தண்டட்டி விமர்சனம்

 

தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும் அவரது தண்டட்டியைத் தேடிக் கண்டடையும் புள்ளியில் நிறைவு பெறுகிறது. தங்கப் பொண்ணு ஏன் காணாமல் போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் யார் என்று பயணிக்கிறது திரைக்கதை.


இந்தப் பயணத்திற்கு நடுவே அழகான வலி மிகுந்த இரண்டு குட்டி காதல் அத்தியாயங்களும் படத்தில் உண்டு. அவை தான் கதையின் மையப்பொருளான இந்த தண்டட்டி படத்திற்கு உயிர்நாடி.


57 வயது தங்கப் பொண்ணாக ரோகிணி. குறை சொல்ல முடியாத நிறைவான நடிப்பைக் கொடுப்பதில் தான் சீனியர் என்பதை நிரூபிக்கும் வகையில் செவ்வனே செய்திருக்கிறார். சிறு வயது ரோகிணி கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி. வலி மிகுந்த கண்களின் வழியாக உணர்வுகளை எளிதாகக் கடத்துகிறார். காணாமல் போன தங்கப்பொண்ணுவை தேடிக் கண்டுபிடிக்க வந்துவிட்டு, தவிர்க்கவே முடியாத காரணங்களினால் தங்கப்பொண்ணுவின் உடல் தகனம் செய்யப்படும் நொடி வரை உடனிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் ஹெட் கான்ஸ்டபிள் சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடித்துள்ளார். சார்பட்டா பரம்பரை படத்திற்குப் பிறகு ஒரு வலுவான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து, மொத்தப் படத்தையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார்.


கிடாரிப்பட்டி ஊர் மக்களிடம் மாட்டிக் கொண்டு அவர் முழி பிதுங்கும் காட்சிகளில் கலகலக்க வைக்கிறார். தங்கப் பொண்ணுவின் குடிகார மகன் கதாபாத்திரத்தில் விவேக் பிரசன்னா. பிரத்தியேகமான குடிகாரனின் உடல்மொழியினால் வசீகரிக்கிறார். திரும்பத் திரும்ப அவர் பேசும் சில வசனங்கள் அலுப்பூட்டினாலும் தன் அநாயாசமான நடிப்பால் அதை மறக்கடிக்கிறார். சிறுவன் முகேஷ் தங்கப் பொண்ணுவின் பேரனாக சில இடங்களில் கண்கலங்க வைக்கிறார். தீபா சங்கர், செம்மலர் அன்னம் போன்றோருக்கு பழக்கப்பட்ட பழைய கதாபாத்திரம் தான். இவர்களைத் தாண்டி நடிப்பில் கவனம் ஈர்த்தவர் அந்த “கோளாறு பாட்டி”. இவர் பசுபதியைக் கலாய்த்துக் கொண்டே அவரது ஹெட் கான்ஸ்டபிள் தொப்பியைத் தலையில் வைக்கும் அந்தக் காட்சிக்குக் கண்டிப்பாய் திரையரங்குகள் அதிரும்.


ஊர் சார்ந்த சம்பிரதாயங்கள், சடங்குகளைக் காட்சிப்படுத்திய விதத்திலும், நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஒப்பாரிப் பாட்டிகளை வைத்துக் கொண்டே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படத்தைக் கொண்டு சென்ற விதத்திலும் இயக்குநரின் அபார திறமை விளங்குகிறது. அது போல் நேட்டிவிட்டியுடன் கூடிய உடல்மொழியைத் துணை கதாபாத்திரத்திடம் கூட அச்சு அசலாக வாங்கியிருக்கும் அயராத அவரது உழைப்புக்கு ஒரு சல்யூட். படத்திற்கு மற்றொரு பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துச்சாமியின் நேர்த்தியான ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியுமே, கண்ணில் ஒற்றிக் கொள்ளத்தக்க தங்கத் தண்டட்டியைப் போல் மின்னுகின்றது.


இருப்பினும் படத்தில் பல காட்சிகள் தொய்வுடன் இருப்பதைக் காண முடிகிறது. படத்தொகுப்பாளர் சிவநந்தீஸ்வரன் துணிந்து இன்னும் பல இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். கிடாரிப்பட்டி ஊர் மக்கள் என்று சொன்னால் ஒரு உள்ளூர் காவல் நிலையமே நடுநடுங்கும் அளவிற்கு பில்டப் கொடுக்கிறார்கள். அங்கு யாரையும் கை நீட்டி விடாதீர்கள் என்று ஹெட் கான்ஸ்டபிள் பசுபதிக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஆனால் விவேக் பிரசன்னா கதாபாத்திரம் போதையில் அரிவாளை எடுத்து சுற்றிக் கொண்டு இரண்டு முறை பயமுறுத்துவதைத் தவிர்த்து ஊர்க்காரர்கள் போலீசுக்கு எதிராக எதுவுமே செய்வதில்லை என்பது ஏமாற்றம். அதுவரை தாயின் தண்டட்டிக்காக அடித்து உருண்டு குடுமிப்பிடி சண்டை போடும் குடும்ப உறவுகள், புதிதாக ஒரு பதினைந்து இலட்சம் வந்ததும் அந்தத் தண்டட்டியை அப்படியே விட்டுவிடுவார்கள் என்பது ஏற்கும்படியான லாஜிக்காக இல்லை.


முழுமை பெறாத ஊர் மக்கள் கதாபாத்திரங்களும், சொத்துக்காகத் தெருக்குழாயடி சண்டை போடும் பிள்ளைகளின் கதாபாத்திரங்களும் நம்மைக் கதைக்குள் முழுமையாக ஒன்ற முடியாமல் செய்கிறது. மொத்தத்திற்கே பத்து நிமிடங்களுக்குள் வரும் காதல் காட்சிகள் நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுகளை, மீதமிருக்கும் முதிர்ச்சியற்ற நகைச்சுவைக் காட்சிகள் உருவாக்கவில்லை. படத்தின் உணர்வு நிலை ஓட்டத்தில் ஏற்படும் சமநிலையின்மையால், முழுப்படைப்பாக இப்படம் தொட்டிருக்க வேண்டிய இடத்தை எட்டாமல் நழுவ விட்டுள்ளது. ஆங்காங்கே ரசனையான காட்சிகளாலும், அற்புதமான நடிப்பினாலும், மேக்கிங்கினாலும் அசரடிக்கிறது தண்டட்டி திரைப்படம்.

0 comments:

Pageviews