ஜாக்கி திரை விமர்சனம்

 

மதுரை நிறைய விஷயங்களுக்கு ஃபேமஸ். போட்டியும் பொறாமையும் கலந்துகட்டும் 'கிடா முட்டுச் சண்டை'யும் அதில் ஒன்று. அந்த போட்டியில் ஈடுபடும் இரு இளைஞர்களுக்கிடையிலான மோதலாக திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கும் டாக்டர் பிரஹபல், கிடா சண்டை பற்றிய இந்த படத்தை எடுப்பதற்காக மதுரை மண்ணில் 3 வருட காலம் முகாமிட்டு, கிடாக்களை சொந்தமாக வாங்கி அவற்றுக்கும், படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்தவர்களுக்கும் முறையான பயிற்சியாளரை வைத்து பயிற்சியளித்து உழைத்திருக்கிறார். தங்களது கிடாக்களுக்குள் நடக்கும் சண்டையில் வெற்றி தோல்வியால் ஒருவர், ஜெயித்த கிடாவுக்கு சொந்தமானவரை ஒழித்துக்கட்ட சதி வேலைகளில் ஈடுபட அதையெல்லாம் வெற்றியடைந்தவர் எப்படி சமாளிக்கிறார், எதையெல்லாம் இழக்கிறார் என்பது கதையோட்டம்... கிளைமாக்ஸ் ‘நல்லவன் வெல்வான்' என்பதாக இருக்கிறது.


கிடா சண்டை போட்டியாளர்களாக யுவன் கிருஷ்ணா, ரிதான். யுவன் நல்லவர், ரிதான் கெட்டவர், கொலை வெறி பிடித்தவர். இருவரும் மோதிக் கொள்வதில் அனல் பறக்கிறது. நடிப்பாக பார்த்தால் மூன்று வருட உழைப்பின் பிரதிபலிப்பு தெரிகிறது. அம்மு அபிராமிக்கு கதைநாயகனின் காதலிக்கும் வேலை. அதை உற்சாகமாக செய்திருக்கிறார். மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா என மற்ற நடிகர் நடிகைகளும் அசத்தியிருக்கிறார்கள்.


என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவில் கிடா சண்டைகளையும், கதை நடக்கும் மதுரையின் சுற்று வட்டாரத்தையும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு உருவாகிறது. சக்தி பாலாஜியின் பின்னணி பலம் சேர்க்கிறது.


சேவல் சண்டையை மையப்படுத்தி வெற்றி மாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ அளவுக்கு இல்லாவிட்டாலும் அதற்கு அடுத்த இடத்தில் வைத்துக் கொண்டாடுவதற்கான தகுதி இந்த 'ஜாக்கி'க்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

0 comments:

Pageviews