ட்ராமா(Trauma) திரை விமர்சனம்
விவேக் பிரசன்னா மற்றும் சாந்தினி தமிழரசன் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் மன வேதனையில் உள்ளனர். இந்த நிலையை சமாளிக்க அவர்களது நண்பரான ஆனந்த் நாக் அவர்களுக்கு உதவிகரம் நீட்டுகிறார். அதேபோல், ஆட்டோ டிரைவராக இருக்கும் மாரிமுத்து மற்றும் அவரது மனைவியான ரமா தம்பதியின் மகளாக பூர்ணிமா ரவி பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். பூர்ணிமாவை பார்த்தோஷ் காதலிக்கிறார். மற்றொரு பக்கத்தில் கார் மெக்கானிக்காக உள்ள ஈஸ்வர், தனது நண்பர்களின் உதவியுடன் கார் திருடி விற்று வருகிறார். மேலும், பிரதீப் கே. விஜயன் குழந்தை இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை நடத்துகிறார். இவ்வாறு நான்கு விதமான பாத்திரங்கள், ஒரு பொதுவான பிரச்சனையில் ஒன்றாகி சந்திக்கின்றன. அந்த பிரச்சனை என்ன? மருத்துவம் எவ்வாறு அதனுடன் தொடர்புடையது என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பு மூலம் பல உணர்வுகளை கொட்டி தீர்த்திருக்கிறார். துக்கம்,மகிழ்ச்சி உடனே அதிர்ச்சி என மாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய வேடம் சாந்தினிக்கு.அவர் நன்றாகவும் இருக்கிறார் நன்றாக நடித்துமிருக்கிறார். இளம்நாயகி பூர்ணிமா ரவிக்கு காதல் காட்சிகளிலும் அதன்பின்னான அதிரடிக் காட்சிகளிலும் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார். நல்ல காதலனாகவும் எதிர்மறை நாயகனாகவும் இருவேறுபட்ட வேடங்களையும் செய்திருக்கும் பிரதோஷ்,அதற்கேற்ற நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார்.
மருத்துவர் என்கிற போர்வையில் விபரீத வேலைகளில் ஈடுபடும் பிரதீப் கே விஜயன், காவல்துறை அதிகாரியாக வரும் சஞ்சீவ், அம்மா கதாபாத்திரத்தில் வரும் ரமா,மாரிமுத்து, நிழல்கள் ரவி,ஆனந்த் நாக் ஆகிய அனைவரும் அளவாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளோடு இணைந்த மேஜிக்.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் கேமரா படத்தின் இன்னொரு பலம்.
எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை மாரியப்பன், குழந்தை இன்மை பிரச்சனையை மருத்துவ முறை கேடுகள் வழியே அணுகி இருக்கிறார்.
0 comments:
Post a Comment