இன்றைய அரசியல் சூழலில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி - பா.இரஞ்சித்

 

எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட 'எருமை மறம்' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 23.02.2024 சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. நீலம் பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கரின் வரவேற்புரையோடு துவங்கிய இந்நிகழ்வை பேராசிரியர் அருந்தமிழ் யாழினி தொகுத்து வழங்கினார். 


இந்நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நூலை வெளியிட இயக்குநரும் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளருமான பா. இரஞ்சித் பெற்றுக் கொண்டார்.


 பொதுச் சமூகத்தில் எருமை மாட்டின் மீது கட்டப்பட்டுள்ள பிம்பத்தை மேற்கோள் காட்டி பேசத் துவங்கிய சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது உரை சங்ககால தமிழ் இலக்கியத்தையும் சமகால அரசியலையும் ஒப்பீட்டு பேசியது கவனம் பெற்றது.


 அதைத்தொடர்ந்து பேசிய கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் நீலம் பதிப்பகம் கண்டடையும் புதிய எழுத்துக்களையும் அவர்களது ஆற்றல் மிகுந்த எழுத்துக்களையும் பாராட்டி பேசியதோடு மௌனன் யாத்ரிகாவின் மொழி வளத்தையும் ஆய்வுக்குட்படுத்தினார். 


கவிஞர் மனுஷபுத்திரன் பேசும் போது இந்தியாவின் பசு அரசியல் சூழலில் எருமை அரசியலின் முக்கியத்துவத்தை பேசினார். எழுத்தாளர் தமிழ்ப்பிரபா பேசும் போது இந்த கவிதை தொகுப்பை இரண்டு இனக்குழுக்களுக்கிடையே நடக்கும் சண்டையாக மட்டும் நான் பார்க்கவில்லை, இது முழுக்க முழுக்க அன்பாலும் காதலாலும் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டார். 


இயக்குநர் பா. இரஞ்சித் பேசும் போது இன்றைய அரசியல் சூழலில் தலைவர் தொல். திருமாவளவன்    அவர்கள் தவிர்க்க முடியாத தலைவராக இந்திய அளவில் இருப்பதை மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசியதோடு பண்பாட்டு அரசியலின் முக்கியத்துவத்தை மௌனன் யாத்ரிகாவின் கவிதையோடு ஒப்பீட்டு பேசினார். பொது என்று சொல்லப்படும் ஒன்றின் மீது நமக்கிருக்கும் பிரச்சனையை பேசாமல் இருக்க முடியாது, அதற்கெதிரான நமது குரல்களை தனிக்குரல்கள் என்று சுருக்குவது தவறு என்றார்.

 தொல்.திருமாவளவன் அவர்கள் பேசும் போது இது பசுக்களின் தேசியமல்ல, இது எருமைத் தேசியம் என்று உரக்க பேச வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டார். அரசியல் தளத்தில் செயல்படுவதில் இருக்கும் முக்கியத்துவத்தை போலவே கலை துறையிலும் அதே வேகத்தோடு நாம் செயல்பட வேண்டி இருக்கிறது, அதை இயக்குநர் பா.இரஞ்சித் சிறப்பாக செய்து வருவதாக பாராட்டினார்.


அதிகாரத்திற்கு எதிராக அரசியல் தளத்திலும் , கலைத்துறையிலும் நாம் இணைந்து செயல்படவேண்டிய காலமிது என்று பேசினார்.


தன் மண்ணின் மைந்தரான மௌனன் யாத்ரிகாவின் கவிதை தொகுப்பில் முக்கியமான கவிதைகளை மேற்கோள் காட்டி தமது உரையை நிறைவு செய்தார். இறுதியாக தமது ஏற்புரையில் பேசிய கவிஞர் மௌனன் யாத்ரிகா தனது மண்ணின் மைந்தரான தலைவர் திருமாவளவன் அவர்கள் வெளியிட இயக்குநர் பா. இரஞ்சித் பெற்றுக் கொண்ட இத்தருணம் தமது வாழ்வில் முக்கியமான ஒன்று என்று குறிப்பிட்டதோடு, இன்று உலகத் தலைவராக உருவெடுத்து இருக்கும் திருமாவளவன் அன்போடு தமது அழைப்பை ஏற்று வந்து நூலை வெளியிட்டமைக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.0 comments:

Pageviews