விடாமுயற்சி திரை விமர்சனம்

 

அர்ஜுன், கயல் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். 12 வருட திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்படுகிறது. கயலுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட… விவாகரத்து கோருகிறார். இதற்கு ஒப்புக்கொள்கிறார் அர்ஜூன். விவாகரத்து வழக்கு முடியுட் வரை, கயல் தன் தாயாரின் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறார். அதை ஏற்று, அவரை காரில் அழைத்துச் செல்கிறார் அர்ஜூன்.


அஜர்பைஜானின் பாலைவனச் சாலையில் தன்னந்தனியே பயணிக்கிறது கார். இடையில் அது மக்கர் செய்கிறது. தவித்து நிற்கிறார்கள். அப்போது வழியில் டிரக்கில் வருகிறது ஒரு ஜோடி. அவர்களும் தமிழர்கள்.


அவர்களது டிரக்கில் கயலை அனுப்பி வைத்து காரை சரி செய்ய என்ன செய்யலாம் என சிந்திக்கிறார் அர்ஜூன். கார் சரியாகிறது. ஆனால் கயலை காணவில்லை.


கயலை அர்ஜூன் கண்டுபிடித்தாரா… இருவரும் இணைந்தார்களா என்பதுதான் மீதிக்கதை.


படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் வருகிறார் அஜித். அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகளிலும் காணாமல் போன பிறகு பதற்றம், தவிப்பு, திரிஷாவைக் காப்பாற்ற போராட்டம் என பல்வேறு வகை நடிப்புத் தருணங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். நடனம், சண்டைக் காட்சிகளிலும் கவனிக்க வைக்கிறார்.


நாயகியாக கயல் பாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷா அவரது திரைத் தோற்றத்திலேயே ரசிகர்களைத் திருப்திப் படுத்தி விடுகிறார்.என்றும் மாறா இளமை இது,என்று கூற வைக்கிறார்.அவர் பாத்திரத்திற்கு ஏற்றபடி அளவான நடிப்பைக் கொடுத்துள்ளார். வித்தியாசமான பாத்திரத்தில் வருகிறார் ரெஜினா. வில்லத்தனமாக மிரட்டி இருக்கிறார் அர்ஜுன். எதிர்பாராத பாத்திரத்தில் வருகிறார் ஆரவ்.


குற்றமும் அதற்கான தண்டனையும் என்கிற ரீதியில் தன் படங்களை இயக்கும் இயக்குநர் மகிழ்திருமேனி இதில் கடத்தல் பணம் பறிக்கும் கும்பலை மையமாக வைத்து கதை எழுதி இயக்கியுள்ளார். முதல் பாதி திரைக்கதை மித வேகத்தில் சென்றாலும் இடைவேளைக்குப் பிறகு கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது .துரத்தல் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக அஜித் -ஆரவ் காரில் மோதிக்கொள்ளும் காட்சிகள் பரபர. படத்தின் பெரும்பலமாக, ஓம் பிரகாஷ் செய்துள்ள ஒளிப்பதிவைக் கூறலாம் .நாம் இதுவரை தமிழ் திரையில் காணாத புவியியல் தோற்றத்தைக் கண் முன்னே நிறுத்தி அசத்தியுள்ளார். கதாபாத்திரங்களையும் பின்புலக் காட்சிகளையும் மிகவும் அழகாக எடுத்து ரசிக்க வைத்துள்ளார்.இதுவே ரசிகர்களுக்கு புதிய காட்சி அனுபவத்தைத் தருகிறது. அதேபோல் அனிருத்தின் பாடல்களும் இசையும் படத்தைத் தூக்கி நிறுத்தும் பங்காற்றியுள்ளன.மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளோ பஞ்ச் வசனங்களோ இல்லாதது கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன.பட உருவாக்கம் ஹாலிவுட் படங்களுக்குச் சவால் விடுகிறது.


லைக்கா நிறுவனத்தின் வெற்றி பெற வரிசையில் விடாமுயற்சி சேரும் அளவிற்கு அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளன. அதீதமான வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ, இல்லாதது குடும்பத்துடன் இந்தப் படத்தைக் காணத் தூண்டும் நேர்நிலை அம்சங்கள் ஆகும்.

0 comments:

Pageviews