நூடுல்ஸ் விமர்சனம்

 

ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் ஒன்றின் குடியிருப்புவாசிகள் மொட்டை மாடியில் கூடி பாட்டுக்குப் பாட்டு போட்டி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. எல்லா சனிக்கிழமை இரவுகளிலும் இது அவர்களின் வழமை என்பதும் தெரிய வருகிறது. விளையாட்டின் உற்சாகத்தில் சத்தம் சற்று அதிகமாக இருக்கிறது.  இதை தொந்தரவாக நினைத்த யாரோ போலீஸில் புகார் தெரிவிக்க, கீழே அதே தெருவில் ரோந்து சென்று கொண்டிருக்கும் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர், வண்டியில் இருக்கும் ஏட்டை மொட்டை மாடிக்குப் போய் அந்த கும்பலை எச்சரித்துவிட்டு வரும்படி கூறுகிறார்.  எச்சரிக்க வந்த ஹெட் கான்ஸ்டேபிள் உடன் குடும்ப உறுப்பினர்கள் வாதம் செய்ய,  இன்ஸ்பெக்டரும் மேலேறி வருகிறார். அவர் வந்ததும் அங்கிருக்கும் நாயகனுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் பேச்சுவார்த்தைக்கு இடையில் முட்டிக் கொள்கிறது. உன்னை பார்த்துக் கொள்கிறேன் என்று வன்மத்துடன் இன்ஸ்பெக்டர் கிளம்ப, அதைத் தொடர்ந்து நாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் தான் மொத்த திரைப்படமும்.


அருவி,  மாவீரன் போன்ற படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதன்குமார் தக்‌ஷிணாமூர்த்தி முதன்முறையாக இயக்கி இருக்கும் திரைப்படம்.  அவரது இயக்கத்தில் வெளியாகும் முதல் படம் தான் இது என்பதை நம்பமுடியவில்லை. ஏனென்றால் இயக்கத்தில் பல படங்களை இயக்கிய இயக்குநருக்கான முதிர்ச்சி தெரிகிறது.  இயக்கத்தில் மிரட்டியிருப்பதோடு நில்லாமல் படத்தில் முக்கிய கதாபாத்திரமான போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்திலும் நடித்து அதகளம் செய்து இருக்கிறார்.


படத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், மதன்குமார்,  மதன், திருநாவுக்கரசு, நகுனா, வசந்த் மாரிமுத்து, மில்லர் என அனைவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.  அதிலும் குறிப்பாக வக்கில் திருநாவுக்கரசு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திருநாவுக்கரசு காமெடி நடிப்பில் கலக்கி இருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் திரையரங்கில் பார்வையாளர்கள் வெடித்து சிரிக்கிறார்கள். அது போல் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன் மற்றும் ஷீலா ராஜ்குமார் இருவருமே சிறப்பாக நடித்திருக்கின்றனர்.


மொத்தத்தில் நூடுல்ஸ் சில குறைகள் இருந்தாலும் பல நிறைகள் இருப்பதால் நிச்சயமாக உங்களை ஆச்சரியப்படுத்தும் நல்வரவு.

0 comments:

Pageviews