அடியே விமர்சனம்

 

வாழ்க்கையில் கிடைத்த தொடர் தோல்விகள் மற்றும் ஏமாற்றத்தின் காரணமாக நாயகனான ஜீ. வி. பிரகாஷ் குமார் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன் போது அவருக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல பின்னணி பாடகி ஒருவரின் நேர்காணலும், அவர் பாடும் பாடலும், அவரின் இனிமையான குரலும் கேட்கிறது. அந்தக் குரல் அவருக்குள் இருக்கும் கடைசி துளி நம்பிக்கைக்கீற்றை வீரியப்படுத்தி வாழ்க்கையை மாற்றுகிறது. இதன் தொடர்ச்சியாக தன் பாலாய காலத்து முதல் காதலியை சந்திக்கிறார். காதலியிடம் தன் காதலை சொல்லவும் துடிக்கிறார். இந்த தருணத்தில் இவரின் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து காப்பாற்ற செல்கிறார். அதன்போது எதிர்பாராமல் விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்திற்குப் பிறகு அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அவர் மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்க்கும் போது வேறொரு உலகத்தில் அவர் பிரவேசிக்கிறார். அங்கு தோன்றும் காட்சிகளும்.. கதாபாத்திரங்களும். சம்பவங்களும்.. புதிராகவும், புதிதாகவும் இருக்கிறது. இது நிஜமா? கனவா? என குழம்புகிறார். இரு வேறு உலகத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் சந்திக்கும் அனுபவங்களும் அதன் தொடர் சம்பவங்களும் தான் படத்தின் கதை.


ஜிவி பிரகாஷின் உருவத்துக்கும் நடிப்பிற்கும் மிக பொருத்தமான வேடம் இதில் வாய்த்திருக்கிறது. மீசையையும் தாடியையும் ஷேவ் செய்தால் அப்படியே பள்ளி மாணவனாக ஆகிவிடுகிறார் ஜீவி. 96 படத்தில் இளைஞர்களைக் கவர்ந்த கெளரிகிஷன் மீண்டும் அதுபோலவே திரும்ப வந்திருக்கிறார். அவ்வளவு பாந்தமாக வந்து மகிழ்வூட்டுகிறார். ஆர்.ஜே.விஜய் சும்மாவே கலகலக்கவைப்பார்.இந்தப்படத்தின் கதைக்களமும் அவருடைய வேடமும் நல்வாய்ப்பாக அமைந்துவிட அடித்து விளையாடியிருக்கிறார். வெங்கட்பிரபுவின் வேடமும் அவர் பேசும் விசயங்களும் படத்தை இலகுவாக்கிப் பறக்க வைக்கிறது. கோகுல் பினோயின் ஒளிப்பதிவில் இருவேறு உலகங்களும் வேறுபட்டு காட்சிக்கு இனிமை சேர்த்திருக்கின்றன. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் சுகமாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசையிலும் குறைவில்லை.


இந்தப் படத்தை எல்லாவிதமான பார்வையாளர்களும் ரசிக்க முடியும்.

0 comments:

Pageviews