“அங்கீகாரம்”  படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது

 

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


 ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time'  எனும் தலைப்பில்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே”  என ஆரம்பிக்கும்  இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் வலிமையான கருத்துகளுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலை புகழ்பெற்ற கலைஞரான வைக்கம் விஜயலட்சுமி தனது உணர்வுபூர்வமான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியும் மனதை பிசைந்து, வாழ்க்கை, நீதி, அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றிய பல கேள்விகளை நம்முள் விதைத்து கலங்க வைக்கிறது.


பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள “அங்கீகாரம்” திரைப்படம், விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் விளையாட்டுத் துறையின் மறைக்கப்பட்ட அவலங்களை பேசுகிறது. ஏற்கனவே வெளியாகியுள்ள டிரெய்லர், தனக்கான அங்கீகாரத்திற்காக நீதிமன்றம் வரை சென்று போராடும் ஒரு தடகள வீரனின் கதையை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்திற்காக சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் நீதிமன்ற வளாக செட்  நிஜத் தோற்றம் போல அமைக்கப்பட்டு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தரமான காட்சியமைப்பு மற்றும் வலுவான கதைக்களம் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


“அங்கீகாரம்” திரைப்படத்தில் கே.ஜெ.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பா.ரஞ்சித்திடம் துணை இயக்குநராக பணியாற்றிய தென்பாதியான் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.


ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. டிரெய்லருக்குப் பிறகு பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

0 comments:

Pageviews