தி கேரள ஸ்டோரி பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் ஆதம்பாவா சவால்

 

கருத்தாழம் மிக்க படங்களை உருவாக்கி வெளியிட்டு வரும் கேரள மாநிலத்தில் தான் அவ்வப்போது சர்ச்சையை கிளப்பும் விதமான படங்களும் வெளியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது.  அந்தவகையில் தற்போது ‘தி கேரள ஸ்டோரி’ என்கிற திரைப்படம் ஒன்று வரும் மே-5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கியுள்ளார். 


கேரளாவை சேர்ந்த அப்பாவி இந்துப்பெண்களை மூளைச்சலவை செய்து இஸ்லாமுக்கு மதம் மாற்றி, பின்னர் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு அனுப்பப்படுவதாகவும் கேரளாவை சேர்ந்த 32000 பெண்கள் இந்த வலையில் சிக்கியுள்ளதாகவும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 


மேலும் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் ட்ரைலரும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தப்படத்திற்கு கண்டனங்களும் படத்தை வெளியிட தடை கோரியும் நாடெங்கிலும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன.


இந்தநிலையில் தமிழில் வெளியான ஆன்டி இண்டியன் பட தயாரிப்பாளரும், அமீர் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள ‘உயிர் தமிழுக்கு படத்தின் இயக்குநருமான ஆதம் பாவா இந்த படத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். 


இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதச்சார்பின்மை கொண்ட இந்தியாவில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரைலர் அமைந்திருக்கிறது. பிரிவினைவாதத்தை தூண்டும் சில அமைப்புகள்  பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இந்த 'தி கேரள ஸ்டோரி'. 


ட்ரைலரில் கூறப்பட்டுள்ளது போல கேரளாவைச்சேர்ந்த 32,000 பேர் இஸ்லாம் மதத்திற்க்கு மாறி ஐ எஸ் ஐ எஸ் ISIS குழுவில் சேர்ந்ததற்கான ஆதாரத்தை படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் கொடுத்தால் அவருக்கு ரூ 1 கோடி பரிசு அளிக்கிறேன்” என்று சவால் விடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஆதம் பாவா.

0 comments:

Pageviews