பேமிலி படம் திரை விமர்சனம்

 

குடும்ப உறவின் சிறப்பை, மன நிறைவை ஃபீல்குட் மூவியாக அளித்து இருக்கிறார்கள். திரைப்படம் இயக்குவதற்காக, தயாரிப்பாளர்களை நாடி அலைகிறார் நாயகன். இறுதியில் ஒரு தயாரிப்பாளர், இவரது கதையை ஓகே செய்கிறார். தயாரிப்பாளர், பிரபல ஹீரோவாக விளங்கும் தனது தம்பியிடம் கதை சொல்லச் சொல்கிறார். நாயகனும் கதை சொல்கிறார். கதையில் ஹீரோ தனது விருப்பத்துக்கு மாறுதல் சொல்கிறார். இது நாயகனுக்கு உடன்பாடாக இல்லை. அவரை நீக்கிவிட்டு தானே படத்தை தயாரிக்க தீர்மானிக்கிறார் தயாரிப்பாளர். தான் ஏமாந்தது தெரிந்து குமைகிறார் ஹீரோ. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.


’டைனோசர்ஸ்’ படத்தின் மூலம் தனது அதிரடி நடிப்பால் கவனம் ஈர்த்த உதய் கார்த்திக், லட்சியங்களை சுமந்துக்கொண்டு பயணிக்கும் ஒரு இளைஞராக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் சுபிக்‌ஷாவுக்கு நாயகனின் காதலி வேடம்.இப்படி ஒரு காதலி இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணும்படி இருக்கிறார்.அவர் வெளிப்படுத்தும் அன்பும் அனுசரணையும் நன்று.


விவேக் பிரசன்னா,பார்த்திபன் குமார் ஆகியோர் நாயகனின் அண்ணன்களாக நடித்திருக்கிறார்கள்.நடிப்பிலும் முந்தி நிற்கிறார்கள்.நாயகனின் நண்பர் மற்றும் நடிகர் அஜித் இரசிகராக வரும் சந்தோஷ் நல்வரவு.இவருக்கு முழுநீள நகைச்சுவை நடிகராக வலம்வர வாய்ப்பிருக்கிறது.


நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீஜா ரவி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் காயத்ரி, நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் உள்ளிட்டோரும் படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.


மெய்யேந்திரன் காட்சிகளுக்குத் தக்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அனீவியின் இசையில் பாடல்கள் இதம்.அஜீஷின் பின்னணி இசை அளவு. சுதர்சனின் படத்தொகுப்பு தாழ்வில்லை.


இயக்குநர் செல்வ குமார் திருமாறன்,பழகிய கதையை எடுத்துக் கொண்டிருந்தாலும் திரைக்கதை, காட்சி அமைப்புகள் மற்றும் வசனங்களில் படத்தை இற்றைப்படுத்தியிருக்கிறார்.


விரும்பும் தொழில் அல்லது இலட்சியத்தோடு குடும்பமும் முக்கியம். அவர்கள் துணையிருந்தால் வெற்றி நிச்சயம் எனும் நற்கருத்தை பரப்புரை தொனியின்றியும் இயல்பான திரைமொழியிலும் சொல்லியிருக்கிறார்.


குடும்பத்தோடு பார்க்கக் கூடிய குடும்பப்படம்.

0 comments:

Pageviews