DNA திரை விமர்சனம்

 

படத்தில் ஹீரோ அதர்வாவிற்கு ஆரம்பத்திலேயே காதல் தோல்வி அடைந்ததால் கஞ்சா, குடி என்று போதைக்கு அடிமையாக இருக்கிறார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேர்ந்து அதர்வாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். இன்னொரு பக்கம் கொஞ்சம் மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். அதர்வா- நிமிஷா சஜயன் இருவருக்குமே திருமணம் செய்து வைக்கிறார்கள். அதர்வாவின் மனைவி நிமிஷா சஜயன் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கடத்தப்பட்டு வேறு ஒரு குழந்தை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. இதை அறிந்து கொள்ளும் நிமிஷா, இது தனது குழந்தை இல்லை என்று கூறுகிறார். ஆனால், மருத்துவமனை ஆவணங்கள் அனைத்தும் அது நிமிஷா குழந்தை தான் என்பதை உறுதிப்படுத்த, நிமிஷா மட்டும் தனது குழந்தை இல்லை, என்பதில் உறுதியாக இருக்கிறார்.  மனைவி சொல்வதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் அதர்வா, தனது குழந்தையை மீட்டாரா? குழந்தை கடத்தலின் பின்னணி என்ன? என்பது தான் மீதிக்கதை.


படத்தில் ஹீரோ அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் பிரேக் அப் பிறகு குடித்துவிட்டு ரகளை செய்யும் இளைஞனாகவும், திருமணத்திற்கு பிறகு பொறுப்பான தந்தையாகவும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மலையாள நடிகை நிமிஷா சஜயனும் வழக்கம் போல் தனது நடிப்பின் மூலம் மிரட்டியிருக்கிறார். அதர்வாவின் அப்பாவாக நடித்திருக்கும் சேத்தன், நிமிஷா சஜயனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக், சுப்பிரமணிய சிவா ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேலின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.


இசையமைப்பாளர்கள் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகியோரது பாடல்களும், ஜிப்ரானின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.


பார்த்திபனின் ஒளிப்பதிவு நேர்த்தி. இரவு நேர காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது. படத்தொகுப்பாளர் வி.ஜே.சாபு ஜோப் காட்சிகளை படத்தை வேகமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.


குழந்தை கடத்தல் கதையை வித்தியாசமாண கோணத்தில் அணுகியிருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், போலீஸ் விசாரணை, குழந்தை கடத்தல் நெட்வொர்க் போன்றவற்றை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

0 comments:

Pageviews