ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம்

 

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் சரவணன் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரின் தங்கை மகன் விதார்த். அரசு மானியம் கிடைக்குமே என டாய்லெட் கட்ட குழி தோண்டுகிறார் சரவணன். குழி தோண்ட உதவி செய்கிறார் சுடுகாட்டில் வேலை செய்யும் ஜார்ஜ்.


குழி தோண்டும்போது ஒரு பானை கிடைக்கிறது. அதில் ஆயிரம் பொற்காசுகள் இருக்கிறது. அதில் பங்கு கேட்கிறார் ஜார்ஜ். காசுகள் தொடர்பாக ஜார்ஜ், சரவணன் இடையே அடிதடி நடக்கிறது. இதில் காயம் அடைந்த ஜார்ஜ் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். இதையடுத்து ஆயிரம் பொற்காசுகளும் நமக்கு மட்டுமே என சரவணன் மற்றும் விதார்த் சந்தோஷப்பட அவர்கள் நினைத்ததற்கு நேர் எதிராக நடக்கிறது.


பொற்காசுகள் விஷயம் ஊருக்கு மட்டும் அல்ல தொல்லியல் துறைக்கும் சேர்ந்து தெரிந்துவிடுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக காட்டியிருக்கிறார் இயக்குநர் ரவி முருகயா.


இந்த பொற்காசுகள் சண்டைக்கு இடையே விதார்த்துக்கும், அருந்ததி நாயருக்கும் இடையே காதல் வேறு ஏற்படுகிறது.


ஆயிரம் பொற்காசுகள் படத்தில் ஏகப்பட்ட குறைகள் சொல்லலாம். விதார்த்-அருந்ததி இடையே காதல் ஏற்படும் காட்சிகள் சரியாக இல்லை, ஹீரோயினின் கலரை பற்றி பேசுவது போன்று பல குறைகள் சொல்லலாம். ஆனால் குறைகளை தாண்டி ரசிக்கும்படியாக இருக்கிறது படம். கவலையை மறந்து படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் ஆயிரம் பொற்காசுகள் நிச்சயம் உங்களின் கவலையை மறக்கடிக்கும்.


படத்தில் வரும் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறு கதாபாத்திரங்கள் கூட மனதில் நிற்கிறார்கள். ஹீரோ, ஹீரோயினை விட துணை கதாபாத்திரங்கள் அதிகம் ஸ்கோர் செய்கிறார்கள். படத்திற்கு பெரிய பலமாக அமைந்துவிட்டார் சரவணன்.


ஆயிரம் பொற்காசுகள் கிடைத்ததும் படத்தின் வேகம் அதிகரிக்கிறது. ஆயிரம் பொற்காசுகளுக்காக பலர் அடித்துக் கொள்வதை காமெடி கலந்து காட்டியிருக்கிறார்கள்.


0 comments:

Pageviews