கருமேகங்கள் கலைகின்றன விமர்சனம்

 

மனித உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாக வைத்து படம் எடுத்து வரும் தங்கர் பச்சானை பாராட்டியே ஆக வேண்டும். வெவ்வேறு வயது, சமூக பின்னணி கொண்ட இரண்டு பேரின் பயணத்தை அழகாக காட்டியிருக்கிறார். தொலைத்த உறவுகளை தேடிச் செல்லும் ஒரு முதியவர், இளைஞர். ஆரம்பத்தில் இருந்தே படம் நம்மை கவர்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனாக நடித்திருக்கிறார் பாரதிராஜா. பணம் தான் முக்கியம் என நினைக்கும் கிரிமினல் வழக்கறிஞர் கோமுகனாக நடித்திருக்கிறார் கவுதம் மேனன். ராமநாதனின் மகன் தான் இந்த கோமுகன். பழைய கடிதம் ஒன்று கிடைக்கவே தொலைத்த உறவை தேடிக் கிளம்புகிறார் ராமநாதன்.


அந்த பயணத்தின்போது அப்பாவியான பரோட்டா மாஸ்டர் வீரமணியை(யோகிபாபு) சந்திக்கிறார் ராமநாதன். அவர் தன் உலகமாக இருக்கும் தத்து மகளை தேடிச் செல்வது குறித்து ராமநாதனிடம் கூறுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் ராமநாதனுக்கும், வீரமணிக்கும் சவாலாக இருக்கிறது.


தன் கடந்தகால காதல், மகள் கண்மணி( அதிதி பாலன்) ஆகியோருடனான உறவை சரி செய்ய நினைக்கிறார் ராமநாதன். இந்நிலையில் கடந்த கால தவறுகள் அவரின் தற்போதைய முயற்சிகளுக்கு பிரச்சனையாக இருக்க அவரால் சந்தோஷமாக வாழ முடியுமா, மேலும் வீரமணி தன் மகளுடன் சேர உதவி செய்ய முடியுமா?


வீரமணி தன் மகளை தேடிச் செல்ல, ராமநாதனோ தன் காதலி மூலம் பிறந்த மகளை தேடிச் செல்கிறார். யாரிடமும் சொல்லாமல் அந்த மகளை தேடி கிளம்புகிறார்.


இரண்டு ஆண்களின் கடந்த காலம் அவர்களின் நிழல்காலத்தை எப்படி பாதிக்கிறது என்பதை சுவராஸ்யமாக சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான். திரைக்கதையில் சில தேவையில்லாத காட்சிகளை திணித்திருப்பதே பிரச்சனை. யோகி பாபுவின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கும் விதம் அருமை.


யோகி பாபுவின் மகள் சாரா அவரை வீட்டிற்கு திரும்பிச் செல்லவிடாமல் இருப்பதை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. மேலும் கண்மணியிடம் ராமநாதன் மன்னிப்பு கேட்டு கெஞ்சும்போதும் கண்கள் கலங்குகிறது. படத்தில் வந்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். யார் நடிப்பையும் குறை சொல்ல முடியாது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலம்.

0 comments:

Pageviews