நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் சிங்கப்பூர் தமிழர்களின் நாம் 2


சிங்கப்பூரைச் சேர்ந்த த. சூரியவேலன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் 'நாம் 2' எனும் வலைதளத் தொடருக்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த தொடர், எதிர்வரும் மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

சிங்கப்பூர் கலைஞர்களான  த. சூரியவேலன், ரூபிணி அன்பழகன்,   ஸ்டீபன் செக்கரியா, மற்றும் சில நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2020 ஆம் ஆண்டில் 32 அத்தியாயங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தொடர் 'நாம்'. வெவ்வேறு பின்னணியை கொண்ட ஆறு இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து, இசைக்குழு ஒன்றினை ஒருங்கிணைத்து, தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி வெற்றிப் பெறுவதை மையமாகக் கொண்ட 'நாம் 'எனும் இந்த வலைதள தொடர், இணையத்தில் வெளியாகி  பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறது.

தற்போது இதன் இரண்டாவது பாகம் 'நாம் 2' எனும் பெயரில் தயாராகி வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தை விட பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த தொடருக்கும்  பார்வையாளர்களின் பாராட்டும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. 'நாம் 2' எனும் வலைதளத் தொடரை, முதல் பாகத்தில் பணியாற்றிய தா. சூரியவேலன் நடித்து,எழுதி,
 இயக்கியிருக்கிறார். இந்த தொடரில் த. சூரியவேலன், ஸ்டீபன் செக்கரியா, விக்னேஸ்வரி சே, ரூபிணி அன்பழகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். க்ளமெண்ட் யூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைத்தளத் தொடருக்கு த. சூரிய வேலனுடன் இணைந்து ஸ்டீபன் செக்காரியா , அஜ்மல்தாசன் ஆகியோரும் இசையமைத்திருக்கிறார்கள். இந்த வலைதள தொடரை முரளி முருகன் தயாரித்திருக்கிறார். 

'நாம் 2' தொடர் குறித்து இயக்குநர் 
த. சூரிய வேலன் பேசுகையில், '' நாம் தொடரின் முதல் பாகம் 32 அத்தியாயங்களாக தயாராகி, பார்வையாளர்களிடத்தில் பெரும் வெற்றி பெற்றது. இதனால் இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் போது கூடுதல் பொறுப்புணர்வும், எதிர்பார்ப்பிற்கான நெருக்கடியும் இருந்தது. இருப்பினும் வித்தியாசமான ஜானரில் உருவாக்க வேண்டும் என திட்டமிட்டோம். இதனைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கு அருகில் ருத்ராண்டா என்ற கற்பனையான தீவு ஒன்றைப் படைத்தோம். அந்த தீவில் சர்வாதிகாரத்தனத்துடன் மனிதர்களை அடக்கி ஆளும் கதாபாத்திரங்களையும் உருவாக்கினோம். இந்த சூழலில் அங்கு வாழும் பெண்களின் நிலை என்ன? என்பது குறித்தும், அங்கு ஆண், பெண் தங்களின் தனித்துவ அடையாளத்திற்காக போராடும் போராட்டங்கள் குறித்தும், உணர்வு பூர்வமாகவும், எதிர்பாராத திருப்பங்களுடனும் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். இது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பிக்கையுடன் பணியாற்றி இருக்கிறோம். 

'நாம்' வலைதளத் தொடரின் முதல் பாகத்தின் வெற்றிக்கு ஸ்டீபன் செக்கரியா,அஜ்மல்தாசன் மற்றும் சுமன் பட்டூரின் இசை மற்றும் பின்னணி இசை பிரதானமானது. இதனை கருத்தில் கொண்டு இரண்டாவது பாகத்திலும் இசைக்கும், பாடலுக்கும் உரிய முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளித்திருக்கிறோம். இந்தத் தொடரில் எமது பாடல் மற்றும் இசையில் பாம்பே ஜெயஸ்ரீயின் காந்தக் குரலில் 'வருவாயோ வீரனே..' எனத் தொடங்கும்  பாடல் இடம்பெற்றிருக்கிது. இந்த பாடலை பிரத்யேக காணொளியுடன் இணையத்தில் வெளியிட்டிருக்கிறோம்.  பாடல்களை பொறுத்தவரை 21 ஆம் நூற்றாண்டின் இளம் பார்வையாளர்களுக்கும் ஏற்ற ஒலி வடிவமைப்புடன், அவர்களுக்கு தேவையான தத்துவ சிந்தனைகளை, அவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் மொழிநடையில் எழுத வேண்டும் என்ற எம்முடைய சிந்தனையை சாத்தியமாக்கிருக்கிறேன். இந்தத் தொடர், நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகிறது. பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.'' என்றார். 

இதனிடையே 'நாம்' எனும் வலைதளத் தொடரின் மூலம் சர்வதேச அளவில் திறமையான இளம் படைப்பாளி என்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கும் த.சூரிய வேலன் அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்தும், ஆசியையும் பெற்றிருக்கிறார் என்பதும், சூப்பர் ஸ்டாரை இயக்குவது தான் தன்னுடைய கனவு எனும் தன் கலையுலக இலட்சியத்தைத் தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Pageviews