நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

 

நாய் சேகர் ரிட்டன்ஸ் இரண்டு நகைச்சுவையான கடத்தல்காரர்களின் அறிமுகத்துடன் தொடங்குகிறது . ஒருவர் ’தாஸ்’ என்ற கதாபாத்திரப் பெயர் கொண்ட ஆனந்த்ராஜ்; இவர் ’லொள்ளு சபா’ சேஷு, ராமர் உள்ளிட்ட கூட்டாளிகள் சகிதம் பெண்களைக் கடத்தும் தாதா. மற்றொருவர் ‘நாய் சேகர்’ என்ற கதாபாத்திரப் பெயர் கொண்டவடிவேலு; இவர் தன் கூட்டாளிகளான ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, இட்ஸ் பிரசாந்த் ஆகியோருடன் சேர்ந்து விலை உயர்ந்த நாய்களைக் கடத்தி, அவற்றின் பணக்கார உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் ‘இந்தியாவின் முதல் நாய்கடத்தல் மன்னன்’ ஆகத் திகழ்பவர்.


ஒருநாள் தாதா ஆனந்த்ராஜுக்குப் பிடித்த அவரது செல்ல நாயை வடிவேலு கடத்துகையில், சிக்கல் ஆரம்பம் ஆகிறது. ஆவேசம் கொள்ளும் ஆனந்த்ராஜ், வடிவேலுவைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று கிளம்புகிறார்.


இந்நிலையில், தன் குடும்பத்தின் கடந்த காலம் பற்றியும், அந்த குடும்பத்தின் ராசியான நாய் கடத்தப்பட்டது பற்றியும் வடிவேலுவுக்குத் தெரிய வருகிறது. அவை என்னவென்றால், வடிவேலுவின் அப்பாவான வேல ராமமூர்த்தி, திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாத நிலையில், தன் குடும்பத்தோடு பைரவர் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு சித்தர் ஒருவர் அவருக்கு தெய்வ அருள் பெற்ற ராசியான நாய்க்குட்டி ஒன்றைத் தருகிறார். நாயோடு சேர்ந்து வேல.ராமமூர்த்தியின் செல்வச் செழிப்பும் வளர, குழந்தை பாக்கியம் ஏற்பட்டு வடிவேலுவும் பிறக்கிறார். திடீரென ஒருநாள், அந்த ராசியான நாய் திருடப்பட்டு காணாமல் போகிறது. அதுமுதல் குடும்பத்தை மீண்டும் தரித்திரம் பற்றிக்கொள்கிறது.


இதை தெரிந்துகொள்ளும் வடிவேலு, தன் குடும்பத்தின் ராசியான நாய் இப்போது ஹைதராபாத்தில் வசிக்கும் பெரும்புள்ளியான மேக்ஸிடம் இருப்பதை அறிந்து, அதை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? கொலைவெறியுடன் தன்னைத் துரத்தும் தாதா ஆனந்த்ராஜிடமிருந்து தப்பித்தாரா? என்ற கேள்விகளுக்கு நகைச்சுவையாய் விடையளிக்கிறது ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் மீதிக்கதை.


நாய் சேகர் என்ற பாத்திரத்தில் வந்தாலும் வடிவேலு, இன்ன பிற படங்களில் நடித்த கேரக்டர்களிலும் அவ்வப்போது வந்து போகிறார். தன்னுடைய ஆட்டம் பாட்டம் பாடி லாங்குவேஜில் எந்த குறையும் வைக்காத வடிவேலுவுக்கு இன்னும் வளமான ஸ்கிரிப்ட் அமைந்திருந்தால் தேவலை என்று தோன்றுகிறது.


காமெடி ஜாம்பவானாக வடிவேலுவே இருக்க அவர் போதாது என்று ஏன் இயக்குனர் சுராஜ் நினைத்தார் என்று தெரியவில்லை. அதனால் ரெடின் கிங்ஸ்லி, காமெடி ஷிவாங்கி, இட் இஸ் பிரசாந்த், மாறன், முனீஸ் காந்த் ராமதாஸ் என்று ஏகப்பட்ட காமெடியன்களை வண்டி வைத்து தூக்கி வந்திருக்கிறார் அவர்.


அவர்களும் தங்கள் பங்குக்கு எந்த குறையும் வைத்து விடக்கூடாது என்று அவரவர் பங்கை நிறைவேற்றி இருக்கிறார்கள். 


லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருப்பதால் படத்தில் பிரம்மாண்டத்துக்கு குறைவில்லை. ‘ அப்பத்தா …’ பாட்டு மூலை முடுக்கெல்லாம் ஹிட் ஆகி இருக்கிறது. பின்னணி இசையிலும் சந்தோஷ் நாராயணன் சோடை போகவில்லை.  ஒளிப்பதிவாளர் கேமராவில் வண்ணங்களுக்கு குறைவில்லை.  குடும்பத்தோடு… முக்கியமாக குழந்தைகளோடு போனால் அதிகமாக ரசிக்க முடியும் இந்த நாய் சேகரை.

0 comments:

Pageviews