அலங்கு திரை விமர்சனம்

 

தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலை கிராமம் ஒன்றுதான் கதைக்களம். அங்குள்ள பழங்குடிகளில் பலர், எந்தவித வசதியும் இல்லாத மலையை விட்டு, சமதளத்துக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பூர்வ வாசனையைத் துறக்க முடியாமல் ஏழு குடும்பங்கள் மட்டும் மலையிலேயே வசிக்கிறார்கள். அதில் ஒன்று நாயகனின் குடும்பம். பாலிடெக்னிக் படிக்கும் அவர், தனது தாய் மற்றும் தங்கையுடன் வசிக்கிறார். குடும்ப கடனை அடைக்க கேரளாவுக்கு வேலைக்குச் செல்கிறார். உடன் தன் நாயையும் அழைத்துச் செல்கிறார். அங்கு, அவரது ஓனரின் மகளை ஏதோ ஒரு நாய் கடித்துவிட… ஊரில் செல்வாக்கு மிக்க அவர், அந்த பகுதியில் நாய்களே இருக்கக்கூடாது என்று உத்தரவிடுகிறார். அவரது ஆட்கள் நாய்களைத் தேடித்தேடி கொல்கிறார்ள். நாயகனின் நாய்க்கும் ஆபத்து ஏற்படுகிறது. நாயகன் இதைத் தடுக்கிறான். இதையடுத்து மோதல் ஏற்படுகிறது. நாயகனையும் அவனது நண்பர்களையும் கொல்வதற்காக, வில்லன் கும்பல் துரத்துகிறது. காட்டு வழியாக ஓடி வருகிறார்கள் நாயகனும் நண்பர்களும். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை.

நாயகன் குணாநிதி சிறப்பாக நடித்து உள்ளார். நாயைக் காப்பாற்ற நடத்தும் போராட்டம் என நடிப்பில் முத்திரை பதிக்கிறார் குணாநிதி. அவரது அம்மாவாக வரும் ஶ்ரீ ரேகாவும் அற்புதமான நடிப்பை அளித்து இருக்கிறார். நாயகனின் மாமாவாக வரும் காளி வெங்கட் எப்போதும்போல் இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார். தனது குழந்தை பற்றி சொல்லும் இடத்தில் கண்ணீர்விட வைக்கிறார். தோட்டத்து முதலாளியாக, ஊரில் செல்வாக்கு மிக்கவராக வரும் மலையாள நடிகர் செம்பன் வினோத்தும் தனது பாத்திர் அறிந்து நடித்து உள்ளார். 

அஜீஷ் இசையில் பாடல்கள் பின்னணி இசை அற்புதம். சேசிங் காட்சிகளிலும், இரவில் காட்டில் நடக்கும் காட்சிகளிலும் பதட்டத்தை அதிகப்படுத்துகிறது பின்னணி இசை. ஒளிப்பதிவாளர் பாண்டித்துரையும் பாராட்டுக்குரியவர். ஒவ்வொரு காட்சியிலும் முத்திரை பதிக்கிறார். போகிற போக்கில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் கொட்டப்படும் மாமிச கழிவுகள், அங்கே மாட்டு இறைச்சியில் நாய் இறைச்சியும் கலக்கப்பட்டதாக வந்த செய்தி, ரேபிஸ் நோயின் கொடூரத் தாக்கம் என்று கதைக்குத் தேவையானவற்றை இயல்பாய் சேர்த்து இருக்கிறார் இயக்குநர் சக்திவேல்.

0 comments:

Pageviews