சுழல் விமர்சனம்

 


நீலகிரி அருகேயுள்ள சாம்பலூரில் சிமென்ட் தொழிற்சாலை ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு தொழிற்சாலையின் யூனியன் லீடரான சண்முகம் (பார்த்திபன்) தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது. அதை, காவல்துறை உதவியுடன் தடியடி நடத்தி ஒடுக்குகிறார் தொழிற்சாலை முதலாளியான திரிலோக் வட்டே (ஹரிஷ் உத்தமன்). அன்று இரவே தொழிற்சாலை தீப்பற்றி எரிகிறது. மறுநாள் காலை சண்முகத்தின் இளைய மகள் நிலா (கோபிகா ரமேஷ்) காணாமல் போகிறார். இந்த இரு நிகழ்வுடன் ஊரில் மயானக் கொள்ளை திருவிழாவும் தொடங்குகிறது.

 

ஆலைக்கு யார் தீ வைத்தார்கள்? நிலா எங்கே? என்ற தேடல் தொடங்க கதை விறுவிறுப்பை அடைகிறது. விசாரணையில் எதிர்பாராத அளவுக்கு குற்றங்களின் முடிச்சுகள் நீண்டு செல்ல அதை ஒவ்வொன்றாக அவிழ்க்கின்றார் சக்ரவர்த்தி (கதிர்). அவிழ்க்கப்பட்ட முடிச்சுகள் யாரைக் குற்றவாளியாக காட்டியது என்பதே சீரிஸின் மீதிக்கதை. 

 

ஆறு மணி நேர கதை, மனிதர்களின் மன ஓட்டத்தை, அவர்களின் பேராசையை, காதலை, காமத்தை, பக்தியை, நாத்திகத்தை, முதலாளியை, இடதுசாரியை என சமூகத்தின் அத்தனையும் கேள்விகேட்கிறது.

 

இன்ஸ்பெக்டர் ரெஜினாவாக நடித்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி மிடுக்கான நடிப்பால் கட்டிப் போடுகிறார். கதிரின் நடிப்பால் மிரட்டியிருக்கிறார். அதுபோலவே பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரிஸ் உத்தமன், லதா ராவ் என எல்லா நடிகர்களும் சொல்ல தகுந்த அளவிற்கு நடித்திருக்கின்றனர்.

 

புஷ்கர் காயத்ரியின் திரைக்கதையும் பிரம்மா, அனு சரணின் இயக்கமும் எங்கும் தொய்வைக் கொண்டுவரவில்லை. அதேபோல், முகேஷ்வரனின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. மலைப்பகுதியையும், மயான கொள்ளை நிகழ்வுகளையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை கதைக்கு த்ரில்லர் தன்மையைக் கொடுக்கிறது.

 

இவ்வளவு பெரிய கதையின் முடிச்சுகளை போடுபவர்களாக இருக்கும் சிறார் காதலர்களின் மேதமை கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது. அதேபோல் கம்யூனிஸ்டாக காட்டப்படும் பார்த்திபனின் கதாபாத்திர உருவாக்கம் அரைகுறையாகவே உள்ளது. 

 

இதுவரை வந்த வெப் சீரிஸ் களிலிருந்து 'சுழல்' பேசும் உண்மை சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

0 comments:

Pageviews