டென் ஹவர்ஸ் திரை விமர்சனம்

 

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளிக்கின்றனர். அந்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிபிராஜ், அந்த பெண் கடத்தப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதோடு, அப்பெண்ணை மீட்பதற்கான முயற்சியில் இறங்குகிறார். அப்போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தாக்கப்படுவதாகவும், அந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகே சென்றுக் கொண்டிருப்பதாகவும் போலீஸுக்கு தகவல் வருகிறது. இதனால், அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி போலீஸ் சோதனை செய்யும் போது, புகார் அளித்த இளைஞர் அதே பேருந்தில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.


பெண் கடத்தல் மற்றும் பேருந்தில் இளைஞர் கொலை, என இரண்டு வழக்குகளையும் பத்து மணி நேரத்தில் முடிக்க வேண்டும், என்ற கட்டாயத்தில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், இரண்டு குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘டென் ஹவர்ஸ்’.


காவல்துறை அதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் சிபிராஜ்.எந்த இடத்தில் சிந்தனை? எந்த இடத்தில் செயல்? எப்போது அதிரடி? என்று திரைக்கதையில் இருக்கும் விசயங்களை நடிப்பில் அழகாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.கதாநாயகி மற்றும் வழக்கமான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத குறையைத் தனி ஆளாக நிவர்த்தி செய்து படத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.


உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் கஜராஜ்,மருத்துவராக வரும் ஜீவாரவி மற்றும் முருகதாஸ்,உதயா, திலீபன் உள்ளிட்டோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.தங்கதுரையின் நகைச்சுவைக் காட்சிகளும் நன்று.


இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படம் பிடித்து காட்டுகிறது ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்கின் கேமரா. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை படத்தின் இன்னொரு ஜீவன்.


எழுதி இயக்கி இருக்கும் இளையராஜா கலியபெருமாள், ஒரு கடத்தல் கதையை தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பாக சொல்லி கமர்சியல் இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

0 comments:

Pageviews