வா வாத்தியார் திரை விமர்சனம்

 

மாசிலா ஊரில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜ்கிரண், தன் பேரன் ராமுவை (கார்த்தி) எம்.ஜி.ஆர் கொள்கைப்படி வளர்க்க நினைக்கிறார். ஆனால், அந்த நேர்மை பிடிக்காத ராமு, வில்லன் நம்பியாரின் பாணியைப் பின்பற்றுகிறார். வளர்ந்து ஊழல் செய்யும் போலீஸ் அதிகாரியாக மாறும் ராமு, தொழிலதிபர் பெரியசாமி (சத்யராஜ்) மற்றும் முதல்வருக்கு (நிழல்கள் ரவி) இடையிலான சட்டவிரோத மோதலில் சிக்கிக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் நேர்மாறான 'சூப்பர் ஹீரோ' பிம்பமாக மாறும் ராமு, இந்தச் சிக்கலை எப்படிச் சமாளித்தார் என்பதே படத்தின் கதை.


ராமேஸ்வரன்,ராமச்சந்திரன் என்று இருமுகம் காட்டும் கார்த்தி அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் எதிர்மறைக் குணச்சித்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.அவருக்குள் எம்ஜிஆர் விளைவு நிகழும் போது எம்ஜிஆர் தோற்றம் காட்டி, உடல் மொழி, பேச்சு எல்லாமும் மாற்றி மாறி விடுகிறார்.சில நேரம் போலீசும் எம்ஜிஆரும் என மாறி மாறி முகபாவம் காட்டி நடிப்பில் புகுந்து விளையாடுகிறார். நாயகியாக நடித்திருக்கும் கிருத்தி ஷெட்டிக்குப்  பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று அவர் போலியாக அலறும் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். எம்ஜிஆரின் பரம ரசிகராக வரும் ராஜ்கிரன் பாத்திரம் மனதில் பதிகிறது. அவர் முகத்தை ஏஐ எல்லாம் பண்ணி இளமையாக்கி இருக்கிறார்கள். கூடவே அந்த வாய்ஸையும் இளமையாக்கி இருக்கலாம். கதைப்படி அவரது தோழராக வரும் ஆனந்தராஜ் பேரன் கார்த்தியுடைய தோழராகவும் தொடர்ந்து கொண்டிருப்பது ஆகப்பெரிய ஆச்சரியம். நிஜத்தில் எம்ஜிஆரின் ரசிகரான சத்யராஜை அதற்கு தோதான வேடத்தில் போடாமல் எம்ஜிஆரின் எதிரியாக்கி விட்டதும், ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகும் அவரது பாத்திரம் சட் என்று முடிந்து விடுவதும் கூட சுவாரசியத்தை குறைக்கிறது.


ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில்,கால் நூற்றாண்டுக்கு முந்தைய வண்ணப் பகிர்வுகளை திரையில் கொண்டு வந்திருக்கிறார். சந்தோஷ்நாராயணன் இசை மூலம் படத்தின் தரத்தை உயர்த்த துணை நின்றிருக்கிறார். கிரணின் கலை இயக்கம்,அன்றைய காலகட்டத்தைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறது. அனலரசுவின் சண்டை வடிவமைப்புகள் சுவாரசியம்.பெண்களை அடிக்கமாட்டேன் என்கிற நாயகனின் கொள்கைக்காக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் நன்று. எழுதி இயக்கியிருக்கும் நலன் குமாரசாமி, எம்ஜிஆரின் பிம்பத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய பாணியில் படத்தைக் கொடுத்திருக்கிறார்.முதலமைச்சர், அரசியல் தரகர், மஞ்சள்முகம் குழு உட்பட பல காரமான விசயங்களை கதைக்குள் வைத்திருக்கிறார்.

0 comments:

Pageviews