பார்ட்னர் விமர்சனம்

 

கடன் பிரச்சனையால் தனது நண்பர் யோகி பாபுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார் நாயகன் ஆதி. அப்போது விஞ்ஞானி பாண்டியராஜனிடம் இருக்கும் சிப்பை கொள்ளையடித்தால் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பதால், அவரிடம் இருக்கும் சிப்பை எடுக்க ஆதியும், யோகி பாபுவும் செல்ல, பாண்டியராஜனின் கண்டுபிடிப்பால், யோகி பாபு, ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அவரை மீண்டும் யோகி பாபுவாக மாற்றுவதற்காக பாண்டியராஜனை தேடிப் போக, அவர் அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறார். இதனால், பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இருவரும் அவற்றை எப்படி சமாளித்தார்கள், மீண்டும் ஹன்சிகா யோகி பாபுவாக மாறினாரா, இல்லையா, என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘பார்ட்னர்’ படத்தின் கதை.


மரகத நாணயம் படத்தில் கொடுத்த ஒரு நடிப்பை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் ஆதி. கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்து அசத்தியிருக்கிறார். யோகிபாபுவோடு சேர்ந்து அட்ராசிட்டி செய்திருக்கிறார் ஆதி. யோகிபாபுவின் டைமிங்க் காமெடி படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய கதாபாத்திரத்தில் மெனக்கெட்டிருக்கிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பு என அனைத்திலும் ஆணாக அசத்தியிருக்கும் ஹன்சிகாவின் அலட்டல் இல்லாத நடிப்பு அமர்க்களம். ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் பாலக் லால்வானி ஒரு பாடல், ஒரு சில காட்சிகள் என்று தனது கடமையை நிறைவாக செய்திருக்கிறார்.


ஜான்விஜய், தங்கதுரை, ரவிமரியா, முனீஸ்காந்த், ரோபோசங்கர் என்கிற நடிகர்கள் பட்டியலைப் பார்த்தாலே இது சிரிப்புப் படம் என்கிற எண்ணம் வரும். அந்த எண்ணத்தை நிறைவேற்ற அனைவரும் உழைத்திருக்கிறார்கள். நகைச்சுவைப் படங்களில் வசனங்களுக்குத்தானே முக்கியத்துவம் என்று மனம் சோர்ந்துவிடாமல் காட்சிகளில் வண்ணங்கள் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சபீர் அகமத்.


சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளுக்குப் பலமாக அமைந்திருக்கிறது. இந்தச் சமுதாயத்தில் பெண்கள் எப்படிப்பட்ட சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்? என்பதை பெண்ணுருவில் இருக்கும் ஓர் ஆண்மகனை வைத்துச் சொல்ல விழைந்திருக்கிறார் இயக்குநர் மனோஜ்தாமோதரன்.


திரைக்கதையில் பல இடங்களில் சறுக்கினாலும் மக்களைச் சிரிக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.

0 comments:

Pageviews