மிஸ் யூ திரை விமர்சனம்
சினிமாவில் இயக்குநராகும் கனவில் உள்ளார் வாசு என்ற சித்தார்த். விட்டோத்தியான அவர் ஊர் சுற்றுவதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். அவர் மலைப்பிரதேசம் ஒன்றுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்புகையில் விபத்தொன்றில் சிக்குகிறார். இதில் அவருக்கு நினைவு இழப்பு ஏற்படுகிறது. சிகிச்சையில் உடல் தேறினாலும் நினைவு திரும்பவில்லை. இந்தச் சூழலில் நண்பர் கருணாகரனுடன் பெங்களூர் செல்கிறார் சித்தார்த். அங்குதான் நாயகி சுப்புலட்சுமி என்ற ஆஷிகாவைப் பார்க்கிறார். அவரின் அழகிலும், நேர்த்தியிலும் மயங்கி காதலில் விழுகிறார். தன் காதலுக்கு ஓகே வாங்குவதற்காக சித்தார்த் தன் அம்மாவிடம் ஆஷிகாவின் போட்டோவை காண்பிக்கிறார். ஆஷிகாவை போட்டோவில் பார்த்த சித்தார்த்தின் அம்மா ஷாக்காகிறார். இந்த பேரதிர்ச்சிக்கு என்ன காரணம்? சித்தார்த் நினைவு இழப்பால் அவர் எதையெல்லாம் மறந்தார் என்பதற்கான பதிலை சொல்வதுதான் படத்தின் மீதிக் கதை.
சித்தார்த்துக்கு காதல் கதை கச்சிதமாக பொருந்துகிறது. காதல் கதையாக இருந்தாலும், நாயகியை துரத்தி துரத்தி காதலிக்காமல் மிக நாகரீகமாக காதல் காட்சிகளை கையாண்டிருக்கும் சித்தார்த், தனது முதிர்ச்சியான நடிப்பு மூலம் கதைக்கு பலம் சேர்த்திருந்தாலும், அவ்வபோது தன்னை சாக்லெட் பாய் இல்லை என்பதை நிரூபிக்க ஆக்ஷனிலும் அசத்துகிறார். ஆஷிகா ரங்கநாத் தனது அசால்டான நடிப்பு மற்றும் கண்கள் மூலமாகவே காதலை கடத்தி பார்வையாளர்களின் மனதில் இறங்கி விடுகிறார். காமெடி காட்சிகள்தான் இந்தப் படத்துக்கு பெரிய பலம். நண்பர்களாக வரும் கருணாகரன், பால சரவணன், லொல்லு சபா மாறன் செய்யும் கூட்டுக் காமெடிகள் சுமார் ரகம்தான் என்றாலும், இதில் மாறன் பேசும் சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன.
ஜிப்ரானின் பின்னணி இசை கைகொடுத்த அளவுக்கு பாடல்கள் எதுவும் ஒட்டவில்லை. ஒளிப்பதிவு கே.ஜி. வெங்கடேஷ் காதல் காட்சிகளை அழகாக காட்டியுள்ளார். எடிட்டிங் தினேஷ் பொன் ராஜ்.
காதலும் நகைச்சுவையும் கலந்து வந்திருக்கும் மிஸ் யூ அனைவரையும் நிச்சயம் கவரும்.
0 comments:
Post a Comment