ஹிட் 3 திரை விமர்சனம்

 

சமுத்திரக்கனியின் மகனாக வரும் நானி ஒரு போலீஸ் அதிகாரி (SP). எப்போதும் விறைப்பாக தனது முகத்தை வைத்துக் கொண்டு தனது பணியில் நேர்மையாக இருந்து வருகிறார். இவர் இரண்டு நபர்களை தலைகீழாக தொங்கவிட்டு அவர்களை கொலை செய்து வீடியோ எடுத்துக் கொள்கிறார். இரண்டாவது கொலை செய்யும் போது தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு போலீஸிடம் நானி சிக்கிக் கொள்ள கதை ப்ளாஷ் பேக் செல்கிறது. காஷ்மீரில் பணிபுரியும் போது மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது. அதை விசாரிக்கிறார் நானி. விசாரணையில், தலைகீழாக தொங்கவிட்டு அவர்களை கழுத்துறுத்து கொலை செய்து உடம்பில் சில உறுப்புகளை திருடி அதை வீடியோ எடுத்து ஒரு தடை செய்யப்பட்ட ஒரு இனையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்த சம்பவம் நாட்டில் பல இடங்களில் அரங்கேறுகிறது. இதன் மெயின் அட்மின் யாரென கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார் நானி. அதற்காகவே இரண்டு நபர்களை கொலை செய்து அந்த குரூப்பில் இணைகிறார். இறுதியில், அந்த அட்மின் யார்.? அந்த கும்பலை நானி எப்படி கொன்றார் என்பதே படத்தின் மீதிக் கதை.


படத்தின் மொத்த கதையையும் தன் தோல் மீது தாங்கிப் பிடித்துச் செல்கிறார் நானி. லுக், மேனரிசம், ஆக்‌ஷன் காட்சிகள் என அனைத்திலும் அதிகமான உழைப்பினைக் கொட்டியிருக்கிறார் நானி. நானியின் ஜோடியாக நடித்திருக்கும் ராசியான நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டி அதிரடியில் கலக்கி இருக்கிறார். சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் படத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகளும் படத்தில் அதிகமாக இருந்தாலும், அதை உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கச் செய்வதோடு, அர்ஜுன் சர்க்கார் என்ற கதாபாத்திரத்தின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மிக்க வைக்கும் அளவிற்கான சண்டைக் காட்சிகளை அமைத்து நம்மை திரையிலிருந்து கண்களை அசைய விடாமல் பார்த்துக் கொள்ளும் அளவிற்கான திரைக்கதையை அமைத்து நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.


ஹிட் 1 & 2 ரசித்த ரசிகர்கள் இப்படத்தினையும் கண்டிப்பாக கொண்டாடுவார்கள்.

0 comments:

Pageviews