3BHK திரை விமர்சனம்

 

படத்தில் நாயகன் சரத்குமார். சரத்குமாரின் மனைவி தேவையானி. இவர்களின் பிள்ளைகள் தான் சித்தார்த், மீதா. இவர்களை வாசுதேவன் அண்ட் ஃபேமிலி என்று சொல்வார்கள். இவர்களுடைய கனவே சொந்தமாக வீடு வாங்குவது தான். அதற்காக குடும்பமாக சேர்ந்து ரொம்பவே கடுமையாக உழைக்கிறார்கள். சித்தார்த்திற்க்கு சுத்தமாகவே படிப்பு ஏறவில்லை. தன்னுடைய பிள்ளைகளை எப்படியாவது படித்து பெரிய ஆளாக்க வேண்டும் என்றும் சொந்தமாக வீட்டை வாங்க வேண்டும் என்று சரத்குமார் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். பின் தான் சொந்த வீடு வாங்குவதற்கான பணத்தை சரத்குமார் சேர்த்து வைக்கிறார். அப்போது பன்னிரண்டாம் வகுப்பில் சித்தார்த் ஜஸ்ட் பாஸ் ஆகிறார். இதனால் நிறைய பணம் கொடுத்தால் தான் பொறியியல் கல்லூரியில் சீட்டு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். பின் சரத்குமார் வீடு வாங்க வைத்திருந்த பணத்தை சித்தார்த்தின் படிப்பு செலவிற்கு கட்டி விடுகிறார். வீடு வாங்கும் அவரது முயற்சி பல இடையூறுகளால் தொடர்ந்து தோல்வியில் முடிந்தாலும், தனது மகன் வெற்றி பெறுவார், என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால், அவரது மகன் சித்தார்த், படிப்பு மற்றும் பணி இரண்டிலும் சாதிக்க கூடிய அளவுக்கு அல்லாமல் சராசரி மனிதராக இருப்பதால், தந்தையின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் திணறுகிறார். அப்பாவின் கனவு சொந்த வீடு கனவு, மகனின் கனவாக மாறினாலும், ஒட்டு மொத்த குடும்பத்தின் நிறைவேறாத கனவாகவே பயணிக்க, இறுதியில் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.


ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத் தலைவரின் வேடத்தை இத்தனை அற்புதமாக செய்ய முடியுமா என்கிற அளவில் அண்டர் பிளே செய்து நடித்திருக்கிறார் சரத்குமார். பள்ளிச் சிறுவனாகத் தெரிய இளைத்தது மட்டுமில்லாமல், கல்லூரி, வேலை, திருமண வாழ்க்கை என்று அனைத்துப் பருவங்களுக்கும் பொருத்தமாக வாழ்ந்திருக்கிறார் சித்தார்த். சித்தார்த்தின் தங்கையாக நடித்திருக்கிறார் மீதா ரகுநாத், தனது கேரக்டரை மிக அழகாக செய்திருக்கிறார். சித்தார்த்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த சைத்ரா, கனக்கச்சிதமாக அந்த கதாபாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார். யோகி பாபு சில இடங்களில் மட்டும் திரையில் தோன்றினாலும் தன்னுடைய வழக்கமான 'ஒன் லைன்' பஞ்ச் மூலம் சிரிப்பை வரவழைக்கிறார்.


தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், அம்ரித் ராம்நாத்தின் இசையும் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது.


ஒரு யதார்த்தமான குடும்ப கதையை எடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். படத்தில் ஆக்சன், ரொமான்ஸ் எதுவுமே இல்லை என்றாலும் குடும்ப கதையை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். 

0 comments:

Pageviews