ப்ளூ ஸ்டார் விமர்சனம்

 

சென்னையை அடுத்த அரக்கோணம் பகுதியில் ஊர் சார்பாக மேல் தட்டு சாதியினர் அங்கம் வகிக்கும் ஆல்ஃபா கிரிக்கெட் டீம் சாந்தனு கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதே ஊரின் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் டீம் அசோக் செல்வன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த இரு அணிகளுக்கும் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்துகின்றனர். இவர்களும் இந்த இரு அணியை சேர்ந்த நபர்களும் ஊரில் பார்க்கும் இடங்களில் எல்லாம் அவ்வப்போது விளையாட்டு ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் மோதிக் கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, இவர்களுக்கு லீக் போட்டிகளில் விளையாடும் ப்ரொபஷனல் கிரிக்கெட் அணி உடன் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் யார் வெற்றி பெற்றார்கள்? இவர்கள் இரு அணிகளில் இருக்கும் பிரிவினை என்னவானது? என்பதே இப்படத்தின் மீதி கதை.

அசோக் செல்வன், சாந்தணு, பிரித்வி மூவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறி படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். அசோக் செல்வனின் காதல் கவிதையாகவும் ஏணியாகவும் இருந்தது படத்திற்கு சற்று பலம் தான். சாந்தணுவின் கதாபாத்திரம் வலுவானது. தனது நிலைப்பாட்டை மாற்றி அதில் நேரெடுத்து பயணித்தது பலம். கொஞ்சலான காதலை செய்த கீர்த்தி பாண்டியன் அழகு. ப்ரித்வியின் ஜோடியாக வரும் திவ்யா துரைசாமி, சிரிப்பால் அனைவரையும் கவர்கிறார். பக்ஸ் கதாபாத்திரம் தான் படத்தின் பில்லர். வசனங்கள் கதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

அசோக் செல்வனின் அப்பாவாக குமரவேல், அம்மாவாக லிஸி ஆண்டனி, இந்த இடத்துக்கு இன்னார்தான் வரவேண்டும் என்ற உயர்சாதி இறுமாப்பில் ஊறிப்போன கிரிக்கெட் கோச் என மற்ற பாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு நேர்த்தி!

காட்சிகளின் தேவைக்கேற்ப பின்னணி இசையில் ஏற்ற இறக்கங்களை தந்திருக்கும் கோவிந்த் வசந்தா, ரயிலைத் தள்ளும் மேகமே’ பாடலில் இதம் கூட்டியிருக்கிறார்.

கதை நிகழ்விடமான அரக்கோணத்தை கவனம் ஈர்க்கும்படியான பல கோணங்களிலும், கிரிக்கெட் போட்டிகள் பெயருக்காக அல்லாமல் நிஜத்திலேயே நடந்தேற அதனை ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்க்கிற உணர்வைத் தருகிற விதத்திலும் படமாக்கியிருக்கிறார் தமிழ் அ அழகன்.

போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்பவர்களிடம் இருக்கிற ஏற்றத்தாழ்வு பார்க்கிற மனோபாவம், சாதிப் பாகுபாடு என பலவற்றையும் இழுத்துப் போட்டு வெளுத்திருக்கிறது பிளே கிரவுண்டை சுற்றிச் சுழலும் ஸ்கிரின்பிளே!

விளையாட்டில் தான் விரும்பிய உயரத்தை அடைய நினைக்கும் ஏழை எளியோர் அனுபவிக்கும் வலிகளை உணர்வுபூர்வமாகவும், உண்மைத் தன்மையோடும் கருவாக்கி உருவாக்கியிருப்பதற்காக படக்குழுவை பாரபட்சமின்றிப் பாராட்டலாம்!

0 comments:

Pageviews