Double Occupancy திரை விமர்சனம்
போஸ் வெங்கட் மற்றும் வினோதினி தம்பதிகளுக்கு பல வருடங்களாகவே குழந்தை இல்லாமல் 15 வருடங்கள் கழித்து ஒரு விசித்திரமான சக்தியுடன் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் மாறுகிறது. இதனால் இரண்டு பாலினத்திற்கும் பொதுவாக 'ரஜினி' என்று பெயர் வைக்கிறார்கள். இந்நிலையில் ஒரு விபத்தில் பெற்றோர்களை இழக்க இருவரும் வேலையைத் தேடி சென்னை செல்கிறார்கள். காலையில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா ஆய்வகத்தில் வேலைக்கு சேர்கிறார். அங்கு மருத்துவராக இருக்கும் வினோத் கிஷனை காதலிக்கிறார். மறுபக்கம் இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் பார் ஒன்றில் வேலை பார்க்க அங்கு வரும் நாயகி சம்யுக்தாவை பார்த்தும் காதல் கொள்கிறார். தங்களுடைய உண்மையான நிலையை வெளியே சொல்ல முடியாமல் இருவரும் தவிக்கிறார்கள். இறுதியில் இருவரின் காதல் கைக்கு கூடியதா ? இல்லையா? என்பதே “டபுள் ஆக்குபன்ஸி” படத்தின் மீதிக்கதை.
ஆண் ரஜினியாக வரும் சந்தோஷ் துள்ளலான நடிப்பாலும், பெண் ரஜினியாக வரும் ரேஷ்மா வெங்கடேஷ் உணர்வுப்பூர்வமான நடிப்பாலும் கதையைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். வி டி வி கணேஷ் மற்றும் சந்தோஷ் இடையேயான காமெடி காட்சிகள் திரையரங்கில் நல்ல கலகலப்பை ஏற்படுத்துகின்றன. வினோத் கிஷன் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் தங்களது கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்துள்ளனர்.
சாம் சி.எஸ் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. சாந்தகுமார் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவு படம் முழுக்க வண்ணமயமாக காட்டியுள்ளது.
வழக்கமான அரைத்த மாவை அரைக்காமல், தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய மற்றும் வித்தியாசமான பேண்டஸி கோணத்தில் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி..











0 comments:
Post a Comment