சொப்பன சுந்தரி விமர்சனம்

 


நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகை கடையில் வேலை செய்து வருகிறார். வாய் பேச முடியாத அக்காவுக்கு மாப்பிள்ளை அமையாததால் வருத்தப்படும் அவர் குலுக்கல் சீட்டு ஒன்றில் சேர்கிறார். அதில் 10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று பரிசாக விழுகிறது. இந்த காரைச் சுற்றி பல பிரச்னைகள் வருகின்றன. ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனாக வரும் கருணாகரனும் ஒரு பிரச்னையை கொண்டு வருகிறார். அவரின் அக்காவுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பது படத்தின் மீதிக்கதை 


கதையின் நாயகி அகல்யாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இது மிகப் பொருத்தமான கதாபாத்திரம். படம் நெடுகிலும் தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் அப்பா, விவரம் தெரியாத அம்மா, திருமணத்திற்குக் காத்திருக்கும் அக்கா, பொறுப்பில்லாத அண்ணன் என்று இந்த நால்வரையும் சமாளித்து வாழும் வாழ்க்கையை திரையில் அருமையாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 


அகல்யாவின் அக்கா தேன்மொழியாக தேசிய விருதுபெற்ற  நடிகை லட்சுமிப்ரியா சந்திரமௌலி நடித்து இருக்கிறார். வாய்பேச இயலாத அந்த கதாபாத்திரத்திற்கு தனது இயல்பான நடிப்பு மூலம் நியாயம் செய்திருக்கிறார்.


அம்மா லட்சுமியம்மாளாக வரும் தீபா ஷங்கர், வழக்கம் போல தனக்கே உரித்தான பாணியில் சிரிக்க வைக்கிறார். ரெடின் கிங்ஸ்லியும் கூட தனது வழக்கமான நடிப்பின் மூலம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.


போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனாக வரும் சுனில் ரெட்டி, வில்லனாக மிரட்டியிருக்கிறார். அகல்யாவின் அண்ணன் துரையாக வரும் கருணாகரன் வெறும் காமெடியனாக இல்லாமல் எதிர்மறை கதாபாத்திரத்தில் வந்து கவனம் ஈர்க்கிறார்.


மைம் கோபி, ஷா ரா உள்ளிட்ட ஏனைய நடிகர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி இந்த டார்க் காமெடி ஜானர் கதையை மெருகேற்றி இருக்கிறார்கள்.


இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். மிகவும் எளிமையான  கதையை மிகவும் சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருக்கிறார். காலத்துக்கேற்ற அவரது வசனங்களும் கவனிக்க வைக்கின்றன.


பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோரின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

0 comments:

Pageviews