹில்யா பம்ரூ ஆகியோர் தங்களின் சிறப்பான மற்றும் நேர்மையான நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர். ஷாலினி கொண்டேபூடி,  அழகாக இருப்பதோடு அளவான நடிப்பால் கவனம் பெறுகிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், நாயகனின் அப்பாக நடித்திருக்கும் ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் தோன்றும் விஜய் தேவரகொண்டா என  படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.


வறண்ட பாலைவனக் கிராமம் மற்றும் குபேரன் சிலை போன்றவற்றை தத்ரூபமாக உருவாக்கிய கலை இயக்குநர் அரவிந்த் மூலேயின் உழைப்பும், அன்குரின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளன. படம் முழுக்க வசனங்களே பாடல்களாக வருவதால், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது பின்னணி இசையாலும் பாடல்களாலும் கதையைத் தாங்கிப் பிடித்துள்ளார்.


'சிங் கீதம்' என்பது வணிக எல்லைகளைத் தாண்டி, தசாப்தங்களைக் கடந்த மாஸ்டர் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் அசாத்தியக் கற்பனையில் உருவான ஒரு தூய்மையான கலைப்படைப்பு. தியேட்டரில் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு புத்துணர்ச்சியான மற்றும் வித்தியாசமான சினிமா அனுபவம்.

 

ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் தயாரிப்பில் இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜெ.ஆர் , விஜி வெங்கடேஷ், , ரமா, வசுந்தரா, அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அங்கீகாரம் ’.


சென்னையின் கூவம் கரையோரப் பகுதியில், தூய்மைப் பணியாளரின் மகனாக பிறந்து வளரும் ஆதிரன் (கே. ஜே. ஆர்), ஓட்டப்பந்தயத்தில் மிகுந்த திறமைசாலியாக வலம் வருகிறார். தனது கடுமையான உழைப்பால் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார். ஆனால், விளையாட்டுத் துறையில் இருக்கும் அரசியல், சாதிய ஒடுக்குமுறை மற்றும் அதிகார வர்க்கத்தின் தலையீட்டால் அவரது வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறது. இதற்குப் பொறுப்பான அமைச்சர் (மன்சூர் அலிகான்) மற்றும் விளையாட்டு வாரியத்திற்கு எதிராக, தனது பயிற்சியாளரின் (வசுந்தரா காஷ்யப்) துணையோடு நீதிமன்றத்தில் ஆதிரன் எப்படிப் போராடி தனக்கான 'அங்கீகாரத்தை' பெறுகிறார் என்பதே படத்தின் கதை.


 தயாரிப்பாளராக இருந்த கே. ஜே. ஆர், ஒரு ஏழை தடகள வீரருக்காக தனது உடலமைப்பை மாற்றி, அவமானங்கள் மற்றும் புறக்கணிப்புகளைத் தாங்கும் எளிய இளைஞனாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துப்புரவு பணியாளராக வரும் ரமா , இவரது மகளாக வரும் இசபெல்லா , பெண் வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், விஜி வெங்கடேஷ், வசுந்தரா போன்ற நடிகர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர்.


இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகரமான மற்றும் போராட்டக் காட்சிகளுக்கு மிகப்பெரிய உத்வேகத்தையும் பலத்தையும் தந்துள்ளது. விஸ்வநாத் ஒளிப்பதிவு அழகாவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.


உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், விளையாட்டு உலகின் உள்ளடி அரசியலையும், திறமைக்கான அங்கீகாரத்தையும் சமரசம் இன்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

Pageviews