சாவீ திரை விமர்சனம்
உதயா தீப், அவரது மாமன் மகள் கவிதா சுரேஷூம் காதலர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினாலும், முறையாக இருந்தாலும் மறுப்புத்தெரிவிக்கிறார், உதயா தீப்பின் மாமா, பிரேம் கே சேஷாத்திரி. உதயா தீப்பின் மீதும், அவரது தந்தை மீதும் தீராத பகையுடன் இருந்து வருகிறார். இந்நிலையில், பிரேம் கே சேஷாத்திரி ஒரு சாலை விபத்தில் உயிரிழக்கிறார். அது கொலையாக இருக்குமோ? என சந்தேகம் நிலவி வரும் நிலையில், இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் தகனம் செய்ய முடிவு செய்யப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் அனைவரும் அயர்ந்து தூங்கிவிடுகின்றனர். காலை, கண் விழித்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி. இறந்தவரின் உடல் காணாமல் போயிருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில், இன்ஸ்பெக்டர் ஆதேஷ் பாலா, விசாரணை செய்ய வருகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? ‘சாவீ’ படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் உதயா தீப். கலகலப்பாக காட்சிகளை கடத்திச் சென்றிருக்கிறார், காட்சிகள் ஒவ்வொன்றிலுமே ஒரு காமெடியை கொடுத்து நன்றாகவே ரசிக்க வைத்திருக்கிறார். நாயகி கவிதா தனக்கான பாத்திரத்தை தெளிவாக செய்து முடித்திருக்கிறார். இவர்களுடன் ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ப்ரேம் கே சேஷாஸ்த்ரி உள்ளிட்டோர் பிற பாத்திரங்களை நிறை செய்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் விஜே ரகுராம் ஆகியோரின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ஏற்ற அளவில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம், குறைந்த விளக்குகளைப் பயன்படுத்தி காட்சிகளைப் படமாக்கியிருந்தாலும், எளிமை மற்றும் இயல்புத்தன்மையுடன் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
இயக்குனர் ஆண்டன் அஜித், ஒரு சாதாரண “பிணம் காணாமல் போனது” என்கிற லைனை வைத்து, அதுக்குள் சஸ்பென்ஸ், வீட்டுக்குள் குழப்பம், பிளாக் காமெடி, சமூக மெசேஜ் — எல்லாத்தையும் மெல்ல மெல்ல சேர்த்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார். குறிப்பாக, இன்றைய இளைஞர்களை பாதிக்கிற போதை பிரச்சனையை ஒரு நகைச்சுவை திரைக்கதையிலேயே டச் பண்ணியிருப்பது நல்ல முயற்சி.











0 comments:
Post a Comment