தண்டேல் திரை விமர்சனம்
ஆந்திராவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மீனவர் வாழ்வின் கண்ணீர்க் கதை. மீன்பிடித் தொழில் செய்து வருகிறார் நாக சைதன்யா . அவரை அதே ஊரைச் சேர்ந்த சாய் பல்லவி சிறு வயது முதல் நெருங்கிப் பழகி காதலித்து வருகிறார். வழக்கமாக அப்பகுதி மீனவர்கள் குஜராத் அருகே உள்ள அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வர்.நடுக்கடலில் அப்படி நீண்ட தூரம் செல்வதால் அவர்கள் திரும்பி வர சில மாதங்கள் ஆகும். இதனால் நாக சைதன்யாவைக் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனக் கூறி சாய் பல்லவி எச்சரிக்கிறார். மீறிச் சென்றால் நமது காதல் நிலைக்காது என்றும் சொல்கிறார். ஆனால் ஊர் மக்களுக்காகவும், தன்னை நம்பி உள்ள 22 மீனவர்களுக்காகவும் கடலுக்குள் செல்கிறார் நாக சைதன்யா. அங்கு ராஜூவின் படகு கடும் புயலில் சிக்குகிறது. எல்லை தாண்டி, பாகிஸ்தான் பகுதிக்குச் சென்றுவிடுகிறது. அங்கு அந்நாட்டு பாகிஸ்தான் கடற்படையினரால் ராஜூஉள்ளிட்டோர் கைது செய்யப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து நடந்தது என்ன?சிறையில் இருந்து நாக சைதன்யா வெளியே வந்தாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
மீனவர் ராஜூவாகவே, வாழ்ந்திருக்கிறார் நாக சைதன்யா. மீனவர்களை வழிநடத்துவது, தன்னை நம்பி வருவோருக்காக இறுதி வரை நிற்பது, காதல், அதிரடி என அனைத்து விதங்களிலும் அசத்தி இருக்கிறார். சாய் பல்லவி பற்றி சொல்லவே தேவையில்லை. காதல் காட்சிகளிலும் சரி, காதலன் எப்போது திரும்புவான் என சோகத்தை வெளிப்படுத்துவதிலும் சரி சிறப்பான நடிப்பை அளித்து இருக்கிறார். கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு உள்ளிட்ட இதர நடிகர்களும் அற்புதமான நடிப்பை அளித்து உள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அருமை. குறிப்பாக, “நமோ நமச்சிவாயா” பாடல் அட்டகாசம்! அதே போல பின்னணி இசையும் சிறப்பு. கடல் அலைபோல, படம் முழுதும் மனதிற்குள் அலையடிக்கிறது பின்னணி இசை.
மொத்தத்தில் தண்டேல் உண்மைச் சம்பவத்தை நினைவூட்டி நல்ல திரைக்கதையுடன் புதிய திரை அனுபவத்தைத் தருகிறது.
0 comments:
Post a Comment